சக்தி சக்திதாசன்.

scotlandஅன்பினியவர்களே !

மற்றொரு வாரமடலில் உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்வடைகிறேன்.

இவ்வாரம் இம்மடலை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் வேளையில் ஐக்கிய இராச்சியத்தின் வரலாற்றில் ஒரு புது அத்தியாயம் எழுதப்பட்டிருக்கும்.

அட என்ன இது? எதைப் பற்றிய கருத்தாடல் இது என்று எண்ணுகிறீர்களா?

செப்டெம்பர் மாதம் 18ம் திகதி வியாழக்கிழமை ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பகுதியான ஸ்காட்லாந்து நாடு தனது எதிர்காலத்தை நிர்ணயிப்பதற்கான பொது வாக்கெடுப்பு நடந்து முடிந்து இருக்கும்.

அதன் முடிவு என்னவாயிருக்கும் என்பதை அறியாமலே தான் நான் இந்த மடலை வரைகிறேன்.

ஸ்காட்லாந்து நாடு ஐக்கிய இராச்சியத்தினின்றும் நீங்கி தனியான நாடாக இயங்க வேண்டும் என்று ஒரு பகுதியினரும், இல்லை ஸ்காட்லாந்து ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பகுதியாக இணைந்திருப்பதே ஸ்காட்லாந்து நாட்டிற்கு மிகவும் உகந்தது என்று மற்றொரு பகுதியினரும் பலகாலமாக வாதாடி வந்தனர்.

2010ம் ஆண்டு தேர்தலில் அதிகப்படியான இடங்களைக் கைப்பற்றி கூட்டரசாங்கம் அமைத்துக் கொண்ட கன்சர்வேடிவ் கட்சியின் தலைவரும், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமருமான டேவிட் கமரன் அவர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தின் பிரகாரம் ஸ்காட்லாந்து நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்க ஸ்காட்லாந்து நாட்டு மக்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவித்து அதற்கான திகதியையும் குறித்துக் கொடுத்தார்.

Scotland1ஸ்காட்லாந்து நாட்டின் மாநில அரசான ஸ்காட்லாந்து தேசியக் கட்சி தமது நீண்டகால அபிலாஷையான ஸ்காட்லாந்து நாட்டின் பிரிவினையை நனவாக்கிக் கொள்லும் முயற்சியில் அதற்கான பிரசாரத்தில் இறங்கினார்கள்.

அதேநேரம் ஐக்கிய இராச்சியத்தின் மூன்று முக்கிய அரசியல் கட்சிகளும், இப்பிரிவினை ஐக்கிய இராச்சியத்தின் எஞ்சிய பகுதிகளுக்கோ அன்றி ஸ்காட்லாந்து நாட்டிற்கோ பயன் தரப்போவதில்ல்லை எனும் நிலைப்பாட்டில் இப்பிரிவினையை எதிர்த்தார்கள்.

அவர்களின் சார்பில் பிரச்சாரத்தை முன்னை நாள் லேபர் அரசாங்கத்தின் நிதியமைச்சராக இருந்தவரும், ஸ்காட்லாந்தை பிறப்பிடமாகக் கொண்டவருமான அலிஸ்டர் டார்லிங் முன்னெடுத்தார்.

அவருக்கு உதவியாக முன்னைய லேபர் அரசாங்கப் பிரதமராகவிருந்த கோர்டன் பிரவுன் அவர்கள் செயற்பட்டார்.

கடந்த இருவாரங்களுக்கு முன்னால் மட்டும் இப்பிரிவினை வாதத்திற்கு எதிராகவே ஸ்காட்லாந்து மக்களின் பொது வாக்கெடுப்பின் முடிவுகள் இருக்கும் என்றே பொதுவான கருத்துக் கணிப்பாக இருந்தது.

ஆனால் இவ்வாக்கெடுப்பின் திகதி நெருங்க நெருங்க பிரசாரம் தீவிரமடைந்தது. இரண்டு பிரிவினர்களின் தலைவர்களுக்கு மத்தியில் தொலைக்காட்சியில் பகிரங்க விவாதங்கள் நடைபெற்றன.

இவற்றின் விளைவாக மக்கள் மத்தியில் இவ்வாக்கெடுப்பின் முக்கியத்துவம் துலங்கத் தொடங்கியது.

என்னே ஆச்சரியம் பிரசாரம் தொடங்கிய காலம் முதல் இப்பிரிவினைக்கெதிராகவே மக்கள் தீர்ப்பு இருக்கும் எனும் நிலை மாறி பிரிவினையை ஆதரிப்போர் விகிதாசாரம் முதல்முறையாக உயர்ந்தது.

scotland3தூக்கத்திலிருந்து விழித்தவர்கள் போல பிரதமர் டேவிட் கமரன், துணைப்பிரதமர் நிக் கிளேஹ், எதிர்க்கட்சித் தலைவர் டேவிட் மில்லிபாண்ட் என மூன்று முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களும் ஒன்றாக ஸ்காட்லாந்து நாட்டிற்கு படையெடுத்தார்கள்.

மூலைமுடுக்கெல்லாம் சென்று பிரசாரம் செய்தார்கள். பிரிவினை என்பது இலேசான விடயம் அல்ல அதன் பக்க விளைவுகளும், பின்விளைவுகளும் ஸ்காட்லாந்து நாட்டினருக்கும், எஞ்சிய ஐக்கிய இராச்சியத்திற்கும் பாதகமாகவே அமையும் என்பதைப் பறைசாற்றினார்கள்.

ஐக்கிய இராச்சியத்தின் முன்னனி வியாபார ஸ்தாபனங்களின் நிர்வாகிகள் இப்பிரிவினை இடம்பெற்றால் தமது வியாபார ஸ்தலங்களின் ஸ்காட்லாந்து நடவடிக்கைகளை ஐக்கிய இராச்சியப் பகுதிகளுக்கு மாற்ற வேண்டி வரும் என்றும் மறைமுகமாக அது ஸ்காட்லாந்து மக்களின் வேலைகளைப் பறிக்கும் என்றும் எச்சரித்தார்கள்.

இங்கிலாந்து நாட்டின் அரச வங்கியான பாங்க் ஆப் இங்கிலாந்து நிறுவனத்தின் முகாமையாளர் இப்பிரிவினையால் ஸ்காட்லாந்து நாட்டின் நிதிநிலைமைகள் பாதிக்கப்படும் எனவும் எச்சரித்தார்.

விளைவாக கருத்துக் கணிப்புகள் இப்பிரிவினைக்கு எதிரானவர்களின் வெற்றியை நோக்கித் திசை திரும்பியுள்ளது.

பிரிவினைப் பிரசாரத்தை முன்னெடுக்கும் ஸ்கொட்லாந்தின் முதலமைச்சரோ… சே! இதெல்லாம் வெறும் பூச்சாண்டி! இப்பிரிவினைக்கெதிரானவர்களின் தூண்டுதல்களினால் இத்தகைய பயமுறுத்தல்கள் மக்களின் நோக்கத்தைத் திசைதிருப்ப விடுக்கப்படுகின்றன என்கிறார்.

இம்மடலை நான் வரைந்து கொண்டிருக்கும் இன்றுதான் பிரச்சாரத்திற்குரிய கடைசிநாள். நாளை பொது வாக்கெடுப்பு.

இதிலிருந்து எமக்கு உறுதியாகத் தெரிவது என்னவென்றால் , இவ்வாக்கெடுப்பின் முடிவு எதுவாக இருந்தாலும் ஐக்கிய இராச்சியத்தின் வரலாற்றில் ஒரு புது அத்தியாயம் எழுதப்படத்தான் போகிறது.

எப்படி என்கிறீர்களா ?

scotland2ஸ்காட்லாந்து பிரிவினையை ஆதரித்து அம்மக்கள் வாக்களித்தால் அம்மாற்றம் ஸ்காட்லாந்து மட்டுமல்ல ஏனைய ஐக்கிய இராச்சிய பகுதிகளையும் மிகவும் பாதிக்கும்.

ஐக்கிய இராச்சியத்தின் தேசியக்கொடி மாற்றப்பட வேண்டும்.

இப்பிரிவினைய எதிர்த்து தொடர்ந்தும் ஐக்கிய இராச்சியத்தில் ஸ்காட்லாந்து அங்கம் வகிக்க வேண்டும் என்று அந்நாட்டு மக்கள் தீர்மானித்தால் ஐக்கிய இராச்சியத்தின் மூன்று முக்கிய அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகளின் படி ஸ்காட்லாந்து நாட்டு மாநில அரசுக்கான அதிகாரப்பரவலாக்கல் மேலும் விஸ்தரிக்கப்பட் வேண்டும்.

இதை நடைமுறுத்த வேண்டுமானல் ஏனைய மாநில அரசுகளான “வேல்ஸ்”, “வட அயர்லாந்து” ஆகிய மாநில அரசுகளின் அதிகாரங்களும் இதற்கு இணையாக பரவலாக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் “இங்கிலாந்து” எனும் மாநில அரசு ஒன்றும் உருவாக்கப்பட வேண்டும்.

இவைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமானல் ஐக்கிய இராச்சியத்தின் அரசியல் சாசனம் மாற்றி எழுதப்பட வேண்டும்.

சில வாரங்களுக்கு முன்னால் பிரபல ஊடகவியலாளர் அண்ட்ரூ நீல் அவர்களினால் நடத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் இவ்வாக்கெடுப்பின் முடிவினால் ஏற்படும் பாதிப்புகள் விரிவாக விளக்கப்பட்டது.

ஸ்காட்லாந்து மக்கள் பிரிந்து போனால் போகட்டும் அவர்களை அப்படியே விட்டுவிடுவோம் என்று இதனை மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் ஏனைய ஐக்கிய இராச்சியப் பகுதி மக்கள் அனைவரும் அவதானமாக பார்க்க வேண்டிய மிகவும் முக்கியமான நிகழ்ச்சி இது.

இதன் பாதிப்புகளின் ஆழம் நாமனைவரும் இதனைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாதவாறு அமைந்துள்ளது.

இதைப்பற்றி விரிவாக மற்றொரு மடலில் பார்ப்போம்.

எது எப்படியாயினும் ஐக்கிய இராச்சியத்தின் முன்னூறு ஆண்டுகால அரசியல் வரலாறு, அதன் வடிவமைப்பு மாற்றியமைக்கப்படுவது நிச்சயமாகிறது.

சரி ஸ்காட்லாந்து மக்கள் தமது விதியை நிர்ணயிக்க வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது, அதனால் பாதிக்கப்படப்போவது அவர்கள் மட்டுமல்லவே ஏனைய ஐக்கிய இராச்சிய மக்களுமல்லவா ?

அப்படியாயின் அவர்களின் எண்ணப்பிரதிபலிப்புகளை நிர்ணயிக்க அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் இல்லையா ?

அர்த்தமிகுந்த கேள்வி காலம் விடை பகருமா?

மீண்டும் அடுத்த மடலில்
சக்தி சக்திதாசன்

http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *