— எஸ். வி. வேணுகோபாலன்.
tiny tots

வையம்பட்டி முத்துசாமி என்னும் ஓர் அற்புதக் கவிஞரின்,
‘பொண்ணு பொறக்குமா ஆணு பொறக்குமா
பத்து மாதமா போராட்டம்,  இதுவும்
பொண்ணாப் பொறந்தா கொன்னுப்புடுவேன்னு
புருஷன் பண்ணுறான் ஆர்ப்பாட்டம்’

எனும்  பாடல் நெஞ்சைப் பிழிந்தெடுக்கும். அந்தப் பாடலின் இறுதியில் வருவதுபோலவே, இன்றும் ‘பொண்ணாப் பிறந்தா’, அரளியை அரைப்பதும், உமியை நுணுக்குவதும், கண்களை மூடிக் கொண்டு பெற்ற குழந்தைக்கே அதைப் பாலாகக் கொடுப்பதும் நடக்கத்தான் செய்கிறது.

மிகவும் படித்த உயர் நடுத்தர வர்க்க ஆண்களிடையேகூட இன்றும் பலர், பெண் குழந்தை பிறந்தால் இனிப்பு வழங்கிக் கொண்டாட விரும்புவதில்லை. பிரசவ காலத்து உடல் நிலை, உளவியல் தன்மை எதையும் பற்றிக் கவலையின்றி அப்போதும் பெண் பிள்ளை பெற்றவளைக் கரித்துக் கொட்டும் மனிதர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். ‘குழந்தைக்கு என்ன பெயர்?’ என்று கேட்டால், ‘ஆமாம் பெயர் வைக்கிறாங்க..’ என்று அலுத்துக் கொள்வோரும் உண்டு.

நவீன கண்டுபிடிப்புக் கருவியை வைத்து பழமையான கண்ணோட்டத்தோடு பெண் சிசுவை பிறக்க விடாது செய்வதும் இன்றைக்கும் தொடரவே செய்கிறது. தப்பித் தவறி பிறக்கும் பெண் குழந்தைகளும் ஒவ்வொரு கட்டத்திலும் தப்பிப் பிழைத்து வளர்ந்து, வாழ்ந்து, மறைய வேண்டியிருக்கிறது. உடை, படிப்பு, விளையாட்டுப் பொருள்….என ஒவ்வொரு விஷயத்திலும் புறக்கணிப்பை, இரண்டாம் இடத்தை, கசப்பை சந்திக்கும் பெண் குழந்தை இளமையிலிருந்தே   மரபார்ந்த பாகுபாடுகளைத் தின்றுதான் வளர்கிறாள்.

இன்று உலக பெண் குழந்தைகள் தினம்! நாகரிக உலகத்திற்கு இப்படி ஒரு தினத்தைக் கொண்டாட வேண்டி இருப்பது அதன் பெருமையா, பெருந்தன்மையா, துயரமான உண்மை நிலவரங்களுடைய அபாய அறிவிப்பின் வசீகர வடிவமா தெரியாது.
‘தினங்களைக் கொண்டாடுவதை விட்டுக்
குழந்தைகளை எப்போது கொண்டாடப் போகிறீர்கள்?’
என குழந்தைகள் தினம் குறித்த சாட்டையடி கவிதை வழங்கினார் அப்துல் ரகுமான். இப்போது அதைவிடவும் கவன ஈர்ப்பான தினமாக மலர்கிறது உலக பெண் குழந்தை தினம்.

பெண் குழந்தைகள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த அக்கறையில் ஐக்கிய நாடுகள் அவை 2011ல் எடுத்த முடிவின்படி அக்டோபர் 11, 2012 முதலாவது சர்வதேச பெண் குழந்தைகள் தினம் அனுசரிக்கப் பட்டது. இதோ இந்த ஆண்டின் பெண் குழந்தைகள் தினம் உதிக்கிறது. 18 வயது நிறைவதற்குமுன் திருமண வாழ்க்கைக்குள் தள்ளப்படும் பெண் குழந்தைகள் குறித்து – ஆமாம் அவர்கள் குழந்தைகள்தான்! – மிகப் பெரிய கவலையை உலகம் கவனிக்க வேண்டி இருக்கிறது. உலக நாடுகளில் இதிலும் நமது நாட்டுக்கு முதலிடம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. சதவீதக் கணக்கு குறைந்து வருகிறது என்றாலும், நிம்மதி பெருமூச்சு விடும் அளவு குறையவில்லை. வல்லரசு பற்றி பிளந்து கட்டும் மேதாவிகளுக்கு இந்த மாதிரி செய்திகள் எல்லாம் ஒரு பொருட்டே கிடையாது.

ஐந்து வயதில் மணமுடிக்கப்பட்டு ஆறரை வயதிற்குள் கணவனை இழந்து பிறகு தொண்ணூறு வயதுக்குமேல் வாழ்ந்து(!) மறைந்த ஒரு மூதாட்டி எங்கள் குடும்பத்திலேயே இருந்ததைப் பார்த்திருக்கிறேன். ‘நான் வாழ்க்கைப்பட்ட இடம் (ஊர்) சுமங்கலி, ஆனாலும் நான் அமங்கலி’ என்று பட்டம்மாள் என்ற பட்டா சித்தி சொல்லிக் கொண்டிருந்ததை இன்றும் என் தந்தை வேதனையோடு நினைவுகூர்வதுண்டு.

பால்ய விவாகம் நடத்த உகந்த தினமாகக் கருதப்படும் நாள்தான் அட்சய திருதியை. அதைத்தான் இப்போது தங்கம் வாங்கும் திருவிழா நாளாக உருமாற்றி விட்டனர் தாராளமய காலத்தில் எல்லாவற்றையும் விற்கத் தெரிந்திருப்பவர்கள். அட்சய திருதியை தினத்தன்று குழந்தைகள் திருமணத்திற்கு எதிராகப் போய்க் குரல் கொடுத்து நிறுத்த முயன்ற பல பெண்கள், சமூகப் போராளிகள் கடுமையாகத் தாக்கப்படும் நிகழ்வுகளை ஊடகங்கள் அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து விவாதிப்பதில்லை.  அதற்கெல்லாம் யார் டி ஆர் பி ரேட்டிங் போடுவார்கள் என்பதாக இருக்கக் கூடும்.

இளவயது திருமணம் மோசமானது. பக்குவமான உடலும், உளவியலும் அமையுமுன் மணவாழ்க்கைக்கு விரட்டப்படுவது கொடுமை. அதைவிடவும் கொடிய விஷயம், பெண் குழந்தைகளை வெறி பிடித்த  ஆண்கள் தங்களது காம இச்சைக்கு உட்படுத்தும் அராஜகம். கடந்த வாரம் கூட பிஞ்சுக் குழந்தை ஒன்றிடம் பாலியல் வக்கிரம் புரிந்த மனிதனைப் பற்றிய செய்தி வந்திருந்தது. வீட்டுக்குள்ளேயே, சுற்றுப் புறத்திற்குள்ளேயே, நெருங்கிய உறவினரிடையே,  ஏன், பெற்ற தகப்பனிடமிருந்துகூட இத்தகைய அச்சுறுத்தலை பெண் குழந்தைகள் பலரும் எதிர்கொள்கின்றனர். பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் பிரச்சனைகளுக்குப் பொறுப்பையும், பழியையும் அவர்களது உடையணியும் முறை, நவீன பாணி பழகும் தன்மை என்று எதன்மீதாவது போட்டுவிட்டு யாரும் தப்பிக்க முடியாத புகார்கள் கணக்கற்றவை.

சக மனிதரிடம் மோசமாக நடப்பதற்கு முதற்காரணத்தை பாதிக்கப்பட்டவரிடம் தேடுவதை விடுத்து, அந்தச் செயலைச் செய்தவரிடமிருந்து எப்போது நாம் தேடத் தொடங்கப் போகிறோம்? நினைத்த நாடுகள் மீதெல்லாம் குண்டுபோட்டுத் தாக்கிவிட்டு அவற்றின் நடத்தை பற்றிப் பேசும் வல்லரசு நாடுகளின் ஆதிக்க மன நிலைதானே பெண்களிடம் கேவலமாக நடந்து கொள்ளும் ஆண்கள் மனத்திலும், சமூக பொது புத்தியிலும் நிறைந்திருக்கிறது?

கேளிக்கையின் சாலை வழியெங்கும் பெண்களை எப்படியும் பார்க்க, ரசிக்க, மலினப்படுத்த உள்நெஞ்சில் பொங்கி வழியும் ஆர்வத்தை, உயிரியல் வேட்கையை விடாது தூண்டிக் கொண்டிருக்கிறது நவீன சந்தை பொருளாதாரம். அதன்வழி சிந்தனையைப் போக்குபவர்களுக்கு பெண்கள் உடலியல் ரீதியாக எப்போதும் தங்களுக்கானவர்கள் என்ற வெறி மிகுந்து விடுகிறது. பெண்களுக்கும் அவஸ்தைகள் உண்டு, வலியும் வேதனையும் மிகுந்த நாட்கள் உண்டு, சோர்வாகக்  கடக்க நேரும் பருவமொன்று உண்டு என்பதெல்லாம் சராசரி ஆண்மனத்தில் பதிவாவதில்லை. மண வாழ்க்கையிலும், பொதுவெளியிலும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கான விதைகள் அவர்களது குழந்தைப் பருவத்திலேயே ஊன்றப் படுகின்றன.

உலகப் பெண் குழந்தை தினம் இவற்றுக்கு நேரெதிராக ஆரோக்கியமான பார்வையை முன்வைக்கத் துடிக்கிறது. இயற்கையின் இயல்பான மலர்ச்சியோடு பெண் குழந்தைகளைக் கொண்டாடக் கேட்கிறது. சமத்துவக் கண்ணோட்டத்தோடு அணுகக் கற்றுக் கொள்ளத் தூண்டுகிறது. மாசற்ற அன்பின் பார்வையை, களங்கமற்ற அரவணைப்பை, உள்ளார்ந்த நெகிழ்ச்சியுறுதலை பழகிக் கொள்ள அறைகூவல் விடுக்கிறது.  பெண்மையை புனிதப் படுத்துவதாகச் சொல்லி கீழ்மைப் படுத்திய காலங்களுக்கு விடை கொடுத்து, அறிவில் ஓங்கி இவ்வையம் தழைக்கும் வண்ணம் ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறது.

*****************
நன்றி: தமிழ் இந்து (அக்டோர் 12, 2014)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *