எல்லாம் விட்டல், எங்கும் விட்டல்

0

— விசாலம்.

தன் கண்களை மூடியபடி  அந்த விட்டலைக்கண்டு ரசித்துக்கொண்டிருந்தார் அவர். அந்தப் பேரானந்தம் அவர் முகத்தில் நன்றாகத் தெரிந்தது. அவருடைய அழகான முகம் இன்னும் சுடர் விட்டுப் பிரகாசித்தது. அவரையே பார்த்தவாறு அமர்ந்திருந்தாள் ஒரு பெண். . அவர் அழகிலும் அவர் இசையிலும் மனதைப்பறிக்கொடுத்த அவள் அவரது பஜனை சத்தம் கேட்டு அந்தப்பக்கம் நடந்து வந்தாள். அவரது சாந்த முகம் அவளை மேலும் கவர்ந்தது. அவரையே ரசித்தபடி காம இச்சையினால் அங்கேயே  அவர் எப்போது கண் திறந்து  பார்ப்பார் என்று பொறுமையாக அமர்ந்திருந்தாள். கொஞ்சநேரம் கழிந்தது அவர் தன்  கண்களைத் திறந்தார்.  எதிரில் ஒரு பெண் அவரையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள். அவருக்கு அவள் ருக்மிணியாகத்  தென்பட அப்படியே சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார்.

“என்ன ரகுமாயி ஏன் நீங்கள் தனியாக வந்திருக்கிறீர்கள்? என் விட்டல் வரவில்லையா,  என் விட்டல் எங்கே? “என்றுப் பல கேள்விகளை அடுக்கினார். அந்தப்பெண்ணின் கண்கள் திறந்தன. தன் நிலையைக்கண்டு வெட்கத்தில் தலை குனிந்தாள். அப்படியே அவரை நமஸ்கரித்து “நான் தவறான எண்ணத்தில் இங்கு வந்தேன். என்னை மன்னித்து உங்கள் சிஷ்யையாக ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று அவர் காலில் விழுந்தாள். அவர் யார் ?   அவர்தான் ஸ்ரீதுகாராம்.

வைசிய குடும்பத்தில் பிறந்ததால் ஒரு மளிகைக்கடையும் வைத்திருந்தார்.  ஆனால் அதில் லாபம் வரவில்லை. எப்படி லாபம் வரும்? அவர்தான் “ராதா கிருஷ்ண ஹரே”  என்று யார் சொல்லிக்கொண்டு வந்தாலும் இலவசமாகக்    கேட்கும் பொருளைக்கொடுத்துவிடுவாரே!

விட்டல் மேல் அத்தனை பக்தி. அவரது ஒவ்வொரு மூச்சிலும் விட்டலனே பரவி இருந்தான். அவரது கடை வாசலில் யாராவது சாது வந்தால் போதும் அவரை உள்ளே அழைத்து அவரது வயிறை நிரப்பி அனுப்புவார். அவரது மனைவி பாவம்! கடையிலிருக்கும் பொருட்கள் எல்லாம் இப்படிப் போகிறதே!  குடும்பத்தை எப்படி நடத்துவது என்று   வருத்தப்படுவாள். அவரது கடை பஜனை மண்டபமாக இருக்கும். அவர் கையில் எப்போதும் தம்பூரா இருக்கும் சிலசமயம் பஜனையுடன் நடனமும் ஆடத்தொடங்கிவிடுவார்.

அவரது தெரு வழியாக எதாவது கூட்டம் பண்டரிபூர் போனால் தானும் சொல்லாமல் கொள்ளாமல் கடையைத்திறந்து போட்டபடி அவர்களுடன் போய்விடுவார். இதுதான் சந்தர்ப்பம் என்று திருடர்களும் பல பொருட்களை திருடிக்கொண்டு போவார்கள்.  இதைப்பற்றிக் கேட்டால், எல்லாம்  விட்டல் பார்த்துக்கொள்வான்..அவனுக்கு எப்படி காப்பாற்ற வேண்டும் என்று தெரியாதா என்று சொல்லிவிடுவார். இதுவே பூரண சமர்ப்பணம் . .

tukaramதுகாராம் ஶ்ரீ நாமதேவரின் மறு பிறவி என்று கருதப்படுகிறது.   துகாராம்  சிறுவயது முதலே ஹரிகீர்த்தனங்கள் இயற்றி  வந்தார். அவைகளைக் கையில் வீணை மீட்டியபடி  பாடியும் வருவார்.  சில சமயம் காலில்  சலங்கையைக்கட்டிக்கொண்டு நர்த்தனமும்  ஆடுவார்.    அவர்  வாயில்  “விட்டல் விட்டல்” என்ற ஒலி வர  அவ்வளவுதான்  தன்னையே மறந்துவிடுவார். மிகவும் கருணை உள்ளம் கொண்டவராதலால்  ஏழைகளிடத்தில் மிகக்கருணைக்காட்டி தான்யங்களைத் தானம் செய்து விடுவார்.

எந்தப்பெண்மணியைக்கண்டாலும்  அவருக்கு  ஒரு தாயைப்பார்ப்பது போலவே தோன்றும். அவர்  ஹரிகீர்த்தனங்கள் பாட ஆரம்பித்தாலோ  அந்தப்பண்டரிநாதனைத்தவிர  வேறு சிந்தனை  இருக்காது .  சத்தியம்  தவிர வேறு ஒன்றும் பேசமாட்டார். தன்னிடமிருப்பதை அவர் தானம் செய்தாலும்  தனக்கென்று  ஒன்றும் யாசித்து வாங்கவும்  மாட்டார்.

வீட்டில் குடும்பம்  சில நேரம் பசியால் வாடும் போது  அவர் கிருஷ்ணலீலையைச்சொல்லி அவர்கள்   மனதை  மாற்றிப் பசியை மறக்கடிக்கச் செய்வார் . . அவர் வீட்டில்  பக்தர்களின்  கூட்டம்  வந்தபடியே இருக்கும். பஜனை நடந்தபடியே இருக்கும் கீதையின் பதினெட்டு அத்தியாயங்களும் அவருக்கு அப்படியே மனப்பாடம் தான். அவர் வாயில் ‘அபங்” என்ற மராட்டிமொழியில் பக்தி சங்கீதம் அடுக்கடுக்காக  வந்த வண்ணம் இருக்கும் . இதனால் பலர் அவரைக்காணச்சென்றனர். அவர் தரிசனத்தினால் நல்ல பலன் கிட்டுவதாகவும் சொன்னதால்  அவரது புகழ் ஓங்கத்தொடங்கியது .

இவர்  இப்படி அசாத்தியப் புகழைப்பெற்று வந்ததைக்காண இயலாமல்  பொறாமையால் சில பண்டிதர்கள் இவரை நிந்திக்க  ஆரம்பித்தனர்.

“என்னய்யா  இவன்.  எதாவது சாஸ்திரம் இவனுக்குத்  தெரியுமா? வைசியக்குலத்தில் பிறந்து  ஏதோ பாடல்களைப்புனைகிறான்.   சுதந்திரமாகப்பாடியபடி   இஷ்டபடி   திரிகிறான்”

“ஆம்!  இவனுக்குலௌகீக  கர்மாக்கள் ஒன்றும் தெரியாது.   எதோ பைத்தியம்  போல் அலைகிறான்.  எதோ அபங்காம்.  அதைப்பாடியபடியே  அலைகிறான் “

“இவன் எப்படிப்போனால் என்ன? இந்தக்கேடு கெட்ட மக்களும் அவன் பின்னாலேயே சுற்றி  பஜனை செய்கிறார்களே!”

tukaram2இப்படிப்பல  நிந்தனைகள் அவர் காதிலும் விழுந்ததில்  துகராம்  மிகவும் மனமுடைந்து போனார். பின் ஒரு நிமிடம் யோசித்து  வேகமாக  இந்திராயணி நதிப்பக்கம் நடந்தார். தான் இதுவரையிலும்  எழுதி வைத்த  கீர்த்தனைகள் அடங்கிய புத்தகத்தை  நதியில்  வீசி எறிந்தார்.  எறிந்துவிட்டாரே தவிர மனமெல்லாம்   அந்தப்பாடல்களின் மேலேயே இருந்தது. அவர்  அவைகளை வெறும்  புகழுக்காகவும், பணத்திற்காகவும்   இயற்றவில்லை. எல்லாம் அந்த விட்டலனுக்காகவல்லவா செய்யப்பட்டன. அத்தனைஅபங்குகளும்  அவனுக்காகச் செய்யப்பட்ட  மலர்கள் அல்லவா?  கண்களிருந்து தாரைத்தாரையாக நீர் கொட்டியது.   சாப்பாடும் இறங்கவில்லை, தூக்கமும் வரவில்லை.

அவரைத்தேடியபடி  அவரது  மனைவி  மக்கள் வந்தனர்.    அவர்களும்  பட்டினி கிடந்தனர். இத்தனை வைபவங்களையும் பார்த்தார் அந்தப் பாண்டுரங்கன். தன் பக்தனின் துக்கத்தைத் தாங்கிக்கொள்வாரா அவர்? தாங்கிக்கொள்ளத்தான் முடியுமா?  கருணாசிந்து அல்லவா அவன்! கிருபாநிதியல்லவா  அவன்! தீனாநாத் அல்லவா  அவன்! நதியில் விழுந்து அலைகளுடன்  ஓடிய அபங்குகள் அடங்கிய புத்தகத்தை எடுத்துவைத்துக்கொண்டார்.

மறுநாள் ஆதவன் மெல்ல எட்டிப்பார்க்க வானம் அப்படியே  சிவப்பு நிறத்தால் தன்னை அழகுப்படுத்திக்கொண்டது.   காலை வேளை, மரங்களில் குயிலின்  ஒலியும்      காகங்களின் “காகா  கா கா ” சத்தமும்   கேட்க  நடுவே பண்டரிபுர   கோயிலில் நடைத்திறக்க  மெள்ள சுப்ரபாதம் ஒலி வந்துக்கொண்டிருந்தது.  துகராமும் அங்கு வந்து பாண்டுரங்கனின் அழகை அள்ளிப்பெற அவன் முகத்தைப்பார்த்தார். என்ன ஆச்சரியம்!   விட்டலின் தலைமேல்  துகாராமின் அபங்க புத்தகம்  வீற்றிருந்தது. துகாராம் அதனை எடுத்துப்பார்க்க,   சந்தேகமேயில்லை, அதில் இருந்தது அவருடைய கையெழுத்துக்கள் தான்  மனம் நெகிழ “பரந்தாமா  என்னே உன் கருணை? நீரில் வீசியதை நீ எடுத்து எனக்குத் திருப்பிக்கொடுத்திருக்கிறாயே  என் அபங்குகள் உனக்கு அத்தனைப்பிடித்ததா? என் மேல் அத்தனை அன்பா உனக்கு” என்றுக் கதறினார்.

அவரது அன்புக்கண்ணீரரைப் பார்த்த  பக்தர்களும் அங்குக்கூடிவிட்டனர். இந்த விவரம் பண்டிதர்கள் காதிற்கு எட்டியது. அந்தப் பண்டிதர்களும்  தங்கள் தவறுக்கு துகாராமிடம்  மன்னிப்பு  கேட்டுக்கொண்டார்கள். பலர் அவரைத் தங்கள் குருவாகவும்  சிலர்  தெய்வமாகவும்  ஏற்றுக்கொண்டனர். அவரது அபங்கங்களை சிலர்  கச்சேரியில் பாட ஆரம்பிதிருக்கின்றனர். திரு ஓஸ் அருண், திருமதி அருணா சாயிராம், திருமதி ரஞ்சனி, திருமதி காயத்திரி முதலியவர்கள் இவைகளை பிரபலப்படுத்திவருகின்றனர்.

 

 

 

 

 

 

 

 

 

படம் உதவிக்கு நன்றி:  http://antaryamin.wordpress.com/2010/03/31/the-easy-sadhana-by-sri-swami-chidananda/

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *