நாகேஸ்வரி அண்ணாமலை

sc

ஜெயலலிதாவின் வழக்கில் தீர்ப்புக் கூறப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டதை அடுத்து அ.தி.மு.க.வினர் நடத்திய போராட்டங்கள் எல்லாம் ஓரளவு அடங்கிவிட்டதாகத் தெரிகிறது. தமிழ்நாட்டில் சகஜநிலை திரும்பியதாக பத்திரிக்கைச் செய்திகள் கூறுகின்றன. ஜெயலலிதாவின் ஆதரவாளர்கள் பல வகையான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதைப் பார்த்துத் தமிழக மக்கள் இவ்வளவு அறிவிலிகளா என்ற கேள்வி எழுகிறது. அதுவும் தந்தை பெரியார் தொடங்கிய பகுத்தறிவு இயக்கம் தமிழக மக்களிடம் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லையா என்று எண்ணும்போது மனதில் பெரிய ஆயாசம் ஏற்படுகிறது.

பெரியார் பிராமண ஆதிக்கத்தை ஒழிக்கவும் எல்லோர் மனத்திலும் சுயமரியாதை எண்ணத்தை வளர்க்கவும் பக்குத்தறிவு இயக்கத்தைத் தோற்றுவித்தார். அவர் ஆரம்பித்த இயக்கத்திற்கு இன்று அர்த்தமே இல்லாமல் போயிற்று. அவர் மறுபடி பிறந்துவந்து தமிழ்நாட்டில் நடக்கும், அவர் போதனைகளுக்கு நேர் மாறாக நடக்கும் அராஜகச் செயல்களைக் கண்டிக்க மாடாரா என்ற ஏக்கம் பிறக்கிறது. அவருடைய பக்குத்தறிவு இயக்கத்தில் தோன்றிய கட்சிகளான தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் மக்களை எவ்வளவு முட்டாள்கள் ஆக்கியிருக்கின்றன என்பதை எண்ணிப் பார்த்தால் அவர் செய்ததெல்லாம் விழலுக்கு இறைத்த நீரா என்று மனம் பதறுகிறது.

பிராமண ஆதிக்கத்தை ஒழிக்க அவர் எவ்வளவு பாடுபட்டார்? மனித இனத்தில் ஜாதிகளுக்கு இடமில்லை, பிறப்பில் எல்லோரும் சமம், கடவுளின் பெயரைச் சொல்லி பிராமணர்கள் தங்களை உயர்ந்தவர்கள் என்று கூறிக்கொள்வது, ‘உயர்ந்த ஜாதி’ மக்களின் கால்களில் ‘கீழ் ஜாதி’ மக்கள் விழுவது எவ்வளவு இழிவான செயல் போன்றவற்றை எவ்வளவு எதிர்த்தார்? இந்துக் கடவுள்கள் எல்லாம் மனிதனின் சிருஷ்டிகள்தான், அப்படிச் சிருஷ்டிக்கப்பட்ட கடவுள்களின் பெயரால் பிராமணர்கள் செய்த அட்டுழியங்கள், அவர்கள் தங்களை கடவுகளின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்டு மற்ற ஜாதிகளைச் சேர்ந்தவர்களை முட்டாளாக்கியது ஆகியவற்றை எல்லாம் பாமர மக்களுக்கு உணர்த்த என்னென்ன செய்தார்? விக்கிரக ஆராதனை கூடாது என்பதற்காக பிள்ளையார் சிலைகளைத் தெருவில் போட்டு உடைத்தார். இப்போது அவர் ஆரம்பித்த இயக்கத்திலிருந்து பிறந்த கட்சிகளின் உறுப்பினர்கள் செய்யும் காரியங்கள் அவர் போதனைகளுக்கு எந்த மதிப்பும் கொடுப்பதாகத் தெரியவில்லை. அவர் விக்கிரக ஆராதனை கூடாது என்றார். இவர்கள் மனிதர்களையே ஆராதனை செய்கிறார்கள். பெரியார் தெய்வங்களே மனிதனின் சிருஷ்டி என்றார். இவர்கள் மனிதர்களையே தெய்வமாக்கிவிட்டார்கள்.

நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்மானிக்கப்பட்ட ஜெயலலிதாவை தெய்வம் என்று கூறுகிறார்கள். தெய்வத்தைத் தண்டிக்க மனிதனால் முடியாது என்று போஸ்டர்கள் வேறு. தெய்வமே இல்லை என்று சொன்ன பெரியார் எங்கே, ஒரு சாதாரண மனிதப் பிறவியை அதிலும் ஊழலிலேயே ஊறிப்போன ஒரு அரசியல்வாதியை தெய்வம் என்ற ஸ்தானத்திற்கு உயர்த்திய இந்த அறிவிலிகள் எங்கே? பெரியார் பிள்ளையாரைப் போட்டு உடைத்தார். இந்த அறிவிலிகள் பிள்ளையாருக்கும் முருகனுக்கும் பால்குடம் எடுக்கிறார்கள். எதற்காக? நாட்டில் சுபிட்சம் நிலவ வேண்டும், மக்கள் எல்லாம் கல்வி அறிவு பெற வேண்டும், எல்லோரும் பிணியின்றி வாழ வேண்டும் என்ற நற்செயல்களுக்காக இப்படி எல்லாம் செய்கிறார்கள் என்றால் அதையாவது பொறுத்துக்கொள்ளலாம். இவர்கள் செய்வதோ சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றம் பல ஆவணங்களைப் பரிசீலித்துப் பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளி என்று தீர்மானித்தவரைக் காப்பாற்ற. இறைவன் இருக்கிறான் என்று இவர்கள் நம்பினால் அவன் நல்லவர்களுக்கு நன்மை செய்வான், நல்லவர் அல்லாதவர்களைத் தண்டிப்பான் என்பதையும் நம்ப வேண்டும் அல்லவா? அப்படிப்பட்ட இறைவன் தவறு செய்த அவர்கள் ‘அம்மாவை’ எப்படி மன்னிப்பான்? எப்படி அவனிடம் அவர்களுடைய ‘அம்மாவை’ நீதிமன்றம் விடுவிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்? இவர்கள் செய்யும் யாகங்களையும் பூஜைகளையும் இறைவன் எப்படி ஏற்றுக்கொள்வான்?

மக்களின் பக்குதறிவை வளர்க்கப் பெரியார் எவ்வளவு பாடுபட்டார்? இப்போது அ.தி.மு.க. தொண்டர்களுக்கு பகுத்தறிவே இல்லை என்பது போல் நடந்துகொள்கிறார்கள். ‘கர்நாடகமே, காவிரியை வச்சுக்கோ, எங்கள் அம்மாவை எங்களுக்குத் திருப்பிக் கொடுத்துவிடு’ என்ற போஸ்டர்கள். எங்கள் ‘அம்மாவை’ விடுவிக்காவிட்டால் தமிழகத்தில் வாழும் கன்னடியர்கள் எல்லோரையும் சிறை பிடிப்போம் என்று இன்னொரு போஸ்டர். ‘அம்மா’ சிறைவாசம் அனுபவிப்பதற்கும் கர்நாடகத்திற்கும் என்ன சம்பந்தம்? அ.தி.மு.க. தலைவர்களே இப்படி இருந்தால் தொண்டர்களைப் பற்றி என்ன சொல்ல? 75 பேர் தர்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். தாங்கள் என்ன செய்கிறோம் என்று தெரிந்துதான் இவர்கள் அப்படித் தற்கொலை செய்துகொண்டார்களா?

நான் போனவாரம் எழுதிய கட்டுரைக்கு வாசகர் ஒருவர் பதில் அளித்திருக்கிறார். ஜெயலலிதாவின் ஆட்சிக்காலம் முடியும் வரை இரண்டு ஆண்டுகள் காத்திருந்து இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்க வேண்டுமாம்! நீதி யாருக்காக காத்திருக்கவேண்டும்? பதினெட்டு ஆண்டுகள் வழக்கை இழுத்தடித்ததே பெரிய தவறு. இப்போது எதற்காக இன்னும் இரண்டு ஆண்டுகள் காத்திருந்திருக்க வேண்டும் என்பது அவருக்கே வெளிச்சம். ஜெயலலிதாவிற்கு மாற்றுத் தலைமை தமிழ்நாட்டில் இல்லையாம்! உச்சநீதிமன்றம் ஜெயலலிதாவின் ஜாமீன் பற்றி முடிவெடுக்கும்வரை அவரைப் பற்றி எதுவுக் கூறக் கூடாதாம்! ஆங்கிலத்தில் எழுதுமளவிற்கு படித்த இவரைப் போன்றவர்களே இப்படி நினைக்கும்போது படிப்பறிவில்லாத, ஜனநாயகம் என்றால் என்ன, அதில் நீதிமன்றங்களின் பங்கு என்ன என்பது பற்றி எல்லாம் அரசியல் அறிவு ஒன்றுமே இல்லாத பாமர மக்களைப் பற்றி என்ன சொல்வது?

பெரியாரின் எந்தக் கருத்தும் தமிழக மக்களின் மனத்தில் எந்த விதப் பாதிப்பையும் உண்டாக்கவில்லையா? எந்த விதமான பகுத்தறிவையும் கொடுக்கவில்லையா? பெரும்பான்மை மக்கள் இன்னும் அறியாமையில்தான் உழலுகிறார்களா? தமிழக மக்களின் இந்த அறியாமையைப் போக்கத் தலைவர்கள் யாரும் தோன்றவில்லையா? தோன்றியிருக்கும் சில தலைவர்களாலும் தமிழகத்தை மாற்ற முடியவில்லையா? என்னவென்று புரியவில்லை; நெஞ்சு பொறுக்கவில்லை, பாரதி பாடியதைப் போல.

பி.கு. இந்தக் கட்டுரை முழுக்க முழுக்க கட்டுரை ஆசிரியர் திருமிகு நாகேஸ்வரி அண்ணாமலை அவர்களின் தனிப்பட்ட கருத்து மட்டுமே. வல்லமை இதழுக்கும் இதன் கருத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஆசிரியர் – வல்லமை இணைய இதழ்

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “வெட்கக்கேடு

  1. உயர்திரு நாகேஸ்வரி அண்ணாமலை அவர்களே,

    தாங்கள் சொல்லவந்த உயர்வான கருத்தானது — பிராமண வெறுப்பு, இந்து சமய வெறுப்பு என்ற காழ்ப்புணர்ச்சிக் களைகளால் மூடப்பட்டு விட்டதே என்று மிகவும் வருந்துகிறேன். வைக்கோல் போரில் குன்றுமணிகளைத் தேடிக் கண்டுபிடிப்பதைப்போலத்தான் நீங்கள் சொல்லவந்த கருத்தைத் தேடிக் கண்டுபிடிக்கவேண்டி இருக்கிறது. அரசியல் அறியாமைக்கும், சுயமரியாதைக்கும், பிராமண வெறுப்புக்கும், இந்து சமயக் கடவுளர்களின் சிலைகளை உடைப்பதற்கும் என்ன அம்மா தொடர்பு உள்ளது? பிள்ளையார் சிலையைப் பெரியார் உடைத்தாரென்று பெருமையுடன் பறை சாற்றுகின்றீகளே, அதில் என்ன அம்மா அறியாமை அகற்றப்பட்டது? கன்னிக்குப் பிறந்த பெருமகனாரின் திருஉருவத்தை அவர் என் கொளுத்தவில்லை? அறியாமை என்றால் அது இந்து சமயத்தில் மட்டும், அதுவும் பிராமணர்களால் மட்டுமே உருவாக்கப்பட்டதா? நான் பெரியாரின் சமூக ஏற்றத்தாழ்வு நீக்கல் முயற்சியைப் பாராட்டுகிறேன். சாதியில் உயர்வு இல்லை, தாழ்வு இல்லை, உங்களுக்கே நீங்கள் மரியாதை கொடுக்காவிட்டால் யார் மரியாதை கொடுப்பார்கள் என்ற அறிவுரையை மதிக்கிறேன். அவ்வளவே! எந்த ஒரு சமூகத்தையும், நாற்பது கோடி மக்கள் வணங்கிய கடவுளர்களின் சிலையையும் உடைத்துத் தகர்த்தெறிவது சுயமரியாதை என்று தோன்றவில்லை. அது ஓய்ந்துவரும் காலத்தில் நீங்கள் மக்களிடையே பிரிவினையையும், காழ்ப்புணர்ச்சியையும், வெறுப்புணர்வையும் தூண்டும் விதத்தில –, வல்லமை ஆசிரியரே, “இந்தக் கட்டுரை முழுக்க முழுக்க கட்டுரை ஆசிரியர் திருமிகு நாகேஸ்வரி அண்ணாமலை அவர்களின் தனிப்பட்ட கருத்து மட்டுமே. வல்லமை இதழுக்கும் இதன் கருத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.’ என்று குறிப்பிடும் அளவுக்கு ஒரு நஞ்சை உமிழ்வது மதிப்பிற்கு உரிய உங்களுக்கு எந்த விதத்தில் அம்மா, சிறப்பளிக்கிறது? அரசியல் அறியாமையை மட்டும் நீங்கள் சாடி எழுதி இருந்தால் உங்கள் கட்டுரை வைரமாக ஒளிவிட்டிருக்குமே! அதில் கரியைப் பூசி வெளிவைத்திருப்ப்பது என்னவிதத்தில் அவ்வைரத்திற்கு அழகு சேர்க்கிறது?

  2. ஆசிரிய அம்மையாரின் கருத்துகள் அருமையானவை!

    பிணைக்கும் விடுதலைக்கும் வேறுபாடு தெரியாமல் ஆர்ப்பாட்டம் செய்வது அடிமைத்தனத்திலான? அறியாமையாலா? இரண்டில் எதுவாயினும் அயல்நாட்டவர்களால் இழிவாகக் கருதத்தக்க செயல்பாடு என்பதில் ஐயமில்லை! இனி, பெண்கள், 60 அகவைக்கு மேற்பட்டவர்கள், குருதி அழுத்தம் உள்ளவர்கள், நீரிழிவு உள்ளவர்கள் முதலானவர்களுக்குத் தண்டனை இல்லை எனச் சட்டம் கொண்டு வந்திடலாம். சட்ட முறைப்படி சந்திக்க இருபடிநிலை வாய்ப்பு இருக்கும பொழுது பகுத்தறிவிற்கு ஒவ்வா ஆர்ப்பாட்டம் ஏனோ? பிற கட்சிகளும் இதனைப் பின்பற்றும் என்பதில் ஐயமில்லை! எனவே, தாங்கள் எழுதியது நூற்றுக்கு நூறு சரியே! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி/

  3. திருமதி அண்ணாமலையின் குமுறல் சரியான கணிப்பின் மீது ஏற்ப்பட்டது அல்ல. ஈ.வெ.ராமசாமி என்ற சிறியார் வளர்த்தது போலி பகுத்தறிவு. அவர் விளைத்த போலி பகுத்தறிவு இந்த தலைவை (அல்லது தலவி) வழிபாட்டில்தான் முடியும் ; அதைத்தான் 60 வருடங்களாக காண்கிறோம். ஈ.வெ.ரா.வை பெரியார் என அடைமொழியுடன் சொல்வதே ஒரு தனிமனித துதி; அதையே செய்யும் திருமதி நா.அ. , அதை அதிமுக கட்சியில் கண்டிப்பது முரண்நகை. ஈ.வெ.ரா. , அதிகம் படித்தவர் அல்ல, கூர்மையான சிந்தனையாளரும் அல்ல. 19ம் நூற்றாண்டு பிரித்தானிய காலனீய அதிகார வம்சம், மிஷனரிகளின் இந்திய வெறுப்பு, இந்துமத வெறுப்பை முழுமையாக உள்வாங்கியவர்; அதை மாற்றம் இல்லாது “பகுத்தறிவு” என்ற சொல்ஜாலத்துடன் பிரச்சாரம் செய்தார். He made the politics of scapegoating of brahmins in Tamilnadu fashionable. He made tamil Brahmins scapegoats and whipping boys of any social issue. அவர் பிரித்தானிய காலனீயத்தை எவ்வளவு மனதார நேசித்தார் என்றால், இந்திய சுதந்திரத்தை எதிர்த்தார், இந்திய குடியரசு ஆகுவதையும் ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழ் மொழியும் கலாசாரமும் காட்டுமிரண்டி என 50 வருடம் பிரச்சாரம் செய்தார். அதன் விளைவு இன்று தெரிகிரது – இளம்தலைமுறையும், குழந்தைகளும் தமிழை விட்டு ஆங்கிலத்திற்க்கு ஓடுகின்றனர். அப்படிப்பட்டவர் பிரபலமான தமிழ்நாட்டில், திருமதி நா.அ. பார்க்கும் தலைவி வழிபாட்டில் என்ன ஆச்சர்யம் உள்ளது.?? திருமதி அண்ணாமலையின் கட்டுரைதான் வியப்பாக உள்ளது

    விஜயராகவன்

  4. ஈ.வெ.ரா. பிரபலப்படுத்திய போலி பகுத்தறிவின் விளைவு என்ன ? தலைவி 18 வருஷ நீதி ஆய்வின் பிறகு சிறைக்கு அனுப்பப்பட்டதால் 193 பேர் தற்கொலை செய்தனர்.

    http://tamil.thehindu.com/tamilnadu/எனது-துயரத்தால்-உயிர்விட்ட-193-பேர்-குடும்பங்களுக்கு-தலா-ரூ3-லட்சம்-நிதியுதவி-ஜெயலலிதா-அறிவிப்பு/article6516596.ece?homepage=true&ref=tnwn
    “எனது துயரத்தால் உயிர்விட்ட 193 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி: ஜெயலலிதா அறிவிப்பு”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *