மாதவ. பூவராக மூர்த்தி.

 

“அங்கிள் காபி” என்று என் மருமகள் அழைத்து என்னிடம் சூடான காபியை நீட்டினாள். உள்ளே இண்டக்க்ஷன் ஸ்டவில் காய்ச்சிய பால். மேடை தன் உருவத்தை மாற்றிக் கொண்டது. இந்த அறுபது வயதில் நான் நான்கு தலைமுறை சமையலையும், சமையல் செய்யும் வழிகளையும் சுவைகளையும் கண்டு விட்டேன். என் நினைவுகள் வழக்கம் போல் பின்னோக்கி நகர்ந்தன.

stoveதாத்தா வீட்டில் பாட்டி விறகு அடுப்பில் வெங்கலப் பானை வைத்து சமைத்த சமையலை சுவைத்திருக்கிறேன். பாட்டி வீட்டில் மண் அடுப்பும் இரும்பு அடுப்பும் உண்டு. மண் அடுப்பு பாட்டியே பண்ணி வைப்பாள். ஓன்டி அடுப்பு என்றும் ஒரு வாய் துவாரத்தில் இரண்டு அடுப்பு எரியும் அடுப்பும் உண்டு. விறகு எரியும் வேகம் பாட்டியால் கொதிநிலைக்கு ஏற்பத்  தீர்மானிக்கப் படும்.

எரியும் அடுப்பில் விறகை கூட்டியும், சில சமயங்களில் வெளியே எடுத்தும் பக்குவமாக சமைப்பாள். அதோடு வீட்டில் குமட்டி அடுப்பு உண்டு. இந்த அடுப்பு நம் சிங்கிள் பர்னர் கேஸ் அடுப்பு போன்றது. குமட்டி அடுப்பு அநேகமாக பால் காய்ச்சவும், வெந்நீர் வைக்கவும், பயன்படுத்தப் படும்.

குமட்டி அடுப்பு பற்ற வைப்பதே ஒரு கலைதான். எரிந்த விறகுகளின் மிச்சமான கரியும், விறகுக் கரியும், லீக்கோ கரியும் முக்கிய எரி பொருளாகும். தேங்காய் உரி நாரும் பேப்பரும் இந்த குமட்டி அடுப்பைப் பற்ற வைக்க உதவும். கொஞ்சம் தேங்காய் நாரை மடித்து சுருட்டி குமட்டியின் பில்லை மேல் வைத்து அதன் மேல் காற்று போகும் இடைவெளியில் கரியை அடுக்கி. கீழே பேப்பரை கொளுத்தி விசிறியால் வேகமாக விசிறி விடுவார்கள்.

பேப்பரின் தீநாக்கு தேங்காய் நாரைத் தழுவி, அதில் பரவி,அதன் சூட்டை கரிக்குள் பரவ விடும். விசிறியின் வேகம் வெளிக்காற்று எல்லாம் கரியை பாரதி சொன்ன அக்னிக் குஞ்சாக மாற்றும். அது மொத்த குமட்டியிலும் விரிந்து கன கன என்று மிளிரும். அதன் மீது பால் அல்லது நீர் வைக்க நிமிஷமாய் கொதிக்கும். இதில் ஒரு அசௌகர்யம் உடனே அதன் சூட்டைக்  குறைக்க முடியாது.

சமையலறையில் புகை மண்டுவதாலும் நிதான சமையல் சரிப்படாததாலும் விறகுத் தட்டுப்பாடு வந்தபோது மனிதன் வேறு வழிகளை சிந்திக்கத் துவங்கினான். அப்போது மரத்தூள் அடுப்பு வந்தது. நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? எங்கள் வீட்டில் உபயோகத்தில் இருந்தது.

மரம் அறுக்கும் சாமில் போய் மரத்தூள் வாங்கி வருவோம். அது பக்கெட் கணக்கில் கிடைக்கும். ஒரு சாக்கு மூட்டையில் கட்டி சைக்கிளில் அல்லது தலையில் தூக்கி வருவோம்.

அதை நான் வேடிக்கையாக நாச்சியார் கோவில் கல் கருடன் என்பேன். நாச்சியார் கோவிலில் இருக்கும் கல் கருட வாகனத்தை மண்டபத்திலிருந்து நாலு பேர் மட்டும் தூக்கி வருவார்கள். பிறகு எட்டு பதினாறு முப்பத்திரண்டு என தூக்குவோர் எண்ணிக்கை கூடும். அதுபோலஅருணா சாமில் வாசலில் தலையில் வைக்கும் போது லேசாக இருக்கும் மரத்தூள் மூட்டை வர வர தலையை நெருக்கும். வீடு வந்து இறக்கி வைத்த பிறகு தலை மரத்துப் போயிருக்கும்.

மரத்தூள் அடுப்பில் நடுவில் ஒரு கட்டை வைத்து உட்புறம் முழுவதும் மரத்தூளை கொட்டி ஜாக்கிரதையாக அமுக்கி கொஞ்சம் நீர் தெளித்து கெட்டியாக்கி வைப்பார்கள். பிறகு லாகவமாக அந்த கட்டையை எடுப்பார்கள். முன் பக்கம் இருக்கும் ஓட்டையை அரித்து எடுப்பார்கள். நம் குழந்தைகள் கடல் மணலில் கட்டும் மணல் கோபுர வாசல் போல் எடுத்து வைத்துக் கொள்வார்கள். ஒரே ஒரு சவுக்கு விறகை வைப்பார்கள். விறகு பற்றிக் கொண்டதும் அடுப்பு மஞ்சள் நிறத்தில் நின்று எரியும்.

காலை ஒரு முறை பற்ற வைத்தால் நடுவில் அணைக்க முடியாது. தொடர்ந்து அடுப்பில் ஏதாவது வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். பாதி சமையலில் கூட மரத்தூள் சரிந்து அடுப்பு நின்று விடும்.

அதிலும் அம்மா சமைத்து நான் சாப்பிட்டிருக்கிறேன். அதன் பிறகு மண்ணெணை ஸ்டவ், பம்ப் அடிக்கும் ஸ்டவ்… அதற்கு  பர்னர் பின் (pin) வாங்கி வைக்க வேண்டும்.  சில இடங்களில் ஸ்டவ் வெடித்து மருமகள் தீக்கிரையான செய்திகள் உண்டு.

அதன் பிறகு நூடன், உம்ராவ் திரி ஸ்டவ் நடைமுறைக்கு வந்தது. இதில் வட்ட வடிவமாக 10 அல்லது 12 திரிகள் இருக்கும்.வட்டத்தின் உட்புறம் திரியின் வெளிப்புறமும் இரண்டு சிலிண்டர்கள் நுண்ணிய துவரங்களுடன் இருக்கும். திரியைக் கொளுத்தி சிலிண்டரைக் கவிழ்த்தவுடன் நீல நிற ஜ்வாலை வந்து மிகச் சிறப்பாக எரியத் துவங்கும். இந்த ஸ்டவ் காபிக்கும் வெந்நீர் வைக்கவும் மாலை நேரங்களில் டிபன் செய்யவும் பயன்படும்.

வாரம் ஒரு முறை அந்த திரியை முனை தடவி திரியை ஏற்றி இறக்கும் திருகை சரி செய்ய வேண்டும். கிரஸின் தட்டுப் பாட்டில் இந்த சாதனம் இயங்க முடியாமல் போனது.

அதன் பிறகு கேஸ் இணைப்பு வரத்தொடங்கியது. அம்மாவுக்கு கேஸ் அடுப்பில் சமைப்பதில் ஒரு பயம் இருந்தது. மேலும் மடி சமையலுக்கு அந்த கேஸ் உதவாது என்று ஒரு நம்பிக்கை. அது காபி அடுப்பாக மட்டும் இருந்தது.

காஸ் அடுப்பில் சமைக்க என் மனைவி தன்னை தயார் படுத்திக் கொண்டாள். அடுப்பில் மேல் வைக்கும் பாத்திரங்களும் மாறிவிட்டன. பாட்டி அம்மா வைத்த வெண்கலப் பானை சாதம் இல்லாமல் போயிற்று. பிரஷர் குக்கர் வந்தது. மூடி வைத்து கஞ்சி வடிக்காமல் சாதம் வெந்து வந்தது.

இரும்பு வாணலிக்குப் பதில் இண்டோலியம் மற்றும் காப்பர் பாட்டம் கடாய் வந்தது. அம்மாவுக்கு பழக நாளாயிற்று. என் மனைவி அதில் எக்ஸ்பெர்ட் ஆகிவிட்டாள். பொரிக்க வதக்க துவட்ட எல்லாவற்றிற்கும் இந்த கடாய்தான்.

காஸ் தட்டுப் பாடு வரும் நாட்களில் ஸ்டவும், திவச நாட்களில் குமட்டியும் கை கொடுத்தன ஒரு பத்து வருடம் வரை. இப்போது எல்லாம் கேஸ் அதற்கு மாற்று எலக்டிரிக் ரைஸ் குக்கர். இண்டக்க்ஷன் ஸ்ட்வ்.

இப்படி எல்லா வகையில் சமைத்தாலும் நாங்கள் சாப்பிடும் சில அயிட்டங்கள் மாறி விட்டன. குமட்டியில் சுட்டு அம்மா செய்த கத்திரிக்காய் கொஸ்து, இட்லி பானையில்  அவித்தெடுத்த இட்லி, இரும்பு கல்லில் வார்க்கும் தோசை, ஊத்தப்பம், உருளியில் செய்யும் அரிசி உப்புமா அதன் சுரண்டி…எல்லாம் பொய்யாய் பழங்கதையாய் போனது.

வெங்கலப் பானையில் செய்த சாதம், கற்சட்டியின் வத்தல் குழம்பு, ஈயச் சொம்பில் ரஸம் இவையும் கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்டவை.

என் பாட்டியின் கைப் பக்குவம் அப்பாவுக்குப் பிடித்திருந்தது. அம்மாவின் சமையல் எனக்குப் பிடித்திருந்தது. என் மனைவின் சமையல் என் மகனுக்குப் பிடித்திருக்கிறது.

பதமும் வகைகளும் தலைமுறைகளுக்குத் தலைமுறை மாறித்தான் வருகிறது. சத்து மாவு, மோர்க்களி, பச்சை மா உப்புமா இவையெல்லாம் எங்கள் அப்பாவின் சிறு வயது பலகாரங்கள்.

சேமியா, கோதுமை மாவு, அரிசி நொய் உப்புமா,சப்பாத்தி எல்லாம் எங்கள் சிறு  வயதுப் பலகாரங்கள்.

மாகி, நூடுல்ஸ், பிட்சா, பாஸ்தா என் வாரிசுகளின் விருப்பங்கள்.

நீண்ட நேரம் சமையல் அறையில் நிற்க யாருக்கும் நேரமும் இல்லை. பொறுமையும் இல்லை.

இதற்கு இடையில் ஓவன் வந்து பொரிக்காமல் வறுக்காமல் சாப்பிட வைக்கிறது. நான்-ஸ்டிக் தவாக்கள் தோசையும் சப்பாத்தியும் எண்ணெய் இல்லாமல் செய்து தருகிறது.

கேழ்வரகு, அரிசி, கோதுமை பார்லி கஞ்சிகளின் இடத்தை ஓட்ஸ் பிடித்துக் கொண்டிருக்கிறது.

மொத்ததில் பசியும் சாப்பாடும் எல்லா தலைமுறைக்கும் இருந்து வருகிறது. சுவையும் சாப்பிடும் முறையும் நேரமும் மாறி வரும் அவலத்தைப் பார்க்கும் நிலையில் நான் இருக்கிறேன்.

அடுப்பும் குமட்டியும் எனக்கு கொடுத்த சுவை இந்த நவீன சமையல் முறைகள் கொடுக்க வில்லை என்பதுதான் உண்மை.

என் மருமகள் வைத்த காபி ஆறுவதற்கு முன் சாப்பிடுகிறேன். நீங்களும் கொஞ்சம் யோசனை செய்யுங்கள். அடுப்புக்கும் குமுட்டிக்கும் அஞ்சலி செய்வோம். பாட்டிக்கும் அம்மாவுக்கும் வந்தனை செய்வோம். மனைவிக்கும் மருமகளுக்கும் வாழ்த்துச் சொல்வோம்.

 

 

 

படம் உதவிக்கு நன்றி:
http://sinnutasty.blogspot.com/2011_04_01_archive.html
http://tthamizhelango.blogspot.com/2013/03/blog-post_4.html
http://hussainamma.blogspot.com/2012/04/blog-post_26.html
http://consumergoods.indiabizclub.com/products/kerosene_stove
http://himalisherpa.com/villa/index.php
http://gokulmanathil.blogspot.com/2012/02/blog-post_13.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *