நாகேஸ்வரி அண்ணாமலை

180px-Logo_Court_Hammer_Logo‘இந்து’ ஐம்பது வருஷங்களுக்கு முன்னால் அந்தப் பத்திரிக்கையில் வந்த சில செய்திகளை அதே தேதியில் மீண்டும் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது. லஞ்சத்தையும் ஊழலையும் கிரிமினல் குற்றங்களையும் அரசு ஊழியர்களிடமிருந்து ஒழிக்க 1964 செப்டம்பரில் மத்திய அரசு புதுச் சட்டங்களை இயற்றத் தீர்மானித்ததாக செப்டம்பர் 5, 1964-ஆம் தேதியிட்ட ஐம்பது வருஷங்களுக்கு முந்தைய ‘இந்து’வில் வந்த செய்தியை செப்டம்பர் 5, 2014 தேதியிட்ட இந்து வெளியிட்டிருக்கிறது. அவை என்னென்ன சட்டங்கள் தெரியுமா? பிரிட்டிஷ் அரசு காலத்திலேயே 1944-இல் இயற்றிய இந்திய தண்டனைச் சட்டம் (Indian Penal Code), ஊழல் தடுப்புச் சட்டம் (The Code of Criminal Procedure), 1952-இல் இந்திய அரசு இயற்றிய குற்றத் தடுப்புச் சட்டம் (Prevention of Corruption Act and Criminal Law Amendment Act) என்று இன்னும் சில சட்டங்களில் இந்திய அரசு திருத்தம் கொண்டுவந்தது. சுதந்திரம் அடைந்து பதினேழு வருஷங்களுக்குப் பின், இந்தச் சட்டங்கள் வலுவற்று இருந்ததால் அவற்றைத் திருத்தி எழுதி வலுவுள்ளதாக மாற்ற அப்போதிருந்த அரசு முயன்றிருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்களையும் அரசு ஊழியர்களோடு சேர்த்து இந்தச் சட்டங்களின் கீழ் கொண்டுவந்தது முக்கியமான திருத்தம்.

பிரிட்டிஷாரை வெளியேற்றி நாட்டுக்குச் சுதந்திரம் பெற எத்தனையோ பேர் சுதந்திரப் போரில் குதித்தார்கள். சுயநலம் எதுவுமில்லாமல் மிகத் தீவிரமாகப் போரில் கலந்துகொண்டார்கள். அப்படிக் கலந்துகொண்டவர்களில் ஒரு சிலர் சுதந்திர இந்திய அரசில் பங்கேற்றபோது ஊழல் செய்ய முற்பட்டார்கள். சுதந்திரப் போரில் தீவிரமாகப் பங்கேற்காதவர்களும் அரசில் நிறைய ஊழல்செய்ய ஆரம்பித்தர்கள். சுதந்திரத்திற்குப் பிறகு இயற்றப்பட்ட சட்டங்கள் ஊழல்களையும் லஞ்சத்தையும் ஒழிக்கப் போதவில்லை என்பதால் மறுபடி அவற்றைத் திருத்தி அமைக்க அரசு முற்பட்டது.

அறுபதுகளில் பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்துகொண்டிருந்தது. அப்போது அங்கொருவர், இங்கொருவர் என்று ஒரு சிலர் ஊழல் புரிந்தார்கள்; லஞ்சம் வாங்கினார்கள்; குற்றங்களில் ஈடுபட்டார்கள். அதன் பிறகு நிறைய மாநிலங்களில் காங்கிரஸ் அல்லாத கட்சிகளும் ஆட்சியைப் பிடித்தன. அது ஒன்றே காரணம் இல்லையென்றாலும் அதுவும் ஊழல் அதிகரிக்க வழிகோலியது.

அப்போது இத்தனை தனியார் பள்ளிகள், பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள் இல்லை. இவற்றை ஆரம்பிக்க, நடத்த, மாணவ, மாண்விகளைச் சேர்க்க என்று இப்போது லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் சாதாரணமாக நடைபெறுகிறது. ஆசிரியர்கள் பணம் பெற்றுக்கொண்டு தேர்வுகளில் மதிப்பெண்கள் கொடுப்பது போன்ற செயல்கள் அப்போது நடந்திருக்கலாம். ஆனாலும் இப்போது போல் அவை எங்கும் நீக்கமற நிறைந்திருக்கவில்லை. அரசு மருத்துவக் கல்லூரிகளில் புகுமுக வகுப்பில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் அட்மிஷன் கொடுப்பது அன்று சரியாகப் பின்பற்றப்படவில்லை. என்னோடு படித்த ஒரு பெண், ‘தேவையான அளவு மதிப்பெண்கள் (minimum) வாங்கிவிடு. அதன் பிறகு மருத்துவக் கல்லூரியில் உனக்கு அட்மிஷன் வாங்குவது என் பொறுப்பு’ என்று தன் தந்தை கூறியதாகப் பெருமையாகக் கூறிக்கொள்வாள். ஒரு பல்கலைக்கழகத் துணைவேந்தர் ‘என் மகளுக்கே அட்மிஷன் கொடுக்கவில்லை. நான் சம்பந்தப்பட்டவர்களைக் கூப்பிட்டுக் கூறிய பிறகுதான் கொடுத்தார்கள்’ என்றார். இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்தாலும் அவை அரிதாகத்தான் நடந்தன. அன்று நிறையப் பணப் புழக்கம் இல்லை.

மத்திய, மாநில அமைச்சர்களும் நண்பர்களுக்கு, வேண்டியவர்களுக்குச் சில சலுகைகள் கொடுத்தார்களே தவிர இப்போதுபோல் பணம் பெற்றுக்கொள்ளவில்லை. உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு சலுகைகள் செய்து கொடுப்பது (Nepotism) எந்த நாட்டிலும் இல்லாமல் இருக்காது. புதிதாகச் சுதந்திரம் பெற்ற இந்தியாவில் இது இருந்தது பெரிய ஆச்சரியமில்லை. ஆனால் இத்தனை வருடங்களுக்குப் பிறகும் பல சட்டங்கள் இயற்றி ஐம்பது ஆண்டுகள் ஆன பிறகும் ஊழலும் லஞ்சமும் பல மடங்கு பெருகிப் பேயாட்டம் போடுவதை நினைத்தால் நெஞ்சு பொறுக்கவில்லை. ஊழலையும் லஞ்சத்தையும் ஒழிப்பதற்காக இயற்றப்பட்ட சட்டங்கள் இவற்றை ஒழிக்காதது மட்டுமல்ல, இவை பல மடங்கு பெருகுவதைக் கட்டுப்படுத்த முடியாமல் போனது ஏன்?

இடையில் எழுபதுகளில் ஜனதா கட்சியும், தொண்ணூறுகளில் பா.ஜ.க.வும் மற்ற கட்சிகளோடு சில ஆண்டுகள் மத்தியில் ஆட்சி அமைத்ததைத் தவிர சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரஸ்தான் மத்தியில் ஆட்சிபுரிந்து வந்திருக்கிறது. ஊழலும் லஞ்சமும் ஒழிக்கப்படாமல் போனதற்கு காங்கிரஸ் மட்டும்தான் காரணமா? இடையில் மாற்று ஆட்சி அமைத்த மற்றக் கட்சிகளும் ஒன்றும் செய்யவில்லையே.

rti-new

தொண்ணூறுகளில் என் தந்தை இறந்த பிறகு அவருடைய பிறப்புச் சான்றிதழ் பெற தாலுக்கா அலுவலகத்திற்கு நான் பல முறை சென்றேன்; அங்கு வேலைபார்க்கும் பலரின் கேலிக்கு உள்ளானேன். இப்போது பிறப்பு, இறப்புச் சான்றிதழ்களை கணினி மூலமே பெற்றுக்கொள்ளலாம் என்கிறார்கள். ஊழல் ஒழிய இது ஒரு படி. நிர்வாகம் கணினி மூலம் வெளிப்படையானால் (transparent) அலுவலர்களின் பை நிறைவதைக் குறைக்கலாம். தகவல் பெறும் உரிமை என்னும் சட்டம் நிர்வாகத்தை வெளிப்படையாக்க உதவும். இவற்றாலெல்லாம் லஞ்சம், ஊழல் ஒழியலாம் என்னும் நம்பிக்கையை மக்கள் மனதில் வளர்க்கலாமா என்று தெரியவில்லை.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *