குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா …

0

கவிஞர் காவிரிமைந்தன்.

 

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா

கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

மகாதேவி

மகாதேவி திரைப்படத்தில் மக்கள் திலகம் கதாநாயகனாக.. மாறுவேடத்தில் கண்தெரியாதவராக… நடிக்கும் காட்சியில் நாட்டில் நடக்கும் சமுதாய பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து அதற்குரிய தீர்வுகளையும் ஒருங்கே சொல்லும் பட்டுக்கோட்டையாரின் பாடல் கேளுங்கள்..

சூழ்ச்சியிலே சுவரமைத்து
சுயநலத்தால் கோட்டைகட்டிச்
சுடர்விட்ட நீதிதனைத் தூக்கி எறிந்துவிட்டுச்
சாட்சிகள் வேண்டாம் சகலமும் நானென்று
சதிராடும் வீணர்களின் அதிகார உலகமடா
புதிரான உலகமடா _ உண்மைக்கு
எதிரான உலகமடா _ இதில்
பொறுமையைக் கிண்டிவிடும்
போக்கிரிகள் அதிகமடா

மேலே குறிப்பிட்ட இந்த வரிகள் படத்தில் இடம் பெறவில்லை

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்
குருட்டு உலகமடா _ இது
கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும்
திருட்டு உலகமடா _ தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்
திருந்த மருந்து சொல்லடா

இருக்கும் அறிவை மடமை மூடிய
இருட்டு உலகமடா _ வாழ்வில்
எந்த நேரமும் சண்டை ஓயாத
முரட்டு உலகமடா _ தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்
திருந்த மருந்து சொல்லடா ( குறுக்கு…)

விளையும் பயிரை வளரும் கொடியை
வேருடன் அறுத்துவிளையாடும் _ மனம்
வெந்திடும் தோட்டக்காரனிடம்
மிரட்டல் வார்த்தைகளாடும் _ பல
வரட்டுக் கீதமும் பாடும் _ விதவிதமான
பொய்களை வைத்துப் புரட்டும் உலகமடா _ தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்
திருந்த மருந்து சொல்லடா ( குறுக்கு…)

அன்பு படர்ந்த கொம்பினிலே ஒரு
அகந்தைக் குரங்கு தாவும் _ அதன்
அழகைக் குலைக்க மேவும்
கொம்பு ஒடிந்து கொடியும் குலைந்து
குரங்கும் விழுந்து சாகும் _ சிலர்
குணமும் இதுபோல் குறுகிப்போகும்
கிறுக்கு உலகமடா _ தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்
திருந்த மருந்து சொல்லடா ( குறுக்கு…)

pattukottai_kalyanasundaram_400visramTamil Film Playback Legend T.M.Soundararajanmahadevi
விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவரிசையில் டி.எம்.செளந்திரராஜன் பாடுகின்ற பாடல்! காலங்கள் பல ஆண்டுகள் முன்பே எழுதப்பட்டிருந்தாலும் இன்றைக்கும் என்றைக்கும் பொருத்தமாயிருக்கிறது என்றால் இந்தச் சமுதாயம் திருந்தவில்லை.. மாறாக.. சுயநலங்கள் பெருகி.. பொதுநலங்கள் மருகிக்கொண்டிருக்கின்றன என்று பொருள்!

உழைப்பின்பால்பட்டே உயர்வு இருக்க வேண்டும் என்கிற நியதியை மாற்றி.. ஊரை ஏமாற்றி உலையில் போடும் கூட்டம் அதிகமாகிவிட்டபடியால்.. திருட்டு உலகம் இது என்பதை மறுக்க முடியுமா?  வஞ்சமும் சூதும் மக்களின் நெஞ்சில் குடிகொள்ளத் தொடங்கியதால்.. ஏழைகள் மட்டும் இன்னும் அவலத்திலே மிதக்கிறார்.. இந்தச் சமுதாயத்தை சீர்திருத்த இன்னும் எத்தனை பட்டுக்கோட்டையார் வேண்டுமோ தெரியவில்லை!  மக்களின் ஏகோபித்த பிரதிநிதியாய் கவிஞர் ஏக்கப்பெருமூச்சை பாட்டுவரிகளாக்கித் தந்திருப்பது நிதர்சனம்!

1957 ஆம் ஆண்டு வெளிவந்த ” மகாதேவி ” என்ற திரைப்படத்தில் இந்தப்பாடல் இடம் பெற்றுள்ளது . ” மணந்தால் மகாதேவி , இல்லையேல் மரணதேவி ” இது வீரப்பா பேசிய புகழ் பெற்ற வசனமாகும். இந்தப் படத்துக்காக மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் இரண்டு பாடல்கள் எழுதினார். அதில் ஒன்று தான் இந்தப்பாடல். இந்தப்பாடல் எழுதப்பட்டு 50 வருடங்களுக்கு மேல் ஆனாலும், இந்தப் பாடலின் வரிகள் நமக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே  இன்றைக்கும் என்றைக்கும் பொருந்தும்.

படம்: மகாதேவி (1957)
பாடல்: பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
குரல்: டி. எம். சௌந்தரராஜன்
http://www.youtube.com/watch?v=fhmWh9xD-4w
காணொளி: http://www.youtube.com/watch?v=fhmWh9xD-4w

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *