நாகேஸ்வரி அண்ணாமலை

images

இந்தியா (இனி இந்தியா என்று சொல்வதைத் தவிர்த்து பாரதம் என்றுதான் சொல்ல வேண்டும் என்று எப்போது அரசிடமிருந்து ஆணை பிறக்கப் போகிறதோ?) சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகள் முடிந்துவிட்டன. காந்திஜி படுகொலை செய்யப்பட்டு 67 ஆண்டுகள் முடியப் போகின்றன. ஆர். எஸ். எஸ். காரர்கள் சதிசெய்து அவரைத் தங்கள் வன்முறையால் இந்திய அரசியலிலிருந்து விலக்கிவிட்டனர். ஆனாலும் காங்கிரஸ்காரர்களாவது அவர் பிறந்த நாளன்று அவர் பெயரைச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். உலகின் பல நாடுகளில் பல பல்கலைக்கழகங்களில் காந்திஜியின் அஹிம்ஸை வழிகளைப் பற்றியும் காந்திஜியின் கொள்கைகளைப் பற்றியும் ஆராய்ச்சி நடந்துகொண்டிருக்கிறது. இந்தியாவில் எத்தனை பல்கலைக்கழகங்களில் காந்திஜி பற்றிய ஆராச்சி நடந்துகொண்டிருக்கிறது என்று தெரியவில்லை. அமெரிக்க அதிபர் ஒபாமா ஒரு பள்ளியின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது மாணவன் ஒருவன், ‘இறந்தவர்களானாலும் சரி. உயிரோடு இருப்பவர்களானாலும் சரி, யாரோடு உணவருந்த விரும்புகிறீர்கள்?’ என்று கேட்டபோது எதிர்பாராத இந்தக் கேள்விக்கு சிறிதும் யோசிக்காமல் ‘காந்திஜியோடு’ என்றார். உலகின் பல பெரிய தலைவர்களோ பெரிய விஞ்ஞானிகளோ அவர் நினைவுக்கு வரவில்லை. காந்திஜிக்கு மிகவும் பின்னால் வந்தவர் – காந்திஜி இறந்து பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்தவர் – காந்திஜியை நினைவில் வைத்திருந்தார்.

காந்திஜியை நம்மில் எத்தனை பேர் நினைவில் வைத்திருக்கிறோம் என்பது ஒரு புறம் இருக்கட்டும். காந்திஜியைக் கொன்ற ஆர். எஸ். எஸ்ஸிலிருந்து வந்திருக்கும் மோதி இன்னொரு வகையாக நம் மனதிலிருந்து காந்திஜியின் நினைவை அழிக்க முயற்சி செய்கிறார். காந்திஜியை எத்தனை பேருக்கு நினைவிருக்கிறதோ தெரியாது; ஆனால் அக்டோபர் 2 காந்திஜி பிறந்த நாள் விடுமுறை நாள் என்று மட்டும் எல்லோருக்கும் தெரியும். ‘அக்டோபர் இரண்டா? அன்று காந்திஜி பிறந்த நாளுக்கு விடுமுறை’ என்று எல்லோரும் சொல்லிக்கொள்வார்கள். அன்றாவது அவருடைய பெயர் எல்லோர் வாயிலும் இருக்கும். விடுமுறை என்பதற்காக அந்த ஒரு நாளில் காந்திஜி பெயரை உச்சரிக்கும் பழக்கத்தையும் மறக்கடிக்கும் ஒரு கைங்கரியத்தை இப்போது மோதி மேற்கொண்டிருக்கிறார். அன்றைய தினத்தை இந்தியாவைத் தூய்மைப்படுத்தும் தினமாக அனுசரிக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்திருக்கிறார். அன்று விடுமுறை இல்லாதது மட்டுமல்ல; அன்று காந்திஜி பெயரை உச்சரிக்கும் தேவையையும் இல்லாமல் ஆக்கியிருக்கிறார்.
காந்திஜி போதித்த உள்ளத் தூய்மையை முதலில் பின்பற்றினால் இந்தியாவின் புறத் தூய்மை தானாகவே வருமே!

அதே மாதிரிதான் நேருஜியின் பிறந்த நாள் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுவதையும் இந்தியாவைத் தூய்மைப்படுத்தும் தினமாக அனுசரிக்கச் சொல்கிறார். சுதந்திரப் போராட்டத்தில் நேருஜியின் பங்கையும் அதன் பிறகு சுதந்திர இந்தியாவை நடத்திச் சென்று அவர் இந்தியாவை ஒருங்கிணைந்த நாடாக வைத்திருந்ததையும் வேகமாக மறக்கச் செய்யும் கைங்கரியங்களில் மோதி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

அடுத்து வருவது வல்லபாய் பட்டேல். இன்றைய இந்தியாவை இன்றைய உருவில் ஒருங்கிணைத்ததே பட்டேல்தான் என்று இந்தியர்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? காலண்டர் தயாரிப்பவர்கள் மட்டும் எல்லோர் பிறந்த நாளையும் பட்டியலிடும்போது அவர் பிறந்த நாளையும் குறிப்பிடுகிறார்கள். நாள்காட்டியில் அன்றைய தேதிக்குரிய தாளைக் கிழிக்கும்போது ‘இன்று பட்டேலின் பிறந்த நாளா?’ என்று நினைவுபடுத்திக்கொள்கிறோம். தினசரி காலண்டர் இப்போது எத்தனை பேரிடம் இருக்கிறது?

பாரதியாருக்கும் பாரதிதாசனுக்கும் பல்கலைக்கழகங்கள் நிறுவியாயிற்று, இனி அவர்களுடைய போதனைகளை எளிதாக மறந்துவிடலாம் என்று நினைக்கிறோம். ‘தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா’ என்றார் பாரதிதாசன். தலைநிமிர்ந்து நிற்கும்படியாகவா நாம் காரியங்கள் செய்துகொண்டிருக்கிறோம்? ஒரு பிரியாணிப் பொட்டலத்திற்கும் நூறு ரூபாய்க்கும் கூலிக்கு மாரடிக்க நாம் தயாராக இருக்கும்போது எப்படித் தலை நிமிர்ந்து நிற்க முடியும்? தமிழினம் எவ்வளவு அறிவீனமாகிவிட்டது என்பதைத் தெரிந்துகொள்ள ‘ஓம் ஓபாமா’ என்ற திரைப்படத்தைப் பாருங்கள். கட்சித் தலைமையிலிருந்து போன்கால் வரவும் கட்சித் தலைவர் ஒருவர் தன்னுடைய செல்போனைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு, எதிரே இல்லாத தலைமைக்கு முன்னே சாஷ்டாங்கமாகத் தரையில் விழுந்து வணங்கிவிட்டுப் பின் தொலைபேசியை எடுத்துப் பேச ஆரம்பிக்கிறார். என்னே நம் சுய மரியாதை! அது திரைக்கதை என்றால் உண்மையில் நடந்த சம்பவம் ஒன்று. முன்னாள் தமிழக முதல்வர் ஜெயிலிலிருந்து ஜாமீனில் வந்தவுடன் இன்றைய தமிழக முதல்வர் (தமிழ்நாட்டு மக்கள் அனைவரின் பிரதிநிதி) முன்னவரின் காலில் விழுந்து வணங்குகிறார். என்னே நம் பக்குத்தறிவுப் பாதை பயணித்த கதை!

periyar-400மதத்தின் பெயரால் ஜனங்களை முட்டாளடித்து அவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்திய பிராமணர்களின் செயல்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்த பெரியாரைப் பற்றிய புரிதலே சரியாக இல்லாதபோது அவரை மறப்பது மிகவும் எளிது. ஊழலில் ஊறிப்போன ஒரு அரசியல்வாதியை, குற்றம் சாட்டப்பட்டவர் கேட்ட வாய்தாக்களை எல்லாம் கொடுத்துப் பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்றம் அவரைத் தண்டித்தபோது 193 பேர் அந்தச் செய்தி கொடுத்த அதிர்ச்சியில் இறந்திருக்கிறார்கள், அல்லது தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள் (139 பேர் மாரடைப்பால் இறந்தவர்கள் என்று நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை கூறுகிறது). இவர்கள் தற்கொலை செய்துகொண்டதற்குப் பெரியாரின் ‘போலிப் பகுத்தறிவு இயக்கம்’ காரணம் என்று சொல்லுமளவுக்கு பெரியாரைப் புரிந்துகொண்டிருக்கிறோம். அவர் காட்டிய பகுத்தறிவுப் பாதையில் செல்ல நாம் என்றுமே தயாராக இல்லாதபோது இப்போது மட்டும் நினைவில் வைத்திருப்போமா என்ன?

காமராஜ் இறந்தபோது அவர் தலைமாட்டில் 160 ரூபாய் மட்டும் இருந்ததாம். லஞ்சம் வாங்குவது, சொத்து சேர்ப்பது என்பது பற்றி எல்லாம் ஒன்றும் தெரியாத காமராஜ், கக்கன் போன்ற எளியவர்கள் வாழ்ந்த தமிழகமா இப்போது கணக்கில் அடங்காத அளவு சொத்து சேர்க்கும் தலைவர்களை உருவாக்கியிருக்கிறது? வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்திருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ஜெயலலிதாவின் சொத்தின் அளவை மதிப்பிட்டோமானால் அதில் எத்தனை பூஜ்யங்கள் இருக்கின்றன என்பதை எண்ணி மாளாது என்றார் எங்கள் நண்பரின் தந்தை ஒருவர். இதற்கு நேர்மாறாக இறக்கும்போது 160 ரூபாய் வைத்திருந்த காமராஜரின் எளிமையையும் அவரையும் சேர்த்து மறந்துவிட்டோம்.

எளிமைக்கும் மக்களின் நலனில் அக்கறை செலுத்துவதற்கும் அடையாளமாக விளங்கிய தலைவர்களை நாம் மறந்துகொண்டே போக, சொத்துச் சேர்ப்பதையும் மக்களை முட்டாளடிப்பதையும் தங்கள் சாதனைகளாகக் கொண்ட தலைவர்கள் காளான்கள் போல் முளைத்துக்கொண்டேதான் இருப்பார்கள். வளர்க ஊழல் புரிவோர் ஆட்சி! வாழ்க தமிழகம்!!

பி.கு. இந்தக் கட்டுரையின் கருத்துகள் அனைத்தும் ஆசிரியர் திருமிகு நாகேஸ்வரி அண்ணாமலை அவர்களின் சொந்த கருத்துக்கள் மட்டுமே. வல்லமை இதழுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். 

பதிவாசிரியரைப் பற்றி

12 thoughts on “மறக்கப்பட்ட நம் தலைவர்கள்

  1. நல்ல கட்டுரை. இதில் உள்ள கருத்துகள் சிந்திக்கத் தக்கவை. கட்டுரை ஆசிரியரின் கவலைகள் நியாயமானவையே. ஆனால், ஒரு வாக்கியம், “ஆர். எஸ். எஸ். காரர்கள் சதிசெய்து அவரைத் தங்கள் வன்முறையால் இந்திய அரசியலிலிருந்து விலக்கிவிட்டனர்” என்ற வாக்கியம் தவிர்க்கப் பட்டிருக்கலாம். அந்தக் குற்றச் சாட்டுக்கு ஆதாரம் உள்ளதாகத் தோன்றவில்லை. நான் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினனோ, அனுதாபியோ இல்லை. ஆனால், இந்த செய்தி பற்றி என்னால் முடிந்த வரை ஆராய்ச்சி செய்து பார்த்திருக்கிறேன். நான் மதிக்கும் ஒரே தலைவரான அண்ணல் காந்தியடிகள் கொலை செய்யப் பட்டதில் ஆர்.எஸ்.எஸ். தொடர்பு இருந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை. கோட்ஸே காந்தியைச் சுடுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இருந்து வெளியேறி, ஆர்.எஸ்.எஸ்.ஸைக் கடுமையாக விமர்சித்து ஒரு பத்திரிகையில் எழுதி வந்திருக்கிறான். மாவோயிஸ்ட்களுக்கும், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தொடர்பு உண்டா? அது போல், ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கும் கோட்ஸேக்கும் தொடர்பில்லை என்றே தோன்றுகிறது. இன்றைய இந்தியப் பிரதமர், காந்திஜியை மறக்காமல் நினைவு படுத்தி வருகிறார் என்று தோன்றுகிறது. இன்னும் பொறுத்திருந்து பார்ப்போம். கே.ரவி 

  2. I endorse the feelings expressed by prof nageswari. Right time to remind ourselves of the father of our nation. However my research didi not reveal any nexus between RSS and the assasination of gandhiji. Godse had resigned from RSS and started writing articles abusing RSS in a magazine several years before the assasination. Is there any link between the maoists (naxalites) and the CPM? The same with RSS and Godse.

  3. “காந்திஜியைக் கொன்ற ஆர். எஸ். எஸ்ஸிலிருந்து வந்திருக்கும் மோதி” இந்த சொற்றடர் உண்மையல்ல. இச்சொற்றடர், ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் எதோ அந்த கொலைக்கு திட்டம் போட்டு ஆட்களை அனுப்பியதாக பொருளாகிரது; ஆனால் அது உண்மை இல்லை. காந்தி கொலை கேஸ் மற்றும் இந்திய அரசாங்க கமிஷன்களில் கொலை 4 நபர்களால் மட்டுமே செய்யப்பட்டது, அதில் ஆர்.எஸ்.எஸ். தலைமைக்கு பங்கு இல்லை என நிரூபிக்கப்பட்டது.

    மேலும் இன்றைய பிரதமர் மோதி அப்போது ஆர்.எஸ்.எஸ்.இல் இல்லை, 1970 களுக்கு பிந்தான் அதில் சேர்ந்தார்.

    அதனால் காந்தி கொலை – ஆர்.எஸ்.எஸ். – மோதி இவற்றை ஒரே மூச்சில் இணைத்து பேசுவது சரியாகாது.

    http://en.wikipedia.org/wiki/Assassination_of_Mahatma_Gandhi காந்தி கொலையாளர் நாதுராம் கோட்ஸே கொலைக்கு சில வருடம் முன், ஆர்.எஸ்.எஸை விட்டு தன் தீவிர கழகத்தை ஆரம்பித்தார். http://en.wikipedia.org/wiki/Nathuram_Godse

    விஜயராகவன்

  4. காந்திஜியைக் கொலைசெய்த நாதுராம் கோட்ஸே ஆர். எஸ். எஸ் சித்தாந்தத்தில் ஊறியவன். கொலைசெய்த சமயம் ஆர்.எஸ்.எஸ்ஸின் உறுப்பினராக இல்லையென்றாலும் அந்தச் சித்தாந்தம்தான் அவனைக் கொலைக்கு இட்டுச் சென்றது. நீதிமன்றத்தில் கொலையோடு ஆர்.எஸ்.எஸ்ஸை இணைப்பதற்கு ஆதாரங்கள் போதுமானதாக இல்லை. இதனால் ஆர். எஸ்.எஸ்ஸுக்கும் கொலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று ஆகிவிடாது. குஜராத் படுகொலையில் முதலமைச்சர் மோதியின் பங்கிற்கு ஆதாரம் இல்லையென்று விசாரணைக் கமிஷனும் நீதிமன்றமும் முடிவுக்கு வந்தாலும் பங்கு இல்லையென்று சொல்லிவிட முடியுமா? தமிழ்நாட்டில் டான்சி வழக்கில் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குத் தண்டனை வழங்க ஆதாரம் கண்டுபிடிக்க முடியவில்லையென்றால் ஊழல் செய்யவில்லை என்று ஆகிவிடுமா? ஆதாரங்களை இல்லாமல் ஆக்குவது குற்றம் செய்தவர்களின் திறமையையும் அதிகாரத்தையும் பொறுத்திருக்கிறது. ஆங்கிலத்தில் Absence of evidence is not necessarily proof of innocence என்று சொல்வார்கள்.
    ஆர். எஸ்.எஸ்.காரர்களே போற்றும் அன்றைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல் ஆர். எஸ்.எஸ்ஸுக்கும் காந்திஜியின் கொலைக்கும் உள்ள தொடர்பை இப்படிச் சொல்லியிருக்கிறார். “Organizing the Hindus and helping them is one thing but going in for revenge for its suffering on innocent and helpless men, women and children is quite another thing…Apart from this, their opposition to the Congress, that too of such virulence, disregarding all considerations of personality, decency or decorum, created a kind of unrest among the people. All their speeches were full of communal poison. It was not necessary to spread poison in order to enthuse the Hindus and organize for their protection. As a final result of the poison, the country had to suffer the sacrifice of the invaluable life of Gandhiji. Even an iota of the sympathy of the Government,or of the people, no more remained for the RSS. In fact opposition grew. Opposition turned more severe, when the RSS men expressed joy and distributed sweets after Gandhiji’s death. Under these conditions it became inevitable for the Government to take action against the RSS…Since
    then, over six months have elapsed. We had hoped that after this lapse of time, with full and proper consideration the RSS persons would come to the right path. But from the reports that come to me, it is evident that attempts to put fresh life into their same old activities are afoot.”[Milli Gazette, pp. 26-28.]

    Hindu Mahasabha and RSS were jointly responsible for the murder of Father of Nation,Mahatma Gandhi, this fact was further corroborated by Sardar Patel in a letter to a prominent leader of Hindu Mahasabha, Shyama Prasad Mookerjee on July 18, 1948.

    Sardar wrote:”As regards the RSS and the Hindu Mahasabha, the case relating to Gandhiji’s murder is sub- judice and I should not like to say anything about the participation of the two organizations, but our reports do confirm that, as a result of the activities of these two bodies, particularly the former, an atmosphere was created in the country in which such a ghastly tragedy became possible. There is no doubt in my mind that the extreme section of the Hindu Mahasabha was involved in the conspiracy.The activities of the RSS constituted a clear threat to the existence of Government and the State.Our reports show that those activities, despite the ban, have not died down. Indeed, as time has marched on, the RSS circles are becoming more defiant and are indulging in their subversive activities in an increasing measure.” [Letter 64 in Sardar Patel: Select Correspondence 1945-1950, Volume 2, Navjiwan Publishing House, Ahmedabad, 1977, pp. 276-277.]This appeared in The Milli Gazette (Online: Mar 17, 2011 Print Issue: 16-28 February 2011).

    காந்திஜி கொலைசெய்யப்பட்டபோது மோதி பிறக்கவில்லைதான். ஆனால்
    அவர் இன்று ஒரு கோடி ரூபாய் செலவில் சிலை எடுக்கப் போகும் பட்டேலும் மற்றவர்களும் சொல்லியது தெரிந்துதானே ஆர்.எஸ்.எஸ்ஸில் சேர்ந்தார்?

  5. இத்துடன் ஒரு முக்கிய இணைப்பையும் நான் சேர்க்க விழைகிறேன்.  கொலைக் குற்றப் புகாரில் தப்பியவரும், கோட்ஸேயின் மாமனாரும், குருநாதருமான  வீர சாவர்க்கரும் தேசப் பிதா காந்திஜி கொலைக்கு மறைமுகப் பங்கேற்றவர் என்பது என் அழுத்தமான கருத்து.

    முதலில் கோட்சே முழுக்க முழுக்க காந்தியை பின்பற்றினான்! 1937 இல் காந்தி யின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டு, கைதி செய்யப் பட்டுச் சிறைக்குச் சென்றவன், கோட்சே! பிறகு கொள்கை பிடிக்காமல் அவரை விட்டு விட்டு ராஷ்ட்ரிய சுவய சேவா சங்க இந்து போராட்டத் தளபதி வீர சாவர்க்கரைப் பின் பற்றினான். வீர சாவர்க்கர் இந்து மதத்தைக் காக்க வந்த கடவுளின் தூதராகப் போற்றப்படும் ஒரு பட்டாளிய இந்து [Messiah of Militant Hindu]. சாவர்க்கர் காந்தி யின் கொள்கை எல்லாவற்றையும் எதிர்க்கும் ஓர் எதேச்சை அதிகாரி! மெளண்ட் பாட்டன் தனது இந்தியப் பிரிவினைத் திட்டத்தை, 1947 ஜூலை 3 இல் வெளியிட்ட போது, அதைப் ‘பாரதத்தின் இருண்ட நாள்’ என்று பறை சாற்றி, வீர சாவர்க்கர் தனது பூரண எதிர்ப்புத் தெரிவித்தார்!

    1948 மே மாதம் 27 ஆம் தேதி நாதுராம் கோட்சே, ஆப்தே, கோபால் கோட்சே, சாவர்க்கர் உள்பட எட்டுப் பேர் கைதி செய்யப் பட்டு சதி வழக்குப் பல மாதங்கள் நடந்தது. முடிவில் நாதுராம் கோட்சே, ஆப்தே இருவரும் கொலைக் குற்றம் சாட்டப் பட்டு, நவம்பர் 15 ஆம் தேதி தூக்கிலிடப் பட்டனர்! கோபால் கோட்சே, கார்காரே, பாவா மூவருக்கும் 12 வருட சிறைத் தண்டனை கொடுக்கப் பட்டது! போதிய சாட்சி இல்லாது போனதால், சாவர்க்கர் உள்பட மற்றோர் விடுவிக்கப் பட்டனர்!

    http://jayabarathan.wordpress.com/death-of-mahatma-gandhi/

    சி. ஜெயபாரதன்

  6. தூய்மை இந்தியா  எனும் திட்டம் நல்லதாகவே படுகிறது என் போன்றோர்க்கு இது மேலோட்டமாக பார்க்கும் போது. ஆனால் இது போன்ற கட்டுரைகள் படிக்கும் போது தான் இதன் உள்ளார்ந்தமாக  புரிகிறது.

    ஒரு குஜராத்தியே இன்னுமொரு குஜராத்தியின் புயரையும் புகழையும் மறைப்பதும்,

    இந்தியாவை தூய்மையாக்க நினைப்பவர்களுக்கு உள்ளத் தாய்மை இல்லாது போனதும் வக்கிரமே.

  7. http://en.wikipedia.org/wiki/Assassination_of_Mahatma_Gandhi

    http://www.mkgandhi.org/assassin.htm

    ///Third attempt

    The third attempt was also a demonstration. However, people who testified before the Kapur Commission referred to it as an attempt at violence. Mohandas Gandhi began his talks with Mohammad Ali Jinnah on 9 September 1944 which lasted for 14 days. While leaving for Mumbai from Sevagram Ashram, a group of Hindu activists stopped him. They did not want him to go to Mumbai to hold talks with Jinnah, however, these protesters were stopped by volunteers of the ashram. The leader of this group, Nathuram Godse, was again found in possession of a dagger. The policeman who found the dagger then looked up to him and joked, “Why do you want to kill Gandhi? Let’s leave it to the leaders themselves… perhaps (Veer) Savarkar will finish off the job!” At which Godse retorted, “Gandhi does not require such an honor. Even the jamadar (sweeper) is enough for that.”[citation needed] This incident has also been portrayed in the film Gandhi by Lord Richard Attenborough. However, it is not portrayed as an attempt to murder but as a peaceful demonstration in which the demonstrators were waving black flags.///
    Reappraisal of Savarkar’s role[edit]

    ///Kapur commission also examined Savarkar’s role in the assassination. Godse had claimed full responsibility for planning and carrying out the attack, in absence of an independent corroboration of the prosecution witness Digambar Badge’s evidence implicating Savarkar directly, the court exonerated him citing insufficient evidence. According to Badge, on 17 January 1948, Nathuram Godse went to have a last darshan of Savarkar in Bombay before the assassination. While Badge and Shankar waited outside, Nathuram and Apte went in. On coming out Apte told Badge that Savarkar blessed them “Yashasvi houn ya” (“यशस्वी होऊन या” return victorious). Apte also said that Savarkar predicted that Gandhiji’s 100 years were over and there was no doubt that the task would be successfully finished.[26][27] However Badge’s testimony was not accepted as it lacked independent corroboration. This was later corroborated by the testimony of two of Savarkar’s close aides – Appa Ramachandra Kasar, his bodyguard, and Gajanan Vishnu Damle, his secretary, who had not testified in the original trial but later testified before the Justice Kapur commission set up in 1965. Kasar told the Kapur Commission that they visited him on or about 23 or 24 January, which was when they returned from Delhi after the bomb incident. Damle deposed that Godse and Apte saw Savarkar in the middle of January and sat with him (Savarkar) in his garden. Justice Kapur concluded: “All these facts taken together were destructive of any theory other than the conspiracy to murder by Savarkar and his group.”///

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=vLtvFirHT14

    S. Jayabarathan

  8. காந்தியைப் பற்றி இக்கட்டுரை சுட்டிக் காட்டும் மூலக் கருத்து:  “இந்து மதத்தீவிரவாதிகளினால் மகாத்மா காந்தி உயிரிழக்கும் நிலை ஏற்பட்டது”.  இது மறுக்க முடியாத உண்மை.  இந்த இந்து மதத் தீவிரவாதிகளுக்கு  என்ன பெயர் இருந்தால்தான் என்ன? அவர்கள் நோக்கம் நமக்குத் தெளிவு. 

    மதசார்பற்ற இந்தியாவினை உருவாக்குவதற்காக உழைத்த தலைவர்களை, இந்தியாவின் மத நல்லிணக்கத்திற்காக பாடுபட்ட முன்னோர்களை இக்காலத் தலைமுறையினர் நினைவில் இருந்து மறக்கடிக்கும் முயற்சிகள் சூழ்ச்சியுடன் நடைமுறைப் படுத்தப்படுகிறது.  

  9. //காந்திஜியைக் கொன்ற ஆர். எஸ். எஸ்ஸிலிருந்து வந்திருக்கும் மோதி இன்னொரு வகையாக நம் மனதிலிருந்து காந்திஜியின் நினைவை அழிக்க முயற்சி செய்கிறார்.//

    இது தவறான கூற்று.  கோட்சேக்கும், ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும் தொடர்பு இல்லை என்று என்றோ நிரூபித்தாகிவிட்டது.  திரும்பத் திரும்ப ஏன் பொய் என்று நிருபிக்கப்பட்டதையே எழுதுகிறீர்கள்? கேட்டால் கோட்சே ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தில் ஊறிப்போனவன் என்ற பதில் சொல்லிவிட்டால் போதுமா?  ஒருவரின் கொள்கைகளை எதிர்ப்பது வேறு, அவரைக் கொலை செய்வது வேறு.  கோட்சே ஆர்.எஸ்.எஸ் விட்டு வெளியேறியது அந்தக்குழுவின் கொள்கை பிடிக்காததால்தான்.  எனவே, கொலைவெறி பிடித்து அலைந்த அவனை, ஒரு குழுவின் சித்தாந்தத்தில் ஊறியவன் என்பது ஒப்புக்கொள்ளத் தக்கதல்ல.

    //மதத்தின் பெயரால் ஜனங்களை முட்டாளடித்து அவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்திய பிராமணர்களின் செயல்களை //

    இதுவும் இக்கட்டுரைக்குத் தேவைதானா?  கத்தோலிக்க சமயத்தைச் சேர்ந்தவர்கள் போப்பை நம்புகிறார்கள்.  அவரைப்பற்றி நீங்கள் இவ்வாறு எழுதுவீர்களா?  இல்லை, நபிகள் நாயகத்தைப்பற்றி மாறாகச் சொல்லத் துணிவீர்களா?  

    அப்படி இருக்க, திரும்பத் திரும்ப இந்து சமயத்தையும், பிராமனர்களைமட்டுமே உங்கள் எழுதுகோலின் cannon fodderஆக ஏன் ஆக்குகிறீர்கள்?

  10. //இந்தக் கட்டுரையின் கருத்துகள் அனைத்தும் ஆசிரியர் திருமிகு நாகேஸ்வரி அண்ணாமலை அவர்களின் சொந்த கருத்துக்கள் மட்டுமே. வல்லமை இதழுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். //

    உயர்திரு நாகேஸ்வரி அண்ணாமலை அவர்களே,

    தங்கள் கட்டுரைகளின் மையக் கருத்து போற்றத்தக்கதாக இருப்பினும், அடுத்தடுத்து இப்படி வல்லமையிலிருந்து பின் குறிப்புப பெற்றதிலில் இருந்து, தாங்கள் , வெறுப்புணர்வைத் தோன்றும் தேவையற்ற கருத்துகளைத் தங்கள் கட்டுரையில் சேர்க்கிறீர்கள் என்பது மீண்டும் புலனாகிறது.

    நான் முன்பு எழுதியதையே மீண்டும் பதிகிறேன்.  “வைரமாக இருக்கும் தங்கள் கட்டுரையில் ஏனம்மா தேவையின்றி கரிப்பூச்சு பூசுகிறீர்கள்?”

  11. இன்று சரியாக 30 வருஷங்களுக்கு முன் இன்னொரு காந்தி கொல்லப்பட்டார்; திருமதி இந்திரா காந்தி.
    http://www.bbc.com/news/world-29725430 அதன் காரணங்களும், விளைவுகளும் எல்லோருக்கும் தெரியும். அப்படி இருந்தும் காங்கிரஸ் கட்சியை அல்லது சீக்கியர் கட்சிகளை யாரும் கொலைக்காரக்கட்சி என பட்டம் சூட்டுவதில்லையே; அதன் பின் வந்த காங்கிரஸ் பிரதம‌மந்திரிகள் யாரையும் சீக்கியர்கள் கொலையோடு இணைத்து பேசுவதில்லையே. தமிழ்நாட்டில் “பெரியாரிசம்” அதிகமாகி போய்விட்டது; அபிப்பிராயங்கள் எல்லாம் அரசியல் ஆதரவு/எதிர்ப்பு சார்ந்த அவதூறுகளும், மறைப்புகளும் தான்.

    வன்பாக்கம் விஜயராகவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *