எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் மறைந்தார்

1

எஸ் வி வேணுகோபாலன்.

 

ராஜம் கிருஷ்ணன் அவர்கள் முகத்தைக் கடைசியாகப் பார்க்கச் சென்றேன்…

rajam_krishnan_photo_bbc_courtesy

மறைந்த எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன்

மறைந்த எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன், சென்னை போரூர் இராமச்சந்திரா மருத்துவமனையில்தான் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் இரவு அவரது பிரிவு நிகழ்ந்தபோது, மருத்துவர் எஸ் மல்லிகேசன் அவர்கள் மிகவும் நொறுங்கிப் போயிருக்கிறார். அத்தனை நெகிழ்ச்சியான அன்பு வளையத்திற்குள் தமது இறுதிக் காலத்தை நிறைவு செய்து மறைந்திருக்கிறார் ராஜம்.

நேற்று இரவு சென்னை மாநகரத்தின் போக்குவரத்து நெரிசலில் சிக்கி, எட்டு மணிக்குப் போய்ச் சேர்ந்தபோது, அற்புத மனுஷி அவர்களது முகத்தைக் கடைசியாகப் பார்க்க இயலும் என்ற நம்பிக்கை கொஞ்சம் தளர்ந்துவிட்டிருந்தது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க நிர்வாகி இரா தெ முத்து அவர்கள் நேற்று பிற்பகல் சொல்லியிருந்தார், புற நோயாளிகள் பிரிவில் தலைமை மருத்துவர் மல்லிகேசன் அவர்களைச் சந்தித்தால், ராஜம் கிருஷ்ணன் அவர்களுக்கு இறுதி மரியாதை செய்ய உதவுவார் என்று. புறப்படுமுன் தீக்கதிர் தோழர் கவாஸ்கர் அவர்களிடம் கேட்டபோது, ஜி பிளாக் செல்லவும் என்று அவரும் அலைபேசியில் வழிகாட்டி இருந்தார்.

நான் சென்ற சமயம், புறநோயாளிகள் பகுதியின் அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டு இருந்தன. நேரம் கடந்துவிட்டிருந்தது. ஜி பிளாக்கின் மையப் பகுதியில் எனக்கு உடனே சென்று கேட்க தோன்றிய இடம், செவிலியர் அறை. அங்கேதான் அந்த நேயமிக்க செவிலியர் ஜெயஸ்ரீ அவர்களைச் சந்தித்தேன். மிகச் சுருக்கமாக எனது வேண்டுகோளை நான்கு சொற்களில் தெரிவித்தேன். ஹாலில் அமர்ந்திருங்கள், சார் கிட்ட பேசிவிட்டு சொல்றோம் என்றார்.

நான் வந்து உட்கார்ந்த அடுத்த நிமிடத்தில் அவர் என்னை நோக்கி நடந்துவந்தபோது நான் அந்த நொடியின் நூற்றில் ஒரு பங்கு அளவிற்குள் குழப்பத்தில் தவித்தேன். ஆனால், அவர், “வாங்க போய்ப் பார்க்கலாம், சார் பர்மிஷன் கொடுத்திட்டாங்க” என்றார்.

அந்தப் பிரிவிலிருந்து வெளியே வந்து ஒரு திருப்பத்திற்குப் பிறகு சிறிய நடை நடந்தால் மார்ச்சுவரி பகுதி வருகிறது. அந்த கால, இட இடைவெளிக்குள் எனக்குத் தெரிந்த ராஜம் கிருஷ்ணன் அவர்களது ஆளுமை குறித்து அவரோடு பகிர்ந்து கொண்டே நடந்தேன். நாளை அல்லது மறுநாள் வந்தாலும் வேறு யாரும் பார்க்க முடியுமா என்று கேட்டேன்…உறவினர், தெரிந்தவர்கள் பார்க்க வேண்டும் என்று விரும்பினால் காலை ஒன்பது மணிக்குமேல் மாலை 5 அல்லது 6 மணிக்குமுன் வந்தால் நிச்சயம் மல்லிகேசன் சாரை சந்தித்தாலே போதும், உடனே அனுமதி கிடைத்துவிடும். சென்று பார்க்கலாம் என்றார் ஜெயஸ்ரீ. இன்னும் மூன்று மாதங்கள் வரை உடலை ஆராய்ச்சிக்குக் கொடுக்குமுன் பார்க்கலாம் என்றும் சொன்னார்.

‘மேஸ்திரி கிட்ட சொல்லி இருக்கோம், அவர்தான் வந்து காண்பிக்கவேண்டும், கொஞ்சம் உள்ளே காத்திருங்கள்’ என்று வேறோர் அறையைத் திறந்து உட்காரச் சொன்னார். அடுத்த சில நிமிடங்களுக்குள் திருப்பால் வந்துவிட்டார்.

பிறகு குளிர்பதனம் செய்யப்பட்டிருந்த அறைக்குள், பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த உடல்கள் இருந்த ஓர் இழுவறைக்குள் புத்தம்புதிதாகச் சூட்டப்பட்டிருந்த பெரிய மலர்மாலையை அணிந்தவண்ணம் ராஜம் கிருஷ்ணன் உடலைப் பார்த்தேன்…மிகப் பெரும் வரலாறு ஒன்றை அந்தச் சிறு பெட்டி தன்னுள் எப்படி வாங்கி வைத்திருக்கிறது என்று ஒரு கணம் பார்க்கையில் சற்று மனம் நெகிழ்ந்துபோனேன்.

உப்பளம் தொழிலாளர் கதையை எழுதிய எழுத்தாளர், பாரதியை அப்படியே உள்வாங்கிக் கொண்டாடிய பெண்மணி, விவசாயிகள் எழுச்சியை, சாதாரண மக்கள் வாழ்க்கையை வாசக பெருந்திரளுக்குப் படைத்த மகத்தான எளிய மனுஷி உறக்கத்தில் இருப்பதுபோல் ஒரு பட்டுச் சொப்புக் குழந்தை போல் தெரிந்தார் அந்த இழுவறையில். நான் தலையசைத்ததும் அந்த இழுவறை மூடப்பட்டது. ஒரு சிறிய தீப்பெட்டியை மூடியதும், அப்பாவி போல தீக்குச்சிகள் உள்ளே மறைந்துவிடுவது மாதிரி அந்தப் பேருடல் அந்த அறைக்குள் ஒளிந்து கொண்டு கண்ணகன்றது.

தாளமாட்டாத உணர்வுகளின் விளிம்பில், திருப்பால் அவர்களது கைகளில் என் கண்களைப் பொத்திக் கொண்டு கொஞ்சம் மீள நினைத்தேன். இரு கரம் கூப்பி ஜெயஸ்ரீ அவர்களுக்கு நன்றி தெரிவித்தேன்…இந்த மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவர்கள் அனைவருக்கும் நாங்கள் கடன்பட்டிருக்கிறோம் என்றேன். ஒரு குழந்தையைப் போலத்தான் எல்லோரையும் பார்த்துக் கொள்கிறோம் சார் என்றார் ஜெயஸ்ரீ.

மருத்துவர் எஸ் மல்லிகேசன் அவர்கள் எப்படி நேரப்படி உணவு, மருந்து கொடுக்கப்படுவதை உறுதி செய்து கொண்டே இருப்பார், முக்கிய தினங்களில் தமது இல்லத்திலிருந்து உணவு எடுத்துக் கொண்டுவந்து ராஜம் கிருஷ்ணன் அவர்களுக்கு உண்ணக் கொடுப்பார், முந்தைய இரவு இப்படி நேரும் என்று எதிர்பாராது கலங்கிப் போனார் என்பதை அறிந்து மேலும் நெகிழ்ந்தேன்….

ராஜம் கிருஷ்ணன் மிக உயர்ந்த மனிதர் என்றேன்….” நான் அந்த அம்மாவுக்கு நிறைய உதவி செய்திருக்கிறேன் சார்” என்றார் திருப்பால்.

தனது எழுத்துக்களைக் கூட நாட்டுடைமை ஆக்கிவிடவேண்டும் என்று எப்போதோ வேண்டுகோள் வைத்தவர் என்றேன்…

“ஆமாம் சார், ஒரு பேப்பர் பேனா போதும் அவங்களுக்கு, எழுதிக் கொண்டே இருப்பாங்க எதையோ” என்றார் திருப்பால். பாட்டி, பாட்டி என்று கொண்டாடி இருக்கின்றனர் ஊழியர்கள் அவரை. மிகச் சாதாரண உழைப்பாளி மக்களுக்காத் தான் எழுதினர் அவர் என்றேன் நான். இன்னும் யாராவது வருவாங்களா சார் என்று திருப்பால் கேட்டார். வாய்ப்பில்லை என்றேன். நாளைக்குக் கூட வரலாம் சார். இன்னும் இரண்டு மூன்று மாதங்கள் வரை பார்க்க முடியும் என்று சொன்னார்கள்.

இருவருக்கும் மீண்டும் வணக்கமும், நன்றியும் தெரிவித்தபடி வேகமாக நடக்கத் தொடங்கினேன். எனக்கு முன்பாக இரவு நீண்டிருந்தது நடைபாதையில். ஆனாலும், மருத்துவமனையின் அறைகளில் இருந்து வெளிச்சம் சிந்திக் கொண்டுதான் இருந்தது….மருத்துவமனை நோக்கி வேகமாக நடந்து வந்து கொண்டிருந்த ஓர் இளம்பெண் எதிரே டார்ச் விளக்கு ஒன்றை ஏந்தியபடி கடந்து சென்றார் என்னை.

 

 

 

 

 

 

படம் உதவிக்கு நன்றி:  http://www.bbc.co.uk/tamil/arts_and_culture/2014/10/141021_rajamkrishnan

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் மறைந்தார்

  1. எனக்கு அவர் எழுத்தென்றால் மிகவும் பிடிக்கும் . அவரை ஒரு பெட்டிக்குள்
    காண்பது மனதுக்கு மிகவும் வேதனை தந்தது .அதுவும் நீங்கள் எழுதியிருக்கும் விதம் மனதை என்னவோ செய்தது. அவருடைய ஆன்மா சாந்தியடையட்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *