தொடர்கதை

நிர்வாண நேனோ செகண்ட்ஸ்… – 6

ரிஷி ரவீந்திரன்

 

ஐஐடி. கெளஹாத்தி.

பத்தாம் ஆண்டு பட்டமளிப்பு விழா.

சிறப்பு விருந்தினர்கள். சோடா புட்டிக் கண்ணாடிகளில் மொசைக் தலை விஞ்ஞானிகள் மற்றும் பேராசிரியர்கள். கெளஹாத்தி ஐஐடியின் இயக்குனர் பேரா.கவுதம் பருவா சந்தன நிற ஜிப்பாவினுள் ஐக்கியமாகி நீண்ட துண்டு ஒன்றினைத் தன் முழங்காலினைத் தொடும்படித் தொங்க விட்டிருந்தார்.

அரங்கம் இருட்டாக்கப்பட்டு மேடையின் மீது ஒளிக் குவிப்பான் விளக்குகளை ஒளிர விட்டு ப்ரஜக்ட்டர் ஓட விடப்பட்டது.

புரஜக்டரில் பட்டம் வாங்கும் மாணவர்களின்  பெயரினையும் துறையினையும் ஓட விட்டனர். ஒவ்வொரு மாணவனாய் பட்டம் பெற்று சிறிய சொற்பொழிவுகளும் தன் அடுத்த கட்ட முயற்சி, அதற்கு என்னென்னத் திட்டங்கள் இதைப்பற்றி ஓரிரு நிமிடங்கள் பேசிவிட்டு கீழிறங்கிச் சென்றனர்.

டாக்டர் பட்டம் பெற்ற அனைத்து மாணவர்களும்  தங்களது முதுநிலை ஆராய்ச்சியைத்  தொடர Massachussets Institute of Technologyக்குச் செல்வதாயும் இன்னும் சிலர் காரக்பூர், கான்பூர் ஐஐடியிலும் சிலர் பெங்களூருவிலிருக்கும் ஐஐஎஸ்சியிலும் தங்களது மேல்நிலை ஆராய்ச்சிகளைத் தொடரவிருப்பதாயும் கூறிச் சென்றனர். சிலர் புதிய நேனோ துகள்களைக் கண்டுபிடிக்கப் போவதாயும் இன்னும் சிலர் நேனோ டெக்னாலஜியையும்  Superconductivityயையும் ஒப்பீட்டு ஆராய்ச்சி செய்து புதுமையான கண்டுபிடிப்புகளை நோக்கி நகரவிருப்பதாயும் தங்களது அபிலாஷைகளை வெளிப்படுத்தி விட்டுச் சென்றனர்.

இப்பொழுது ப்ரஜக்டரில் Sivasankar, Mechanical Engineering என்ற அறிவிப்பு ஓட.. பலத்த கைத்தட்டல்கள் விண்ணைப் பிளந்தன..

185 செமீ  உயரத்தில் 92 கிலோ எடையுடன்  கூடிய அக்மார்க் தென்  தமிழ்நாட்டினைச் சார்ந்த  ஒரு இளைஞனின் உருவம் தான் ஒரு நடுத்தர வர்க்கத்தினைச் சார்ந்தவன் என்று பறை சாற்றிக் கொண்டிருக்க…. மெல்ல மேடையை நோக்கி நடந்து கொண்டிருந்தான்.

Bio-Mechanics என்ற துறையில் இடுப்பு  எலும்பு தேய்மானத்திற்கு  மாற்றெலும்பு அல்லது மாற்று  செயற்கை மூட்டு / எலும்பு  தயாரிப்பதில்  தனது நீண்ட ஆராய்ச்சியின் வெற்றியே இந்த முனைவர் பட்டம்.

சிவா  இப்பொழுது மைக் பிடித்துப் பேச ஆரம்பித்தான்.

தான்  ஒரு யோகியிடம் சேர்ந்து முறைப்படி தவம் பயின்று  ஆராய்ச்சி செய்யவிருப்பதாய்க் கூற…..

கூட்டம் கொல்லெனச் சிரிக்க…..

அந்த  அரங்கமே சிரிப்பலைகளால் அதிர்ந்தது.

சிவா  தொடர்ந்தான்.

நம் தேசம் எல்லா வகையிலும் தலை  சிறந்த தேசம். ஒரு காலத்தில்  வெளிநாட்டவர்கள் நம்மிடம் கல்வி பயில நாளந்தா பல்கலைக் கழகத்திற்கே வந்தனர்.

ஆயுளை அதிகரிக்க ஒரு ஆயுர்வேதம். சுஷ்ருதா நவீன அறுவை உபகரணங்கள் மட்டுமன்றி வலியும் இன்றியே அறுவை சிகிச்சை மேற்கொண்டார். வேதங்களில் ஆயுர் வேதத்தினையும் ஒன்றாக இணைத்தனர்.

டெலஸ்கோப் இன்றியே பூமியிலிருந்து கோள்களையும் பால் வழி மண்டலங்களையும் (Stars and Galaxy) ஆராய்ந்தனர். கோள்களிலிருந்து வரும் காந்த அலைக் கதிர்கள் மனிதனின் வாழ்வை எப்படி பாதிக்கின்றது என ஆராய்ந்து ஜோதிடம் என்ற ஒரு துறையினை ஏற்படுத்தினர் நம் நாட்டு சித்தர்கள்.

உலகின்  முதல் Network Theory ஜோதிடமே….!

சூரியனைச் சுற்றி பூமி வலம் வருகின்றது என்பதினை கோபர்நிகஸை விட  முன்பே வராகமிஹிரர் எவ்வித டெலஸ்கோப்புமின்றியே வெறும் மனோ சக்தியினால் கண்டு  சொன்னார். மேதமெடிக்ஸில் ஜீரோவினைக் கண்டுபிடித்தது ஆர்யபட்டா.

கேன்  யூ இமேஜ்ன் அவர் ஒர்ல்ட்  வித்தவ்ட் ஜீரோ….?

தட்ஸ் இந்தியா…

ஒன்லி பை விஷன்….. இன் மெடிட்டேஷன் ….!

இப்பொழுது கூட்டம் ஆழ்ந்த நிசப்தத்திலிருந்தது.

Mind at Higher Frequency becomes Matter. Matter at lower frequency becomes Mind….

That’s the Mind Power….!!!

———

பூச்சா……

சூரியன் உச்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தான்.  தன் கருப்பு  நிறக் கம்பளியை இந்த உச்சி  வெயிலிலும் தோள் மீது துண்டு போல் அணிந்திருந்தான். தலைப்பாகை. மாடுகளை மேய்த்துக்கொண்டே சோகத்துடன் இப்படிப் பாடிக் கொண்டே நகர்ந்தான்.

பொட்டல்காட்டுல பூவு

ஒண்ணு பூத்துச்சு

அத்தவயித்துல அழகா

பொறந்தா ஆசமக‌ செம்பருத்தி…

ஆத்துதண்ணி போல

வெரசா ஓடிப்போச்சு

வருசம் பதினாறு..

சோளக்காட்டு பொம்ம

போல வெடவெடன்னு

வளர்ந்து நின்னா ..

மாமன் எம்மேல ஆசவச்சு

அவசரமா சமஞ்சு நின்னா ..

கருவாட்டு சந்தைக்கு

அவ வந்தா

சந்தயெல்லாம் ரோசாப்பூவாசம்

வீசும்…

ஆலவிழுதுல அவ

ஊஞ்சல் ஆடுற அழக

ரசிக்க ஊருகண்ணெல்லாம்

போட்டி  போடும்… …

சைக்கிள் கம்பியில

உட்கார்ந்து என்

நெஞ்சுல சாய்ஞ்சுகிட்டு

பக்கத்தூரு கொட்டகையில

சினிமா பார்க்க வருவா ..

செம்பருத்திக்கும் எனக்கும்

ஓடக்கர அம்மன்கோவிலுல

கல்யாணம் நடந்துச்சு ….

நாப்பது கெடாவெட்டி

நாக்குருசிக்க

கறிச்சோறு போட்டு

அசத்திபுட்டா அத்தக்காரி !

வானவில்லுகூட வாழ

ஆரம்பிச்சேன்;

வசந்தமுல்ல ஒண்ணு அவ

வயித்துல வளர

ஆரம்பிச்சுது..

ஒலகத்துல அழகானது

நிலாவும் இல்ல

மழையும் இல்ல

புள்ளய சுமக்குற

புள்ளத்தாச்சியோட முகந்தான் .

தங்கம்போல தகதகக்குற

அழகுமுகம்;

வைரம்போல மின்னலடிக்குது

அவமுகம்.

காள பொறக்குமோ

பசு பொறக்குமோன்னு

தெரியலை…

ஒம்பது மாசமாச்சு

ஒவ்வொரு நாளும்

ஒவ்வொரு யுகமா நகருது ….

வயக்காட்டுல நின்னாலும்

தென்னந்தோப்புல நின்னாலும்

உள்ளுக்குள்ள அவ நெனுப்பு

மட்டுந்தான் நிக்குது ….

உள்ளூரு மருத்துவச்சிக்கு

கையி நடுங்குதுன்னு

மேலத்தெரு மாணிக்கம்பய

சொல்லிட்டு போனதால ,

பக்கத்தூரு கவர்மெண்டு

ஆஸ்பத்திரியில் செம்பருத்திய

சேர்த்துபுட்டு வெளியில

நிக்கறேன்…

முள்ளுகுத்தினா கூட

தாங்கமாட்டா..

புள்ள பெக்குற வலிய

எப்படித்தாங்குவாளோன்னு

படபடன்னு அடிக்குது

நெஞ்சு…

பொம்பளைக்கு புள்ளய

குடுத்துபுட்டு

ஆம்பளைக்கு வலிய

குடுத்திருந்தா கையெடுத்து

கும்பிட்டிருப்பேன் கடவுள ….

அய்யோ அம்மான்னு

கத்துறா என் உசிர

சொமக்கற மகராசி …

தூரத்துல ஒரு

வேதகோயில் சிலுவ

தெரியுது

புள்ள நல்லா பொறந்தா

நூறு தேங்கா உடைக்கிறேன்

சாமீ..

புள்ள பொறந்த சேதிய

அழுக சத்தம் சொல்லிடுச்சு

ஓடிப்போயி பார்த்தேன்

கறுப்புகலருல காளைக்கன்னு

கண்ணுமூடி தூங்குது !

புள்ளய எங்கையில

கொடுத்துபுட்டு

இடிய எங்காதுல

சொல்லுறா நர்சு …

புள்ள சத்தம் கேட்டநிமிசம்

செம்பருத்தி சத்தம்

நின்னுடுச்சாம் …

என் கறுப்புதங்கம் வெரச்சு

கெடக்கே!

மாமன்நான் பக்கத்துல

வந்தால படக்குன்னு

எழுந்திரிப்பா ….

மடைமடையா அழுவறேன்

ஒரு அசைவும் இல்லயே!

.

கையில ஒரு பிள்ள

அழுவுது

தாய்ப்பாலுக்கு

சுடுகாட்டுல பொதச்சு

பாலு ஊத்தியாச்சு

ஒரு பிள்ளைக்கு !

பதினாறு நாள் விசேசம்

முடிஞ்சுபோயாச்சு …

செம்பருத்திய பொதச்ச

இடத்துல புல்லுபூண்டு

வளர்ந்தாச்சு..

கம்பியூட்டரு இருக்குன்னாக

செகப்பு வெளக்கு

வேன்வண்டி இருக்குன்னாக

என்ன இருந்து என்னத்த

செஞ்சாக..

பச்சபுள்ளைய மண்ணாக்கிபுட்டாக

வெள்ளச்சட்ட டாக்டர

நம்பினதுக்கு

கை நடுங்கின மருத்துவச்சிய

நம்பி இருக்கலாம் .

என  சோகமாய் பாடிக்கொண்டே அந்தப் பாழடைந்த மாளிகையை நோக்கி நடை போட்டான். கண்களில் வறட்சியான சோகம்.

பாழடைந்த  அந்த பங்களாவினுள் நுழைந்தான். இலைச் சருகுகள் உதிர்ந்திருந்தன. உள்ளே அடர்த்தியான கும்மிருட்டு. அந்தப் பட்டப் பகலில் ஆள் அரவமற்ற இடம். இது பேய்களின் இருப்பிடம் என யாரும் இந்தப் பக்கம் சுவாசக் காற்றினைக் கூட விட மாட்டார்கள்.

பூச்சாவின்  காலடிகள் இலைச் சருகுகளின் மீது பட்டு ‘சர்க்….சர்க்….சர்க்…’  என ஒரு அமானுஷ்யப் பிண்ணனி  திகில் இசை கொடுத்துக் கொண்டிருந்தது. செடி கொடிகள் என பங்களா முழுதும் முளைத்திருந்தன. எருக்கஞ் செடிகள் அமோக விளைச்சலைக் கண்டிருந்தன. எருக்கம் பூக்கள் வயலட் மற்றும் வெள்ளை நிறம் என இரு வகைகளாய் பூத்துக்கிடந்தன.

சில இடங்களில் பெயர் தெரியா பல பாம்பு வகைகள் ஊர்ந்து  கொண்டிருந்தன. தவளைகள் சில  பாம்புகளின் வாயில் சிக்கி க்ரீச்சிட்டுக் கொண்டிருந்தன. டார்வினின் விதிகள் இங்கே மெய்ப்பிக்கப்பட்டுக் கொண்டிருந்தன.

தன்னிடமிருந்த ஒரு சாவியினால் கதவினைத் திறந்து பலம் கொண்ட மட்டும்  தள்ளினான். சிறிது நேரத்தில்  கதவு க்ரீச் என்ற பலத்த சப்தத்துடன்  திறந்து கொணடது. அந்த க்ரீச் சப்தம் இன்னும் சில நொடிகளுக்கு  எதிரொலியாக வந்து கொண்டிருந்தது.

ஒரு முறை சுற்றும் முற்றும் பார்த்து விட்டு மீண்டும் கவனத்துடன் கதவினை உள் பக்கமாகத் தாழிட்டான். படிகளில் கீழிறங்கி பாதாள  அறைக்குச் செல்லலானான்.

பிச்சம்மாளை நோக்கி இரு கரம் கூப்பி, ‘வணக்கம் தாயி…..’ என வணக்கம் செலுத்தினான்.

அருகில் இன்னொரு முரட்டு மனிதன் கருமை நிறத்தில் இருந்தான். நெற்றியின் 75 சதம் அடர் சிவப்பு வண்ணக் குங்குமம் ஆட்கொண்டிருந்தது. முகத்தில் குரூரம். கழுத்தினில் எலும்புகளை மாலையாக்கியிருந்தான்.

‘ஜெய் காளி….’ என சப்தமெழுப்பினான்.

பூச்சா  தன் வேட்டியின் இடுப்புப்  பகுதியிலிருந்து ஒரு பொட்டலத்தினை பவ்யமாய் எடுத்து அவர்களின் முன்னாள் வைத்தான்.

‘இது  ரங்கராஜனின் காலடி பட்ட மண்தானே….?’

ஆம் என்பதாய்த் தலையசைத்தான்.

எலுமிச்சம் பழத்தினை அறுத்து குங்குமம்  தடவி ஒரு சூலாயுதத்தில்  குத்தினான். அருகிலிருந்த மண்ணை நீர் ஊற்றிக் குழைத்து அதில் ரங்கராஜின் காலடி மண்ணைச்  சேர்த்துக் குழைத்து ஒரு பொம்மையாக்கினான்.

இப்பொழுது மந்திரவாதி மீண்டும் பூச்சாவை நோக்கி  ’எங்கே…?’ எனபதினைப்  போன்ற ஒரு லேசர் பார்வையை வீச…

தான்  கொண்டு வந்திருந்த ரங்கராஜின் ஒரு ஆடையை நீட்டினான்.

அதிலிருந்து ஒரு சிறு பகுதியைக் கிழித்து அந்த பொம்மையின் மீது போர்த்தினான்.

“ரொம்ப சக்தி வாய்ந்த காஷ்மோரா ஏவியிருக்கேன். இன்னும் பன்னெண்டே நாள்தான் ரங்கராஜின் ஆயுசு. அதுவரைக்கும் நீங்க யாரும் உங்களோட ரத்தத்தை உங்க கண்ணால பார்க்கக் கூடாது…. இதுதான் ரொம்ப ஜாக்ரதையா இருக்க வேண்டிய நேரம்…. இந்த 48 நாட்கள்ல 36 நாட்கள் தொடர்ந்து உருவேற்றம் செய்து முடித்தாகிவிட்டது. இனி இந்த 12 நாள்தான் ரொம்ப ஜாக்ரதையா இருக்க வேண்டிய நேரம்…. நான் ஏற்கெனவே சொன்ன நியமங்கள் ஞாபகமிருக்கட்டும்…. கொஞ்சம் பிசகினால் காஷ்மோரா நம்மைக் கொன்று விடும் ஜாக்கிரதை….”

சொல்லி விட்டு  அகோரமாய்ச் சிரித்தான்.

—————-

ரங்கராஜ் இரவினில் நடந்ததை எண்ணி யோசனை செய்து கொண்டிருந்தான். தன்னுடைய பெளதிக அறிவினை நுணுக்கி யோசித்தான். Quantum Electronicsல் படித்த Population Inversion ,  Laser, Hologram என எல்லாம் நினைவலைகளில் வந்து சென்றது.

மண்டையோடு அந்தரத்தில் மிதந்து வந்தது…. பின் என்னை நோக்கி மெதுவாய் அந்தரத்தில் வந்தது..  பயமாய் இருந்தது.  அதன் பின்…? அது பச்சை, மஞ்சள், ஜ்வாலை நிறம் என அனைத்தும் கலந்த ஒரு வண்ணத்தில் ஒளி வீசியது.. ஒருக்கால் கொள்ளி வாய்ப் பிசாசோ…?

ரேழியிலிருந்த பாட்டியை நோக்கி ஓடினான்.

‘அம்மா…. இந்த கொள்ளி வாய்ப் பிசாசு எப்டி இருக்கும்….?’

’அடக் கெரகமே….! எதுக்கு உம் மனசு  இப்டி மாறிடுத்து….? நீ ரொம்ப  பயப்படறே…. நீ நேத்து பாத்தது  மனப் பிராந்தி…. ஙே…..ன்னு முழிக்காதே…. போ… பெருமாளை நன்னா வேண்டிக்கோ…..’

அதே நேரத்தில் அங்கே மந்திரவாதி பொம்மையின் முன் ஆக்ரோஷமாய் மந்திரம் ஓதிக் கொண்டிருந்தான். இப்பொழுது ஊசியினால் பொம்மையின் தொடையில் குத்தினான்.

இங்கே ரங்கராஜிற்கு தன் வலது தொடையில் சுருக்கென ஒரு வலி. எறும்பு  கடித்திருக்குமோ என எண்ணி  வலி வந்த இடத்தினைக் கசக்கினான்.

மந்திரவாதி  ஆக்ரோஷமாய் மந்திரம் உச்சரித்துக் கொண்டே வயிற்றினில் குத்த ரங்கராஜிற்கு வயிற்றினில் சுருக் என ஒரு  வலி.

ரங்கராஜின்  மூச்சில் இப்பொழுது மாற்றம்  வந்திருந்தது. ரேபிட் ப்ரீத்திங் பண்ணிக் கொண்டிருந்தான். இதயம்  படபடவென அடித்துக் கொண்டிருந்தது. உள் உறுப்புக்கள் அனைத்தும் கட்டுப்பாட்டினை இழந்து வேக வேகமாய் இயங்க….. அவனின் ரத்த அழுத்தம் ஜிவ்வென எகிற….. பேச்சு வராமல் திணற…..

பாட்டி….. “ரங்கா….. ரங்கா…..” என ஓடி  வர….

மந்திரவாதி  பொம்மையின் இதயத்தினில்  ஊசியால் ஓங்கி குத்த…..

அதே நொடியில் –

ரங்கராஜ்  வீட்டின் சுவர்க் கடிகாரத்தில் இரு முட்களும் நண்பகல் 12 ல் சரியாக முத்தமிட …..

12 முறை  சுவர்க்கடிகாரம் மணி ஒலிக்க  ஆரம்பிக்கும் அதே நொடியில்  –

ரங்கராஜ்  தன் நெஞ்சினைப் பிடித்துக்கொண்டே,

“ம்ம்ம்ம்ம்மா…………”  என அலறியவாறே நின்று கொண்டிருந்த இடத்திலிருந்து  மூன்று அடி சடேரென பாட்டியின் கண்ணெதிரில் அந்தரத்தில் தூக்கி எறியப்பட்டுக் கீழே விழுந்து கொண்டிருந்தான்.

தொடரும்…….

நன்றி….

What is Life…?  The Physical Aspect of the Living Cell with  MIND AND MATTER by ERWIN SCHRÖDINGER,  CAMBRIDGE UNIVERSITY PRESS
Mind and Its Control By Swami Bhudhananda,  Vedanta Press
கவிஞர் நிலாரசிகன்.
என்னிடம் சுயமுன்னேற்றப் பயிற்சிகளை இணையம் மூலம் பயின்ற நண்பன் Dr.Sivasankar Ph.D (IIT,G) Dean AEC
காஷ்மோரா….. எண்டமூரி வீரேந்திரநாத்.

 

Share

Comments (2)

 1. ஒவ்வொரு முக்கியமான நிகழ்வுகளுக்கான சான்றுகளுடன் விறு
  விறுப்பான கதைக்கு நடுவில் மதுவின் கவிதை,அதற்கு நண்பர்
  ஆர் எஸ் மணி அவர்களின் உள்ளமுருக்கும் பாடல்,நிலாவின் கவிதை,
  சிவாவின் அற்புத பேச்சு,என்று ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கிறது.
  மொத்தத்தில் ப்ரமிக்க வைக்கிறீர்கள் ரிஷி! வாழ்த்துகள்.
  தொடருங்கள். …தொடர்கிறோம் 🙂

 2. Please contact me. I am at venshagan@gmail.com. It may help you!

Comment here