–சு.கோதண்டராமன்.

ram_worship_god_shiva

பரம் பொருளுக்கு உருவமில்லை, பெயரில்லை என்று எல்லாச் சமயங்களும் சொல்கின்றன. இந்து சமயத்தின் அடிப்படையும் அது தான். இறைவன் என்று ஆண்பால் பெயரால் சுட்டுகிறோம். ஆனால் அவன் ஆணும் பெண்ணும் அலியுமல்லாததோர் தாணு என்கிறார் தாயுமானவர்.  அது இருளன்று ஒளியன்று என நின்றதுவே என்கிறார் அருணகிரி.

மண்ணல்லை விண்ணல்லை வலய மல்லை
மலையல்லை கடலல்லை வாயு வல்லை
எண்ணல்லை எழுத்தல்லை எரியு மல்லை
இரவல்லை பகலல்லை யாவு மல்லை
பெண்ணல்லை ஆணல்லை பேடு மல்லை
பிறிதல்லை யானாயும் பெரியாய் நீயே
உண்ணல்லை நல்லார்க்குத் தீயை யல்லை
உணர்வரிய ஒற்றியூ ருடைய கோவே

என்கிறார் திருநாவுக்கரசர். இப்படி எல்லா வகையிலும் இல்லை இல்லை என்று எதிர்மறையாகவே வர்ணிக்கப்படும் பொருளை துவக்க நிலைச் சாதகர்கள் எப்படி மனதில் இருத்த முடியும்? அதற்காகத் தான் இறைவனுக்குப் பல உருவங்களை உருவாக்கி வணங்குகிறோம்.

ஒரு நாமம் ஓருருவம் ஒன்றுமில்லார்க்கு ஆயிரம்
திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ

என்று மணிவாசகர் கூறியபடி, பல பெயர்களால் அவனது தோற்றச் சிறப்பையும் அருஞ் செயல்களையும் போற்றிப் புகழ்ந்து பாடுவதும் இந்து சமயத்துக்கே உள்ள தனிச் சிறப்பு.

இறைவனுக்குள்ள பல பெயர்களை நிரல் பட அமைத்து திருநாம மாலையாகத் தொடுப்பது ஒரு வகை. ஒவ்வொரு பெயருக்குப் பின்னரும் போற்றி அல்லது அது போன்ற ஒரு சொல்லை இணைத்துப் போற்றுவது மற்றொரு வகை. பின்னது மட்டுமே தற்போது அருச்சனை எனப்படுகிறது.  திருநாம மாலையிலும் அருச்சனையிலும் வரும் பெயர்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.
1 இறைவனின் தோற்றச் சிறப்புகளைக் கூறும் பெயர்கள்
2 பண்புச் சிறப்புகளைப் போற்றுபவை
3 இறைவன் செய்த அருஞ்செயல்களை வியந்து பாராட்டுபவை
4 இருப்பிடத்தை ஒட்டி ஏற்பட்ட பெயர்கள்

தாளி அறுகின் தாராய் போற்றி
நீளொளி யாகிய நிருத்தா போற்றி
சந்தனச் சாந்தின் சுந்தர போற்றி  
இவை இறைவனின் தோற்றத்தை வருணிக்கின்றன.

நித்தா போற்றி நிமலா போற்றி
பத்தா போற்றி பவனே போற்றி
பெரியாய் போற்றி பிரானே போற்றி
அரியாய் போற்றி அமலா போற்றி
இவை பரமனின் பண்புகளைப் போற்றுபவை.

புலிமுலை புல்வாய்க் கருளினை போற்றி
அலைகடல் மீமிசை நடந்தாய் போற்றி
கருங்குரு விக்கன் றருளினை போற்றி  
இவை ஈசனின் திருவிளையாடல்களை நம் நினைவுக்குக் கொணர்கின்றன.

ஆரூ ரமர்ந்த அரசே போற்றி
சீரார் திருவை யாறா போற்றி
அண்ணா மலையெம் அண்ணா போற்றி
இவை தேவதேவன் உவந்து வாழும் திருத்தலங்களை ஒட்டி ஏற்பட்ட பெயர்கள்.

மேலே கண்டவை மணிவாசகரின் போற்றித் திருவகவலிலிருந்து எடுக்கப்பட்டவை. இது 154 திருநாமங்கள் கொண்ட ஒரு அற்புதமான அருச்சனை. இதில் தான் தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்ற புகழ்பெற்ற வரிகள் வருகின்றன.

அப்பரடிகளின் தேவாரத்தின் பெரும்பகுதி திருநாம மாலை தான். அவரது திருவாரூர்ப் போற்றித் திருத்தாண்டகத்திலும், கயிலை மலைப் போற்றித் திருத்தாண்டகத்திலும் இறைவனின் ஒவ்வொரு பெயருடனும் போற்றி என்ற சொல் இணைந்து வரும். இவை தவிர திருநாமங்களுடன் கண்டாய், காண், நீயே, போலும், கண்டேன் நானே என்ற சொல் இணைந்து வரும் பதிகங்கள் பல உண்டு. சில எடுத்துக் காட்டுகள் மட்டும் காண்போம்.

தூண்டு சுடரனைய சோதி கண்டாய்
தொல்லமரர் சூளா மணிதான் கண்டாய்
காண்டற் கரிய கடவுள் கண்டாய்
கருதுவார்க் காற்ற எளியான் கண்டாய்

விற்றூணொன் றில்லாத நல்கூர்ந் தான்காண்
வியன்கச்சிக் கம்பன்காண் பிச்சை யல்லால்
மற்றூணொன் றில்லாத மாசது ரன்காண்

ஓசை ஒலியெலா மானாய் நீயே
உலகுக் கொருவனாய் நின்றாய் நீயே
வாச மலரெலா மானாய் நீயே
மலையான் மருகனாய் நின்றாய் நீயே

மடந்தை பாகத்தர் போலும்
மான்மறிக் கையர் போலும்
குடந்தையிற் குழகர் போலுங்
கொல்புலித் தோலர் போலும்

அப்பரடிகளின் பிற பாடல்களும் சம்பந்தர், சுந்தரர் பாடல்களும் இது போன்ற போற்றிச் சொற்கள் இல்லாமல் திருப்பெயர் மாலையாக உள்ளன.
எடுத்துக் காட்டாக சம்பந்தர் தேவாரத்தில் முதல் பாடலில்,
தோடுடைய செவியன்
விடையேறி
தூவெண்மதிசூடி
காடுடைய சுடலைப் பொடி பூசி
உள்ளம் கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனை நாள் பணிந்து ஏத்த, அருள் செய்தவன்
பிரமாபுரம் மேவிய பெம்மான்
என்று இறைவனின் சிறப்புப் பெயர்கள் தொடுக்கப்பட்டுள்ளன.

தமிழின் மிகப் பழமையான திருநாம மாலையை பரிபாடலில் பல இடங்களில் காணலாம். எடுத்துக்காட்டுக்கு ஒன்று-
தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ;
கல்லினுள் மணியும் நீ; சொல்லினுள் வாய்மை நீ;
அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ;  
வேதத்து மறை நீ; பூதத்து முதலும் நீ;
வெஞ் சுடர் ஒளியும் நீ; திங்களுள் அளியும் நீ;
அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ;

நீண்ட தொடராக வரும் திருநாம மாலை ஒன்று திருமுருகாற்றுப்படையில் காணப்படுகிறது.
நெடும்பெரும் சிமயத்து நீலப் பைஞ்சுனை
ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப
அறுவர் பயந்த ஆறமர் செல்வ,
ஆல்கெழு கடவுள் புதல்வ, மால்வரை
மலைமகள் மகனே, மாற்றோர் கூற்றே,
வெற்றி வேல் போர் கொற்றவை சிறுவ,
இழையணி சிறப்பிற் பழையோள் குழவி,
வானோர் வணங்கு வில் தானைத் தலைவ,
மாலை மார்ப, நூலறி புலவ,
செருவில் ஒருவ, பொருவிறல் மள்ள
அந்தணர் வெறுக்கை, அறிந்தோர் சொன்மலை,
மங்கையர் கணவ, மைந்தரேறே,
வேல் கெழு தடக்கைச் சால் பெரும் செல்வ,
குன்றம் கொன்ற குன்றாக் கொற்றத்து
விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ,
பலர் புகழ் நன்மொழிப் புலவரேறே,
அரும் பெறல் மரபின் பெரும் பெயர் முருக,
நசையுநர்க்கு ஆர்த்தும் மிசை பேராள,
வலந்தோர்க்களிக்கும் பொலம்பூட் சேஎய்,
மண்டமர் கடந்த நின் வென்றாடகலத்து
பரிசிலர்த் தாங்கும் உருகெழு நெடுவேள்,
பெரியோ ரேத்தும் பெரும்பெய ரியவுள்,
சூர் மருங் கறுத்த மொய்ம்பின் மதவலி,
போர் மிகு பொருந, குரிசல்.

படம் உதவிக்கு நன்றி:  http://new-hdwallpaperz1.blogspot.com/2013/07/hindu-god-shri-ram-wallpapers.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *