இப்ப என்ன மாறிப் போச்சு?

2

“ஒரு அரிசோனன்”

“உஸ்ஸ்… என்ன வெய்யில், என்ன வெய்யில்? எப்படி வெக்கை கொளுத்தறது? இந்த மனுஷனுக்கு இந்த வயசிலே வேகாத வெய்யில்ல என்ன அப்படி வாக்கிங் வேண்டிக் கிடக்கு? எம்பத்திமூணு வயசாயிடும், இன்னும் நாலு மாசத்துலே! மனசில இன்னும் இருபத்திமூணுன்னு நினைப்பு! வேகுவேகுன்னு அதே நடை! சின்னப் பசங்ககூட இவர்கூட சேர்ந்து நடக்க முடியறதில்லே, ஓட வேண்டியிருக்கு! கிருஷ்ணா, ராமா, கோவிந்தான்னு வீட்டோட கெடக்காம இப்படி வெளிலே வெளிலே போயிட்டா, நான்னா வயத்திலே புளியைக் கட்டிண்டு இருக்க வேண்டியிருக்கு? மயிலாப்பூர் முந்தி மாதிரியா இருக்கு? காரும், ஸ்கூட்டரும், மோட்டார் சைக்கிளும், ஆட்டோவும், லாரியுமான்னா நெளியறது? தடுமாறிக் கீழே விழுந்துட்டா, கிழட்டுப் பிராணன்னா போயி வைக்கும்? நான் சுமங்கிலியா எப்படிப் போய்ச் சேர்றது?” என்று வாய்விட்டு முணுமுணுத்துக்கொண்டே, வெளியில் போன தன் கணவர் இன்னும் திரும்ப வரக் கொணோமே என்று ஆதங்கத்துடன் பார்த்தாள் பார்வதி.

வாயில் கம்பிக் கதவில் நிழலாடவே பார்வதி தலையைத் தூக்கி எட்டிப் பார்த்தாள். கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது.

“அப்பாடா! இப்பவாவது மனுஷன் திரும்பினாரே!” என்று படுத்திருந்தவள் பெஞ்சிலிருந்து எழுந்து வாசல் கதவை நோக்கி நடந்தாள்.

இருபத்திமூன்றிலிருந்து இருபத்தைந்து வயது மதிக்கக்கூடிய ஒரு இளைஞன் நின்றுகொண்டிருந்தான். நல்ல களையான புன்னகை ததும்பும் முகம், கனிவான பார்வை, நல்ல உயரம், வெளிர் நீலச் சட்டையும், வெள்ளை வேஷ்டியும் உடுத்தி இருந்தான். கையில் சிறிய எர்பாக். பார்வதிக்கு சாட்சாத் முருகப் பெருமானே வீட்டுக் கதவைத் தட்டியது போன்ற ஒரு பிரமை. கண்களை இடுக்கிக்கொண்டு, புருவத்தின்மீது கையை வைத்துக்கொண்டு, அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்தாள்.

“பாட்டி, இது சிவராமத் தாத்தா வீடுதானே?” என்று அதே கனிவான புன்னகையுடன் கேட்டான் அந்த இளைஞன்.

“யார் நம்மை பாட்டி, தாத்தா உறவு சொல்லி விசாரிக்கிறார்கள்?” என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டே, “ஆமாம்ப்பா! இது அவராம்தான். நீ யாருப்பா? எங்கேந்து அவரைத் தேடிண்டு வரே?” என்று கதவைத் திறக்காமலேயே கேட்டாள் பார்வதி. இந்தக் காலத்தில்தான் யாரையுமே சீக்கிரம் நம்ப முடிவதில்லையே?

“பாட்டி, நான் மும்பையிலிருந்து வரேன். என் தாத்தாவும், சிவராமத் தாத்தாவும் வெள்ளைக்காரங்களை எதிர்த்து நடந்த போராட்டத்திலே, ஒண்ணா அமராவதி ஜெயில்ல ஆறு மாசம் இருந்தாங்களாம். ரொம்ப ப்ரண்ட்ஸாம். எனக்கு சென்னையில் வேலை கிடைச்சிருக்கு. என் தாத்தாதான் உங்க ரெண்டுபேரையும் பார்த்து, ஆசிர்வாதம் வாங்கின பின்னாலே வெளிலே சேரச் சொன்னார்.” என்று பதில் சொன்னான்.

இதைக் கேட்டதும் பார்வதிக்கு மனம் நெகிழ்ந்து விட்டது. “அடாடா, உள்ளே வாப்பா! நான்பாட்டுக்கு ஆசீர்வாதம் வாங்க வந்த பிள்ளையை வெளீலையே நிறுத்தி வச்சுப் பேசிண்டிருக்கேனே! உள்ளே வாப்பா. உன் பேரு என்ன சொன்னே?” என்றபடி கதவைத் திறந்து விட்டாள்.

“என் பேரு ராஜா, பாட்டி.”

உள்ளே நுழைந்தவனை பெஞ்சில் உட்காரச் சொன்னாள். தன் ஏர்பாக்கைத் திறந்து, அதிலிருந்து ஒரு பொட்டலத்தையும், ஒரு அட்டைப் பெட்டியையும் எடுத்து அவளிடம் நீட்டினான்.

“பார்வதிப் பாட்டி பழுத்த சுமங்கலி. வெறுங்கையா போகக்கூடாது, பூ கொண்டுபோன்னு தாத்தா சொன்னார். இந்த பொட்டலத்திலே பூ இருக்கு. சிவராமத் தாத்தாவுக்கு பாம்பே ஹல்வா பிடிக்கும்னு ஒரு பாக்ஸ் தாத்தா கொடுத்து அனுப்பினார்.’

பார்வதிக்குக் கண்கள் பனித்தன. குழந்தை குட்டிகள், பேரன் பேத்திகள் என்று யாரும் கிடையாது. அவளுக்கு மூன்று முறை குறைப் பிரவசமாகவே பிறக்கவே, இதற்குமேல் கருத் தரித்தால், உயிருக்கு ஆபத்து என்று கருப்பையை எடுத்து விட்டார்கள். எனவே, ஒருவருக்கொருவர்தான் குழந்தை. அந்த ஔவைக்கு முருகன் நாவல் பழங்களை உதிர்த்தான். அதே முருகனே, யாரோ பெற்ற இந்த ராஜா வடிவில் பூ கொண்டுவந்து தருகிறானா?

“என்ன பாட்டி, அப்படியே நின்னுட்டீங்க? இந்தாங்க!” என்று ராஜா உரிமையுடன் சொன்னது அவளை உலகிற்குக் கொணர்ந்தது. முகமலர்ச்சியுடன் அவனிடமிருந்து வாங்கிக்கொண்டாள்.

“கொஞ்சம் இரு ராஜா. வெள்ளிக்கிழமை கார்த்தாலே புஷ்பம் கொண்டு வந்திருக்கே. கற்பகாம்பிகைக்குச் சாத்திட்டு வந்துடறேன்.” என்று கிளம்பியவள், “அது சரி, நீ எங்கே தங்கப் போறே? சொந்தக்காரா யாரும் இருக்காளா? இருக்க ஜாகை பார்த்தாச்சா?” என்று வினவினாள்.

“இல்லே பாட்டி. இனிமேத்தான் பார்க்கணும். நேரே இங்கேதான் வந்தேன்.”

“பம்பாய்லேந்து வரேன்னு சொன்னே? ஒரே ஒரு சின்னப் பை மட்டுமே கொண்டு வந்திருக்கியே? நன்னா ஸ்நானம் பண்ணி வேஷ்டி சட்டை வேறே புதிசாப் போட்டுண்டு இருக்கே?” அவள் கவனத்திலிருந்து எதுவும் தப்பவில்லை.

“நேரா அப்படின்னா, ரயில்வே ஸ்டேஷன்லேந்து நேர இங்கே வரலை பாட்டி. ஒரு ஹோட்டல்லே ரூம் எடுத்து, பெட்டியை எல்லாம் அங்கே போட்டுட்டு, அங்கேயே குளிச்சேன். வர்றபோது பூ வாங்கி வந்தேன். அதையே சுருக்கமா நேர வந்ததாச் சொன்னேன். ஆசீர்வாதம் வாங்க வர்றபோது பாண்ட் வேண்டாம்னுதான் வேஷ்டி கட்டி வந்தேன்.”

“உன்னைப் பெத்து வளத்தவா ரொம்ப நல்லவா அப்பா. நல்லபடியா உன்னை வளத்திருக்கா. இப்படி மரியாதையா நடந்துக்க இப்ப எத்தனை குழந்தைகளுக்குத் தெரியறது? நன்னா, தீர்க்காயுசா, ஷேமமா இருப்பா.” என்று ஆசி வழங்கிவிட்டு, உள்ளே சென்று பூவை படத்தில் சாத்திவிட்டு வந்தவள், அவனோடு சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தாள்.

சிவராமன் வாழை இலையில்தான் சாப்பிடுவார். வெளியே சென்ற அவரிடம் இலை வாங்கிவரச் சொல்ல மறந்துவிட்டது அவளுக்கு திடுமென்று ஞாபகம் வந்தது. “அடாடா! மறந்து போச்சே!” தன்னையும் அறியாமல் அவள் வாயிலிருந்து வார்த்தைகள் உதிர்ந்தன.

“என்ன பாட்டி?” என்று கேட்ட ராஜாவிடம் விஷயத்தை விளக்கிய பார்வதி. “வயசான மனுஷன். பசியோட வருவார். இலை வாங்கி வரச் சொல்லி அவரைத் திரும்ப அனுப்பணுமே.”

ஆதுரம் தோய்ந்த குரலில் வருத்தப்பட்டாள். என்ன தடுத்தும் கேட்காமல் தானே இலை வாங்கி வருவதாக, ஏர்பாக்கை அங்கேயே விட்டுவிட்டுக் கிளம்பினான் ராஜா.

அவன் புறப்பட்டுச் சென்ற அடுத்த நிமிடத்திலேயே கதவைத் தட்டினார் சிவராமன். அவரிடம் ராஜாவைப் பற்றி புகழாரம் சூட்டி விவரித்தாள் பார்வதி.

“கலிகாலம், கலிகாலம்னு சொல்றா. எனக்கெனவோ திரேதாயுகம் திரும்பறதுன்னுதான் தோண்றது. இந்தக் காலத்துலே இந்த மாதிரியும் ஒரு பிள்ளையாண்டான் இருக்கறதைப் பார்த்தா மனசுக்கு எவ்வளவு குளிர்ச்சியாத் தெரியுமா இருக்கு? சாட்சாத் முருகப் பெருமானே நேரிலே வந்த மாதிரி இருக்கு,” என்று ராஜா புகழ் பாடி, அவர் வருவதற்கு முன்னால் நடந்ததை வாய் வலிக்க விளக்கினாள்.

“அவனுக்கு இருக்க ஜாகை இனிமேத்தான் பாக்கணுமாம். நம்மாத்து மாடி ரூம் காலியாத்தானே இருக்கு. அவனே அங்கே தங்கிக்கட்டுமே! நமக்கும் இந்தத் தள்ளாத காலத்திலே ஒரு துணையாக கூட இருக்குமே. தவிர, அவன் உங்க ப்ரெண்டோட பேரன் அப்பிடீன்னு வேற சொல்றான்.”

“நீயே முடிவு பண்ணிட்ட்டே! என்னிக்கு உன் முடிவு தப்பாப் போயிருக்கு? மனுஷாளைப் பார்த்தா ஒரு நிமிஷத்திலேயே அவா எப்படிப் பட்டவான்னு கரக்ட்டாச் சொல்லிடுவே. அப்படியே செஞ்சாப் போச்சு.” சிரித்தவாறே பார்வதியை ஆமோதித்தார் சிவராமன்.

வாசலில் நிழலாடியது.

“அதோ, அந்தப் பிள்ளையாண்டானே வந்துட்டான்.” வேகுவேகுவென்று சென்று வாசல் கதவைத் திறந்து விட்டாள் பார்வதி.

“உனக்கு நூறு வயசு ராஜா! வா, வா!” கையில் இலைக்கட்டுடன் நுழைந்த ராஜாவை அன்புடன் வரவேற்றாள்.

இலைக்கட்டை பார்வதியிடம் கொடுத்த ராஜா சிவராமனைக் கைகூப்பி வணங்கினான்.

“வாப்பா ராஜா!” என்று அமைதி ததும்பும் குரலில் பாசமுடன் வரவேற்றார் சிவராமன்.

“என் தாத்தா உங்களுடன் 1942ல் அமராவதி ஜெயிலில் ஆறு மாசம் இருந்தாராம். அவருக்காக நீங்க ஜெயிலர் கிட்ட நிறைய அடியும் உதையும் வாங்கி இருக்கீங்களாம். கூடப் பிறக்காத அண்ணன் என்று சொல்லிக் கொண்டே இருப்பார்.”
உற்சாகமாகச் சொல்லிக்கொண்டே போனான் ராஜா.

“என்னையும் சேர்த்து அஞ்சு பேரை ஒரே அறையில் அடைச்சு வச்சா. எல்லாரையும் மாட்டடி அடிப்பா. படாத இடத்திலே பட்டு ஜெயில்ல ஒர்த்தன் செத்துக்கூடப் போய்ட்டான். அதுனால ஒர்த்தரை அடிச்ச இன்னூர்த்தர் குறுக்கே வந்து அந்த அடியைக் கொஞ்சம் தாங்கிப்போம். அதுலே ஸ்பெஷலா ஒண்ணும் இல்லே.” என்று சிவராமன் விளக்கியபோது ராஜாவுக்கு கண்கள் கொஞ்சம் கலங்கின.

“அது சரி, உன் தாத்தா பேரு என்ன சொன்னே?” சிவராமன் கேட்டார்.

“காதர் பாட்சா ராவுத்தர்.” என்று ராஜா சொன்னவுடன், “அடேடே! நம்ம ராவுத்தர் பேரனா நீ? பார்வதி உன் பெரு ராஜான்னு சொன்னாளே…” என்று சிவராமன் இழுத்தார்.

“அது சுருக்கமான பெயர் தாத்தா. என் பேர் சிக்கந்தர் ராஜா.” என்று தன் முழுப் பெயரைச் சொன்னான் ‘ராஜா’ என்ற ‘சிக்கந்தர் ராஜா’.

“உன்னைப் பார்த்ததுமே எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கேன்னு நினைச்சுண்டே இருந்தேன். அப்படியே ராவுத்தர் ஜாடைதான் உனக்கு.” என்று அவனை மார்புடன் அணைத்துக் கொண்டார் சிவராமன்.

“பார்வதி, பார்த்தியா! நம்ம காதர் பாட்சா ராவுத்தர் பேரன் நம்மைப் பார்க்க வந்திருக்கான்!” அவருக்குச் சந்தோஷம் தாங்கவில்லை. சொந்தப் பேரன் இருந்து, அவனே தங்களைப் பார்க்க வந்ததுபோல ஒரு மகிழ்ச்சி.

“நீ துணைக்கு ஒருத்தர் இருந்தா சௌரியமா இருக்கும்னு சொன்னியே, அது எவ்வளவு சரியாப் போயிடுத்து பார்த்தியா!”

“கொஞ்சம் உள்ளே வரேளா? வெளிலே வாக்கிங் போயிட்டு வந்திருக்கேள். காலை அலம்பிண்டு வந்து பேசலாமே!”
பதவிசாய்க் கூப்பிட்டாள் பார்வதி.

புருவத்தை உயர்த்தி, “என்ன விஷயம், புதிதாக?” என்று பார்வதியை மௌனமாகக் கேட்டுவிட்டு, “ராஜா, உக்காந்துக்கோப்பா. இதோ வந்துடறேன். நிறையப் பேசவேண்டிய விஷயங்கள் இருக்கு.” என்று புழக்கடைப் பக்கம் நடந்தார்.

அவருடன் நடந்து வந்த பார்வதி, ராஜாவின் காதில் பேச்சு விழாத தூரத்திற்கு வந்து விட்டோம் என்று நிச்சயமானவுடன், “இந்தப் பிள்ளையாண்டானை ஆசீர்வாதம் பண்ணி அனுப்பி விட்டுடுங்கோ. இவன் நம்மாத்தில் ஒண்ணும் தங்கவேண்டாம். நான் அவசரக் குடுக்கையாட்டம் தப்பாச் சொல்லிட்டேன்.” என்றாள்.

அவளை ஒரு நிமிடம் உற்றுப் பார்த்த சிவராமன், “இப்ப என்ன மாறிப் போச்சு? மாடி ரூம்லே இருக்கட்டும், நமக்குத் துணையா இருக்கும்னு நீதானே சொன்னே?”

மெதுவாகக் கேட்டாலும் அவர் குரலில் இருந்த கோபம் பார்வதியின் இரத்த ஓட்டத்தையே உறைய வைத்தது.

இருந்தாலும், தன்னைச் சமாளித்துக்கொண்டு, “உங்களுக்கு நன்னாத்தான் பைத்தியம் பிடிச்சிருக்கு. பரம்பரை பரம்பரையா வேதகோஷம் நடந்த இந்த வீட்டிலே ஒரு துலுக்கப் பையனையா குடி வைக்கப் போறேள்? பேரு ராஜான்னு சொன்னான். முகத்திலே மீசை இல்லாம, வெள்ளை வேஷ்டியைக் கட்டிண்டு, புஷ்பம் வாங்கிண்டு வந்து, ஆசிர்வாதம் வாங்கிக்க வந்திருக்கேன்னு பதவிசாப் பேசினதைப் பார்த்தா பிராமணப் பையன் மாதிரி இருந்துது. அதுதான் சொன்னேன். இப்பத்தானே தெரியறது, இவன் யாருன்னு!” என்று நீட்டி முழக்கினாள்.

“தப்பு பார்வதி! ரொம்பத் தப்பு. சாட்சாத் முருகப் பெருமானே நேரிலே வந்தது மாதிரி இருக்குன்னு சொன்னியே, அப்ப அவன் உன் கண்ணுக்கு முருகனாத்தானே தெரிஞ்சான்? இப்ப எப்படிடீ அவன் வேற ஒர்த்தனாத் தோணறான்? வெறும் ராஜா ‘சிக்கந்தர் ராஜா’ ஆனதுனாலையா? எதுவுமே மாறலைடீ. அறுபத்தஞ்சு வருஷமா நான் எப்படி வாழறேன், எதுக்கு வாழறேன்னு என்கூட இருந்து பார்த்துமா, என்னை நன்னாத் தெரிஞ்சுண்டுமா நீ இப்படிப் பேசறே?

“இந்தப் பையனோட தாத்தாவைப் பத்தி உனக்குத் தெரியுமாடீ? நானும், அவரும் எப்படி இருந்தோம்னாவது உங்க யாருகிட்டயாவது சொல்லி இருப்பேனா? கவர்மென்ட்டுக்கு எதிரா சத்தியாக்கிரகம் பண்ணிட்டு, ஆறு மாசம் ஜெயிலுக்குப் போனேன்னுதான் உனக்குத் தெரியும்.

“என் முதுகிலே வரிவரியா இருக்கற தழும்புகள் அங்கே ஜெயில்ல இருந்த வெள்ளைக்காரனோட கைக்கூலியான ஜெயிலர் எனக்குத் பரிசாத் தந்ததுன்னுதானே தெரியும்? முழுக் கதையையும் உனக்கு இப்பச் சொல்லறேன், கேட்டுக்கோ!”

சிறிது நேரம் தன்னுள் பொங்கி எழும் உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு மீண்டும் தொடர்ந்தார் சிவராமன்.

“ஜெயில்ல இருந்தாக்கூட நான் தினமும் சந்தியாவந்தனம் பண்ணுவேன். அப்ப ஒரு ஜெயிலர், எண்டா ஐயரே, நீ பாட்டுக்கு தெனமும் கோயிலுக்குப் போயி, செபத்தை சொல்லி, மணியடிச்சுட்டு, அவனவன் தட்டுலே போடற காசை எடுத்துட்டுப் போயி பொழப்ப நடத்தாம, கவிர்மின்ட்டுக்கு எதுரா சத்தியாக்கிரகம் பண்ணிட்டு இங்க வந்துட்டு, உனக்கு என்னடா செபம் வேண்டிக் கெடக்குன்னு அடிக்க வந்தபோது, குறுக்க விழுந்து அடியைத் தாங்கிட்டவன்தாண்டீ, துலுக்கன்னு சொன்னியே, அந்தப் பிள்ளையாண்டானின் தாத்தா – அது தெரியுமா உனக்கு?

“அப்ப அந்த ஜெயிலருக்கு வந்ததே பாரு கோபம், ‘எண்டா ராவுத்தா, பாப்பானுக்கு என்னடா பரிஞ்சுக்கிட்டு வாரே? அவன் வீட்டுக்குப் பொண்ணைக் கொடுத்திருக்கியா, இல்லை பொண்ணை எடுத்திருக்கியா அப்படீன்னு அவனை நாயை அடிக்கற மாதிரி அடிச்சு வெளுத்து வாங்கிட்டான். எனக்குத் தாங்கலே. சந்தியாவந்தனத்தை நிறுத்திட்டு அடி விழறதைத் தடுக்கப் போனேன்.

“வேண்டாம் ஐயரே! நீ ஜபத்தை தொடந்து பண்ணு. ஈஸ்வரு அல்லா தேரே நாம்னு சொல்ற மகாத்மாவை நாம ஏத்துக்கிட்டிருக்கோம். நான் எங்க அல்லாவைத் தொழுது நமாஸ் படிக்கறப்போ என்னை அடிக்க வந்தா நீ தடுக்க மாட்டியா? அதே மாதிரி நீ ஒங்க ஈஸ்வரரைக் கும்பிடற போது உனக்கு விழற அடியை நான் தாங்கிக்கறேன்னு அடியை வாங்கிண்டான்.

“அதைக் கேட்டுண்டே போன ஜெயிலர் ரம்ஜான் அன்னிக்கு ராவுத்தர் கண்ணை மூடிண்டு தொழுகை நடத்தபோது அங்கே வந்தான். என்கிட்டே ‘ஐயரே, அன்னிக்கு உனக்காக இந்த ராவுத்தன் அடி வாங்கினான். இப்ப அவன் தொலை உரிக்கப் போறேன். முடிஞ்சாத் தடுத்துக்கோ’ அப்படீன்னு லாட்டியை எடுத்து அடிக்கப் போனான். நான் தடுத்தேன். என்னை வேணும்னா அடிச்சுக்கோ, தொழுகை பண்றவனை ஒண்ணும் செய்யாதேன்னு கெஞ்சினேன்.

“இரக்கமில்லாத அந்த ஜெயிலர், சரி ஐயரே, நீ வாயைத் தொறந்து கத்தாதவரைக்கும் ராவுத்தனை அடிக்காம உன்னை அடிக்கறேன்’ அப்படீன்னு ஒத்துண்டான்.

“நரக வேதனை, நரக வேதனை அப்படீன்னு சொல்லுவா, அதை நான் அடுத்த பதினைஞ்சு நிமிஷம் அனுபவிச்சேன். அப்படி ஒரு அடி விழுந்தது எனக்கு. ஜெயிலரும், அவனோட அசிஸ்டன்ட்டும் சேர்ந்து என்னை நொறுக்கித் தள்ளிப்பிட்டா. என் வாயை அடைச்சுடுப்பா ஈஸ்வரான்னு வேண்டிண்டு ருத்ரம், தேவாரம், திருவாசகம் எல்லாத்தையும் மனசிலே சொல்லிண்டே போனேன். சுண்ணாம்புக் காளவாயிலே போட்டப்போ அப்பர் சொன்ன ‘மாசில் வீணையும், மாலை மதியமும், வீசு தென்றலும், வீங்கிள வேனிலும், ஈசன் எந்தை இணையடி நீழலே’ன்னு தேவாரத்தைச் சொல்றப்ப அடி தாங்க முடியாம எனக்கு நினைவு தப்பிடுத்து. கண்ணை முழிச்சுப் பாக்கறப்போ நான் ராவுத்தர் மடிலே கிடந்தேன்.

“அவன் தினமும் என்னை தடவி ஒத்தடம் போடுவான். எனக்கு ரணம் சீக்கிரம் குணம் ஆகணும்னு அல்லாவை வேண்டிண்டு நமாஸ் படிப்பான். அப்ப இந்து என்னடி, முஸ்லிம் என்னடி, ஒரே இந்தியத்தாய் பெத்த சகோதரர்களாகத்தான் இருந்தோம். பெண் கொடுத்து பெண் எடுத்தால்தான் உறவுன்னு நாங்க நினைக்கலே. ஆனா, ஒத்தர் மேலே ஒத்தர் உயிரையே வச்சிருந்தோம். ஒத்தருக்காக ஒத்தர் உயிரையும் கொடுக்கத் தயாரா இருந்தோம்.
“அப்படிப் பட்ட உத்தமன் சந்ததிலே வந்தவன்டீ இந்தப் பிள்ளையாண்டான்! அவனுக்கு எதிராப் பேச உனக்கு – சீ, சீ!” என்றவரின் வாயைப் பொத்தினாள் பார்வதி.

“வேண்டாம்னா, வேண்டாம். உங்க வாயாலே என்னைச் சீச்சீன்னு சொல்லிடாதேங்கோ. எனக்குப் புத்தி வந்துடுத்து. வாங்கோ. அந்தப் பிள்ளையாண்டானுக்கு ஆசிர்வாதம் பண்ணி, சாப்பாடு போட்டு, ஆத்துலே தங்க வச்சுப்போம்!”

தழுதழுத்த குரலில் சொன்னாள் பார்வதி.

சிவராமனின் முகத்தில் நூறு கோடி சூரியப் பிரகாசம் மலர்ந்தது.

*************************************************************************************************************

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “இப்ப என்ன மாறிப் போச்சு?

  1.  கதையில் நல்ல பாடம் .  அதுவும் அந்தப்பெரியவர் தன் மனைவிக்கு புரிய வைக்கும் பாணி .. மனதைத் தொட்டது . கடவுள் முன்னிலையில் எல்லோரும் ஒன்றுதான் என்று கதை வழியே விவரித்துக்காட்டிய விதம் மிகவும் பிடித்திருந்தது .வாழ்த்துகள்

  2. மிக்க நன்றி, உயர்திரு விசாலம் அவர்களே.  ஸாதி, மத நல்லிணக்கம் வேண்டும் என்பதை அனைவரும் உணர்ந்தால் உலகத்தில் சண்டை-சச்சரவுகள் வராதே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *