இசைக்கவி ரமணன்

”எல்லோரும் நலம்வாழ நான் பாடுவேன்!”

—- கண்ணதாசன்

கலை என்பது வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாக இருந்தால் மட்டும் போதாது. மனித வாழ்வை மேம்படுத்தும்போதுதான், கலை, ஒரு சிறப்பான இடத்தைப் பெறுகிறது. “எல்லாக் கலைகளும் இசையை நோக்கி ஒசிந்தே இருக்கின்றன, “ என்பார்கள். (All arts tend to music) ஏனெனில், இசை என்பது, படைப்பின் ஆதாரமான நாதத்திலிருந்து வருவது. உலகம் நாதமயம் என்று கண்டவர்களின் உள்ளம் இசைமயமாகவே இருக்கும். உள்ளம் இசைமயமாக இருந்தால், உலகம் நாதமயம் என்பதும் புலனாகும்! அதனால்தான், ”ஆசை தரும் கோடி அதிசயங்கள் உண்டதிலும் ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ!” என்றும் ”பாட்டினைப் போல் ஆச்சரியம் பாரின்மிசை இல்லையடா,” என்றும், ”நாட்டினிலும் காட்டினிலும் நாளெல்லாம் நின்றொலிக்கும் பாட்டினிலும் நெஞ்சைப் பறிகொடுத்தேன் பாவியேன்,” என்று வியந்தும், உருகியும், பிரபஞ்ச உண்மையை அனுபவித்தும் பாடுகிறார் பாரதியார்.

“Music is the direct route to God, though not the exclusive one,” என்பார்கள் பெரியோர். இறைவனிலிருந்து தோன்றி, மனித உலகில் இறங்கி, மானிட வாழ்வை மேம்படுத்தி, மனிதனை இறைவனை நோக்கி அழைத்துச் செல்வதால் இசையே இறைவன் என்றும் கொண்டாடப் படுகிறது.

இப்படிப்பட்ட மேன்மையுள்ளது இசை. இந்த மேன்மை நமக்கு எப்போது விளங்கும்? இசைக் கலைஞர்கள், அதை மனிதர்களின் மேம்பாட்டுக்காக வெளிப்படுத்தும்போது! “They live who live for others. All the rest are more dead than alive,” என்பார் சுவாமி விவேகானந்தர். படைப்பு என்பது எப்போதும் பரிபூரணமாக இருப்பது. எனவே, இங்கே யாரும் எதையும் சிருஷ்டிக்க முடியாது. இசையை நாம் உருவாக்கவில்லை இசைதான், நமது உணர்ச்சிகளைச் செம்மைப்படுத்தி, உயர்ந்த பண்புகளில் நம்மை ஈடுபடுத்தி, நம்மை ஆளாக்குகிறது.

இசையைப் பொருத்தமட்டில், எல்லா நலங்களும் பொருந்திய மனிதர்களும், மாற்றுத் திறனாளிகளும் ஒரே வரிசையில்தான் இருக்கிறார்கள். ஊனமற்ற உடம்பு என்பது அதனளவிலே ஒரு சிறப்பாகிவிடாது. குறைபாடுகள் உள்ள உடம்பு என்பதும் அதனளவிலே ஒரு குறையாகிவிடாது. ஒரு மனிதன், தன்னை வைத்துக்கொண்டு என்ன செய்கிறான், அவனுடைய மனிதத் தரம் என்ன, அவன் மற்றவர்களுக்கு எவ்விதம் உதவியாக இருக்கிறான் போன்ற பல அம்சங்களை வைத்தே ஒரு மனிதன் ஞானமுள்ளவனா, ஊனமுள்ளவனா என்பதைக் காலம், சந்ததியினருக்கு அடையாளம் காட்டுகிறது.

இந்தக் கருத்தைப் பின்னணியாக வைத்துக்கொண்டு பார்க்கும்போது, காசி விஸ்வநாதன் அறக்கட்டளை ஆண்டுகள் பலவாக ஆற்றிவரும் பணியின் மகத்துவம் நமக்குப் புரிகிறது. ”உன்னை உன்னால் உயர்த்திக்கொள்!,” என்றான் கண்ணன் கீதையிலே. “நாம் உடலால் குறைகளோடு பிறந்தோமேயன்றி, மற்ற மனிதர்களைவிட நாம் எந்த விதத்திலும் குறைந்தவர்களில்லை. நாமே நமது நலத்தை நிர்வகிக்க வேண்டும்,” என்னும் உறுதியுடன் திரு. வள்ளியப்பன் தனது சக மனிதர்களுக்காகச் செய்துவரும் சேவை, ஒரு வீரனின் முயற்சிக்குச் சற்றும் குறைவற்றது.

இந்த முயற்சியின் சிறப்பம்சமாக அண்மையில் சென்னை மியூசிக் அகாடெமி அரங்கத்தில் அவர் தெய்விகக் களிப்பு (Divine Delight) என்ற ஒரு மாபெரும் விழாவை நடத்திக் காட்டினார். இதை நடத்துவதில், அவருக்கு உறுதுணையாக இருந்த தாளாளர்கள் அனைவருக்கும் நமது நன்றி உரித்தாகிறது.

இந்த விழாவில், நாம் ஒரே சமயத்தில் காணக்கூட முடியாத பெரும் கலைஞர்கள் ஒரு சேர இசை மழை பொழிந்தது, அரங்கத்தில் உள்ள பெரியோர்களையும், இளைஞர்களையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்க வைத்தது.

தங்களுடைய கலை, சக மனிதர்களின் வாழ்வு நலம்பெறுவதற்காக இறைவனால் வழங்கப்பட்ட கொடை என்பதை அந்த மேடையில் இருந்த ஒவ்வோர் இசைக் கலைஞரும் உணர்ந்து தங்களுடைய பங்களிப்பை வழங்கினார்கள். விழாவின் இறுதியில், அனைவரும் சேர்ந்து நமது வள்ளியப்பனை ஆரத் தழுவிப் புகழ்ந்ததில் ஒவ்வொரு நெஞ்சமும் அங்கே நெகிழ்ந்தது.

இசையின் அருளால், நாம் ஒவ்வொருவரும் நமது குறைகள் எவையாயினும் அவை தீர்ந்து, இறைவனை அடைவோமாக!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *