கே.ரவி

இந்த அளவு எனக்குக் கவிதைவெறி வரக் காரணம் என்ன? அது என்ன விட்ட குறை, தொட்ட குறையோ!

முன்னொரு பிறவியில் நான் தேரழுந்தூரில் ஒரு புலவன் வீட்டில் கட்டுத்தறியாக முக்கி முனகிக் கொண்டிருந்தேனோ? இல்லை, அதற்கும் முன்பு ஒரு புலவன் தன் முழவுத் தொழிலை விட்டுவிட்டு, உழவுத் தொழிலை மேற்கொண்டதால், புறக்கணிக்கப் பட்ட பறையாக எனக்குள்ளேயே படபடவென்று ஒரு மூலையில் கிடந்து நெஞ்சு துடித்துக் கொண்டிருந்தேனோ? இல்லை, மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலுமாய் ஒருத்தி விட்டெறிந்த ஒற்றைச் சிலம்பிலிருந்து தெறித்துப் பாண்டியன் அரண்மனைத் தரையில் உருண்டோடிய நினைவைச் சுமந்து கொண்டு அவளைச் சொல்லில் வடித்த துறவியின் நெஞ்சில் மாணிக்கப் பரலாய் பதிந்திருந்தேனோ? ஏன், ஏறக்குறைய நூறாண்டுகளுக்கு முன்பு, குடக்கூலி கூடக் கொடுக்க முடியாமல் ஒண்டுக் குடித்தனத்தில் ஒண்டிக் கிடந்தும், அண்டங்களையெல்லாம் ஒரே நொடியில் சுற்றிவர ஆவேசக் கவிஞன் செய்துகொண்ட ரதத்தின் ஒரு சக்கரமாகச் சுழன்று கொண்டிருந்தேனோ? யாருக்குத் தெரியும்!

அவளுக்குத் தெரியும். என்னை ஆக்கி, எனக்குள் ஊழிக் கனல் எழுப்பி, ஊதி ஊதி வளர்த்து அதில் தாண்டவம் ஆடுகிற பிச்சிக்குத் தெரியும். சொல்லுவாளா அவள்? சண்டித்தனம் செய்யும் சாகசக்காரி சொல்லுவாளா? பாட்டுப் பாடிக் கேட்டேனே. சந்தச் சதங்கை ஒலிக்கச் சதா ஆடிக்கொண்டே இருக்கும் அந்த பைரவியைச் சிந்து பைரவி ராகத்தில் பாடிக் கேட்டேனே:

நீல வானமாய் விரிகிறாய் – என்

நெஞ்சிலே இசை பொழிகிறாய்

கால காலமாய் நீயும் நானுமாய்

ஆடினோம் பல நாடகம் – நாம்

அணிந்த வேடங்கள் ஆயிரம்

காளி தாசனின் நாவில் எழுதிய அட்சரம் உனது மந்திரம்

கம்ப நாடனின் கவியெ லாமுன் காற்ச தங்கையின் நர்த்தனம்

மேள மாயிடி மின்ன லாயொளி மேடை தந்தனன் பாரதி – அண்டக்

கோல மாகியே பாடல் யாவையும் கொள்ளை கொண்டனை பைரவி

நீல வானமாய் விரிகிறாய்

தத்து வங்களில் ஒளிகிறாய் – தர்க்கம்

செய்யும் போதுநீ நெளிகிறாய்

பித்த னாகநான் பேசும் போதுசிறு பிள்ளை யாகவந் தமர்கிறாய்

சித்தர் பாடலில் சிரிக்கி றாய்ப்பின் ஷெல்லி கவிதையில் ஜொலிக்கிறாய்

ஷேக்ஸ்பியர் கீட்ஸ் மாயா கெளஸ்கியெனத் தோழர் சூழநீ நடக்கிறாய்

கால காலமாய் நீயும் நானுமாய்

ஆடினோம் பல நாடகம் – நாம்

அணிந்த வேடங்கள் ஆயிரம்

தாயிலாமலே குழந்தையா – உன்

தயவிலாமல் ஒரு கவிதையா

தழலும் தென்றலும் நிழலும் வெய்யிலும்

கலந்து நிற்பதுன் சாயலே

நீயி லாமலிதழ் பாடுமா – சுடு

தீயி லாமல் சுடர் கூடுமா

சிறிய வன்மனம் திரி யதில்தினம்

தீபம் ஏற்றுதிரி சூலியே

சிகாமணி ஏதோ சொல்ல வாயெடுக்கிறான். வார்த்தை வராமல் அவன் வாய் குழறுகிறது. மனோன்மணி எங்கே? ஒரு மின்னல் இழை வான் நடுவே சுழன்று, சுழன்று ஆடிக் கொண்டிருக்கும் அதிசயக் காட்சி மட்டும் தெரிகிறது. ‘அரோரா போரியாலிஸ்’ என்றெல்லாம் கானடா நாட்டில் போய்ப் பார்த்து வியப்பார்களே, அது போல்! அந்த இழையில் கலந்து மனோன்மணியும் ஆடுகிறாளோ?

இப்படி நான் பாடிக் கேட்டுப் பத்து ஆண்டுகளுக்கு மேலாகியும் அவள் பதில் சொல்லவில்லையே! ஆடிக் கறக்கவோ, பாடிக் கறக்கவோ மாடில்லை அவள். வாசிக்கலாம் என்றால் ஏடில்லை அவள். வசிக்கலாம் என்றால், வீடில்லை அவள். பிறகு யாரவள்?

புன்னகை யோசின்ன பூவிதழோ – ஒளி

பொங்கித் ததும்பும் வெண்ணிலவோ

கண்வழி யேநுழைந்(து) என்னுயிரை – மெல்லக்

கவர்ந்திழுக் கும்,எழில் காரிகையோ

காலையி லேதங்கத் தேரினிலே – வரும்

கனகதுர்க் காபர மேஸ்வரியோ

மாலையி லேமலர்ச் சோலையென – உரு

மாறும் மாயா மோகினியோ

புவியினி லேஉயிர்க் குலம்தழைக்கப் – பசும்

பாய்விரிக் கும்,அருள் தாய்மடியோ

வியனுல காய்விதை மூலமுமாய் – நித்தம்

விரிந்துகொண் டேவரும் விழிச்சுடரோ

கவிதையி லேசிறு கால்பதித்துக் – கொஞ்சம்

களிநடம் செய்யும் பேரழகோ

த்யானத்தி லேயெழும் தழல்வடிவோ – அது

அவனோ அவளோ வேறெதுவோ

த்யானத்திலே எழும் தழல்வடிவோ! எனக்கெதிரே, எதிரே இல்லை, உள்ளே, ஆம், எதிரும் புதிருமாய், உள்ளும் புறமுமாய், மூண்டெழுந்து சிரிக்கிறது ஒரு மூலத் தழல்வடிவம். ஒன்றென்றா சொன்னேன்? இரண்டோ, இல்லை இரண்டு போல் தோன்றும் ஒன்றோ? உற்றுப் பார்த்தால் அதற்குள், இல்லை, அதுவாய், நானே தெரிகிறேனா? நானா, இல்லை அவனா, அவளா, அதுவா?

சிகாமணி ஓரிழையாய், மனோன்மணி மற்றோர் இழையாய் ஒன்றிக் கலந்த அர்த்தநாரியாய், இல்லை, அர்த்த ஆடைகளைக் களைந்து எறிந்துவிட்டு அம்மணமாய் ஆடும் ஆவேசமாய் . . . என்ன குழப்பம்?

மேலே எத்தனை முறை ‘இல்லை’, ‘இல்லை’ என்று மறுத்துச் சொல்லியிருக்கிறேன் என்று எண்ணிப் பாருங்கள். இந்தத் திண்டாட்டத்தைத்தான் “நேத்தி நேத்தி” என்று பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு ரிஷி கூவினானோ?

என் மூச்சை ஒரு நிலைக்குக் கொண்டு வருகிறேன்.

‘அப்பா, புலம்பாதே. நீ என்னதான் சொல்கிறாய். புரியும் படிச்சொல்.’

உங்களில் யாரோ கேட்பது என் செவியை எட்டுகிறது. சொல்வதற்கு என்ன இருக்கிறது? சோர்வு மேலிட மெளனத்தில் ஆழ்கிறேன்.

முதல் தரிசனம், அதாவது, “தெளிவுறவே அறிந்திடுதல்” என்ற பாரதி பாட்டைக் கவிமாமணி தேவநாராயணன் பாடக் கேட்டு நான் உருகினேன் இல்லையா, அதற்குப் பின் என் கவிதையின் போக்கு மாறியது. அப்படிச் சொல்வதைவிட, கவிதை பற்றிய என் நோக்கு மாறியது என்று சொல்வதே மேலும் பொருத்தமாக இருக்கும். நான் கவிதை எழுதுகிறேன் என்ற நினைப்புப் போய், கவிதையே என்மூலம் தன்னை எழுதிக் கொள்வதுபோல் உணரத் தொடங்கினேன். இப்படிச் சொல்வது பகுத்தறிவுக்கு ஒத்து வராததாகத் தோன்றலாம். அந்தச் சமயத்தில்தான் தத்துவக் கதவு திறந்தது.

unnamed

புகுமுக வகுப்பு முடிந்து பி.ஏ. சேர வேண்டும். அதிலும் ஒரு போராட்டம். ஒரே சமயத்தில் ஆங்கில இலக்கியத் துறையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள புதுக் கல்லூரியிலும், தத்துவத் துறையில் மயிலை விவேகானந்தா கல்லூரியிலும் எனக்கு இடம் கிடைத்தது. நேராக, விவேகானந்தா கல்லூரி தத்துவத் துறைக்குச் சென்று, அப்போது துறைத் தலைவராக இருந்த பேராசிரியர் த.ந.கணபதி அவர்களிடம் இந்தப் பிரதாபத்தைப் பற்றி அளந்து விட்டு, இலக்கியத் துறைக் கடிதத்தை அவர் முன்னிலையிலேயே கிழித்து விட்டுத் தத்துவத் துறையில் சேர்ந்தேன். அப்போது நினைத்தேன், சொன்னேனா என்று நினைவு இல்லை, ‘இலக்கியம் எப்படியும் படித்துக் கொள்ள முடியும், அதனால் பி.ஏ. ஃபிலாஸஃபி சேர்வதே சரி.’ என்ன ஆணவம்!

unnamed (1)அப்புறம்தான் தத்துவ மேதைகளின் படைப்புகளைப் படிக்கும் வாய்ப்புக் கிட்டியது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கிரேக்க நாட்டில் வாழ்ந்த தாலீஸ், ஹிராக்லிட்டோஸ், சோக்ரட்டீஸ், ப்லேடோ, அரிஸ்டாட்டுல் போன்ற சிந்தனையாளர்கள் தொடங்கி, முன்னூறு ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்த டேகார்ட், ஸ்பினோட்ஸா, லைப்னீட்ஸ், லாக், பார்க்லீ, ஹ்யூம் போன்ற மேலை நாட்டுத் தத்துவ ஞானிகளின் நூல்களைப் படித்தேன். அப்போதுதான் பதினெட்டாம் நூற்றாண்டில், ஜெர்மனியில் வாழ்ந்த இம்மானுவல் கண்ட் என்ற தத்துவ மேதையின் சிந்தனைகள் என்னை ஆட்கொண்டன. ‘தூய அறிவு பற்றிய ஆய்வு’ என்ற தலைப்பில் அவன் ஜெர்மானிய மொழியில் படைத்திருந்த நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு, ‘க்ரிடிக் ஆஃப் ப்யூர் ரீஸன்’ என்னை மிகவும் பாதித்தது. அந்த நூலைத் தந்து என்னை ஆற்றுப் படுத்திய பேராசிரியர் கணபதிக்கு நான் என்றும் நன்றிக் கடன் பட்டவனாகிறேன். அந்த நூலில் இம்மானுவல் கண்ட் பகுத்தறிவின் எல்லைக் கோடுகளை வரைந்து காட்டியிருந்தான். அந்தக் கோட்டுக்குள் மட்டுமே பகுத்தறிவு செல்லுபடியாகும் என்பதையும், அந்தக் கோட்டுக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் உள்ளன என்பதையும் தெளிவாக விளக்கியிருந்தான். “அறிவினால் ஆகுவ துண்டோ” என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் கேட்ட கேள்வியின் அர்த்தம் அப்போதுதான் எனக்கு விளங்கியது. சங்கரரின் அத்வைதக் கொள்கை என்னை அதற்கு முன்பே ஈர்த்திருந்தாலும், அது வெறும் மாயா வாதமாகவே தோன்றிய தப்பெண்ணத்தை மாற்றி அதன் யதார்த்தத்தை நான் உணரக் கண்ட்டின் நூல்தான் உதவியது.

இலக்கியத்தை நான் விட்டாலும் அது என்னை விடுவதாகத் தெரியவில்லை. இந்தக் காலக் கட்டத்தில்தான் பாரதியின் பாட்டு மூலம் எனக்கு முதல் தரிசனம் கிடைத்தது. கண்ட் வரைந்து காட்டிய கோட்டை அலட்சியம் செய்துவிட்டு கோட்டுக்கு உள்ளும் புறமும் போய்வரக் கூடிய ஆற்றல் கவிதைக்கு உண்டு என்பதை உணரத் தொடங்கினேன். அந்தப் போக்குவரத்தின் அனுபவத்தில் தத்துவத் தாக்கம் அல்லது தத்துவத் தாகம் இழையோடும் கவிதைகள் வரப்பெற்றேன்.

சிந்தனைக் கனலில் வெந்துகொண் டிருக்கிறேன்

(என்) சிந்தனைக் கனலில் (நானே) வெந்துகொண் டிருக்கிறேன்

முழுதும் எரிந்து முடிந்த பின்னர்

சாம்பலை எடுத்துச் சலித்துப் பாருங்கள்

காதல் கிடைக்கும் கவிதைகள் கிடைக்கலாம்

கருகிப் போன லட்சியங்கள் கண்ணில் படலாம்

(என்) அஸ்தியைக் கரைக்க ஆறுகள் வேண்டாம்

என்னைப் போலவே எங்கோ ஒருவன்

சிந்தனைக் கனலில் வெந்துகொண் டிருப்பான்

அவனுக் காவது அழது தீருங்கள் – அந்தக்

கண்ணீர்க் கடலில் கரைந்து போகிறேன்

இருபது வயது கூட ஆகாத ஒரு வாலிபன் எழுதிய பாடலா இது!

ஏன், கீட்ஸ் மிக இளம் வயதில் கனமான கவிதைகள் எழுதவில்லையா? ஓ, சிகாமணி வந்து விட்டான், கேள்வி கேட்க. என்ன பதில் சொல்லப் போகிறேன்?

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *