— கவிஞர் காவிரிமைந்தன்.

Pattaadai...
அன்றாடம் நாம் சந்திக்கும் சராசரி மனிதர்களின் வாழ்வில் இடம்பெறும் பிரச்சினைகளை மையப்படுத்தி கதையமைப்பு.. திரைக்கதை.. வசனங்கள்.. பாடல்கள் என்று தமிழ்த்திரையொரு சகாப்தத்தை தன்னுள் இன்னும் வைத்திருக்கிறது.  அவ்வகையில் ஏ.பீம்சிங் .. நடிகர்திலகம் சிவாஜிகணேசன்.. நாட்டியப்பேரொளி பத்மினி, கே.ஆர்.விஜயா.. கே.வி.மகாதேவன் .. கண்ணதாசன் .. டி.எம்.செளந்ததிரராஜன், பி.சுசீலா .. கூட்டணி ஈட்டிய வெற்றி என்று பார்த்தால் திரைக்கதை வசனம்.. பாடல்கள் வழக்கம்போல் அமர்க்களம்தான்..

kkkkkvmp susheela(1)krv(1)
இல்லற வாழ்வின் ஈடிலா இன்பம் மழலை.. அதை இறைவன் அருளிடாத நிலையில் ஆயிரம் வசதிகள் இருந்தாலும் அங்கே சந்தோஷம் தொலைந்துபோய்விடும் நிலையை சந்திக்கும் தம்பதிகளாக சிவாஜியும் பத்மினியும்.. முகபாவனைகளால் ஆயிரமாயிரம் அர்த்தங்களைப் புரியவைக்கிறார்கள் இருவரும்!  ஒருவரையொருவர் எப்படி இணைந்து வாழ வேண்டும் என்று இலக்கணம் வகுக்கும் தம்பதிகள்!  ஒருவர் மகிழ்ச்சியே மற்றவரின் மூச்சாக கொள்ளும் மனம்!  இடையில் இந்த நெருடலால் அவள் மனம் காயப்பட்டுவிடக்கூடாது என்று நாயகனும்.. அவன் மனம் வாடிவிடக்கூடாது என்று நாயகியும் ஒவ்வொரு காட்சியிலும் தங்கள் காதல்மனதை காட்சிப்படுத்துகிறார்கள்.

எப்படியும் தன் குடும்பத்தில் மழலை வந்து தவழ வேண்டும் என்று நாயகி தன் தங்கையையே கணவனுக்கு இரண்டாம்தாரமாக்க முடிவுசெய்கிறாள்.  பாசத்தின் சிகரமாய் விளங்கும் நாயகன் அந்த முடிவை.. முற்றிலுமாய் எதிர்க்கிறான்.. மறுக்கிறான்..  இத்தகு சூழலில்.. நாயகியின் தங்கை.. எதார்த்தமாக விரைவில் இந்த வீட்டில் ஒரு குழந்தை வரப்போகிறது என்று பாடுவதுபோல் இந்தப் பாடல்..

எத்தனை எத்தனை அர்த்தபுஷ்பங்கள் மலரவைத்திருக்கிறார் கவியரசு கண்ணதாசன்!  கூடுவிட்டு கூடுபாயும் வித்தை கற்றவரோ என்றெண்ண வைக்கிறார்.. பிறகெப்படி.. அந்தப் பாத்திரம் என்ன சொல்ல வேண்டுமோ அதன் உச்சம் தொட்டுக் காட்டுகிறார்!  திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் இசையில் பி.சுசீலாவின் குரலில் மெல்லிய காற்று நம் இதயம்நோக்கித் தவழ்ந்துவருகிறது கேளுங்கள்..

பட்டாடைத் தொட்டில் கட்ட வேண்டும் – என் கண்ணுக்கு
பால் வண்ணச் சங்கு கொள்ள வேண்டும்
சிட்டென்று அள்ளிக் கொள்ள வேண்டும் – என் கண்ணுக்குச்
சிங்காரப் பொட்டு வைக்க வேண்டும்..

கவியரசரின் அழகுதமிழின் ஆனந்த நடனமிது.. குழந்தையைக் கொஞ்ச இந்தத் தமிழ் போதாதா?

கண்ணுக்கு மேலே மையிட்டுப் பார்த்து
கன்னத்தைக் கிள்ள வேண்டும்
முன்னொரு நூறு பின்னொரு நூறு
முத்தங்கள் சிந்த வேண்டும்..
முத்தங்கள் சிந்த வேண்டும்..

பால்மழலை முகம்பார்த்து குதூகலித்து.. பனிபோல் முத்தங்கள் பொழிய வேண்டுமாம்..  அதுவும் கண்ணுக்கு மையிடும்போது.. அந்த அழகைக் கண்டு சொக்கிப்போய்.. கன்னம் கிள்ளுவதாய்.. முத்தங்கள் கூட நூற்றுக்கணக்கில் வரிகளில் கொண்டு வந்து சொர்க்கத்தை நிறுத்துகிறார்!

மார்பினில் எடுத்துப் பாலுண்ணக் கொடுத்து
மயக்கம் கொள்ளும்போது
அவர் வரப் பார்த்து ஆடையை மறைத்து
அப்பப்பா.. சொல்ல வேண்டும்..

கற்பனைக் காட்சிதான் என்றாலும்.. அந்தக் காட்சிப்படுத்தலை.. படிமத்தை.. எப்படிக் கவிதை வாயிலாய் காட்டுகின்றார் பாருங்கள்!  ஆயிரம் கவிஞர்கள் வரலாம்.. எங்கள் கண்ணதாசன் போல் வருமா என்று சொல்வதன் காரணம் புரிகிறதா?

அன்னையைத் தந்தை அணைக்கின்ற கோலம்
கண்ணனும் காண வேண்டும்
என்னையும் மறந்து ஏனிந்த விருந்து
என்றவன் சொல்ல வேண்டும்..
என்றவன் சொல்ல வேண்டும்..

எண்ணிப்பார்த்து எய்தும் இன்பம் இப்படி இருக்குமா?  எழுதிக்காட்டும் கவிதை வடிவம் அருவியாகிறது!  கற்பனைவந்து கைகொடுக்கும் கவிஞரின் வரிகளில் உள்ளம்தொடுகின்ற எழுத்துரதமே ஊர்வலம் வருகிறது!  விளக்கம் தேவையில்லாத அளவு விரிவான வரிகள் நான்கு.. இதைவிட என்ன சொல்ல முடியும்?

ஏதோ திரைப்பாடல்தானே என்று எண்ணுபவர்கள்கூட இத்தனைப் புதையல்கள் இருக்கிறதா என்று ரசிக்க வேண்டிய பாடலிது!!

இந்தப் பாடல் இத்தனை அர்த்தங்களைச் சுமந்திருப்பதால்  திரைப்படத்திற்கு பாலாடை என்கிற பெயரும்கூட பொருத்தமே!!

http://www.youtube.com/watch?v=8hwyAvepyo4
காணொளி: http://www.youtube.com/watch?v=8hwyAvepyo4

பாடல் : கண்ணதாசன்
படம் : பாலாடை
குரல் : சுசீலா
இசை : கே.வி.எம்.
நடிகை : கே.ஆர்.விஜயா

பட்டாடைத் தொட்டில் கட்ட வேண்டும் – என் கண்ணுக்குப்
பால் வண்ணச் சங்கம் கொள்ள வேண்டும்
சிட்டென்று அள்ளிக் கொள்ள வேண்டும் – என் கண்ணுக்குச்
சிங்காரப் பொட்டு வைக்க வேண்டும்

(பட்டாடை)

கண்ணுக்கு மேலே மையிட்டுப் பார்த்து
கன்னத்திக் கிள்ள வேண்டும்
முன்னொரு நூறு பின்னொரு ணூறு
முத்தங்கள் சிந்த வேண்டும்
முத்தங்கள் சிந்த வேண்டும்

(பட்டாடை)

மார்பினில் எடுத்துப் பாலுண்ணக் கொடுத்து
மயக்கம் கொள்ளும்போது
அவர் வரப் பார்த்து ஆடையை மறைத்து
அப்பப்பா.. சொல்ல வேண்டும்

அன்னையைத் தந்தை அணைக்கின்ற கோலம்
கண்ணனும் காண வேண்டும்
என்னையும் மறந்து ஏன் இந்த விருந்து
என்றவன் சொல்ல வேண்டும்
என்றவன் சொல்ல வேண்டும்

(பட்டாடை)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *