கே.ரவி

குருநாதர் நித்யானந்தம்
குருநாதர் நித்யானந்தம்

1989-90 என்று ஞாபகம். என் குருநாதர் டாக்டர் நித்யானந்தம் ஒரு பழைய நூலை என்னிடம் தந்து அதைப் படித்து ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்றார். அதில் மாணிக்க வாசகப் பெருமான் அருளிய ‘ஞானத் தாழிசை‘ மூலமும் அதற்குத் தமிழில் ஒரு பெரியவர் எழுதிய உரையும் இருந்தன. படித்தேன். தோய்ந்தேன். நான் ஏதோ அனுபவத் தெளிவு பெறுவதற்காகவே அந்த மூலநூல் எழுதப்பட்டதோ என்று எனக்குத் தோன்றியது. ஆனால் அதற்காக பாடல்களுக்குத் தரப்பட்டிருந்த பழைய உரை எனக்கு நிறைவு தரவில்லை. இதை டாக்டரிடம் சொன்னேன். என் குருநாதரை நானும், என் சக சீடர்களும் டாக்டர் என்றுதான் அழைப்போம். உனக்கு என்ன தோன்றுகிறதோ, எப்படித் தோன்றுகிறதோ அப்படியே எழுது என்று அவர் கட்டளையிட்டார்.

தமிழ் இலக்கணத்தில், விருத்தம், துறை, தாழிசை என மூன்று பாவினங்கள் சொல்லப் படுகின்றன. ‘ஞானத் தாழிசை’ நூல், பன்னிரண்டு ஆசிரிய விருத்தங்கள் கொண்ட நூல். ஆனால் அதற்கு ‘ஞான விருத்தம்’ என்று பெயர் தராமல், ‘ஞானத் தாழிசை’ என்ற பெயர் ஏன் வழங்கப் பட்டது என்பது முதலில் புரியவில்லை. முழுதும் படித்து, ஆங்கிலத்தில் உரை எழுதும் போதுதான் அந்த மர்ம முடிச்சு அவிழ்ந்தது.

நாம் எவ்வளவுதான் ஞானத்தைத் தேடியலைந்தாலும், எவ்வளவு உயர, உயரப் பறந்தாலும் ஞானம் கிட்டாது; ஞானமே இசைந்து, தாழ்ந்து வந்து, நம்மை வரவேற்று, நம்முள் இசையாகக் கலந்தாலன்றி. அப்படித்தான் என் குருநாதரும் என்னைத் தேடி வந்து ஆற்றுப் படுத்தினார். இன்னும் சரியாகச் சொல்வதென்றால், இறைவனே ஒரு மனித வடிவிலோ அல்லது வேறு வடிவிலோ இறங்கி வந்து குருநாதனாக ஆற்றுப் படுத்துவான். இதை ஆங்கிலத்தில் ‘டிஸென்டென்ஸ்’ (descendance) என்று சொல்வார்கள். ஞானம் தமக்குள் இறங்கி வந்த அனுபூதியை மாணிக்கவாசகப் பெருமான் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் பாக்கள் என்பதைக் குறிக்கவே விருத்தங்கள் கொண்ட நூலுக்கு, ‘ஞானத் தாழிசை’ என்று பெயர் தரப்பட்டதாகத் தோன்றியது. தாழிசை என்ற பாவகையிலேயே அந்த நூலின் பாடல்கள் அமைந்திருந்தால் அதன் பெயர்க் காரணம் பற்றிய சர்ச்சையே எழுந்திருக்காது, இந்தக் குறிப்பை உணர வாய்ப்பின்றிப் போயிருக்கும். எனவே, காரணத்துடன்தான், ‘தாழிசை’ என்று பெயர் சூட்டிவிட்டு, விருத்தங்களில் அந்தப் பாக்கள் எழுதப்பட்டன என்று தோன்றியது.

இந்தப் பாக்களை மாணிக்கவாசகப் பெருமான் பாடினார் என்பதைப் பண்டிதர்கள், அதுவும் சைவநெறியில் தோய்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இதன் நடையும் திருவாசக ஆசிரியர் நடையை ஒத்ததாக இல்லை. ஆனாலும் இந்தப் பாக்கள் மாணிக்கவாசகர் அருளிய பாக்களே. இது என்ன புதிர்?

இந்தப் பாடல்களுக்கான உரை எழுதும் போது ஒரு செய்தி இந்தப் பாடல்களில் இருந்து பெறப்பட்டது. அது என்ன? திருவாசகத்தில், சிவபுராணம் பகுதியில், மாணிக்கவாசகரே சொல்கிறார்:

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்ad

பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்

இதில் ஒன்று கவனிக்க வேண்டும். மனிதப் பிறவி எடுக்கும் முன்பு பல பிறவிகளும், மனிதப் பிறவிக்குப் பிறகு பல பிறவிகளும் எடுத்ததாக அவர் சொல்கிறார். மனிதனாக வாழ்ந்து மரணம் அடைந்த பின்பு, பேயாகவும், அசுரராகவும், முனிவராகவும், தேவராகவும் பிறக்கும் வாய்ப்பைச் சுட்டிக் காட்டுகிறார். இப்படி எல்லாப் பிறப்பும் எடுத்து விட்டாலும், பிறவாநிலையாகிய வீடுபேற்றை அடைய வேண்டுமானால், கந்தர்வனாகவும், தேவனாகவும், தவ முனிவனாகவும், மேல் படிகளில் சஞ்சாரம் செய்த பிறகு மீண்டும் நிறைவாக ஒருமுறை மனிதப் பிறவி எடுத்த பிறகே முக்தி கிட்டும் என்ற ஒரு நுட்பத்தை ஞானத் தாழிசை நூலின் பாடல்கள் எனக்குக் குறிப்பாக உணர்த்தின.

இப்படி இரண்டாவது முறை மனிதப் பிறவி எடுப்பவர்களே ‘இருபிறப்பாளர்கள்’ என்று பழைய மறைநூல்களில் குறிக்கப் பட்டனர். அடுத்தடுத்துப் பல மனிதப் பிறவிகள் எடுப்பவர்கள் இந்தப் பட்டியலில் சேர மாட்டார்கள். மனிதப் பிறவிக்குப் பிறகு, சில காரணங்களால், பேயாய், கணங்களாய், வல்லசுரர்களாய் இருந்து விட்டு மீண்டும் மனிதப் பிறவி எடுப்பவர்களும் இந்தப் பட்டியலில் சேர முடியாது. மனிதப் பிறவியில் இருந்து உயர் தளங்களுக்குப் பதவி உயர்வு பெற்று, உயர் பதவிகள் எல்லாம் வகித்த பிறகு, பணி ஓய்வாகிய மோட்சம் அல்லது வீடுபேறு அடைவதற்கு முன்பு, மீண்டும் கர்மபூமியில், மிச்சமுள்ள கர்ம பலன்களைக் கழிக்க மனிதப் பிறவி எடுப்பவரே இருபிறப்பாளர்கள். ஒருவன் இந்தப் பொருளில் இருபிறப்பாளன் என்பதை அவனுக்குத் தக்க தருணத்தில் நினைவுறுத்தவே அப்படிப்பட்டவனுக்கு தக்க குருநாதரால் பிரம்மோபதேசம் செய்து வைத்துப் புனித நூல் அணிவிக்கும் வழக்கம் ஏற்பட்டது. ஒரு குறிப்பிட்ட ஜாதியில் பிறப்பவர்கள் எல்லாரும் இருபிறப்பாளர்கள் என்பதாகவும், மற்ற ஜாதிகளில் பிறந்தவர்கள் எவரும் இருபிறப்பாளராக இருக்க முடியாது என்பது போலவும் ஒரு தப்புக் கணக்கு எப்படியோ மதத்தின் பெயரால் நம்மிடையே பரவிவிட்ட ஒரு நச்சுக் கருத்து. பாரதி சொன்னது போல்:

கலகத்து அரக்கர் பலர் எங்க முத்து மாரியம்மா

கருத்தினுள்ளே புகுந்துவிட்டார் எங்க முத்து மாரியம்மா.

பறையடியத்துக் கொண்டு சேரி மக்கள் பாடும் பாட்டாக இதை அமைத்து, பல நூற்றாண்டுப் பிழையைத் திருத்த முன்வந்த பாரதியின் துணிவும், தெளிவும் நினைந்து, நினைந்து போற்றுதற்குரியது.

மாணிக்கவாசகராகத் ‘திருவாசகம்’ போன்ற பக்திச் சுவைசொட்டும் பாக்கள் எழுதி முடித்த பிறகு, உயர்நிலைகளில் பல நூற்றாண்டுகள் இருந்துவிட்டு வந்து மீண்டும் ஒரு மனிதனாகப் பிறந்து அவர் முக்தி அடையுமுன் தந்த அனுபூதிச் செய்யுள்களே ஞானத் தாழிசையின் பன்னிரண்டு பாக்களும் என்று கொள்ளலாமா?

அல்லது, அவர் சூக்கும நிலையில் இருந்து வேறொரு புலவனை ஆட்கொண்டு அவனுள் தாழ்ந்து, இறங்கி வந்து அவன் மூலம் பாடிய செய்யுள்கள் என்று சொல்லலாமா?

இப்படிப் பல நுட்பங்களைப் பெயரிலேயே கொண்ட ஞானத் தாழிசையின் பன்னிரண்டு பாக்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அவற்றுக்கு ஆங்கிலத்தில் உரை எழுதும் போது, சில சமயம், நான் ஏதேனும் வலிந்து பொருள் சொல்கிறேனோ என்று சந்தேகம் எழும். உடனேயே, அடுத்த வரி அல்லது அடுத்த பாட்டில் அதற்குத் தீர்வு கிட்டும். உடனே, உட்குரல் ஒலிக்கும்: ‘அட சந்தேகப் பிராணியே, நீ சொன்ன பொருள் சரிதான். அதை நீயா சொல்கிறாய். உன் மூலம் அது சொல்லப் படுகிறது. நம்பு.’ ஒருமுறை டாக்டரிடம் இது பற்றிச் சொன்ன போது, அவர் சொன்னார்: “அந்த நூல் ஒரு பொற்குவியல் பெட்டி (treasure box); உன் அறிவு அதைத் திறக்கும் சாவி என்று ஒரு நோக்கில் தோன்றலாம். உண்மையில், உன் ஆழ்மனமே ஒரு பொற்குவியல் நிறைந்த பெட்டி. அதன் “தாழ்” அல்லது தாழ்ப்பாளைத் திறக்கும் சாவிதான் “ஞானத் தாழிசை”.

கூச்சப் படுவது கூட கர்வமாகி விடும் என்று பட்டது. ஞானத் தாழைத் திறக்கும் சாவியாகிய இசை என்ற பொருளும் அந்த நூலின் தலைப்புக்குப் பொருந்துவதை எண்ணி வியந்தேன். “தாழ்” என்ற சொல்லுக்கு இத்தனை அர்த்தங்களா! அது ஒரு மந்திரச் சொல் என்று புரிந்து கொண்டேன்.

இப்போதாவது பஞ்ச பூத வாதத்துக்கு வாப்பா! சிகாமணி பொறுமை இழந்து விட்டான். மனோன்மணியும் முனகுகிறாள். இனியும் காலம் கடத்துவது சரியில்லை. பஞ்ச பூதங்கள் பற்றிய ஒரு விளக்கம் ஞானத் தாழிசைக்கு நான் எழுதிய உரையில் பளிச்சிட்டது. அது அறிவியலோடு முரண்படாத விளக்கம். அது என்ன?

சாதாரணமாக, நம் புலப்பாட்டுக்கு உள்ளாகும் பொருட்கள் மூன்று நிலைகளில் இருப்பதாக விஞ்ஞானம் சொல்கிறது. திடப்பொருள் நிலை, திரவப் பொருள் நிலை, வாயு அல்லது ஆவி நிலை. ஆங்கிலத்தில் சொல்வதென்றால், ஸாலிட், லிக்விட், கேஸ் (நான் கோர்ட்டில் வாதாடும் வழக்கில்லை ஓய், சமையலுக்குப் பயன்படுத்துகிறோமே அந்த சிலிண்டரில் வரும் ஆவி)!

advoஇன்னும் சற்று நுட்பமாக ஆராய்ந்தால், இந்த மூன்று விதமாகவும் இல்லாத சில விஷயங்கள் அறிவியல் புலப்பாட்டிற்கு உட்படுவது தெரிகிறது. இந்த மூன்று நிலைகளில் ஒன்று இன்னொன்றாகச் சில சூழ்நிலைகளில் மாறும். எடுத்துக்காட்டாக, திடப் பொருளாக இருக்கும் பனிக்கட்டி, உருகினால், திரவமாகி விடும். நீரைக் கொதிக்க வைத்தால் அது ஆவியாகி விடும். விஞ்ஞானிகள், சோதனைக் கூடத்தில் செய்த சில பரிசோதனைகளில், சில பொருள்கள் இந்த மூன்று நிலைகளுக்கும் அப்பாற்பட்ட நிலையில் மறைந்தே போய்விடுவதைக் கண்டுபிடித்தார்கள். ஆனால், பொருண்மை அழிவதே இல்லை என்ற விதியின்படி அவை மறைவதில்லை என்று சொல்லி, அவை ‘ப்யூர் என்ர்ஜி’ என்ற ஆற்றல் நிலைக்கு ஏகி விட்டன என்று அமைதி செய்தார்கள். அணுகுண்டின் சூக்குமமே அதுதான். எந்தப் பொருண்மை நிலைக்கும் அடிப்படைப் பொருண்மையான அணுவுக்குள் ஆற்றல் பொட்டலமாக ஓர் உட்கரு, மையம்கொண்டு இருப்பதை ரதர்ஃபோர்ட் என்ற அறிவியல் மேதை கண்டுபிடித்துச் சொன்னார். அவரைத் தொடர்ந்து, அவருடைய சீடர்கள், சாட்விக் போன்றவர்கள், அந்த ஆற்றல் பொட்டலத்தைப் பிரித்து, அவிழ்த்து அதற்குள் இருந்து மிகப் பெரிய அளவு ஆற்றல் வெளிப்படக்கூடிய வாய்ப்பை முன்மொழிந்த பிறகே, ஓப்பன்ஹைமர் என்ற விஞ்ஞானியின் தலைமையில் ஒரு குழு, அணுகுண்டை உருவாக்க முடிந்தது. திடநிலை, திரவநிலை, ஆவிநிலை, ஆற்றல்நிலை ஆகிய நான்கு நிலைகளில் பொருண்மை இருக்க முடியும் என்பது தெளிவாகியது. ஆனால், இன்னும் நுட்பமாக விஞ்ஞானம் வளர, வளர வெட்டவெளி என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் வெளியில் உண்மையிலேயே, பாரதி வியந்து சொன்னதுபோல் கணம்தோறும் சிற்றணுத் துகள்கள் கோடிக்கோடித் தோன்றி, நொடிப் பொழுதில் மறையும் தீராத விளையாட்டு, அல்லது கம்பர் சொன்னதுபோல் “அலகிலா விளையாட்டு”, நடைபெற்றுக் கொண்டே இருப்பது தெளிவாகியது. எனவே, ஆற்றலாக உருவெடுத்து, அதிலிருந்து சிற்றணுக்களாக உருவெடுத்து, உடனே மறைந்து, மீண்டும் தோன்றி, ஓர் ஓயாத சக்தி நடனத்தை வெட்டவெளி நடத்திக் கொண்டிருக்கும் வியப்பை விஞ்ஞானம் ஒப்புக் கொண்டுள்ளது.

இப்பொழுது சொல்லுங்கள், திடப் பொருள், திரவப் பொருள், ஆவிப்பொருள் ஆகிய மூன்று நிலைகள், அவற்றைக் கடந்த ஆற்றல்நிலை என்ற நாலாவது நிலை, நான்கு நிலைகளுக்கும் நிலைக்களமாக விளங்கும் வெட்டவெளியாக விரிந்து கொண்டே இருக்கும் ஐந்தாம் நிலை. இப்படி ஐந்து நிலைகளை அறிவியல் ஏற்றுக் கொண்டுள்ளது. அந்த ஐந்து நிலைகளே, திடப்பொருள் நிலையைக் குறிக்கும் நிலம்; திரவப் பொருள் நிலையைக் குறிக்கும் நீர்; ஆவிப்பொருள் நிலையைக் குறிக்கும் காற்று; ஆற்றல் நிலையைக் குறிக்கும் நெருப்பு; வெட்டவெளி நிலையைக் குறிக்கும் ஆகாசம் அல்லது வெளி. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாசம் என்ற பஞ்ச பூதங்கள்! சரிதானே!

‘என்னப்பா, ஆவி, பூதம் என்று அச்சுறுத்துகிறாய்?’ என்ற குரல் கேட்கிறது. ‘ஆவி’ என்பது வாயு நிலை. அவ்வளவுதான். ‘பூதம்’ என்ற சொல்லுக்கு வடமொழியில் தோற்றம் என்று பொருள். பூத உடல் என்றால் புலப்பாட்டுக்குத் தோன்றும் உடல். சூட்சுமம் என்பதன் எதிர்ப்பதமே பெளதிகம். பெளதிகம் என்ற சொல்லில் இருந்து வருவது பூதம். பூச்சாண்டி காட்டவில்லை. தோற்றங்களால் ஆன உலகத்தில் தோன்றும் பொருள்கள் இந்த ஐந்து விதமாகத்தான் தோன்ற முடியும் என்ற விஞ்ஞான உண்மையைக் குறிப்பதே, ‘பஞ்ச பூதங்கள்’ என்ற சொற்றொடர். பஞ்ச பூதங்கள் இன்றி உலகம் இல்லை. பஞ்ச பூதங்களை நுகரும் பொருட்டே அவற்றுக்கு ஏற்ப ஐந்து பொறிகளும், அவற்றின் மூலம் புலப்பாடாகின்ற ஐந்து புலன்களும். எப்படி ஒரு கச்சிதமான அமைப்புமுறை! இந்தப் பஞ்ச பூத அமைப்புமுறை பஞ்சர் ஆனால் சூனியம்தான். அடாடா, என்ன பஞ்ச் டயலாக்!

சிகாமணி விசிலடிக்கிறான், அதுவும் ஒரு திரைப்படப் பாடலை. என்ன பாடல்? “கேள்வி பிறந்தது அன்று, நல்ல பதில் கிடைத்தது இன்று”. சரியான கேள்வி கேட்பதே தீர்வின் முதற்படி. இல்லையா? ஒளவை நடராஜன் அவர்கள் 1986-ல் கேட்ட கேள்வியால், ஏறக்குறைய ஐந்து ஆண்டுகள் கழித்து, ‘ஞானத் தாழிசை’ மூலம் ஒரு தீர்வு கிடைத்த வரலாறு இதுதான் ஐயா! அவருக்கு என்றும் நான் நன்றி சொல்ல வேண்டும்.

குருவாகத் தேடி வந்து என்னை ஆற்றுப் படுத்திய டாக்டர் பற்றி இன்னும் நிறைய சொல்ல வேண்டியுள்ளது. அது மட்டுமில்லை. ஞானத் தாழிசைக்கு உரை எழுதக் கட்டளை இட்டதற்கு முன் அவர் தந்த உள்ளூக்கத்தால், ஏதோ ஓர் உயர்ந்த களத்தோடு என் ஆழ்மனம் தொடர்பு கொண்டதாகத் தோன்றியது. திருமூலருக்கு எப்படித் திருமந்திரம் பாடல்கள் உருவாகின என்று சொல்லப் படுகிறதோ, கிட்டத்தட்ட அப்படியொரு நிலையில் சில அதிசயச் செய்யுள்கள் என் அகத்தில் உதித்தன. அப்படி வந்த 101 செய்யுள்களை என் கவிதைத் தொகுப்பான “உன்னோடு நான்” என்ற நூலில் ‘குருமந்திரம்’ என்ற துணைத் தலைப்பிட்டுத் தந்துள்ளேன். அதில் கூட பஞ்ச பூதங்களைப் பற்றிய விளக்கம் பொதிந்து கிடப்பதை நான் உணர்ந்தேன். குருமந்திரத்திலிருந்து, மாதிரிக்கு ஒரு செய்யுள் மட்டும் இங்கே தருகிறேன்:

நெருப்புக்கு நீர்தந் தணைக்கலாம் அன்றி

நெருப்பை வளியால் பெருக்கலாம் உள்ளே

நெருப்பை விதைக்க நிலம்தரலாம் தீயில்

உருவாரம் செய்துவெளி ஊதலாம் அன்றே

சரி, சரி. அந்தக் கதைகளை அப்புறம் கேட்கலாம். நாம் பாட்டுக்கு ஏதேதோ பேசிக் கொண்டே, கால பைரவன் துணையோடு கடகடவென்று பத்துப் பதினைந்து ஆண்டுகள் தாண்டி வந்து விட்டோமே. அந்தக் காலக் கட்டத்தில் என்னவெல்லாம் நடந்தனவோ? அவற்றைத் தவற விடலாமா?

திருமணம் ஆன பிறகு, முன்பே சொன்னது போல், அவ்வப்போது நானும் ஷோபனாவும் சேர்ந்து அமர்ந்து சில இசைப்பாடல்கள் உருவாக்கினோம் என்றாலும், ‘கவிதை கவிதை’ என்று வெறி கொண்டு பாடிய தாகம் குறைந்து விட்டது போல் ஆனது. திருமணம் ஆகிச் சில ஆண்டுகளாக நான் பாரதி கலைக் கழகக் கவியரங்கத்திற்குச் சரிவரப் போகாமல் இருந்த நிலையில், திடீரென்று, 1977-ஆம் ஆண்டில், மீண்டும் அந்தக் கலைக் கழகத்தோடு தொடர்பைப் புதுப்பித்துக் கொள்ள, மீண்டும் என்னுள் மின்னிக் கொண்டிருந்த கவிதைக் கனலை ஊதி வளர்க்க, மந்தைவெளி, நார்ட்டன் லேனில் அப்போது நான் வசித்து வந்த வீட்டில் பாரதி கலைக் கழகத்தின் கவியரங்கம் நடைபெற அழைப்பு விடுத்தேன். எல்லாரும் வந்து கவிதை பாடினார்கள். என்னைப் பாட அழைப்பார்கள் என்று தெரியும். அதற்குச் சில நாட்கள் முன்பிருந்தே அந்தக் கவியரங்கத்துக்காக ஏதாவது கவிதை எழுத முனைந்து, முயன்று முடியாமல் தோற்றுப் போய்க் கடைசியாக ஒரு கவிதை எழுதினேன். அதைத்தான் படித்தேன். என் கவிதை நண்பர்கள் இன்றும் அந்தக் கவிதை வரிகளைச் சொல்லி வருகிறார்கள். அதன் ஆரம்ப வரிகள்:

எனக்குக் கவிதை எழுத வராது

ஏக்கம் இல்லாமல் இலக்கியம் ஏது

அந்தக் கவிதை அந்த அரங்கத்தில் அனைவரையும் கவர்ந்தது. ஆனால் அந்த அரங்கத்தில் என் கவனம் வேறு திசையில் சென்றது. அந்த அரங்கத்தில் புதிதாக எனக்கு அறிமுகமான ஒரு கவிஞரும், அவருடன் வந்திருந்த இன்னொரு நண்பரும் என் கவனத்தைக் கவர்ந்தார்கள். அவர்கள் இருவருமே நெற்றி நிறைய குங்குமம் நீட்டியிட்டிருந்தார்கள். தீட்டியிருந்தார்கள் என்று கூடச் சொல்லலாம். அந்த அரங்கத்துக்கு வந்திருந்த என் நண்பன் கண்ணன், ” என்னடா ஒரே சாக்தர் கூட்டமா இருக்கே” என்று சத்தமாகக் கேட்டுவிட்டான். அந்தக் குங்குமக் கவிஞர்கள் இருவரும் வேறு யாருமில்லை, நம்ம இசைக்கவி ரமணனும், திராவிட மாயை சுப்புவும்தான். அவர்களைச் சந்தித்தது என் வாழ்வின் ஒரு திருப்புமுனை என்றே சொல்லலாம்.

ரமணனின் கவிதாவேசமும், சுப்புவின் அடக்கமான எதேச்சாதிகாரமும் என்னை எப்படியோ கவர்ந்ததோடு, எனக்குள்ளும் தொற்றிக் கொண்டன. சீன தத்துவத்தில் ‘யின் அண்ட் யாங்’ (yin and yang) இரட்டை நிலைக்கு இந்த இரட்டையரை உதாரணம் காட்டலாம். அவர்களுக்குள் அப்படியோர் முரண்பட்ட இணைவு, இணைபிரியாத தொலைவு!

அன்று முதல் அவர்கள் என் வீட்டுக்கு வருவதும், நானும் ஷோபனாவும் பெஸண்ட் நகரில் ரமணன் குடியிருந்த வீட்டுக்குப் போவதும் அன்றாட வழக்கமாகி விட்டது. சுப்புவுக்கு ஷோபனாவின் மேல் ஒருவித பக்தி கலந்த மரியாதை. முதலில் பார்த்த போது ‘இந்தப் பெண்ணுக்கு கவிதை சமாச்சாரம் எல்லாம் எதற்கு” என்பதுபோல் பார்த்தவன் தன் அபிப்ராயத்தைப் பிறகு மாற்றிக் கொண்டான். ‘உனக்கு என்ன பாடல் பிடிக்கும்?’ என்று சுப்பு அவளிடம் கேட்டதும், பாரதியின் ‘மோகத்தைக் கொன்றுவிடு பாடல்’ என்று அவள் விடை சொன்னாளாம். அதனால், அவனுடைய அபிப்பிராயம் அடியோடு மாறிவிட்டதாம். இதை அவனே சொல்லியிருக்கிறான்.

ரமணன் என்ன எழுதினாலும் அந்தத் தாளின் முகப்பில், “சக்தி காக்கிறாள் சஞ்சலம் இல்லை” என்று எழுதியிருப்பான். அது அவனுடைய தாரக மந்திரமாகவே இருந்தது. ஒருநாள், மாலை பெஸண்ட் நகர் ரமணன் வீட்டில் கவிதைக் கச்சேரி, ரமணனுடைய அப்பா சேஷு மாமாவின் கிண்டல், ரமணன் அம்மா தந்த பாயசம் என்று எல்லா கலாட்டாவும் முடிந்த பிறகு, ரமணன் அன்று இரவு ரயிலில் ஏதோ ஊருக்குக் கிளம்பினான். அவனுடைய பெட்டி, மூட்டை முடிச்சுகளை எல்லாம் சுப்புவும், இன்னொரு தாசானுதாசனான நண்பன் கெளரிசங்கரும் எடுத்துக் கொண்டனர். “என்னப்பா, இப்படியே நடைபயணமாகச் சென்ட்ரல் ரயில் நிலையம் வரை, “சக்தி காக்கிறாள் சஞ்சலம் இல்லை” என்று கோஷம் போட்டுக் கொண்டே போவதாக உத்தேசமா?”. இப்படி நான் கேட்டதும் எல்லாரும் சிரித்தார்கள். சுப்பு மட்டும் விரைப்பாக, ரமணனை வழியனுப்பப் போவது ஏதோ சபரிமலை யாத்திரை மாதிரி ஒரு பரவச உணர்வுடன், நடை கட்டுவதிலேயே கண்ணும் கருத்துமாய் இருந்தான்.

நான் அந்த சாக்தர் கூட்டத்தில் வகையாக மாட்டிக் கொண்டு விட்டேன். அப்போது கடவுள் என்றெல்லாம் ஒரு தீவிர நம்பிக்கை எனக்குக் கிடையாது. அப்படி ஒருவரோ, ஒருத்தியோ, ஒன்றோ இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டும் என்ற ஒரு கர்வத்தோடு நான் இருந்த காலம் அது. உடைந்து தவிடுபொடி ஆவதற்குத்தானே கர்வம்! அது உடைந்த கதையைப் பிறகு சொல்கிறேன்.

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “காற்று வாங்கப் போனேன் (31)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *