சக்தி சக்திதாசன்.

அன்பினியவர்களே !

அன்பான வணக்கங்களுடன் அடுத்தொரு மடலில் உங்களுடன் இணைவதில் பெருமகிழ்வடைகிறேன்.

இவ்வுலகத்தின் சுழற்சியோடு சுழலும் மக்களின் வாழ்க்கைச் சுழற்சியின் அச்சாணியாகத் திகழ்வது பணமாகும்.

இப்பணத்தின் முக்கியத்துவம் கணக்கிலடங்காத வகையில் பலராலும் பல்வேறு வகைகளில் அழகாக எடுத்தியம்பப்பட்டிருக்கின்றது.

விரும்பியோ விரும்பாமலோ இவுலக சரித்திரத்தில் பெரிய பிரித்தானியா என்றழைக்கப்பட்ட இப்போதைய ஐக்கிய இராச்சியம் பெரும் பங்கு வகித்திருக்கிறது.

நேரடியாகவோ அன்றி மறைமுகமாகவோ இங்கிலாந்த்து இன்று பல்வேறு நாடுகளில் நடைபெறும் உள்நாட்டுப் பூசல்களுக்குக் காரணமாக இருப்பதும் ஒரு சரித்திர உண்மையே !

இந்த அடிப்படைக் காரணத்தினால் இன்றைய உலகின் முக்கிய நாடுகளில் ஒன்றாக, உலகப் பொருளாதாரத்தைப் பாதிக்கும் நாடுகளில் ஒன்றாக இங்கிலாந்து இருப்பதும் தவிர்க்கப்படமுடியாத உண்மையே !

உலகின் பல்வேறு நாடுகளில் இங்கிலாந்து கொண்டிருந்த அன்றைய ஆதிக்கத்தின் விளைவாகவே இன்றைய இங்கிலாந்து ஒரு பல்வேறு இனங்களை உள்ளடக்கிய, பல்வேறு மதங்களை உள்ளடக்கிய, பல்வேறு மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட மக்களை உள்ளடக்கிய ஒரு பல்லினக் கலாச்சார மையமாகத் திகழ்கிறது.

இன்றைய வளர்ந்து வரும் நாடுகள் பலவற்றில் இருந்து இங்கிலாந்த்தை நோக்கிப் படையெடுக்கும் இளையதோர் சமுதாயம் இருப்பது கண்கூடான ஒரு உண்மை.

பலநாடுகளின் கல்விமுறைகள் அக்கல்விச்சாலைகளில் இருந்து பட்டம் பெற்றோர் இங்கிலாந்தில் பணிபுரிவதற்கு ஏதுவான முறையில் அமைக்கப்பட்டிருக்கிறது.

பல நாடுகளில் இங்கிலாந்து செல்வதற்குத் தேவையான வகையில் அவர்களின் அறிவை விஸ்தரித்துக் கொள்வதற்காகப் பல்வேறு அமைப்புகள் தொடங்கப்பட்டு அவற்றின் மூலம் அவர்கள் பொருளாதார இலாபம் அடைந்து வருவதும் கண்கூடாகக் காணக்கூடியதொன்றாகவே இருக்கிறது.

bank3சரி,  இதற்கெல்லாம் ஆதாரமான இங்கிலாந்தின் சட்டபூர்வமான தேசிய வங்கியின் சரித்திரத்தைச் சிறிது பின்னோக்கிப் பார்ப்பதற்காவே இத்தகையதோர் ஆரம்பத்துடன் இம்மடலில் உங்களைச் சந்திக்கிறேன். 1690களில் ஜரோப்பிய கடலில் ஆதிக்கம் செலுத்திய கடற்படைக்குச் சொந்தமான நாடு அன்றைய பிரஞ்சு தேசமாகும். அவர்களின் அக்கடற்படையின் ஆதிக்கத்தின் அனுகூலத்தினால் பிரான்சு நாட்டிடம் படுதோல்வியடைந்தது இங்கிலாந்து.

இத்தோல்வி கொடுத்த பாடத்தினால் தாம் ஒரு அதிசிறப்பான கடற்படைய நிறுவ வேண்டிய தேவைக்கு அப்போதைய இங்கிலாந்து அரசரான 3ஆம் வில்லியம் மன்னர் தள்ளப்பட்டிருந்தார்.

இத்தேவைக்குரிய பணத்தை அப்போதைய இங்கிலாந்து அரசாங்கம் கொண்டிருக்கவில்லை. இத்தேவையே இன்றைய ” இங்கிலாந்து வங்கி   (Bank of England) க்கு அத்திவாரமிட்டது எனலாம்.

பிரத்தியேக மக்கள் அரசுக்கு பொன் கட்டிகளைக் கொடுத்து வங்கி மூலம் அதற்குரிய காகிதக் கற்றைகளை பெற்றுக் கொள்வார்கள். பின்பு இக்காகிதக் கற்றைகள் மீண்டும் கடனாகக் கொடுக்கப்படும்.

இத்தகைய முறையின் மூலம் அப்போதைய இங்கிலாந்து அரசு கப்பற்படையை ஸ்தாபிப்பதற்கான தொகையை விட இரண்டு மடங்கான தொகையை பன்னிரண்டே நாட்களில் சேகரித்துக் கொண்டது.

bank1இவ்வங்கியின் ஸ்தாபகத்தின் மூலகர்த்தா அப்போதைய ஹலிவாக்ஸ் (Halifax) எனப்படும் பகுதியின் முதலாவது பிரபுவான சார்லஸ் மொண்டகே (Charles Montague) என்பவராவார்.

இவங்கிக்கான முதலாவது அரச முத்திரை 1694 யூலை மாதம் 27ம் நாள் வழங்கப்பட்டது.

இவ்வங்கியின் முதலாவது கவர்னராக ஜான் கொப்லான் (John Houblon) என்பவர் நியமிக்கப்பட்டார்.

இவரது படம் இங்கிலாந்து 50 பவுன் தாளில் 1994ம் ஆண்டு பதிவிடப்பட்டது.

இவ்வங்கியின் முதலாவது தரிப்பிடமாக லண்டன் நகரின் பகுதியான வால்புறூக் தெரிவு செய்யப்பட்டது. இக்கட்டிடத்தின் அடிப்பகுதியில் பழைய ரோமேனிய புராதனக் கண்டுபிடிப்பான மித்திராஸ் கோவிலின் எச்சங்கள் 1954ம் ஆண்டு சித்திர ஆய்வாளர்களினால் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடக் கூடிய ஒரு நிகழ்வு.

bank2தற்போது அமைந்திருக்கும் திரட்நீடில் எனும் தெருவிற்கு மாறுவதற்கு முன்னால் 1780ம் ஆண்டில் சமூகவெறியாட்டம் போட்ட கும்பல் ஒன்றின் தாக்குதலுக்குள்ளானது. அன்றிலிருந்து 1973ம் ஆண்டு வரை இங்கிலாந்து வங்கியின் பாதுகாப்பு ரோந்தில் இங்கிலாந்து இராணுவத்தின் படைப்பிரிவின் ஒரு பகுதியினர் இணைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

1844ம் ஆண்டில் இங்கிலாந்து வங்கிக்கு இங்கிலாந்து பவுன்  காகிதக் கற்றைகளை விநியோகிக்கும் முழு உரிமையும் அளிக்கப்பட்டது.

1997ம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு  பதவிக்கு வந்த லேபர் அரசாங்கத்தின் நிதியமைச்சரான கோர்டன் பிரவுன் அவர்களால் இங்கிலாந்து வங்கிக்குப் பொருளாதாரக் கொள்கைகளை வகுக்கும் முழுச் சுதந்திரம் வழங்கப்பட்டது.

இதுவே இங்கிலாந்து வங்கியின் வரலாற்றுச் சுருக்கமாகும். ஒரு நாட்டின் செல்வச்செழிப்புக்குக் காரணம் அந்நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளே.

தாம் பதவியைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் எனும் சுயநல நோக்கினால், தொலைநோக்கான பொதுநலக் கொள்கைகளை முன்வைக்காது குறுகிய கொள்கைகளை முன்வைப்பதற்கு  பதவியிலிருக்கும் அரசுகள் முனைந்து வந்த காரணத்தினாலேயே இங்கிலாந்து வங்கிக்கு முழுச்சுதந்திரம் அளிக்கப்பட்டது.

இது இங்கிலாந்தின்  அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய மைல் கல்லாக அனைத்துத் தரப்பினராலும் கணிக்கப்படுகிறது.

இவ்வங்கியின் தற்போதைய கவர்னராக முந்தைய கனேடிய வங்கியின் முகாமையாளரான “மார்க் கானி (Mark Carney) பதவி வகிக்கிறார்

மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *