கம்பனும், வால்மீகியும் – இராமாயண இலக்கிய ஒப்பீடு – 1

 அகலியை சாப விமோசனம், இராமன்-சீதை முதல் சந்திப்பு

ஒரு அரிசோனன்

இராமாயணம் என்றாலே நம் நினைவுக்கு வருவது வால்மீகியும், கம்பனும்தான். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இந்துக்களின் மனதில் படிந்து நிலைத்து நிற்கும் காவியமான வால்மீகியின்  இராமாயணத்தைப் பலரும் பலப்பல மொழிகளில் எழுதியிருந்தாலும், வால்மீகியின் மூலத்திற்கு அடுத்தபடியாக உயர்வாக கருதப்படுவது, கவிப் பேரரசன் கம்பனின் ராமகாதைதான்.  அவனது கவி நயத்தைச் சுவைப்பதற்காவது, தமிழைக் கற்க வேண்டும் என்றால் அது மிகையாகாது (not an exaggeration). இருபத்தினான்காயிரம் இருவரிக் குறட்பாக்களில் வால்மீகி எழுதிய காவியத்தை, பன்னிரண்டாயிரம் நால்வரி விருத்தப்பாக்களில் வடிவமைத்தான் கம்பன் என்றால், கம்பனின் இராமகாதையும் 48000 வரிகைளைக் கொண்டதுதானே? அதிலும் கம்பன் உத்தர காண்டத்தை எழுதவில்லை;  ஓட்டக் கூத்தரின் உத்தர காண்டமே இராமாயணத்துடன் சேர்த்து வைக்கப்படுகிறது.

வால்மீகி முனிவர் இராமாயணத்தை நமக்கு விட்டுச் சென்று சில ஆயிரம் ஆண்டுகள் சென்றுதான் கம்பன் தனது இராமகாதையைத் தீட்டினான். தமிழ்க் கவித்திறன் மிக்க கம்பன், வடமொழியான சம்ஸ்கிருதத்தையும் நன்கு கற்று அறிந்திருக்கத்தான் வேண்டும். இல்லாவிட்டால், வால்மீகியின் கவிப்பெருக்கை சுவை மாறாமல், கருத்து மாறாமல் அளித்திருக்க இயலாது.

ஆயினும், கம்பன் இராமாயணத்தை தமிழுலகுக்குத் தரும்பொழுது, தமிழ் மரபுகளை ஒட்டியே வடிவமைத்தான். எனது ஒப்பீட்டில் வால்மீகியின் வடமொழி மூலத்தையும் (மொழி பெயர்ப்பு அல்ல, வடமொழி மூலம் மட்டுமே), கம்ப இராமாயணத்தையும் மட்டுமே துணை கொண்டிருக்கிறேன்.  எனது வடமொழி அறிவு தமிழ் அறிவு அளவுக்கு ஈடானதல்ல. எனவே, தவறிருந்தால், பிழை பொறுக்குமாறு வடமொழி அறிஞர்களை வேண்டிக் கொள்கிறேன்.

ஆராய்ந்து பார்த்ததில் ஐந்து நிகழ்ச்சிகள் மிகவும் முக்கியமாகக எனக்குப் பட்டன. ஆகவே, கம்பனையும், வால்மீகியையும் ஒப்பிட்டு, என் மனதில் தோன்றியதைத் தமிழ் மக்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எனது ஒப்பீடு காவியங்களின் வேறுபாடு பற்றி மட்டுமே. எதையும் உயர்த்தியோ தாழ்த்தியோ சுட்டிக் காட்டுவதற்காக எழுதப் பட்டதல்ல. என்னுடன், இராமாயணப் பாலையும் தேனையும் கலந்து பருகுமாறு தமிழன்பர்களை அழைக்கிறேன்.

முதலாவதாக, பால காண்டத்தில் அகலியை பாவ விமோசனத்திற்கும், இராமன்-சீதையின் முதல் சந்திப்புக்கும் உங்களை அழைத்துச் செல்கிறேன்…

வால்மீகி சொல்வதற்கும், கம்பனின் வர்ணனைக்கும் வேறுபாடு இங்கு காணப் படுகிறது…

அரக்கி தாடகையைக் கொன்று, முனிவர்களின் வேள்வியைக் காத்தபின், அவர்களின் ஆசியுடன், இராமனையும், இலக்குவனையும், மாமுனிவர் விசுவாமித்திரர் மிதிலைக்கு அழைத்து வருகிறார்.

வால்மீகியின் வழித்தடம் நடந்து செல்வோம்:

 

मिथिल उपवने तत्र आश्रमम् दृश्य राघवः |

पुराणम् निर्जनम् रंयम् पप्रच्छ मुनि पुंगवम् || १-४८-११

மிதில உபவனே தத்ரா ஆஸ்’ரமம் திருஸ்’ய ராகவ: |

புராணம் நிர்ஜனம் ரம்யம் பப்ரச்ச முனி புங்கவம் || 1-48-11

इदम् आश्रम संकाशम् किम् नु इदम् मुनि वर्जितम् |

श्रोतुम् इच्छामि भगवन् कस्य अयम् पूर्व आश्रमः || १-४८-१२

இதம் ஆஸ்’ரமம் சங்காஸ’ம் கிம் நு இதம் முனி வர்ஜிதம் |

ஸ்’ரோதும் இச்சாமி பகவன்னு கஸ்ய அயம் பூர்வ ஆஸ்ரம: || 1-48-12

அங்கே மிதிலைக்கு அருகில் இருக்கும் சோலையில் பழையதாகவும், மனிதர்கள் இல்லாததும், மனத்தைக் கவரும் ஆசிரமத்தை இரகுவின் வழித்தோன்றல் (இராமன்) பார்த்தான்.  (அதைப்பற்றி) முனிவரில் சிறந்தவரை வினவினான்.

“பூசிக்கத்தகுந்தவரே! ஆசிரமத்தை நிகர்த்தத்தும் முனிவரால் விடப்பட்டதுமான இந்த ஒரு  ஆசிரமம் உண்மையில் முன்னால் யாருடையது? செவிமடுக்க விரும்புகிறேன்”

முனிவர் கௌதமரும் அவர் மனைவி பேரழகி அகலியையும் வசித்து வந்த ஆசிரமம் அது என்றார். அகலியையின் அழகில் மயங்கிய விண்ணவர் கோன் இந்திரன், முனிவரைப் போன்று வேடம் பூண்டு அவளுடன் கள்ள உறவு கொள்ள வந்த நிகழ்ச்சியை விவரிக்கத் துவங்கினார்.

मुनि वेषम् सहस्राक्षम् विज्ञाय रघुनंदन |

मतिम् चकार दुर्मेधा देव राज कुतूहलात् || १-४८-१९

முனி வேஷம் சஹஸ்ராக்ஷம் விக்ஞாய ரகுநந்தன |

மதிம சகார துர்மேதா ராஜ குதூஹலாது || 1-48-19

अथ अब्रवीत् सुरश्रेष्ठम् कृतार्थेन अंतरात्मना |

कृतार्था अस्मि सुरश्रेष्ठ गच्छ शीघ्रम् इतः प्रभो || १-४८-२०

आत्मानम् माम् च देवेश सर्वदा रक्ष गौतमात् |

அத அப்ரவீது ஸுரஸ்’ரேஷ்ட்டம் க்ருதார்த்தேன அந்தராத்மணா |

க்ருதார்த்தாஸ்மி ஸுரஸ்’ரேஷ்ட்ட கச்ச ஸீ’க்ரம் இத: ப்ரபோ ||

ஆத்மானம் மாம் ச தேவேஸ’ ஸர்வதா ரக்ஷ கௌதமாது |  1-48-20

ரகுவின் வழிதொன்றலே (இராமா)! தபஸ்வியின் உருக்கொண்டு வந்த ஆயிரம் கண்ணனை (இந்திரனை) அறிந்துகொண்டு, தீய அறிவினால் வானவர் அரசனின் மகிழ்வுக்காக (உறவு கொள்ள) மனதில் முடிவெடுத்தாள்

பிறகு, (அச்)செயலின் (உடலுறவின்) பயனினால் மனநிறைவு அடைந்தவளாக, தேவர்களில் சிறந்தவனிடம் (இந்திரனிடம்) சொன்னாள்.  “வானவரில் சிறந்தவரே!  (இச்)செயலின் பயனை அடைந்தேன்.  பிரபோ!  நீர் விரைவில் இங்கிடமிருந்து செல்லும்.  விண்ணவர் கடவுளே, தம்மையும், என்னையும், எப்பொழுதும் கௌதமரிடமிருந்து காப்பீராக!”

அதைக்கேட்டு அஞ்சிக் குடிலை விட்டு வெளிவந்த இந்திரனை, முனிவர் கௌதமர் பார்த்து விட்டார். குடிலில் நடந்ததையும் ஞானக் கண்ணினால் அறிந்து கொண்டார். தாங்க இயலாத சினம் கொண்டு, ஆண்மையை இழந்து தவிக்குமாறு இந்திரனுக்குச் சாபமிட்டார்.

तथा शप्त्वा च वै शक्रम् भार्याम् अपि च शप्तवान् |

इह वर्ष सहस्राणि बहूनि निवषिस्यसि || १-४८-२९

ததா ஸ’ப்த்வா ச வை ஸ’க்ரம் பார்யாமபி ச ஸ’ப்தவான் |

இஹ வர்ஷ ஸஹஸ்ராணி பஹூனி நிவஷிஸ்யஸி ||

वायु भक्षा निराहारा तप्यन्ती भस्म शायिनी | 1-48-29

अदृश्या सर्व भूतानाम् आश्रमे अस्मिन् वषिस्यसि || १-४८-३०

வாயு பக்ஷா நிராஹாரா தப்யந்தீ பஸ்ம ஸா’யினீ |

அத்ருஸ்’யா ஸர்வ பூதானாம் ஆஸ்ரமே அஸ்மின்னு வஷிஸ்யஸி || 1-48-30

இந்திரனைச் சபித்த பின்னரும், (சினம் தணியாமல் தன்) மனைவியையும் சபித்தார்.  “பல்லாயிரம் ஆண்டுகள் இங்கு குடியிருப்பாய். உணவின்றி, காற்றையே குடித்து, சாம்பலில் படுப்பவளாகத் துடிதுடிப்பாக. எல்லா உயிரினங்களாலும் காண இயலாதவளாக இந்த ஆசிரமத்தில் வசிப்பாயாக.

यदा तु एतत् वनम् घोरम् रामो दशरथ आत्मजः |

आगमिष्यति दुर्धर्षः तदा पूता भविष्यसि || १-४८-३१

யதா து ஏதத் வனம் கோரம் ராமோ தஸ’ராத்மஜ: |

ஆகமிஷ்யதி துர்தர்ஷ: ததா பூதா பவிஷ்யஸி || 1-48-31

எப்போது இப்படிப்பட்ட கோரமான சோலைக்கு தசரதனின் புதல்வனும், வெல்ல முடியாதவனுமான இராமன் வருகிறானோ, அப்பொழுது தூய்மையை அடையப் பெறுவாய்..

तस्य आतिथ्येन दुर्वृत्ते लोभ मोह विवर्जिता |

मत् सकाशे मुदा युक्ता स्वम् वपुः धारयिष्यसि || १-४८-३२

தஸ்ய ஆதித்யேன துர்வ்ருத்தே லோப மோஹ விவர்ஜிதா |

மத் ஸகாசே முதா யுக்தா ஸ்வம் வபு: தாரயிஷ்யஸி || 1-48-32

“தீய நடத்தையாளே (நடத்தை கெட்டவளே)! அவனை விருந்தோம்புவதினால் பேராசையிலிருந்தும், மயக்கத்திலிருந்தும் விடுவிக்கப் படுவாய். என் அருகாமையில் மகிழ்ச்சியைப் பெற்று, உனது வடிவத்தை அணிந்திருப்பவள் ஆகிறாய் (பெறுகிறாய்).”

இவ்வாறு, அகலியையின் கதையைச் சொல்லி, முனிவர் கௌதமரின் குடிலில் நுழைந்து, அவளது சாபத்தை நீக்கும்படி இராமனிடம் விசுவாமித்திரர் சொன்னார். அதை ஏற்றுக்கொண்டு, முனிவரின் பின்னால், இராமனும், இலக்குவனும், குடிசைக்குள் நுழைந்தனர். உடனே, சாபம் நீங்கப் பெற்று, அகலியை இராமனின் கண்களுக்குப் புலப்பட்டாள். இருவரும், அவள் தாள் பணிந்து வணங்கினர். கௌதமரின் சொற்களை நினைவில் நிறுத்தி, இருவரின் கால்களைக் கழுவி, கைகளைக் கழுவ நீர் வழங்கி முறைப்படி உபசரித்தாள் திரும்பி வந்த கௌதமரும், அவளை ஏற்றுக்கொண்டார் என்று முடிக்கிறார், மாமுனி வால்மீகி.

இனி, இந்நிகழ்ச்சியைக் கம்பரின் கண்களால் காண்போம்:

 

இணைய நாட்டினில் இனிதுசென்று இஞ்சி சூழ் மிதிலை

புனையும் நீள்கொடிப் புரிசையின் புறத்து வந்து இறுத்தார்

மனையின் மாட்சியை அழித்து இழி மாதவன் பன்னி

கனியும் மெட்டு உயர் கருங்கல் ஓர் வெள்ளிடை கண்டார்.  – பால காண்டம் — 1.470

இத்தகைய நாட்டிற்கு இனிமையாகச் சென்று, நீண்ட கொடிகளை (மாலையாகப்) சூடிக்கொண்டு இருக்கும் மதில்கள் சூழும் மிதிலை நகரத்தின் புற மதிலின் அருகாமையை அடைந்தனர். இல்லற வாழ்வின் சிறப்பை (கற்பை) அழித்ததால் இழிந்து, மாபெரும் தவசியின் (கௌதமரின்) சாபத்தால் வெற்றிடத்து மேட்டில் ஒரு கருங்கல்லைக் கண்டனர்.

கண்ட கல்மிசைக் காகுத்தன் கழல் துகள் கதுவ

உண்ட பேதைமை மயக்கு அற வேறுபட்டு உருவம்

கொண்டு மெய் உணர்பவன் கழல் கூடியது ஒப்ப

பண்டை வண்ணமாய் நின்றனள் மாமுனி பணிப்பான்.  – 1.471

 (மனத்தில்) உள்வாங்கிய அறியாமை என்னும் மயக்கம் நீங்கியதும் மெய்ஞானத்தை உணர்ந்து வேறு (ஞான) உருவம் அடைந்து (இறைவனின்) திருவடிகளில் சேர்வது போல, (அவர்கள்) பார்த்த கல்லின் மீது காகுத்தர் வழிவந்தவனின் (இராமனின்) கால் தூசி பட்டவுடன் (அகலியை) முந்தைய (அழகு) வடிவத்தில் நின்றாள். பெரும் முனிவரும் (விசுவாமித்திரரும்) (அப்பெண் முனிவர் கௌதமரின் மனைவி அகலியை என்று) கூறினார்…

…முன்னை ஊழ் வினையினாலோ நடு ஒன்று முடிந்ததுண்டோ

அன்னையே அனையாட்கு இங்கன் அடுத்தவாறு அருளுக என்றான். – 1.473

“முன்னாளின் (முன்பிறப்பின்) தீய செயலினாலா, (இப்பிறப்பில்) நடுவில் ஒன்று (செய்து) முடிந்ததால் உண்டாகியதா? தாய்க்கு நிகரானவளுக்கு இவ்வாறு (நிகழ்ந்ததை) அடுத்துக் கூறி அருளுங்கள்” என்று (இராமன்) கேட்டான்.

“வானவர்களுக்கு அதிபனான இந்திரன், அகலியையின் அழகில் மயங்கி, அவளை அடைய வேண்டும் என்ற தீய எண்ணம் கொண்டான். அதற்குத் தகுந்த தருணத்தை நோக்கிக் காத்திருந்த அவன், ஒரு நாள் கௌதம முனிவரை அகலச் செய்தான்.” என்று சொன்ன விசுவாமித்திரர், மேலும் தொடர்ந்தார்…

பொய்இலா உள்ளத்தான் தன் உருவமே கொண்டு புக்கான்.  – 1.475

புக்கு அவளோடும் காமப் புது மண மதுவின் தேறல்

ஒக்க உண்டு இருத்தலோடும் உணர்ந்தனள் உணர்ந்தபின்னும்

தக்கதென்று என்ன ஒராள் தாழ்ந்தனள் இருப்ப தாழா

முக்கணான் அனைய ஆற்றல் முனிவனும் முடுக்கி வந்தான்.  – 1.476

மனத்தில் பொய்மையே இல்லாதவரின் (கௌதமரின்) உருவத்தை மேற்கொண்டு (குடிலில்) நுழைந்தான்.  புகுந்து, காமம் என்ற புது மதுவின் மணத்தை உடைய கள்ளை அவளுடன் உண்டு (மயங்கி) இருந்தபோது, (தன்னுடன் இருப்பவன் இந்திரன் என்று அகலியை) உணர்ந்தாள். உணர்ந்த பின்னும் (அது கற்புக்கு) தகுந்தது அல்ல என்று (அதைத்) மறுக்காமல் தாழ்ந்த (நிலைக்கு) வந்தாள்.  (அப்படி) இருக்கும் போது தாழ்ந்ததைச் செய்யாத, முக்கண்ணனுக்கு இணையான ஆற்றல் கொண்ட முனிவர் (கௌதமர்) விரைவாக வந்தார்.

…இந்திரன் ஒரு பூனையின் வடிவில் தப்பிச் செல்ல முயன்றான். அதை அறிந்த கௌதமர் இந்திரனுக்கு சாபம் கொடுத்தார்…

ஆயிரம் மாதர்க்குள்ள அறிகுறி உனக்குண்டாக என்று

ஏயினான் அவைஎலாம் வந்து இயைந்தன இமைப்பின் முன்னம். —  1.478

மெல்லியலாளை நோக்கி விலைமகள் அனைய நீயும்

கல்இயல் ஆதிஎன்றான் கருங்கல் ஆய்மருங்கு வீழ்வாள்.  —  1.479

பிழைத்தது பொறுத்தல் என்றும் பெரியவர் கடனே அன்பால்

அழல் தருங் கடவுள் அன்னாய் முடிவு இதற்கருளுக என்ன

தழைத்து வண்டு இமிரும் தண் தார்த் தசரதராமன் என்பான்

கழல் துகள் கதுவஇந்தக்கல் உருத் தவிர்தி என்றான்.  – 1.480

அண்ணலே உன் கை வண்ணம் அங்கு கண்டேன் கால் வண்ணம் இங்கு கண்டேன்.  – 1.481

…பெண்களின் அடையாளம் (பெண்குறி) ஆயிரம் உன்னிடம் உண்டாகட்டும் என்று சபித்தார். கண் இமைக்கும் நேரத்திற்குள் அவை (இந்திரன் உடம்பில்) வந்து சேர்ந்தன.

பெண்ணைப் (அகலியையை) பார்த்து, “வேசியைப் போன்று நடந்த நீயும் கல் ஆகக் கடவாய்!” என்றார்.  (அவளும்) கருங்கல் ஆகித் தடுமாறி விழப் போனாள். 

“(மற்றவர் செய்யும்) தவறுகளைப் அன்புகொண்டு பொறுத்துக்கொள்ளுதல் சான்றோர்களின் கடமை ஆகும்.  நெருப்பைக் கக்கும் (கண்ணுள்ள) கடவுளைப் போன்றவரே, இதற்கு (இந்தச் சாபத்திற்கு) ஒரு முடிவை எனக்கு அருளுக” என்கவே (என்று அகலியை கேட்கவே), “(நன்கு தேனைப் பருகி) செழித்த வண்டுகள் (ரீங்கார) ஒலி எழுப்பக்கூடிய குளிர்ந்த மலர் மாலை அணிந்த தசரத(னின் மகன்) இராமன் என்பவன் கால் தூசு பட்டு இந்தக் கல் உருவத்தை தவிர்ப்பாய்!” என்றார் (கௌதமர்)…

(இப்படி அகலியையின் கதையைச் சொல்லி முடித்த விசுவாமித்திரர்), “என் அன்புக்கு உரியவனே, (அரக்கி தாடகையைக் கொன்ற) உன் கைத்திறனை அங்கு (வேள்வி நடந்த இடத்தில்) கண்டேன்.  உன் காலின் (கருணைத்) திறத்தை (அகலியை சாபவிமோசனம் மூலம்) இங்கு கண்டேன்” (என்று வியந்தார்.)

ஒப்பீடு

அகலியையின் கதையை இருவருமே கிட்டத்தட்ட ஒரே மாதிரித்தான் சொல்லி இருக்கிறார்கள்.  இருப்பினும் சொன்ன முறையிலும், உட்பொருள்களிலும் வேறுபாடுகள் உள்ளன.  அகலியை தன் கணவன் உருவில் வந்து தன்னைச் சேர்ந்தவன் தன் கணவன் அல்ல என்று தெரிந்தும், அதற்கு உடன்படுவது தவறு, கற்புடைமை ஆகாது என்று அறிந்தும் அத்தவறைச் செய்தாள் என்றுதான் இருவருமே எழுதி இருக்கிறார்கள்.

அவள் ஏன் அப்படிச் செய்யத் துணிந்தாள் என்பதற்கு கம்பர் விளக்கம் தரவில்லை.

ஆனால் வால்மீகியோ दुर्मेधा என்ற ஒரு சொல்லினாலும், கள்ள உறவிற்குப் பிறகு தான் அதனால் மன நிறைவு அடைந்ததை அகலியை இந்திரனிடமே சொல்லி, அதைத் தன் கணவரிடமிருந்து மறைத்து, இருவரையும் எப்போதும் காக்குமாறு வேண்டிக்கொள்வதைக் குறிப்பிடுவதின் மூலம் அகலியையின் மன நிலையை விளக்குகிறார்.

அகலியைக்கு தீய நினைவுகள், கெட்ட எண்ணங்கள் (दुर्मेधा – vanity) இருந்தன. அவை தன் அழகு குறித்த செருக்கால் அவளிடம் தோன்றின. தனது அழகை வானவர்கோன் இந்திரனே விரும்புகிறானே, அந்த அழகினால் கவரப்பட்டு, தன்னை அடைவதற்காகக் கடும் தவத்தின் வல்லமையால் அவனையே சுட்டெரிக்கும் சாபம் கொடுக்க வல்ல கௌதம முனிவரின் கோபத்தையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறானே என்ற மனக் களிப்பும் இருந்தது.  அதுதான் அவளுக்கு அந்தக் கள்ள உறவு உள்மனதில் நிறைவைத் தந்தது என்று இந்திரனிடம் கூறுவதாகக் குறிப்பிட்டிருக்கிறார் என்று படுகிறது.

அதைச் சொல்ல விருப்பம் இல்லாத காரணத்தால், கம்பர் அது பற்றி மௌனம் சாதிக்கிறார் என்றும் தோன்றுகிறது. ஆயினும் கம்பர் தனது உள்ளத்தில் அகலியைபால் எழுந்த குமுறலை, கௌதம முனிவர் வாய் மூலமாக “விலைமகள் அனைய” என்று பழிக்கச் செய்து, அவளை அடித் தளத்திற்கே தள்ளி விடுகிறார்.

கற்பிற்கு அவர் கொடுத்த தலை சிறந்த மதிப்பு அவரை அவ்வாறு எழுதத் தூண்டியது போலும்!  ஆகவே, உயிரை விடக் கற்பைச் சிறப்பாக எண்ணாத கல் நெஞ்சக்காரி அகலியை என்று எண்ணி, கல்லாகச் சமைந்து போகுமாறு சாபம் பெற்றதாகக் காட்டுகிறார்.

வால்மீகியோ, அகலியையின் அழகு வெளியார்க்குப் புலப்பட்டதுதானே இத் தவறுக்கு மூல காரணமாயிற்று என்று, அவள் யார் கண்ணுக்கும் புலப்படாமல் போகட்டும் என்று சபிக்கப்பட்டதாகப் புனைந்திருக்கிறார்.

இருந்த பொதிலும், அகலியையின் கதையை அறிந்த பின்னும் அகலியையைத் தாயாகவே இராமபிரான் நோக்கினார் என்று இருவருமே எழுதியிருப்பது, இராமன் பெண்களுக்குக் காட்டும் மதிப்பை உணர்த்துவதாவே அமைந்து இருக்கிறது.

இதனாலேயே, அகலியைக்கு சாபவிமோசனம் எப்படி நிகழ்ந்தது என்பதைச் சொல்வதில் இருவரும் மாறுபடுகிறார்கள்.

கண்ணுக்குப் புலப்படாத நிலையில் அகலியை இருப்பதால், ஆசிரமத்தின் நிலை கண்டு, இராமன் வினவ, அகலியையைப் பற்றி விசுவாமித்திரர் விளக்குவதாக வால்மீகி வரைந்திருக்கிறார்.

கம்ப நாட்டாரோ, கருங்கல்லாக இருந்த அகலியை, இராமனின் கால் தூசி பட்டுத் தன்னுருவத்தை அடைந்ததும், அந்த விந்தையான நிகழ்வைப் பற்றி விசுவாமித்திரர் தெளிவு படுத்துவதாக எழுதி இருக்கிறார்.  இதுதான் மாற்றத்தின் காரணம் என்று எனக்குப் படுகிறது.

இந்திரனுக்குக் கொடுக்கப்பட்ட சாபத்திலும் இருவரும் மாறு படுகிறார்கள்.

இந்திரனின் ஆண்மையே அவனைத் தவறான வழியில் நடத்திச் சென்றது என்று கருதிய வால்மீகி அவன்  ஆண்மை அழியட்டும் என்ற சாபத்தைப் பெற்றதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

கம்பரோ, பிறன்மனை புகுந்தவனுக்கு மிகக் கொடிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று எண்ணுகிறார். எனவே, உடல் முழுதும் பெண் குறிகள் பரவி நிலைத்திருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டான் என்று பாடியிருக்கிறார்.  மேன்மையான நிலையில் இருக்கும் ஒருவன், செய்த தவற்றின் விளைவு அனைவர் கண்ணுக்கும் தெரியும் தண்டனையைப் பெறவைக்க வேண்டும், எதற்காக அத்தண்டனை கிடைத்தது என்பதும் தெள்ளத் தெளிவாகப் புலப்பட வேண்டும், அனைவரும் அவனைத் தூற்றவேண்டும், அவன் மனம் புழுங்கித் தன் தவற்றை உணர்ந்து திருந்த வேண்டும் என்றே, அத்தண்டனை கொடுக்கப் பட்டதாக நம்மை நினைக்க வைக்கிறார் என்பது நமக்கு விளங்குகிறது.

இதனால், பிறன் மனை நோக்குவார்பால் தமிழருக்கு இருக்கும் வெறுப்பும் புலப்படுத்தப் படுகிறது.

வால்மீகி சொல்லிச் சென்றதையே கம்பரும் வடித்திருந்தாலும், அவர் தமிழ் மரபை எவ்வாறு இந்நிகழ்ச்சியில் இழைத்து இருக்கிறார் என்று புலனாகிறது.

இராமன்-சீதை முதல் சந்திப்பு

சிவனாரின் வில்லை முறித்தபின்தான் இராமனும் சீதையும் மிதிலையில் சந்தித்தார்கள் என்று வால்மீகி முனிவர் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், கவிச் சக்கரவர்த்தி கம்பரோ மிதிலையில், கன்னி மாடத்தில் நின்ற சீதையை முதல் முதலாக இராமன் பார்த்து இருவரும் ஒருவருக்கு மற்றொருவர் தத்தம் உள்ளங்களைப் பறிகொடுத்ததாகப் புனைந்துள்ளார்.

ஆகவே, இந்த விஷயத்தில் ஒப்பீடு எதுவும் செய்ய இயலாது. இருப்பினும், வால்மீகி ஏன் அப்படி எழுதினார் என்பதற்குத் தகுந்த சான்றுகள் இருப்பதால், அதையே ஒப்பீடாகப் பிறகு எழுதுகிறேன்.

விசுவாமித்திர முனிவர், இராமன், இலக்குவனுடன் நாமும் சீதையைச் சந்திக்கச் செல்வோம்.

பால காண்டத்தில், பத்தாம் படலமான மிதிலைக் காட்சிப் படலத்தின் துவக்கத்தில் கம்ப நாட்டார் இருபது வெண்பாக்களில் மிதிலையின் அழகைத் தீட்டியிருக்கிறார்.

அப்படிப்பட்ட அழகோவியம் வால்மீகி இராமயணத்தில் காணப்படவில்லை.

இராமன் மிதிலைக்குள் நுழையும் பொது அடித்த காற்றில் சுற்றியும் படர்ந்திருந்த கொடிகள் அசைந்தாடின.  படலத்தின் முதல் வெண்பாவில் அதை கம்பர் வர்ணிக்கும் பங்குதான் என்னே!

கம்பரசத்தைப் பருகுவோம்!

மை அருமலரின் நீங்கியான்செய் மாதவத்தின் வந்து

செய்யவள் இருந்தாள் என்று செழு மணிக் கொடிகள் என்னும்

கைகளை நீட்டி அந்தக் கடி நகர் கமலச் செங்கண்

ஐயனை ஒல்லை வாஎன்று அழைப்பதுபோன்றது அம்மா.  – 1.486

“நான் பெரிய தவத்தினைச் செய்யவே, குற்றமற்ற (தாமரை) மலரைத் துறந்துவிட்டு, அவள் (சீதை இங்கு) வந்து இருந்தாள்!” என்று நன்கு வளர்த்திருந்த அழகிய கொடிகளால் ஆன (தனது) கைகளை நீட்டி (ஆட்டி), செந்தாமரைக்கண்ணனை விரைந்து வா என்று மிதிலை நகரமே அழைப்பது போல இருந்ததம்மா.

இந்தச் செய்யுளின் வாயிலாக சீதையைச் செந்தாமரையில் அமர்ந்திருக்கும் இலக்குமி என்றும், இராமனைச் செந்தாமரைக்கண்ணனான திருமால் என்றும் குறிப்பிட்டிருக்கிறார் கம்பர்.

அது மட்டுமல்லாது, மிதிலை நகரமே மாபெரும் தவத்தைச் செய்து இலக்குமியின் அவதாரமான சீதையை அடைந்தது, தனது கைகளான மலர்க்கொடிகளை நீட்டி, திருமாலின் அவதாரமான் இராமனை அழைத்தது என்று புனைந்திருக்கிறார்.

ஒருகணம் கண்களை மூடிக்கொண்டு, கம்பரின் வர்ணிப்பை நமது மனக்கண் முன்பு நிறுத்திப் பார்த்தோமானால், அவரது ஆழ்ந்த புலமை நமக்குப் புலனாகும்.

…அழகு மிகுந்த மிதிலை மாநகரைக் கண்ணுற்றுக்கொண்டே வந்தவர்கள், கன்னிமாடத்தில் சீதையைக் காண்கின்றார். சீதையை முதன்முதலாக கம்பர் உருவகித்து இருப்பது நமது மனதைத் தொடுகிறது…

உமையாள் ஒக்கும் மங்கையர் உச்சிக் கரம் வைக்கும்

கமையாள் மேனி கண்டவர் காட்சிக் கரை காணார்

இமையா நாட்டம் பெற்றிலம் என்றாரிரு கண்ணால்

அமையாது என்றார் அந்தர வானத்தவர் எல்லாம்.  – 1.509

மங்கையரால் தலைக்கு மேலே கைகூப்பி வணங்கத்தக்க உமையவளைப் போன்ற நற்குணம் கொண்டவளின் உருவத்தைக் கண்டவர், அந்த அழகின் எல்லையைக் கானா இயலாது போனார்கள். (வானவர்கள் போல கண்களை) இமைக்காமல் நோக்கும் திறன் இல்லது போனோமே என்று (வருந்தினர்).  விண்ணில் (குடியிருக்கும்) தேவர்கள் அனைவரும் (சீதையின் அழகைக் காண) இரு கண்கள் போதாது என்று (பதிலிருத்தனர்).

இங்கு கம்பன் சீதையின் அழகை வர்ணிக்க முயன்று, அதைச் செய்யும் வகை அறியாது — அரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை என்ற அழகு மிக்க வானுலகு மாதரைக் கண்ட விண்ணவரே தங்களால்கூட சீதையின் வனப்பைக் காண இரு கண்கள் போதாது என்று சொல்வதாகச் சொல்லித் தனது இயலாமையை முன்வைக்கிறார்.

இருந்தபோதிலும் சீதையின் இயல்பு, அழகு பற்றிப் புகழ்ந்து பத்து செய்யுள்களின் தெரிவிக்கிறார்.

‘கண்டதும் காதல்’ (love at first sight) என்ற இலக்கணத்தை உருவாக்கியவர்களாக இராமனும் சீதையும் ஒருவரைக் கண்டு ஒருவர் விரும்பியதையும், இராமன் சென்றதும், காதல் நோய் கொண்டு சீதை தவித்ததையும், இராமன் சீதை நினைவால் என்கியதையும் 56 பாக்களில் விளக்கி உள்ளார் கவிச் சக்கரவர்த்தி கம்பர். அப்பாக்களில், இராமனும் சீதையும், ‘கண்டதும் காதல் கொண்ட’ பாக்கள் இரண்டை மட்டும் காண்போம்:

எண்ண அரு நலத்தினாள் இனையள் நின்றுழி

கண்ணொடு கண் இணை கவ்வு ஒன்றை ஒன்று

உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட

அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்.  – 1.519

பருகிய நோக்கு எனும் பாசத்தால் பிணித்து

ஒருவரை ஒருவர் தம் உள்ளம் ஈர்த்தலால்

வரி சிலை அண்ணலும் வாட்கண் நங்கையும்

இருவரும் மாறிப் புக்கு இதயம் எய்தினர்.  —  1.521

எண்ணிப் பார்க்கக் கூட இயலாத நற்குணங்களைப் (பெற்ற) இத்தன்மையை உடையவள்(சீதை) (கன்னி மாடத்தில்) நின்று கொண்டிருந்த பொழுது, ஒருவர் கண்ணை மற்றவர் கண்கள் கவ்வி விழுங்கவும், (என்ன செய்வது என்று அறியாது) நிலையாக நிற்க முடியாமல், உணர்வுகள் (ஒருவரோடு ஒருவர்) பின்னிக் கொள்ள, மேன்மை மிகுந்த (இராமனும்) நோக்கினான், அவளும் (சீதையும் இராமனைத் திரும்ப) நோக்கினாள்.

ஒருவரை ஒருவர் கண்களால் பருகியதால் ஏற்பட்ட காதலால், ஒருவரின் உள்ளத்தை மற்றொருவரின் உள்ளம் தன்னிடத்தில் இழுத்துக் கொண்டதால், சிறந்த வில்லை ஏந்திய மாந்தரில் சிறந்தவரும் (இராமனும்), வாள் போன்ற (பார்வையாலே வெல்லக்கூடிய) கண்ணுடைய நங்கையும் (சீதையும்), ஒருவர் இதயத்தில் மற்றவர் குடியேறினர்.

எப்படிப்பட்ட வர்ணனை!  ஒருவரை ஒருவர் விழிகளால் கவ்வி விழுங்கிக் கொள்கிறார்களாம்!  அதனால் நிலை தடுமாறுகிறார்களாம், உள்ளத்தைப் பறிகொடுத்து, ஒருவர் இதயத்தில் மற்றொருவர் இடம் பிடித்துக் கொள்கிறார்களாம்.  தூய காதலுக்கு இதைவிட விளக்கம் வேண்டுமா என்ன?

ஒப்பீடு

முதலில் வால்மீகி முனிவர் இந்த நிகழ்ச்சியை ஏன் எழுதவில்லை என்பதற்குக் காரணம் ஆரண்ய காண்டத்தில் இருக்கும் இரண்டு சுலோகங்களில் (3.87.4, 3.87.10) கிடைக்கிறது.

இராவணன் அந்தண வேடமிட்டு, சீதைக் கவர வருகிறான்.  அவனை ஒரு முனிவர் என்று நினைத்த சீதை, வரவேற்று, அவன் அமர தர்ப்பைப் புற்களால் நெய்யப்பட்ட இருக்கையை அளிக்கிறாள்.  தன்னைப் பற்றிச் சொல்லும் பொது,

उषित्वा द्वादश समाः इक्ष्वाकूणाम् निवेशने |

भुंजाना मानुषान् भोगान् सर्व काम समृद्धिनी || ३-४७-४

உஷித்வா த்வாதஸ’ ஸமா: இக்ஷ்வாகூணாம் நிவேஸ’னே |

புஞ்ஜானா மானுஷானு போகானு ஸர்வ காம ஸம்ருத்திநீ || 3-47-8

இக்ஷ்வாகுகளின் இல்லத்தில் பன்னிரண்டு ஆண்டுகள் வசித்து, மனிதர்களின் அனைத்து இன்பங்களையும் நன்றாக அடையப்பட்டவள் ஆனேன். (என்னுடைய எல்லா விருப்பங்களும் நிறைவேற்றப்பட்டன.)

(பிறகு கைகேயின் தூண்டுதலால் பதினான்கு ஆண்டுகள் கானகம் வர நேர்ந்தது என்று தெரிவித்த சீதை, புறப்படும் சமயத்தில் தங்கள் வயது என்ன என்று அறிவிக்கிறாள்.)

मम भर्ता महातेजा वयसा पंच विंशकः || ४७१०
अष्टा दश हि वर्षाणि मम जन्मनि गण्यते |

மம பர்த்தா மஹாதேஜா வயஸா பஞ்ச விம்ஸ’க: |

அஷ்டா தஸ’ ஹி வர்ஷாணி மாமா ஜன்மனி கன்யதே || 3-47-10

பேரொளி கொண்ட என் கணவர் இருபத்தைந்து வயதானவர். என் வயது பதினெட்டு ஆண்டுகளாகவே எண்ணப்பட்டது.

அவள் 12 ஆண்டுகள் அயோத்தியில் இருந்ததற்குப் பிறகு, தனக்கும் தன் கணவருக்கும் என்ன வயது என்று ஐயத்திற்கு இடமின்றி சீதை இராவணனிடம் உரைக்கின்றதாக வால்மீகி எழுதியிருக்கிறார்.

மனக்கணக்குப் போட்டப் பார்த்தால், சீதை இராமனை மணந்த பொது அவளுக்கு ஆறே வயது (18-12=6) என்று விளங்கும்.  இராமனுக்கு பதிமூன்று ஆண்டுகள் நிரம்பி இருந்தன. அந்த வயதில் ஆறு வயதுச் சிறுமியான சீதைக்குக் காதல் என்ற உணர்வு தோன்ற வழி இல்லையே! அதனாலேயே, திருமணத்துக்கு முன் அவர்கள் சந்தித்ததாக வால்மீகி எழுதவில்ல என்று புலனாகிறது.

வால்மீகியின் இராமாயணத்தை நன்கறிந்த மகாகவி கம்பர் ஏன் இப்படி மாற்றி எழுதத் துணிந்தார்?  இதற்கு தமிழ் நாட்டின் களவு, கற்பு இவற்றைப் பற்றி சுருக்கமாகக் கூறித்தான் விளக்க வேண்டும்.

செந்நாப் போதாரான வள்ளுவப் பெருமான் உலகுக்கு ஈந்த தனது திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்று மூன்று பிரிவுகளாக(பால்களாக)ப் பிரித்திருக்கிறார்.  இன்பத்துப் பாலையும் களவியல், கற்பியல் என்று இரண்டாகப் பகுத்திருக்கிறார்.

கற்பைப் பற்றி நாம் அனைவரும் நன்கறிவோம். களவு என்றால் என்ன? திருட்டு என்பதுதானே?  அதுவும் எப்படிப்பட்ட திருட்டு? ஒருவர் உள்ளத்தை மற்றொருவர் திருடிக் கொள்வது. நமது இதயத்தில் மற்றொருவர் குடியேற அனுமதிப்பது. நமது உள்ளம் நம்மிடத்தில் இல்லாதபோது, அது களவாடப் பட்டபின்பு, அதை எப்படி இன்னொருவருக்குக் கொடுக்க இயலும்? இன்னொருவரை நாடி மனம் எப்படிச் செல்லும்? இல்லை, நம்மிடமிருந்து திருடப்பட்ட பொருளை மீண்டும் இன்னொருவருக்கு எப்படித் திருட்டுக் கொடுக்க இயலும்? அப்படி ஒருவர் உள்ளத்தை மற்றொருவரிடம் பறிகொடுத்து, அவர் நினைவாக வாழ்வதுதான் கற்பு. ‘

ஒருத்தனுக்கு ஒருத்தி’ என்ற பழமொழி உருவாகக் காரணமே இராமனும், சீதையும்தான். இராமன், சீதை இருவருமே கற்புக்கு இலக்கணமாகத்தான் வாழ்ந்தார்கள், வடிவமைக்கப்பட்டர்கள், அனைவருக்கும் முன்மாதிரியாக விளங்கினார்கள்.

இதுவே தமிழ்ப் பண்பின் எடுத்துக்காட்டாகக் கம்பராமாயணத்தில் பரிணமித்தது.

எனவே, இராமகாதையைத் தமிழில் வடித்தெடுக்கும் பொது, கற்பிற் சிறந்த சீதையும், ‘பிறன் மனை நோக்காப் பேரறிவாளனும், ஒரு மனைவி உறுதியாளனுமான இராமனும், ஒருவரிடத்தில் மற்றொருவர் உள்ளத்தைப் பறிகொடுத்தால்தான் தமிழ் மரபுப்படி வடிவமைக்க இயலும் என்று களவியலையும் கம்பர் தனது இராமகாதையில் புகுத்தினார்.

முழுமையான களவு நடந்த பின்னர்தான், மாற்றுக் குறையாத கற்பு இருவரிடமும் நிலைக்கும் என்று கம்பர் முடிவு செய்திருக்க வேண்டும். அதுதான் இராமன்-சீதையின் முதற் சந்திப்பையும், கண்டதும் கொண்ட காதலையும் விவரித்து, இருவரின் கற்புக்கும் அடித்தளம் அமைத்திருக்க வேண்டும்.

மேலும், கடவுளர்களின் அவதாரங்களாகக் கம்பரால் எண்ணப்பட்ட இராமனும், சீதையும், மனித உருவில்தான் காதல் என்ற நுட்பமான உணர்வைப் பெற இயலும் என்ற எண்ணமும் அவருக்கு இருந்திருக்கக் கூடும். அதுவும் இன்னொரு காரணமாக இருந்திருக்கலாம் அல்லவா!

மூலத்தை மாற்றினாலும், கவிச்சக்கரவர்த்தி கம்பன் எந்த உயர்வான எண்ணத்துடன் அவ்வாறு செய்தார் என்று நம்மால் பகுத்து அறிந்து கொள்ள முடிகிறது.

அடுத்த ஒப்பீட்டில் இராவணன் சீதையைக் கவர்ந்து சென்றதைப் பற்றி அணுகுவோம்.

                                                                                                                                                ===========================================

படங்களுக்கு நன்றி: http://www.tamilhindu.com/2014/03/kamban-valmiki-literary-comparison/

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “கம்பனும், வால்மீகியும் – இராமாயண இலக்கிய ஒப்பீடு – 1

  1. இருமொழி இலக்கிய அறிவு அருகியுள்ள இந்நாளில் இனிய தென்றலாய் வந்தது உங்கள் படைப்பு. எளிமை, இனிமை, அருமை. தொடர்ந்து எழுதுக.
    கோதண்டராமன்

  2. அருமையான இலக்கிய ஒப்பீடு!  வால்மீகி இராமாயணம் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேனே தவிர அதைப் பற்றி ஒன்றுந் தெரியாது. கம்பராமாயணமும் பள்ளியில் செய்யுட் பகுதியில் படித்ததோடு சரி.  இரண்டு மகா காப்பியங்களையும் பற்றிய ஒப்பீடு என்னைப் போன்றோர்க்கு மிகவும் பயனளிக்கும்.  தொடருங்கள்.  பதிவுக்கு மிக்க நன்றி!  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *