இசைக்கவி ரமணன்

 

 

நடையாய் நடக்கிறேன், எந்த

நாட்டமுமே இல்லாமல்; நான்

நடக்கத்தான் வேண்டும் என்பதாக, யாரோ

நாட்டியிருக்கிறார்கள் ஒரு சாத்திரத்தை

என்பது போல

நடையாய் நடக்கிறேன், எந்த

நாட்டமுமே இல்லாமல்

 

எனக்கென்னவோ நடை என்பது….

 

ஏழ்மையின் ஏற்றங்களில் ஒன்றாகவும்

 

வறுமையின் வெற்றிச் சின்னமாகவும்

 

எந்தக் கூட்டத்திலும் எதிலும் படாமல்

தனித்திருக்கக் கற்றுத்தரும்

ஏகாந்தமாகவும்

 

அந்தக் கிளையில் இந்தக் கணத்தில்

ஒரு

பறவை வந்து அமரக்கூடும் என்பதுபோல்

ஏதோ ஒரு பாட்டு எனக்கு நேர்ந்துவிடத் தோதான

ஏற்பாடு போலவும்

 

உடலை வசக்கவும், உணவுண்ணத் தகுதியை

அடைவதற்கான அழகான ஏற்பாடாகவும்

 

கடலாய்ப் பரந்த சமூகக் கோலங்களைக்

கடுகாய் இருந்து கணக்கெடுக்கும் வசதியாகவும்

 

இன்னும் பலப்பல அழகுகளாகவும்

இருக்கிறதே எனக்கு! உங்களுக்கு?

 

நேரே நடந்தும் வளைந்து நடந்தும்

தூரே பார்வையைத் தொலைத்து நடந்தும்

நம்மோடு நாமிருக்கும் நலம்தினமும் நல்குகின்ற

நடையல்லால் வேறுதவம் நமக்குச் சாத்தியமா?

 

நடந்துகொண்டே இருக்கின்றேன்; எதையோ

கடந்துகொண்டே இருப்பது போலவும், எதுவுமே

நடக்காமல் ஏதோ ஒற்றைத்

தடத்திலேயே நின்றுகொண்டிருப்பதைப் போலவும்

அடிக்கடி தோன்றுகிறது, பம்பர

அசைவு மயக்கத்தில் அசையாத தோற்றம் போல

 

எத்தனை தெருக்களை

இத்தனை நடைநடந்து விழுங்கினாலும்

களைத்த கால்களும்

களைக்காத தெருக்களும்

மிஞ்சத்தான் செய்கின்றன

 

தெருக்களும் தங்கள் களைப்புகளைத்

திருட்டுத் தனமாக மறைத்துக்கொள்வதைச்

சருகுகள் எனக்குச் சொல்லியிருக்கின்றன

 

நடை என்பது

எனக்கு நான் அன்றாடம்

செய்துகொள்ள வேண்டிய மரியாதை

 

நடை என்பது

உறவு பிரிவுகளுக்கு வாய்ப்பில்லாத

ஆகாசம் போன்ற நேசம்

 

அதெல்லாம் இருக்கட்டும்

அத்தனை பேர் முன்னிலையிலும்

ஆருக்கும் தெரியாமல், உன்னை

முத்தமிட்டுக் கொண்டு

முழுதாகக் காதலிக்கும்

முறிவற்ற சுகத்தையும்

என்னுள்ளே வைத்தபடி

ஏதேதோ பேசிக்கொண்டு

கற்பனை என்னும்

கட்டற்ற நிஜத்தில் நான்

உயிரைப் புதைத்தபடி, இந்த

உடல் வளையவர

 

இந்த

நடையை விட்டால், வேறு

நாதிதான் எமக்குண்டோ!!

 

31.08.2014 / ஞாயிறு / 16.21

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *