தலையங்கம்பொது

வல்லமை – சிந்தனை, செயல், முன்னேற்றம் – தலையங்கம்

பவள சங்கரி

 

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே !


நாம் மொழி , கலாச்சாரம், பண்பாடு, நாகரீகம், விஞ்ஞானம், மெய்ஞ்ஞானம் என்று என்னென்னவோ ஆராய்ச்சி செய்கிறோம், ஆனால் இவையனைத்திற்கும் ஆதாரமான ஒன்றைப் பற்றி சற்றும் கவலை கொள்ளாமல்! ஆம் நம் நாட்டின் இன்றைய தலையாயப் பிரச்சனை விவசாய விளை நிலங்களின் ஆக்கிரமிப்பு. விஞ்ஞானமும், தொழில் நுட்பமும் முன்னேறிக் கொண்டேச் செல்லச் செல்ல மக்களின் நாட்டம் அதை நோக்கி வேகமாக பயணிக்க, இன்று வழி வழியாக விவசாயத் தொழிலையே கண்ணும் கருத்துமாகக் கவனித்து வந்த பல குடும்பங்களின் வாரிசுகள் அதனை விட்டு வேளியே வரத் துணிந்ததோடு அவ் விளை நிலங்கள் இன்று குடியிருப்புகளாகவும், தொழிற்சாலைகளாகவும் உரு மாறிக் கொண்டிருக்கின்றன என்பது மிகப்பெரிய அவலம். விவசாயம் நலிந்து போனால் நம் எதிர்காலம் என்ன ஆகும் என்பது நாம் அறியாதது அல்ல. ஆயினும் அந்த விவசாயம் நலிந்து போகாமல் காக்கப்பட வேண்டிய சூழலின் விழிப்புணர்வு கொள்ள வேண்டிய அவசர நிலையில் உள்ளோம் என்பதனை நினைவில் கொள்ள வேண்டிய  நேரம்.

இன்று விளை நிலங்களை வணிக மயமாக்கும் கொள்ளைத் திட்டங்களால் இந்தியாவில் ஏழை விவசாயிகளின் நிலங்கள் வன் முறையாகப் பறிக்கப் படுகின்றன. இது ரியல் எஸ்டேட் என்ற துறையில் அயல் நாட்டு முதலீடுகளை அனுமதிப்பதன் மூலமும், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயராலும் நடைபெற்று வருகிறது

மேலும், நகர மயமாக்கல், சுரங்கம் தோண்டி கனிம வளங்களைச் சுரண்டுதல், தொழிற்சாலைகளை அமைத்தல், அதி விரைவு நெடுஞ்சாலைகள் அமைத்தல் போன்றவற்றிற்காகவும் விவசாய விளை நிலங்கள் பெருமளவு வன்முறையாகப் பறிக்கப்பட்டு வருவதும் வருத்தத்திற்குரிய செயலாகும்.

உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற பாரம்பரியச் சிந்தனை, செயல்முறை அழிக்கப்படுவதும் இன்றைய நலிவிற்கு ஒரு முக்கிய காரணமாகலாம்.

உத்திரப் பிரதேசத்தில் யமுனா மகா நெடுஞ்சாலைத் திட்டத்தில் ஜேபி இன்ஃப்ரா டெக் நிறுவனமும், ஒரிசாவில் போஸ்கோ நிறுவனமும், ஜைதாபூரில் அணுமின் நிலையத் திட்டத்திற்காக பிரான்ஸ் நாட்டு நிறுவனமான அரேவாவிற்கும் விவசாய நிலங்களே பயன்படுத்தப் பட்டுள்ளது என்பதும் வேதனைக்குரிய விசயம்.

சுற்றுச் சூழல் ரீதியாகவும், உணவுப் பாதுகாப்பு ரீதியாகவும், ஜனநாயக ரீதியாகவும்  தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நெருக்கடியான சூழலில் நம் இந்திய நாடு இருப்பதாக  சமூக, சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துக் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

உ.பி.யின் கிரேட்டர் நொய்டாவில் ஜயபிரகாஷ் அஸொசியேட்ஸ் என்ற மகா நிறுவனம் டவுன்ஷிப், குடியிருப்புகள், உட்பட ஃபார்முலா 1 கார் பந்தய மைதானத்திற்காகவும் 6,000 ஏக்கர் நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இன்று உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பின் மூலம் 156 ஹெக்டேர் விளை நிலங்கள் விவசாயிகளுக்கு பெரும் போராட்டத்தின் பிறகு மீட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது ஆறுதலான விசயமாகும்.

இந்தியா தன்னை ஒரு மிகப்பெரிய வளரும் பொருளாதார நாடாகவும், வல்லரசாகவும் பிரகடனப்படுத்திக் கொண்டு வரும் அதே வேளையில் நம் நாட்டின் 40% குழந்தைகளுக்கு உணவு கொடுக்க முடியாமல் இருப்பது அதிர்ச்சியான விசயம் அல்லவா?

நாட்டின் உள் கட்டமைப்பு என்பது வானளவு உயர்ந்த கட்டிடங்களையும், சுற்றுச் சூழலை மாசு படுத்துகிற தொழிற்சாலைக் கட்டிடங்களும், அதிவிரைவு நெடுஞ்சாலைகளும் ரெயில் பாதைகளும் அல்ல. உள்கட்டுமானம் என்பது உணவுப் பாதுகாப்பு, நீர்வளப் பாதுகாப்பு என்பதை நாம் உணர வேண்டும்.

இன்று உலகெங்கிலும் உணவின்றி பட்டினி கிடக்கும் 2.6 கோடிப் பேரில் கால் பகுதியினர் – அதாவது 65 இலட்சம் பேர் இந்தியாவில்தான் உள்ளனர் என்று ஒரு அறிக்கை கூறுகிறது. ஆனால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஒவ்வொரு ஆண்டும் 8 முதல் 9 விழுக்காடு உள்ளது என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

விவசாயத் துறை மேன்மையடைந்தால் மட்டுமே நாட்டின் உண்மையான சுபிட்சம் மற்றும் பொருளாதார மேன்மை என்பதும் நிதர்சனம். சமீபத்தில் ஒசூரில் ஒரு விவசாயி குடமிளகாய் சாகுபடியிலும், ஈரோடு அருகில் ஒரு வறண்ட பூமியில் விவசாயத் துறை வல்லுநர்களின் உதவியின் மூலம் பெரிய நெல்லிக்காய் சாகுபடியில ஒரு ஏக்கருக்கு 20000 ரூபாய் வருமானம் பெரும் அளவிற்கும் அரிய சாதனைகள் புரிந்துள்ளதும் வரவேற்கத்தககதாகும். இத்தகையோரை ஊக்குவித்து நம் நாட்டின் வளமையைக் காக்க வேண்டியதும் நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

சாதாரண வெற்றிலை மூலம் கூட விவசாயிகளுக்கு ஆண்டொன்றுக்கு ஏக்கராவுக்கு ரூ.4 லட்சம் வரை வருவாய் வருகிறது. மனம் இருந்தால் மார்கமுண்டு!

இறுதியாக, உலகின் காட்சிப் பொருளாக இருக்கின்ற, கடும் பஞ்சத்தில் உழலும் சோமாலியா மக்கள் இன்று கடற் கொள்ளைக்காரர்களாக மாறியிருப்பதும் நாம் அறிந்ததே. உணவுப் பஞ்சம் என்பது ஒரு மனிதனின் அடிப்படை குணத்தையே மாற்றக் கூடிய ஒன்றாகும். அவ்வகையில் நாம் விவசாய நிலங்களையும், விவசாயிகளையும் காக்க வேண்டிய விழிப்புணர்வு பெற வேண்டியது மிக அவசியமாகும்.

 

படத்திற்கு நன்றி.

Share

Comments (2)

 1. உலகளாவிய வேளாண்மை ஆய்வுகள், பரிசோதனைகள், புரட்சிகள் நடந்த நடு இந்தியா, தற்கால வரலாற்றில். நம் வேளான்மை வல்லுனர்களோ உலகப்புகழ் பெற்றவர்கள். கிட்டத்தட்ட 70 வருடங்களுக்கு முன். ஆங்கிலேயர் ஆட்சியில் மானம் பார்த்த பூமியில் வேளாண்மை மேன்மைகளை பார்த்துள்ளேன். இந்திய விவசாயிக்கு நடைமுறை யதார்த்தம் புரியும். இருந்தும், ஏன் இந்த சங்கடம்?
  1. அரசு கடந்த 30 வருடங்களாக பெருமூச்சு விடுவதுடன் சரி;
  2. நவீன முறைகளை அரசு உதாசீநம் செய்வது, மக்கள் விரும்பாதது, ஆதாயம் பெறுவோரின் தடைகள்;
  3. தரகர் சாம்ராஜ்யம்;
  4. பெரிய அளவு விவசாயத்திற்கு ஒவ்வாமை;
  மற்றபடி, நீங்கள் பட்டியலிட்ட குறைகள் இரண்டாம் பக்ஷம். விவசாயியை வாழவிட்டால், இவை தானே தீர்ந்து விடும்.

 2. “உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தொரே” என்று பசிப்பிணியைப்
  போக்க எழுந்த காவியம் மணிமேகலை. உணவு,உடை,இருப்பிடம்
  என்ற அடிப்படைத் தேவையில், மனிதன் உயிர் வாழ முதல்த் தேவை
  உணவு. எனவே எல்லாப் பொருளாதார மேதைகளும் விவசாய
  உற்பத்தியையே பொருளாதாரத்திற்கு அடிப்படை என்றனர்.
  வள்ளுவரும் உழவே தலை என்றும், உழவரே உலகத்தார் எல்லோருக்கும்
  அச்சாணி என்றும், உழுது உண்டு வாழ்பவரே வாழ்பவர் என்றும்,
  அரசர்களுக்கும் துறவிகளுக்கும் மேலானவர் உழவரே என்றும்
  பெருமை சேர்த்துள்ளார். மகாகவி பாரதியாரும் ” உழவுக்கும்
  தொழிலுக்கும் வந்தனை செய்வோம் ” என்றார். இப்போதுள்ள
  பொருளாதார வளர்ச்சி வேறு திசை நோக்கிச் செல்வதால்
  அடிப்படைப் பொருளாதாரம் ஆட்டம் காணும் நிலையில் உள்ளது.

Comment here