இசைக்கவி ரமணன்

 

உனக்கே உனக்காக   (28)

 

வளையும் பாதை

{கேட்டு மகிழ}

10270279_276364999201423_1998995586313210948_n
இது மனமா?
இல்லை வானமா?
இல்லை வானமே ஒற்றை மேகமாக மாறிவிட்டாதா?

வீதியில் நான் நடக்கும்போதும், என்
விரலை ஒரு 
பிஞ்சு மேகம்தான் 
பிடித்துக்கொண்டு நடக்கிறது

புழுதியில்லை..காற்றின் அலட்டலில்லை
ஒரு
பொற்சிலைச் சிவனின் புன்னகை போலப்
பொடித்தூறல்..
தெரிந்தும் தெரியாமல்..இடைவிடாமல்
விட்டுவிட்டு விழுகின்ற திவலைகளால்
தெளிவுக்குத் திரையே விளக்கமாகும் விசித்திரம்!

சாலையிலே ஈரமிருக்கிறது
நேற்றிரவில் கன்னத்தை நீ
கவ்வி இட்ட முத்தத்தின் நினைவு போல

தற்செயலாய் வந்ததுபோல் பாவனை காட்டித்
தானே அதில்வந்து வீழ்ந்தமலர்போல்
உன்முகம் அதிலும் வந்து என்னை
உற்றுப் பார்ப்பது எதற்கோ!

கள்ளக் காதலர்கள்போல்
வெளிச்சமும் இருளும் தழுவிக் கிடக்கும் இந்த
வேளைக்கு என்ன பெயர் வைப்பது?
காலையின் வெண்மையும் இல்லை
மாலையின் செம்மையும் இல்லை
இரவின் தனிமை மட்டும்
இருப்பதுபோல் தொடர்கிறது, ஓர்
இடைஞ்சலற்ற நிசப்தம்

இருப்பது எங்கே
நடப்பது எதை நோக்கி
எதுவும் தெரியாமல்தான், அதோ
வளையும் பாதையில்
வளைகிறது வாழ்க்கை

வளைவுதான், வெற்று இருப்பில்
வனப்பைக் கொண்டுவந்து சேர்த்து
வசீகரிக்கிறது

என்ன இருக்கும் அந்த வளைவில்?

பாசை படிந்த பாறையின் ஓரம், தன்
பட்டுக் கண்களால், ஒரு
நீலமலர் கண்சிமிட்டி
நெஞ்சு லேசாகிப் போகுமோ?

சட்டையைக் கழற்றிவிட்டுச்
சகியுடன் புணர்வதற்காகப்
பளபளவென்று சாலையைக் கடக்குமோ
படமொடுங்கிய பாம்பு?

அவசரம் மிக அவசரமென்று
பரவசமாகக் குறுக்கே
பறக்குமோ ஒரு சிட்டுக்குருவி?

எது விலகிச்சென்றதென்று
என்னை அறியவிடாமல்
புதர்கள் சிரித்துக்கொள்ளுமோ?

ஆயிரம் வசந்த காலங்களை
அள்ளிப் பூங்கொத்தாக்கி
அதரம் குவித்து
அவற்றை முகர்ந்து மகிழ்ந்தபடி

இதயத்தை மீட்பின்றி
இன்னும் இன்னும் 
கண்களால் கவர்ந்தபடிக்
காத்திருப்பாயா நீ!

 

படத்திற்கு நன்றி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *