— நாகேஸ்வரி அண்ணாமலை.

srk and guriசமீப காலமாக இந்துத்துவ அரசியலைச் சேர்ந்தவர்கள் ஒரு புதிய வார்த்தையைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.  அது Love ‘Jihad’. தமிழில் இதைக் காதல் வழி மதமாற்றம் எனலாம். முஸ்லீம் பையன்கள் இந்துப் பெண்களை  காதல் ஆசைகாட்டிக் கடத்திக்கொண்டு போய்த் திருமணம் செய்துகொண்டு அவர்களை இஸ்லாம் மதத்திற்கு மாற்றிவிடுகிறார்களாம். மதம் மாற்றுவதே இவர்களுடைய காதலின் நோக்கம் என்பது இந்துத்துவப் பிரச்சாரம்.  இதை எதிர்த்து ஆதரவு திரட்ட இதற்கு Love ‘Jihad’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.  ‘காதல் வழிப் புனிதப் போர்’ என்பது இதன் அர்த்தம். இந்தக் குற்றச்சாட்டிற்குப் பதிலளிக்கும் வகையில்  இந்தியாவின் மிகப் பெரிய மசூதியின் தலைவர் இப்படிப்பட்ட மத மாற்றங்களை இஸ்லாம் ஏற்றுக்கொள்ளாது என்றும் அப்படி மதம் மாற்றப்பட்டவர்கள் இஸ்லாமியர்களாகக் கருதப்பட மாட்டார்கள் என்றும் கூறியிருக்கிறார்.

இந்துப் பெண்களை கட்டாயமாகத் திருமணம் செய்துகொண்டு அவர்களை மதம் மாற்றி முஸ்லீம்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறார்கள் என்றே வைத்துக்கொள்வோம்.  இப்படிச் செய்வதன் மூலம் இந்தியாவின் ஜனத்தொகையில் முஸ்லீம்களின் சதவிகிதத்தை எத்தனை சதவிகிதம் கூட்டிவிட முடியும் என்று இந்துத்துவவாதிகள்  நினைக்கிறார்கள்?  பதின்மூன்று சதவிகிதமாக இருக்கும் முஸ்லீம்களை பெரும்பானமையர்களாக ஆக்கிவிடுவார்கள் என்று நினைக்கிறார்களா?  மேலே கூறிய இஸ்லாம் தலைவர் கூறியது போல் இவர்கள் முஸ்லீம்களாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றால் முஸ்லீம்களின் எண்ணிக்கை எந்த விதத்திலும் உயரப் போவதில்லை.  இவர் இப்படிக் கூறிய பிறகாவது இந்துத்துவவாதிகள் பொய்ப் பிரச்சாரத்தை நிறுத்துவார்களா?

அங்கொன்றும் இங்கொன்றுமாக இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் திருமணம் நடந்தால்தான் என்ன?  இப்படிப்பட்ட திருமணங்கள் இந்துத்துவவாதிகள் சொல்வதுபோல் கட்டாயத் திருமணங்களோ ஏமாற்றுத் திருமணங்களோ அல்ல.  சம்பந்தப்பட்ட இருவரும் மனம் ஒன்றுபட்டுச் செய்துகொள்ளும் திருமணம். செய்துகொண்டால் இதில் தவறென்ன?

ஹிட்லர் காலத்தில் ஜெர்மனியில் யூதர்களோடு யாரும் கலப்புத் திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்று ஹிட்லர் ஆணை பிறப்பித்ததாகக் கூறுவார்கள்.  ஹிட்லரைப் பொறுத்தவரை ஆரிய இனம் உயர்ந்த இனம்; யூத இனம் தாழ்ந்த இனம்; இரண்டிற்கும் இடையில் எந்தத் திருமணத் தொடர்பும் கூடாது; குழந்தைகள் பிறக்கக் கூடாது என்று நினைத்தான்.  இன்று எத்தனை பேர் ஹிட்லர் நினைத்தது சரி என்று நினைக்கிறார்கள்?  இந்துத்துவவாதிகள் தாங்கள் செய்வது சரி என்று நினைக்கிறார்களா?

மதக் கலப்புத் திருமணம் சரி இல்லை என்று நினைப்தைப்போல் வேறு வேறு ஜாதிகளைச் சேர்ந்த இருவர் திருமணம் செய்துகொள்வது தவறு என்று நினைப்பவர்கள் இருக்கிறார்கள்.  தேர்தலில் பிஜேபியுடன் கூட்டுச்சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸ் இப்படி நினைப்பவர்.  தலித் ஜாதியைச் சேர்ந்த ஆண் வன்னிய ஜாதியைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்துகொண்டால் அதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று நினைக்கிறார் இந்த அரசியல் தலைவர்.  இவரைப் போன்றவர்கள் இருக்கும்வரை இந்தியச் சமூகம் உருப்படுமா?

யூதர்கள் தாங்கள் எப்போதும் தாங்கள் உயர்ந்த இனம், பிற இனத்தைச் சேர்ந்தவர்களோடு திருமண உறவு வைத்துக்கொள்வது தவறு என்று நினைத்து அதன்படியே நடந்துவந்திருக்கிறார்கள்.  கி.பி. 132-இல் பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறிப் பல இடங்களிலும் வாழ்ந்த இவர்கள் அந்தந்தச் சமூகங்களோடு ஒட்டவில்லை; தனித்தே வாழ்ந்திருக்கிறார்கள்.  இவர்களுடைய இந்தச் செயலே யூத எதிர்ப்பு எழுந்ததற்கு முக்கிய காரணம் எனலாம்.  இப்போது அமெரிக்காவில் குடியேறிய யூதர்களில் ஒரு சிலர் வேறு மதத்தினரை திருமணம்செய்துகொள்கிறார்கள்.  அமெரிக்காவை ஒரு ‘melting pot’ என்பார்கள்.  அங்கு குடியேறியவர்கள் எல்லோரும் நாளடைவில் எல்லா வகையிலும் ஒன்றுசேர்ந்துவிடுவார்கள் என்பதுதான் இதன் அர்த்தம்.  அமெரிக்காவில் குடியேறிய யூதர்கள் மற்ற இனத்தவர்களைத் திருமணம் செய்துகொண்டிருப்பதற்கு அமெரிக்காவின் இந்தத் இயல்பு ஒரு காரணம்.  இதை உணராத அல்லது உணர்ந்தும் ஒப்புக்கொள்ளாத ஒரு அகமெரிக்க யூத மதத்தலைவர் இப்படித் திருமணம் செய்துகொண்டவர்கள் அதல பாதாளத்தில் விழுந்துவிட்டவர்கள் என்று வர்ணித்திருக்கிறார்.  இது எப்படிப்பட்ட மடத்தனம்!

வேகமாக வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தால் நாடுகளுக்கு இடையே உள்ள இடைவெளிகள் தொழில்தொடர்பாலும் மற்ற வழிகளாலும் சுருங்கி வரும்போது பல இன, மத, ஜாதி மக்கள் மட்டும் தனித்தனியே வாழ வேண்டும் என்று நினைப்பதை என்னவென்று சொல்வது?  உலக ஒற்றுமைக்கும் உலக அமைதிக்கும் இவர்கள் இடையூறாக இருக்கிறார்கள் என்று சொன்னால் அதில் தவறேதும் இல்லை.  இவர்கள் மனித இனத்தின் புல்லுருவிகள்.  இவர்கள் களையப்பட வேண்டும்.

 

 

 

படம் உதவி: http://everywoods.blogspot.com/2012/10/shahrukh-khan-and-gauri-khan-celebrate.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *