இசைக்கவி ரமணன்

 

உனக்கே உனக்காக  (34)

மன்னிப்பாயா?

(கேட்டு மகிழ)

10532382_660585207366288_3852778901113805194_n

ஊட்டிவிட்ட கைகளை நான் கடித்துவிட்டேனா? என்
உயிரே! உனைத்துன்புறுத்தி உயிர் வளர்த்தேனா!
காட்டுத் தீயில் மானைப்போலக் கலங்குகின்றாயே! இந்தக்
கரிமுகத்தைக் கண்டேனோ மயங்கி நின்றாயே!

வீதியிலும் மறைவினிலும் சின்னப் பிள்ளைபோல், நாம்
விதியைமீறி அச்சமின்றி விளையாடியதும்
பாதியிலே சொர்க்கமெல்லாம் பறிகொடுத்ததாய், நித்தம்
பரிதவித்துப் பரிதவித்துப் பாசம் வளர்த்ததும், உன்

சோதிமுகம் கண்டுகண்டு சுமைகள் தீர்ந்ததும், நீ
சொல்லிச் சொல்லி ஏழையென்றன் உயிர்வளர்ந்ததும்
சோதனைபோல் மாறியதேன் சொக்கத் தங்கமே! இதைச்
சொல்லியழ யாருமில்லை தின்னும் வெட்கமே…

உயிரைக்கண்ட பரபரப்பில் உளறிவிட்டேனா? இந்த
ஊமைக்குமொழி வந்தவுடன் ஊளையிட்டேனா?
தயிர்க்குடத்தை மத்தெடுத்து உடைத்துவிட்டேனா? என்
தாயே! உன்நெஞ்சைக் காலால் உதைத்துவிட்டேனா?

ஒருமுறை ஒரேமுறை மன்னிப்பாயா? என்
உயிரையுன்றன் காலில்வைக்க அனுமதிப்பாயா?
மரணமொரு பொருட்டில்லை மையலின் மகளே! நீ
மறுத்துவிட்டால் மரணமற்ற நரகே புகலே!

உன்குழந்தை என்னை நீ உதைத்துவிடாதே! என்
உள்ளில்வேறு யாருமில்லை மறந்துவிடாதே!
நின்றுநின்று உன்முகத்தை ஏங்கிப் பார்க்கிறேன், உன்
நெஞ்சில்நான் இல்லையென்றால் நீங்கப் பார்க்கிறேன்…..

உன்னைவிட்டு எங்கு செல்ல? எங்கும் நீதானே! இந்த
உலகைவிட்டு எங்கு செல்ல என் உலகம் நீதானே! என்
கண்ணா! உன் காலில் எந்தன் முகம் புதைக்கிறேன், நீ
கருணை காட்டினால் கொஞ்சம் வாழ்ந்து பார்க்கிறேன்….

 

படத்திற்கு நன்றி : இளையராஜா

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *