இசைக்கவி ரமணன்

 

உனக்கே உனக்காக  (6)

 

கொஞ்சிக் கொஞ்சிக் கொல்லாதே
(பாடல்)

images (1)
கொஞ்சிக் கொஞ்சிக் கொல்லாதே
நெஞ்சைத் தொட்டுக் கிள்ளாதே
கெஞ்சிக் கெஞ்சிக் கேட்கிறேன் சற்றும் விலகிச் செல்லாதே! இந்த
பிஞ்சு நெஞ்சை இன்னமும் நீ கலங்க விடாதே!

அஞ்சுப் பத்துவிரல்கள் எந்தன் கன்னத்தைத் தாங்க
அருகில், மிக அருகில் என்னுயிர் ஏங்க
நெஞ்சில் உந்தன் சுவாசம் படும் நெற்றிப் பொட்டின் வாசம் வரும்
தஞ்சமென்று வெள்ளம்வந்து நாணலைக் கெஞ்சும், இந்தத்
தருணத்தில் தமிழும் நிலவும் தள்ளாடி மயங்கும் (கொஞ்சி)

சந்திக்கும் போது காலம் மணலாய்க் கரையும்
சந்திக்க ஏங்கும்போது மலையாய் கனக்கும்
சந்திப்பும் தேவையில்லை பிரிவுக்கும் வாய்ப்புமில்லை
இந்த உயிர் அந்த உயிர் என்பதில்லையே, இந்த
சொந்தம் எந்த ஜென்மபந்தம் தெரியவில்லையே
தத்தைக்கிளி கொத்திச் சிவந்து கனிந்த பழங்கள்போல், உன்
பட்டு இதழ் தொட்டுவரும் பவழ வார்த்தைகள்!
கள்ளெடுத்த மொழியோ அன்பின் வழியோ உந்தன்
காதல் மொழி?
முள்ளெடுத்த முனையில்நின்று தவம்புரிவது எந்தன் விதி (கொஞ்சி)

நாணத்துக்கும் வெட்கத்துக்கும் விடுதலை நாளா?
வண்ணத்துக்கும் ராகத்துக்கும் திருமண நாளா?
வானத்துக்கு என்னவந்தது தேனில் விழுந்ததா? என்
வார்த்தையில் அமிழ்தம்நுழைந்து மயங்கித் துவண்டதா?
காலத்துக்கும் இருக்கும் இந்த நெருக்கம் என்று
கவிதை சொல்ல
கண்விளிம்பில் மட்டும் ஒரு
கண்ணீர்த்துளி தயங்கித் ததும்ப (கொஞ்சி)

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *