“நான்” ஒரு விளையாட்டுப்பிள்ளையா? … 2

0

–இன்னம்பூரான்.

 

300px-Social_Psychology_Definition_3

இடம் கருதி எழுதினால், தலைப்பை ‘புதுச்சேரி நோட்ஸ்’ என்று மாற்றவேண்டும். பொருள் கருதி எழுதினால் அது தேவையற்றது. ஏவல் கருதி எழுதினால், தலைப்பை ‘மனதின் மார்க்கம்’ எனலாம். இப்போதைக்கு, தலைப்பு இருந்து விட்டு போகட்டுமே. எல்லோரும் இந்நாட்டு ‘உளவியல் வல்லுனர்கள்’ என்பது ஒரு நெருடலான விஷயம். தச்சனிடம் போய் முடி வெட்டிக்கொள்ளமுடியுமா?

அண்மையில் ஒரு மன நல ஆலோசகர் தொலைக்காட்சியில் அருமையான சில கருத்துக்களை கூறினார். அதனுடைய பயனை புதுச்சேரிக்கு பயணிக்கும் ஒரு சகபயணியிடம் கண்டேன். அவளது மகன் பிஸ்கோத்து சாப்பிட்ட பின் அதனுடைய பேக்கிங்கை குப்பைத்தொட்டியை தேடி அதில் போட்டான். அதை சிலாகித்து நான் பேசியபோது,தான் அந்த தொலைக்காட்சியை பார்த்ததின் நற்பயனே இது என்றார்.

பெரியவிஷயம் ஒன்றுமில்லை. சொன்னதை செய்து காட்டியிருக்கிறார்.. பையன் மனதில் பசுமரத்தாணியாக பதிந்து விட்டது. சிறிது நேரம் கழித்த பின் ஒருப்ளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலை ஒரு மனிதர் நழுவவிட்டார். அது உருண்டோடியவண்ணம். அந்த சிறுவன், அது மற்றவர்களை காவு வாங்குவதற்கு முன், அதை எடுத்து குப்பைத்தொட்டியில் போட்டான். அம்மா அவனுக்கு முத்தம் கொடுத்து வாழ்த்தினார். சரி. ஒரு நல்ல தலைவன் உருவாகி வருகிறான் நான் ஆனந்தப்பட்டேன். பாட்டிலை நழுவ விட்ட மனிதன் காலி பாக்குப்பொட்டலத்தை வீசி எறிந்தான். சரி. ஒரு சமூகவிரோதி நடமாடுகிறானே என்று கவலைப்பட்டேன். உரிமையை நாடும் மனிதன் கடமையை செய்ய பயிற்சி அளிக்கப்படவேண்டும் என்பது பாடம். எந்த பள்ளியிலும் இது எடுக்கப்படவில்லை என்பதால், பெற்றோர்களின் தலையாய கடமையாகி விடுகிறது.

அடுத்தபடியாக, தன் செயலுக்கு பொறுப்பு ஏற்றுக்கொள்வது. மார்க்கண்டேய கட்ஜூ சர்ச்சைக்கு உள்ளான மனிதராக இருக்கிறார். அலஹாபாத்தில் அவர் நீதிபதியாக இருந்த காலத்தில் ஒரு பொதுநல உதவி அவரிடம் நாடினேன். உடனே கொடுத்து பாராட்டிய அவர் மன்மோஹன் சிங்கை ஒரு அரசியல் கட்சி பாடாய் படுத்தியதை கூறவும், சில கட்சி தலைவர்கள் பாய்ந்து, பாய்ந்து அவரைகண்டனம் செய்கிறார்கள். அவர்கள் உள்மனதுக்கு நடந்த விஷயம் அப்பட்டமாக தெரியும். அதை பூசணிக்காயை சோற்றில் மறைத்து வைத்த மாதிரி, மூடி மெழுகுவதை எப்படி நியாயப்படுத்த முடியும்? அதே மாதிரி, தணிக்கைத்துறை கூறுவதுஎல்லாவற்றையும் ஆவணமாக ஒப்புக்கொண்டபின், பல துறைகள் குய்யோமுறையோ என்று அடித்துக்கொள்கிறார்கள். கேட்டகேள்விக்கு பதில் இல்லை.

அரசியல், சமூகம், சுற்றம், தனித்துவம் ஆகியவற்றில் இத்தகைய போலி நியாயப்படுத்தல் (Rationalization), சால்ஜாப்பு, மெய்யை பொய்யாகவும், பொய்யை மெய்யாகவும் மாற்றி வைப்பது (Fabrification) எல்லாவற்றையும் அன்றாடம் காண்கிறோம். அதன் தீவினையாக குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. மக்கள் மன்றமே கட்டைப்பஞ்சாயத்து செய்கிறது!தனிமனிதனின்மனோவியாதியின்/குறுக்குப்புத்தியின்/ வக்கிரத்தின் கொள்ளுவாய் பிசாசு தான் இது என்பதில் ஐயமில்லை.

மூன்றாவதாக சமுதாயத்தை குலைக்கும் தனிமனிதனின் மற்றொரு விகாரம் பற்றி, நீங்களே சொல்லுங்களேன்!

இன்னம்பூரான்
04 08 2014

http://innamburan.blogspot.co.uk
http://innamburan.blogspot.de/view/magazine
www.olitamizh.com

சித்திரத்துக்கு நன்றி:
http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/7e/Social_Psychology_Definition_3.jpg/300px-Social_Psychology_Definition_3.jpg

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *