வெகுமதிகள் தேவைதான்…..

0

பவள சங்கரி

தலையங்கம்

மும்பை மாநகரில் இணையத் தொடர்பு அனைத்துப் பகுதிகளிலும் இலவசமாக கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது நல்ல செய்தி என்றால் அதைவிட நல்ல செய்தி அனைத்துக் கட்சியினரும் இணைந்து இந்த நல்லதொரு பணியை செய்திருப்பதுதான். வாக்குகளுக்காக இலவசங்களும், வெகுமதிகளும் வழங்குவதைக்காட்டிலும் இது போன்று ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுவது வரவேற்புக்குரியது. இந்தியாவிலுள்ள அனைத்துப் பகுதிகளிலும் இது போன்ற மாற்றம் ஏற்பட்டால் அதுதான் நம் நாட்டின் பொன்னான காலம். . நாடும் வளர்ச்சிப் பாதையில் பீடுநடை போடும் என்பதும் உறுதி..

பத்தாண்டுகளுக்கு முன்பு கும்பகோணத்தில் ஏற்பட்ட சோக நிகழ்விற்கு இப்போதுதான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. காலங்கடந்த தீர்ப்பு.. இனிமேலும் இது போன்ற அவலங்கள் தொடராமல் இருக்க வேண்டும் என்ற உண்மையான நல்லெண்ணம் கொண்டவர்களாக இருப்பின், பொதுப்பணியில் இருக்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் சேர்ந்தோ அல்லது தனித்தோ அந்தப் பள்ளி மற்றும் இது போன்ற மோசமான நிலைகளில் இருக்கும் மற்ற கல்வி நிலையங்களையும் தத்து எடுத்துக்கொண்டு நிலையான கட்டிடங்களைக் கட்டிக்கொடுத்தால் எவ்வளவு சிறந்த செயலாக அது இருக்கும். ”தேர்தலுக்கு முன்பே நாங்கள் செய்து காட்டிவிட்டோம் தேர்தலில் எங்களைத் தேர்ந்தெடுத்தால் நாங்கள் இன்னும் உற்சாகமாகப் பணியாற்றுவோம்” என்று இப்படி ஆதாரப்பூர்வமாகக் கூறினால் மக்கள் அவர்களை தேர்ந்தெடுக்காமல் விடுவார்களா என்ன?

மகாராஷ்டிர மாநிலம், புணே நகரில் ஒரு கிராமமே மண்ணில் புதையுண்டு உள்ள, மனதை உலுக்கும் சோக சம்பவம் நடந்துள்ளது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று 82 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 100 பேர் இடிபாடுகளில் சிக்கியிருக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. இன்னும் எத்தனை சடலங்கள் கிடைக்குமோ தெரியவில்லை. ஒரு நாளில் மாற்றம் ஏற்பட்டு சரிவை ஏற்படுத்தக்கூடிய தன்மையுடைய மண் அல்ல அது. இலகுவான தன்மை கொண்ட மண் என்பதால் எப்போதும் இது போன்ற நிகழ்வுகள் ஏற்படலாம் என்பது அனைவரும் அறிந்ததே. அப்படியிருக்கும்போது மழைக் காலம் வருவதற்கு முன்பே அந்தப் பகுதியைச் சார்ந்த அரசியல் கட்சிகள் அந்த கிராமத்தின் மீது தங்கள் முழு கவனத்தையும் செலுத்தி, நிலையான கட்டுமானப் பணிகளைச் செய்திருந்தால் இந்த கோரச் சம்பவம் நிகழாமல் தடுத்திருக்கலாம். எச்சரிக்கையுடன் செயல்பட்டிருந்தால் இந்த கோரச் சம்பவத்தால் உயிர் சேதம் ஏற்பட்டதை தவிர்த்திருக்கலாம்.

kosi_PTI_2036476hஇந்த நிகழ்வுகளின் சோகம் மறைவதற்கு முன்பே அடுத்த நிகழ்வும் தயாராகிவிட்டது. கோசி நதியின் வெள்ளப் பெருக்கால் பீகாரில் 6 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு 1 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். நேபாள நாட்டில் உற்பத்தியாகும் கோசி நதியில், அங்கு பெய்யும் தொடர் மழை காரணமாக திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது கோசி ஆற்றில் 12 மீட்டர் உயரத்திற்கு வெள்ளம் வந்து கொண்டு இருக்கிறது. கோசி நதி, பீகார் மாநிலத்தின் 6 மாவட்டங்கள் வழியாக மேற்கு வங்காளத்தில் சென்று வங்கக் கடலில் கலக்கிறது. கோசி நதியின் குறுக்கே உள்ள பிர்பூர் அணையில் இருந்து இப்போது வினாடிக்கு 2½ லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

கோசி நதியின் வெள்ளப்பெருக்கும், இதே போன்ற நிலச் சரிவும் நேபாளத்தையும், நமது பீகார் மாநிலத்தையும் பெரிதும் தாக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 13 கரையோர மாவட்டங்களைச் சார்ந்த ஒரு இலட்சத்து முப்பதினாயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பேரிடர் களையும் குழுக்கள் நேபாளத்திற்கு ஒன்றும், பீகாருக்கு ஆறு குழுக்களும் அனுப்பப்பட்டுள்ளன. கங்கைக்கு 2500 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது போன்று இந்த மாவட்டங்களின் புனரமைப்பிற்கும் அந்த நதியை சீரமைப்பதற்கும் சில கோடிகள் ஒதுக்கினால் வருமுன் காக்க முடியும். கடந்த 2008–ம் ஆண்டு நேபாளத்தில் பெய்த மழையால் கோசி நதியில் இதே போல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பீகாரில் பேரழிவும் ஏற்பட்டது. அதில் நூற்றுக் கணக்கானோர் பலியானதும், 30 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டதோடு, 8 லட்சம் ஏக்கரில் பயிர்கள் சேதம் அடைந்ததும் குறிப்பிடத்தக்கது.

மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி செல்லக்கூடிய மலைப்பாதையும் இது போன்ற இலகுவான மண் அமைப்பைக் கொண்டதே. மழைக் காலம் என்றால் பாதையில் சரிவு ஏற்படுவதும், மரங்கள் வேரோடு சாய்வதும், ஆண்டுதோறும் ஏற்படக்கூடிய நிகழ்வுகள் தான் என்று அனைவருக்கும் தெரியும். இருப்பினும் பெரும் அசம்பாவிதங்கள் ஏற்பட்ட பின்புதான் நாம் அதைப்பற்றி கவனம் கொள்கிறோம். இது போன்ற மண் அமைப்புதான் மூணாறிலும் உள்ளது. மக்களுக்காகச் சேவை செய்கிறோம் என்று சொல்லிக்கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளும், தொண்டர்களும் சிந்திக்க வேண்டிய விசயம் இது. மக்களுக்கான இது போன்ற பாதுகாப்பு மற்றும் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை வெகுமதியாகத் தருபவர்களுக்கு வாக்களிக்க மக்களுக்கு என்ன தடை இருக்கப் போகிறது. எந்தக் கட்சியாக இருந்தால் என்ன.. உண்மையான சேவை செய்யும் கட்சி மட்டுமே மக்களைக் கவர முடியும் என்பதே சத்தியம். வருமுன் காக்க வாருங்கள் நல்லுள்ளங்களே!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *