இசைக்கவி ரமணன்

 

உனக்கே உனக்காக    (16)

 

விழுப்புரம் சந்திப்பு

 {பாடலைக் கேட்டு மகிழ}

indian-couple-love-romantic-honeymoon-cool-picture

விழுப்புரம் சந்திப்பு…..ம்..

எப்போது நம் சந்திப்பு?

 

இப்போதுதானே சந்தித்தோம் என்று

மனித பாஷை பேசலாமா நீ?

ஓ!

முத்தங்களுக்கும் பட்டியல்?

 

சந்தித்த போதெல்லாம்

சிந்தித்துக்கொண்டே இருந்தோமே

விதி மகிழ மகிழ

பிரிவைப் பற்றி?

 

சந்திக்க ஏங்குகிறோம்

சந்தித்தால் உருகுகிறோம்

சந்தித்தபின் மருகுகிறோம்

 

சந்திக்கத்தான் பிரிகிறோமா

பிரியத்தான் சந்திக்கிறோமா

 

இந்த நெடும் பயணத்தில்

இத்தனை சந்திப்புகள்

இருப்பதெல்லாம்

 

பிரிவும் சந்திப்பும்

என்றேனும் ஓர்நாள்

சமன்பெறும் என்ற நம்பிக்கையாலா?

 

எனக்கென்னவோ இந்தப்

பிரிவுப் பிடாரிதான் சந்திப்பு மோகினியாய்

வித்தை காட்டுகிறாள் என்று தோன்றுகிறது

 

எல்லோரும் இறங்கிவிடும்

ஏதோவொரு சந்திப்பில்

என்ன இருக்கப் போகிறது

எனக்கும் உனக்கும்?

 

என்றைக்குச் சந்தித்தோமோ

அன்றைக்கே முழுமையாக

இறக்கிவிட்டு விட்டோமே

எல்லோரையும்!

 

உனக்கென்ன தோன்றுகிறது?

ஒய்யாரக் கழுத்தை ஒசித்து

உயிரை உதட்டில் குவித்து

மூச்சு நிற்கும்படி

முத்தமிட்டு விட்டால்

சங்கமத்தின் நிரந்தரத்தில்

பிரிவு தொலைந்தே போய்

சந்திப்பு நிலைக்குமென்று

சிந்திக்கிறாயா?

 

விழுப்புரம் விலகிவிட்டது

வேண்டுமென்றால்

சங்கிலியை இழுத்துவிட்டுத்

தண்டவாளத்தின் நடுவே

சற்றும் நழுவாமல்

முற்றும் தழுவியபடி

சந்திப்போமா?

படத்திற்கு நன்றி

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *