கே. ரவி

ஓசை எழுப்ப முடியவில்லை என்று ஏன் வருத்தப் படுகிறாய்? ஓசையெல்லாம் அடங்கி மோனநிலை அடையத்தானே யோகிகள் முனைகிறார்கள். இப்படிக் கேட்கலாம். ஆனால், ஓசையே என் கவிதைகளின் உயிர்நாடி. அதை நான் எப்படி இழக்க முடியும். 1980-ஆம் ஆண்டில் எழுதிய ஒரு கவிதையை இங்கே சொல்லியாக வேண்டும். அந்தக் கவிதைக்கு ஒரு சிறிய முன்னுரை தேவைப்படுகிறது.

a6பத்மாக்கா என்று நாங்கள் அன்புடன் அழைக்கும் டாக்டர் பத்மா சுப்பிரமணியம் அவர்களுக்குக் கவிதை ஈடுபாடு அதிகம். இருக்காதா பின்னே. எப்படிப்பட்ட கலைப் பாரம்பரியத்தில் வந்தவர் அவர்! அவரிடம் கலைமகளின் எல்லா அம்சங்களும் நிறைந்திருக்கக் காண்கிறேன். அவருக்கு எங்கள் கவிதைச் சுற்றத்தின் மீது, அதாவது, இசைக்கவி ரமணன், வ.வே.சு., நான், இன்னும் பல கவிதை நண்பர்கள் உள்ளிட்ட கவிதைச் சுற்றத்தின் மீது அளவு கடந்த அன்பு. தம் மனத்துக்கு நெருக்கமான எந்த நிகழ்ச்சி நடத்தினாலும், அவர் எங்களை அழைத்துக் கவிதைகள் சொல்ல வைப்பார். அப்படித்தான் 1980-ஆம் ஆண்டு, அவர் வீட்டில் விஜய தசமி பூஜையில் ஒரு கவியரங்கம் ஏற்பாடு செய்து எங்களை அழைத்திருந்தார். அந்தக் கவியரங்கத்தில்தான் என்னுடைய அந்தக் கவிதை அரங்கேறியது. அதுதான் ஓசைக் கவிதை. அந்தக் கவிதைக்கு இன்னொரு சிறப்புப் பெருமை உண்டு. ஆம், ரமணனின் பராசக்தி கவிதையோடு அதுவும் அரங்கேறியது என்பதே அதன் பெருமை. நடிகர் திலகம் சிவாஜியுடன் சேர்ந்து நடித்த ‘தேவர் மகன்’ திரைப்படத்தை எப்படிக் கமல்ஹாஸன் மறக்கவே முடியாதோ,  அப்படி இசைக்கவி ரமணன் சொன்ன பராசக்தி கவிதையுடன் சேர்ந்து என் கவிதை ஒன்று அரங்கேறிய பெருமையை நான் மறக்கவே முடியாது. என்னைப் பொறுத்தவரை, மிக உயர்ந்த, என்னை மிகவும் பாதித்த கவிதைகளில் ஒன்றாகவே ரமணனுடைய பராசக்தி கவிதையைக் கருதுகிறேன்.‘

கட்டறுந்த காட்டாற்று வெள்ளமாக – மெத்தக்10530681_820952731257554_5883851054705537964_n

கற்றவர்க்கும் கால்தடுக்கும் பள்ளமாக – புத்தி

முட்டமுட்ட முளைக்கின்ற பாறையாக – எங்கோ

முணுமுணுத்துக் கொல்லுகின்ற தேரையாக

ஓடஓடச் சரியும் தொடுவானாக

உந்த உந்த விலகும் நிலவாகப்

பாடப் பாடப் பணிய மறுக்கும்

பரவசம் அதிசயம் பொய் எங்கள் பராசக்தி

இப்படி ஒரு மடை திறந்த வெள்ளமாகப் பாய்ந்து வந்த பராசக்தி கவிதையை ரமணனே சொல்லிக் கேட்க வேண்டும்.

அதற்கு இந்தச் சுட்டியைச் சொடுக்கலாமே —-

அந்தக் கவிதையுடன் அரங்கேறிய பெருமை என் ஓசைக் கவிதைக்கு உண்டென்றேன் இல்லையா? அந்த ஓசைக் கவிதை இதோ:

நான் எழுப்பும் ஓசைதான் – இந்த

மாநிலம் எங்கும் மோதிச் சிதறி

வானம் பூமியென வையம் பிளந்து

இடைப்பட்ட வெளியெங்கும் இடிமின்னல் மழையாகிக்

காற்றைச் சொடுக்கிக் காதல் நினவுகளை

ஆற்றங் கரையில் அழகு மலர்களாய்

அடுக்கி வைத்துப் பச்சைப் பசேலென்ற

புன்னகையின் ஊடே புகுந்து விளையாடி

உங்களுக் கென்றோர் உலகம் படைத்துப்பின்

உங்கள் மனத்துக்குள் ஊழிக் கனலெழுப்பி

உங்கள் உணர்வுகளை ஊதிக் கலைத்தபடித்

திங்கள் பகலென்று தேகம் எடுத்தபடி

எங்கும் பரவி எக்காளம் இடுவதெல்லாம்

நான் எழுப்பும் ஓசைதான்

ஓசை எழுப்பும் உத்வேகம்தான் – என்

ஆசைக் கடையாளம் ஏக்கத்துக் காதாரம் – அந்த

ஆதார சக்திக்கே ஆளாகி விட்டவனை

நாதப் பொருளையே நம்பிக் கிடப்பவனைக்

காது குளிரக் கேளுங்கள்

ஓசைப் பெருவெளியில் உட்கார்ந்த படியங்கே

உதயக் கதிரழகை உற்றுக் கவனியுங்கள்

இதயம் வெடித்துச் சிதறுண்டு போனாலும்

உதயக் கதிரழகை உற்றுக் கவனியுங்கள்

உலகப் பரப்பே உதிர்ந்து போனாலும்

புலனழிய வாருங்கள் புலனழிந்து போனாலும்

புதிய வடிவங்கள் பூண்டு மகிழுங்கள்

சிந்தை அழிந்தாலும் செவிமலர்ந்து நில்லுங்கள் – வாழ்க்கைப்

புயலென்ன செய்யுமப் போது

ஓசையைக் கவிஞர்கள் எப்படியெல்லாம் போற்றிப் பாடியிருக்கிறார்கள்! இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தில் வரும் ஒரு பாடலே சான்று:

உழவர் ஓதை மதகோதை உடைநீர் ஓதை தண்பதம்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி

ஆர்க்கும் ஓசைகளை எப்படி அடுக்கிச் சொல்கிறார் இளங்கோவடிகள்!

ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே

இது அப்பர் பெருமான் வாக்கு.

ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ!

இது பாரதியின் தீர்ப்பு.

இயற்கையின் ஓசைகளில் மனம் பறிகொடுத்து என்னை இழக்கிறேன். அப்படி என்னை இழப்பதில் ஒரு பெரிய லாபம் இருக்கிறது. இசையில், இயற்கையின் ஓசைகளில் மெய்மறந்து, இந்த உடலெல்லைக்கு உட்பட்ட மிகச்சிறிய அகங்காரமான என்னை இழக்கிறேன்; அப்படி என் சிறிய நானை நான் இழக்கும் போதே, இந்த உடலைக் கடந்து, எல்லையற்ற பிரபஞ்சமாகவே விரிந்திருக்கும் என் மிகப் பெரிய நானை மெல்ல மெல்லக் கண்டுபிடித்து, என் விரிவை உணரத் தலைப்படுகிறேன். சின்ன முதல் போட்டு, பெரிய லாபம் ஈட்டும் செட்டியார் கதை! வெங்காயத்தைக் கொடுத்துச் சீரகம் வாங்கும் மளிகை வியாபாரம்! திருவேரகத்து முருகப் பெருமானைச் செட்டியாரே என்று அழைத்துச் சீர் அகமாகிய முக்திநிலை கேட்கும் சொக்கநாதப் புலவரின் ஒரு தனிப்பாடல் நினைவுக்கு வருகிறது:

வெங்காயம் சுக்கானால் வெந்(து)அயத்தால் ஆவதென்ன

இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை – மங்காத

சீரகத்தைத் தந்தீரேல் தேடேன் பெருங்காயம்

ஏரகத்துச் செட்டியா ரே

இயற்கையின் ஓசைகள் இனியவை. அவற்றில் இதயம் பறிகொடுத்து, இறைவனையே நாதப் பிரும்மமாய்க் கண்டு துய்த்த மஹாகவிகளும், மஹான்களும் நமக்கு வழிகாட்டிகள்.

ஆனால், நமக்குள் ஓயாமல் ஓசை எழுப்பிக் கொண்டிருக்கும் மனச்சலனங்கள் அமைதி செய்யப்பட வேண்டியவை. அவற்றைச் சிந்தாகுலம் என்றே பெரியவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ‘ஆகுலம்’ என்பது ஆரவாரத்தைக் குறிக்கும் சொல்.

மனச்சலனங்களை நிலைக்குக் கொண்டு வந்து, சலனமற்ற மோன லயத்தில் மூழ்குவதும், புறத்தே இயற்கையில் எழும் சலனங்கள் அனைத்திலும் இறைமையைக் கண்டு பரவசத்தில் ஆழ்வதும், ஆகிய இரண்டுமே உயர் அனுபூதி நிலைகளே! முதல் சாதகத்தை யோகியும், அடுத்த சாதகத்தைக் மஹாகவியும், இசைஞானியும் மேற்கொள்வார்கள். இந்த இரண்டு முறைகளின் இறுதி முனைகளும் சந்தித்துக் கொள்ளும் ஒரு வட்டத்தில் நான் சுழன்று கொண்டிருக்கிறேனோ?

மிகச் சமீபத்தில் உதித்த ஒரு பாடலைச் சொல்ல இதுதான் சரியான இடம். தினமும் காலை 5 மணிக்கு யோகாசனப் பயிற்சிகள் சொல்லிக் கொடுக்கும் ஆசான் என் வீட்டுக்கு வருவார். நான் 4.30 மணிக்கு எழுந்து, தயாராக வேண்டும். அதற்காக மேஜைக் கடிகாரத்தில் அலாரம் வைத்துக் கொண்டு படுப்பேன். சில மாதங்களுக்கு முன் ஏனோ தெரியவில்லை, அலாரம் அலறவில்லை. ஆனால், அந்த அலறல் ஓசை இல்லாவிட்டாலும், 4.45-மணிக்கெல்லாம், பொழுது புலரும் அலர் ஓசையோடு, பலவிதமான பறவைகளின் கீச்சுக் கீச்சுக் குரலில், இயற்கையாய் விரிந்திருக்கும் பராசக்தியே என்னைத் துயில் எழுப்பினாள்! நான் கண்மலர்ந்தேன்; ஒரு பாடல் என் நெஞ்சில் மலர்ந்தது.

(பாடல் கேட்டு மகிழச் சொடுக்கலாம் சுட்டியை —–)

எத்தனை ஓசைகளோடு தினம் என்னை

எழுப்புகிறாய் தாயே

எத்தனை வண்ணங்கள் காட்டி என்னை நீ

இயக்குகிறாய் தாயே

சத்தமெல்லாம் ஒரு கணத்தில் இழந்து

வெட்ட வெளியில் வடிவின்றிக் கலந்து

போவதற்கா இந்தப் பகல் வேஷம் – வெறும்

பொம்மைக ளோடென்ன சகவாசம்

எப்பொழுதும் உன் சன்னிதியில்

என்குரல் ஓசை கேட்கட்டுமே

ஒவ்வொரு சொல்லுமுன் கார்குழலில்

ஒவ்வொரு மலராய்ப் பூக்கட்டுமே

கேட்பதெல்லாம் தரும் தாய்மனமே – என்

கவிதையில் வந்தமர்வாய் தினமே.

இந்தப் பாடலைப் பாடிக் கொண்டே என் வீட்டுத் தோட்டத்தில் உலவிக் கொண்டிருந்தேன். பாடி முடித்ததும் எந்தச் சத்தமும் இல்லாத ஒரு பேரமைதியின் நடுவே நான் நிற்பதை உணர்ந்தேன். பறவை ஒலி, மரங்களின் சலசலப்பு, பூச்சிகளின் ரீங்காரம், ஏன், என் இருதயத்தின் லப்டப் துடிப்பு, ஹூம்ஹூம், எந்தச் சத்தமும் இல்லை. இல்லையா, எதுவும் எனக்குக் கேட்கவில்லையா? அரைநிமிடம் அப்படியோர் அமைதி! என்னுள் இருந்து புறப்பட்டு வெளிவந்த கவிதையை வரவேற்க இயற்கை ஆடாமல் அசையாமல் நின்றதுபோல் உணர்ந்தேன்.

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *