சக்தி சக்திதாசன்.

அன்பினியவர்களே !

cameron confஇனிய வணக்கங்களுடன் அடுத்தொரு மடலில் இணைவதில் மகிழ்கிறேன்.

வசந்தகாலம் வந்த சுவடு தெரியாமல் மறைந்ததும் அடுத்து வந்த கோடைக்காலம் காற்றோடு காற்றாக மறைந்ததும் இதோ கண்முன்னே இலையுதிர் காலம் சதிராடுவதும் பச்சைப் புற்தரையை பொன்னிறக் கம்பளம் கொண்டு மூடியதைப் போல புற்களை உதிர்ந்த பொன்னிற இலைகள் மூடி நிற்பது எமக்கு உணர்த்துக்கிறது.

ஆமாம் இங்கிலாந்திலே இலையுதிர்காலத்தில் எது நடக்கிறதோ இல்லையோ அரசியல் கட்சிகளின் வருடாந்த மாகாநாடு தவறாமல் நடந்தேறி விடும்.

இதுவரை இங்கிலாந்து அரசியல் தளத்தினில் நடக்கும் அரசியல் போராட்டம் மும்முனைத் தாக்குதலாகத்தான் இருந்தது.

ஆமாம் கன்சர்வேடிவ் கட்சி , லேபர் கட்சி, லிபரல் டெமகிரட்ஸ் கட்சி என இவை மூன்றுமே அரசியல் களத்தில் முக்கியமாக மோதிக் கொள்ளும் கட்சிகளாக இருந்தன.

ஆனால் கடந்த தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையை எந்தக் கட்சியும் அடையாததினால் அதிகூடிய இடங்களைக் கைப்பற்றிய கன்சர்வேடிவ் கட்சி ஆட்சி அமைப்பதற்கான அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்வதற்காக லிபரல் டெமகிரட்ஸ் கட்சியுடன் சேர்ந்து கூட்டரசாங்கம் அமைத்ததும் இப்போராட்டக்களத்தில் இரண்டு கட்சிகளின் மோதல்களே பெருமளவில் இடம்பெற்றன.

ஆனால் உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி ஐக்கிய இராச்சியத்தையும் விட்டுவைக்காத காரணத்தினால் பதவிக்கு வந்த கூட்டரசாங்கம் எடுத்த மிகவும் சிக்கலான செலவுக் கட்டுப்பாட்டுத் திட்டங்களினால் மத்தியதர, அடித்தர மக்களின் வாழ்க்கைத் தரம் பாதிக்கப்பட்டது.

இப்பாதிப்போடு ஐரோப்பிய ஒன்றியத்தின் செயற்பாட்டால் பொதுவாக மக்கள் மனதில் ஏற்பட்டுள்ள எதிர்மறையான பாதிப்பினாலும் , ஐரோப்பிய ஒன்றியத்தில் சமீப காலத்தில் இணைந்த கிழக்கு ஐரோப்பிய நாட்டிலுள்ள பலர் ஐக்கிய இராச்சியத்தினுள் இலகுவாக நுழைந்து இந்நாட்டின் உதவித் தொகைகளைப் பெற்றுக் கொள்கிறார்கள் எனும் பொதுக் கருத்தின் பாதிப்பினாலும் இவைகளை எதிர்க்கிறோம் என்று தொடங்கப்பட்ட யூகிப் எனும் அரசியல் கட்சியின் ஆதரவு பலமாகியது.

                                  milliband confFarage confclegg conf

அந்தக் கட்சியின் தலைவரான மைக்கல் ப்ஃராஜ் கன்சர்வேடிவ் கட்சியின் உறுப்பினராகவிருந்தவர்.  தமது கட்சி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் தனதும் தன்னைப் போன்ற மற்றைய உறுப்பினர்களினதும் கொள்கையை முன்னெடுக்கத் தயங்கியதால் அக்கட்சியிலிருந்து வெளியேறி யூகிப் எனும் கட்சியை அரம்பித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தினுள் இருப்பதை விட அதனிலிருந்து வெளியேறுவதே ஐக்கிய இராச்சியத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்பதே இக்கட்சியின் பிரதானக் கொள்கையாகும்.

இக்கட்சியின் ஆதரவு பெருகி இப்போது இக்கட்சி கருத்துக்கணிப்பில் இதுவரை மூன்றாவது பெரிய கட்சியான லிபரல் டெமகிரட்ஸ் கட்சியை விட முன்னனியில் நிற்கிறது.

அதுதவிர சமீபத்தில் இரண்டு கன்சர்வேடிவ் கட்சி பாரளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவியை இராஜினாமாச் செய்து விட்டு யூகிப் கட்சிக்குத் தாவி இடைத்தேர்தலில் அக்கட்சியின் சார்பில் போட்டியிடுடப்போவதாக அறிவித்திருக்கிறார்கள்.

இது ஆளும் கட்சிகளில் முக்கியமான கன்சர்வேடிவ் கட்சிக்கும் அதன் தலைவர் பிரதமர் டேவிட் கமரனுக்கும் தலையிடியைக் கொடுத்துள்ளது…

இந்நிலையில் தான் 2014ம் ஆண்டு அரசியல் மகாநாடுகள் நடந்து முடிந்துள்ளன. முதலில் நடந்த லிபரல் டெமகிரட்ஸ் கட்சியின் மாநாடு சோபிக்கவில்லை. அவர்கள் கொள்கையில் தமக்கு நேர் எதிரான கன்சர்வேடிவ் கட்சியோடு கூட்டரசாங்கத்தில் இணைந்தது அவர்களுக்கு செல்வாக்குச் சரிவையே ஏற்படுத்தியுள்ளது.

அடுத்து நடந்து முடிந்த யூகிப் கட்சியின் மநாடு அனைவருக்கும் ஒரு புதிய அனுபவமாகவே இருந்தது. அரசியலில் புது அதிர்வலையை ஏற்படுத்தியவர்களின் மற்றைய கொள்கைகள் ஏதுவாயிருக்கும் எனும் எதிர்பார்ப்பே அதற்குக் காரணம். ஆயினும் இதுவரை பராளுமன்றக் கதிரையையேக் கண்டிராத இக்கட்சியினர் பதவியிலமர்ந்ததும் அவர்களது நடவடிக்கை எப்படியிருக்கும் என்பதுவே அனைவரினதும் கேள்விக்குறி.

எதிர்க்கட்சி ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் லேபர் கட்சியினரின் மாநாடு அவர்களின் அரசியல் அந்தஸ்திற்கேற்ப எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. குறிப்பேடுகள் எதுவுமின்றி 80 நிமிடங்கள் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் டேவிட் மில்லிபாண்ட், தான் குறிப்பில்லாமல் பேசுகிறேன் என்பதில் கவனமாக இருந்து முக்கியமான கொள்கைகள் இரண்டைப் பற்றிப் பேச மறந்து விட்டார்.

அட இவரா? பிரதமர் பதவிக்கு போட்டியிடப் போகிறார் போச்சுடா ! எனும் வகையில் பல ஊடகங்கள் இப்பவே அவரது தோல்வியைக் கங்கணம் கட்டிக் கொண்டு விட்டன.

கடைசியாக நேற்று நடந்து முடிந்த பதவியிலிருக்கும் கட்சியின் மாநாடு கொஞ்சம் விவாதங்களைக் கிளப்பி விட்டிருக்கின்றன. நாட்டின் உண்மையான நிதி நிலைமையையயும் அதைச் சீர் செய்ய எடுக்க வேண்டிய நடவடிக்கைகளையும் அப்படியே மக்களுக்குப் புட்டு  புட்டு வைக்கிறேன் என்று மத்தியதரக் குடும்பத்தினர் பலரை கவலை கொள்ள வைத்த நிதியமைச்சர் ஒருபுறம், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்க வேண்டுமா? வேண்டாமா? எனும் பொதுக்மக்களின் சர்வஜன வாக்கெடுப்பை 2017ல் நடத்துவோம் என்று மக்களுக்குக் குரல் அளிக்கும் அதிகாரத்தை எமது கட்சியை விட வேறெந்தக் கட்சியும் நடத்துவதாக உறுதியளிக்கவில்லை என்று மார்தட்டிய பிரதமர் மறுபுபுறம்.

ஆரவாரம் ஓய்ந்ததும் இலைகள் உதிரவும் சரியாகத்தான் இருக்கின்றது.

தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது என்பது என்னவோ உண்மைதான் !

ஆனால் வசந்தத்தின் முடிவில் கோடையின் நுழைவாசலில் வரப்போகும் 2015ம் ஆண்டுத் தேர்தல் என்ன மாறுதலைக் கொண்டுவரக்கூடும் ?

ஒரு வித்தியாசம் மூன்று கட்சிகளுக்கிடையில் அல்ல நான்கு கட்சிகளுக்கிடையில் நடக்கும் அரசியல் போராட்டம் மக்களுக்கு என்ன மாறுதலைக் கொண்டுவரும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டுமோ ?

மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *