அப்படி என்னதான் பேசிக்கொண்டே இருப்பார்களோ

0

இசைக்கவி ரமணன்

 

உனக்கே உனக்காக  (27)

 

அப்படி என்னதான் பேசிக்கொண்டே இருப்பார்களோ

{கேட்டு மகிழ}

10346451_671691352922340_5932846411327986116_n

 

பொழிய ஆரம்பித்தால்
நிறுத்தவே தெரியாமல்
கொட்டிக் கொண்டிருக்கிறது மழை.

ஆற்றங்கரை அரச மரத்தில்
ஆயிரம் பதினாயிரம் இலைகள்
ஒவ்வொன்றும் ஒன்றினிடத்தில்
ஓயாமல் ரகசியம் பேசி
வீசப்படுகிறதாம் காற்று.

நாகர்கோயில் மணிக்கூண்டிலிருந்து
நேரெதிரே பார்த்தால்
நீல மலைகளின் மெளனம் அவிழ்ந்ததுபோல்
செல்லுவதே தெரியாமல்
மளமளவென்று
வந்துகொண்டே இருக்கிறது காற்று.

எங்கிருந்து என்று தெரியாமல்
எங்கு என்றும் புரியாமல்
அப்படி என்னதான் பேசிக்கொண்டே இருப்பார்களோ
அவளும் அவனும்?

பாஷையெல்லாம் காலியாகிப்போய்
கவிதையெல்லாம் ஆளை விடு என்று
களைத்தபின்னும்
பேசிக்கொண்டே இருப்பதற்கு
ஏதேனும் இருந்துகொண்டே இருக்குமோ?

கண்களைக் கண்கள் கவ்வியபடி
கட்டிப் பனியாய் உருகியபடி
உருகிக் கரையவே உருவெடுத்தவர்கள் போல்
அவளும் அவனும்
இன்னும் எத்தனை நேரம்தான்
ஆறிப்போன பாழும் காப்பியை
உறிஞ்சுவதாகவும் ரசிப்பதாகவும்
உட்கார்ந்து பேசுவார்கள்?

ஒருநாள் அவனுக்குத் தோன்றிவிட்டது
தான்தான் ரொம்பவும் பேசுவதாக
நாணத்தால் அவன் சாம்பத் துவங்கியது
அந்தப்
பட்டாம் பூச்சிக் கண்களில்
படாமல் இல்லை.

‘’இவனுடைய விரலின் முனை
இவளுடைய நிழலைக்கூடத்
தீண்டாது போனாலும்
எப்போதும் நிரம்பித் ததும்பிக்கொண்டிருக்கும்
இதயக் கோப்பைகளை
இவர்கள் மாறி மாறி அருந்திக்கொண்டிருப்பார்கள்’’
என்று
அவர்களுக்காக மட்டுமே
அசரீரி சொன்னது.

அவன் பேச்சை நிறுத்திவிட்டான்
அவள், அவனை நிறுத்தவில்லை

கால்கள் அவனை வீட்டுக்கும்
சிறகுகள் அவளைக் கூட்டுக்கும்
கூட்டிச் சென்றன.

மறுநாள் காலை
அவன் வீட்டு மணி ஒலித்தது
வாசலில்
படபடத்து நிற்கிறது
பட்டாம் பூச்சி
பெட்டியோடு..

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *