இசைக்கவி ரமணன்

desktop-backgrounds-1920x1080-butterfly
எல்லோரும் மிதக்கிறோம்
எல்லைகள் விண்டுபோய் தொல்லைகள் இல்லாத
ஏகாந்த வானத்தில் மேகத்தின் பிஞ்சுபோல்
எல்லோரும் மிதக்கிறோம்

இதமான வார்த்தைகள் கேட்கும்போதும்
இதயத்தில் வீணைகள் மீட்டும்போதும், ஒரு
மிதமான மதுவூற்றி ஏற்றும்போதும், சில
மின்னல்கள் மழலைகள் பேசும்போதும், ஒரு
கதைபேச வந்துகதை கேட்கும்போதும், மனம்
காதலெனும் கோப்பையில் ததும்பும்போதும், பல
விதமாக அவள்விரல்கள் மருவும்போதும், சிறு
விதையொன்று நடுநெஞ்சில் விழிக்கும்போதும்

தாள்விட்ட வார்த்தைகள் சொல்லாமலே, வந்து
தழுவிடும் தருணத்தின் தரிசனத்தில், பல
நாள்பட்ட கனவொன்று மறந்தபின்னே, ஒரு
நனவுக்குள் இமைக்கின்ற கரிசனத்தில்
தோள்தொட்ட தாரென்று திரும்பும்போது, ஒரு
சொர்க்கமே தோழியாய்ச் சிரிக்கும்போது
கோள்தொட்டு வந்த என் கொஞ்சல்களில், ஒன்றைக்
கொத்துமல ராயவள் முகரும்போது

எல்லோரும் மிதக்கிறோம்
எல்லைகள் விண்டுபோய் தொல்லைகள் இல்லாத
ஏகாந்த வானத்தில் மேகத்தின் பிஞ்சுபோல்
எல்லோரும் மிதக்கிறோம்

(2)

எல்லோரும் கனக்கிறோம்
யாருமே நம்மை இழக்காத போதும்
யாரையோ மெளனமாய் நாம் இழக்கும் போதும்
எல்லோரும் கனக்கிறோம்
சொன்னசொல் நில்லாமல் குடையும்போதும்
சொல்லாத சொல்லொன்று சுடும்போதிலும்
இன்னவிதம் தொடருமென நினைத்ததெல்லாம், ஓர்
இழைமாறி இருள்நெஞ்சில் படரும்போதும்
நின்றதரை காலடியில் அதிரும்போதும், ஓடும்
நிழல்நின்று பரிகாசம் செய்யும்போதும்
சென்றகணம் மீளுமா? அதைமறந்து, மனம்
தெருவோரப் பிச்சைபோல் கெஞ்சும் போதும்

அலைபோலத் துன்பங்கள் வீடுவந்து, உயிரை
அள்ளாமல் நகைசெய்து விலகும்போதும்
சிலைகளின் சிதிலம்போல் கிடந்ததெல்லாம், ஒரு
சீற்றத்தில் வாளேந்திப் பாயும்போதும்
மலைதேடிப் பாய்ந்துவரும் மழைகளெல்லாம், ஏனோ
மத்தியில் வெய்யிலில் காயும்போதும், ஒரு
நிலையறிய மாட்டாத நிலையொன்றுதான், இங்கு
நிஜமென்று தலையின்றி ஆடும்போதும்

எல்லோரும் கனக்கிறோம்
யாருமே நம்மை இழக்காத போதும்
யாரையோ மெளனமாய் நாம் இழக்கும் போதும்
எல்லோரும் கனக்கிறோம்

(3)

நாமே நமக்குச் சுமையானால்
நரகம் அதுபோல் வேறில்லை
நாமே நமக்குச் சுவையானால், அந்
நலமே சொர்க்கம் வேறில்லை

சிலநேரம் தனிமையே இனிமைதரும், அதுவே
சிலநேரம் தவிடுபொடியாய் ஆக்கிடும்
பலவேறு பறவைகள் வாழ்ந்தகூடு, மரம்
தீப்பற்றும் போதுசுடு காடாகிடும்
நிலையான நிலையொன்று வாழ்விலில்லை, இந்த
நிஜம்கண்ட நெஞ்சுயர்ந்து தாழ்வதில்லை
அலைகளை வேடிக்கை பார்த்தபடியே, படகில்
அசையாமல் செல்வதே நமதுவேலை

கண்முன்பு காண்பதோ கால்பங்குதான், இன்னும்
கருவுள் மிதப்பதோ பெரும்பங்குதான்
அண்டத்தைப் பிண்டத்தில் கொண்டாடுவோம், இந்த
அல்லலும் இன்பமும் நம் எல்லைகளா?
அண்டங்கள் யாவையும் சுமையின்றியே, நாம்
அகமென்னும் துளையினில் ஏந்தும்போது
திண்ணையெது பெருவானம் காலை நீட்ட?
எங்கமிழ? எங்குபோய் நாம் மிதக்க?

நாம்யார் எனநாம் அறிந்திடவே
நம்முன் வாழ்க்கை விரிகிறது
நாம்யார் என்நாம் அறிகையிலே
வாழ்க்கை நம்மில் மிதக்கிறது!

22.10.2014 / புதன் / 19.27

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “மிதப்பதும் கனப்பதும்

  1. நல்ல கவிதை. ஆரவாரம் இல்லாத ஆழ்ந்த விசாரம் இதன் அடி நாதம். அங்கங்கே கவித்துவத்தின் அடக்கமான சிலிர்ப்புகள். அதுவும், “தோள்தொட்ட தாரென்று திரும்பும்போது, ஒரு
    சொர்க்கமே தோழியாய்ச் சிரிக்கும்போது” …. ரமண மின்னல்! கே.ரவி
     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *