-மாதவ. பூவராகமூர்த்தி

Lunar-Eclipseஅப்பா புது வருட பஞ்சாங்கம் வந்தவுடன் அட்டை போட்டு ஊசியால் தைத்துக் கூடத்து தூணில் இருக்கும் ஆனியில் மாட்டி வைப்பதற்குமுன் தாத்தா அதைப்பிரித்து அவர் அப்பா அம்மா திதி என்று என்பதைக் குறித்து விடுவார். அத்தைப்பாட்டி இந்த வருஷம் கிரஹணம் எப்பெல்லாம் வரது என்பாள்.

தாத்தா ஒரு காது போன கண்ணாடியைப் போட்டுக் கொண்டு புரட்டாசியில் ஒரு சந்திர கிரஹணம் இருக்கு. மாசியில் ஒரு சூரிய கிரகணம் வரது என்பார். என் சின்ன வயதில் எனக்கு மிக ஆச்சர்யமாக இருக்கும் எப்படி இந்தப் பாம்பு பஞ்சாங்கக்காரர்கள் இதைக் குறிக்கிறார்கள்.

எழுத நிறைய இருப்பதால் மேலே போகிறேன். அந்தக் காலத்தில் இந்தக் கிரகண நேரம் வீட்டைப் பாடாய்ப்படுத்தும். ஒரு நாள் அத்தைப் பாட்டி சாதம் பிசைந்து போடும்போது “பாட்டி கிரகணம்னா என்ன?” என்றேன். பாட்டி, ”அது வந்து சந்திர சூர்யா இருக்காளோல்யோ அவளா வருஷத்துக்கு ஒரு தடவை பாம்பு வந்து முழுங்கிடும்” அப்படின்னா; ”எந்தப் பாம்பு நாகப்பாம்பா?” என்றேன். சிரித்துக் கொண்டே ”நவக்கிரகத்துல இருக்கே ராகு கேது பாம்பு அதுதான்.”

”அப்பறம் விட்டுடுமா?” என்றேன். ”ஒரு கால கட்டம் பிடிச்சிண்டு அப்பறம் விட்டுடும்” என்றாள்.

அன்று இரவு சொப்பனத்தில் பாம்பு என்னையும் முழுங்கியது. ஒரே இருட்டு; பயத்தில் வேர்க்கத் தொடங்கிவிட்டது. எழுந்து பார்த்தேன் நல்ல வேளை பாம்பு இல்லை!

நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது இந்தக் கிரகணம் எங்கள் சாப்பாட்டுத் திட்டத்தில் நிறைய மாற்றங்கள் கொண்டுவரும். தாத்தா, ”மங்களம் நாளைக்குக் கிரகணம்…சூரிய கிரகணம்; மத்தியானம் பன்னண்டு மணியோடு சாப்பாடு நிறுத்திடணும்; போஜனாதிகள் மறுநாள் காலை சூரியோதயத்துக்குப் பின்னாலதான்” அப்படின்னு ஒரு குண்டைப் போடுவார்.

அத்தைப்பாட்டி வேம்பு மாமாகிட்ட போய் எந்த எந்த நட்சத்திரத்து தோஷ நிவர்த்தி பண்ணனும்னு கேட்டுண்டு வா என்று அப்பாவை அனுப்புவார். அப்பா வேம்பு சாஸ்திரியிடம் கேட்டு நம் வீட்டில் யார் யாருக்குப் பட்டம் கட்டணும் என்று சொல்லி பனை ஓலை கொண்டுவருவார். சில சமயம் என் நட்சத்திரத்துக்கு வரும் என்று நினைக்கும் போது நாலாம் பாதம் உனக்கு இல்லை என்பார். கிரகணத்தின் போது அதை நெற்றியில் கட்டிக் கொண்டிருப்போம். கோவிலில் அர்ச்சனைப் பண்ணுவாள் அம்மா.

சூரிய கிரகணம் அதிகாலையிலேயே பிடித்து விட்டால் சாயங்காலம் சகல துணிகளை நனைத்து எங்களை குளிக்கச் சொல்வார்கள். முதலில் அம்மா குளித்துவிட்டு தலைக்கு ஒரு ஈரிழைத் துண்டை கட்டிக் கொண்டு அவசரமாக உலர்த்திய புடவை கட்டி வெங்கலப் பானையில் மிளகு சீரகம் தட்டிப்போட்டு ஒரு அரிசி நொய் உப்புமா சுடச்சுடப் பண்ணிக் கூடத்தில் வைப்பாள். அதற்குப் பக்க வாத்தியம் வத்தல் மிளகாய் போட்டு அரைத்த தேங்காய் சிவப்பு சட்னி. அப்பறம் புளியைப் பிசைந்து ஒரு பச்சைக்குழம்பு பண்ணுவாள். அதில் கறிவேப்பிலை இஞ்சி பச்சை மிளகாய் கறிவேப்பிலை எல்லாம் இருக்கும். தட்டில் போட்டவுடன் அந்த புளி தண்ணீரில் பச்சைமிளகாய் பிசைஞ்சு சாப்பிட நன்றாக இருக்கும்.

வீட்டில் இருக்கும் பால் தயிர் தோசைமாவு எல்லாவற்றிலும் தர்ப்பை போட்டு வைப்பார்கள். அப்படிப் போடவில்லை என்றால் அவைகளை மறுநாள் உபயோகப்படுத்தக் கூடாது.

சந்திர கிரகணம் சில சமயம் மிகத் தாமதாக வந்து அதிகாலை வரை நீடித்தால் மறுநாள் இரவு சந்திர தரிசனம் முடிந்து சாப்பிட வேண்டும் என்று கட்டளை.

பட்டினி என்று நினைத்தவுடன் முகம் வாடும். ஒரு நாளைக்கு நாலு அல்லது ஐந்து வேளை சாப்பாடோ, டிபனோ சாப்பிடும் எங்களை ஒரு நாள் முழுக்க பட்டினி என்றால் வேறு எந்த வேலையும் செய்யத் தோன்றாது.

மறுநாள் இரவு சந்திரன் வந்தவுடன் பார்த்துவிட்டுச் சாப்பிடுவோம். சந்திர சூர்ய கிரகணங்களின் போது கிரகண மத்ய வேளையில் தண்ணீரில் நின்று காயத்திரி ஜெபம் ஜெபிப்பார்கள். மஞ்சள் காமலை, தேள்கடி, சுளுக்கு, மந்திரங்கள் உருப்போட பலன் கிடைக்கும் என்பார் அப்பா. மஞ்சள் காமாலைக்கு ஊசி வைத்து மந்திரிப்பார். தேள்கடிக்குத் தென்னம் விளக்கு மாறைக் கட்டித் தேள்கடித்த இடத்தில் தடவி மந்திரம் சொல்வார். “இறங்கியிருக்கா?” என்பார். தேள் கடித்தவர்கள் வலியால் துடித்தபடி தலை ஆட்டுவார்கள். கொஞ்சநேரம் கழித்து எல்லாம் நீங்கி சரியாய் நடந்து போவார்கள். சுளுக்கு மந்திரம் மட்டும் அஸ்தமனத்தில்தான் மந்திரிப்பார்.

இலுப்பைக் கரண்டியில் விளக்கெண்ணெய் தடவிச் சுளுக்கிய இடத்திலும் தடவி மேலிருந்து கீழாக நீவி விடுவார் மந்திரம் ஜெபித்தபடி. முடிந்த வுடன் இடம்விட்டு எழுந்திருந்து காலை சுழற்றி உதறச் சொல்வார். இரண்டு நாள் மந்திரத்திற்குப் பிறகு சுளுக்கு சரியாகிவிடும்.

எலும்பு முறிவு என்றால் மூன்றாம் நாள் சொல்லி விடுவார். நீ மாவுக்கட்டு போட வேண்டியதுதான் என்று. அப்பா இருந்த வரை எனக்கு அந்த மந்திரங்களை எனக்கும் கற்றுக் கொடுங்கள் என்று கேட்கத் தோணவில்லை. அந்த மந்திரங்கள் எல்லாம் அப்பாவோடு போய்விட்டது.

அதே போல் வீட்டில் யாராவது பிள்ளையாண்டிருந்தால் (இன்றைய வாசகர்களுக்காக ஃபேமிலி வேயில் இருந்தால்) இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பிருந்தே தெருவே அவர்களுக்கு அட்வைஸ் வழங்க ஆரம்பித்துவிடும். ராஜி கமலத்தை ரூமை விட்டு வெளியே வரச்சொல்லாதே! ஜன்னல் கதவை ரூம் கதவை எல்லாம் மூடி வைச்சுடு. அவ எதுவும் பின்னப்படுத்தக் கூடாது; நகம் பிச்சிப் போடக்கூடாது. ஸர்வ ஜாக்ரதையா பாத்துக்கணும். பட்டாமணியார் ஆத்தில இரண்டாவது பொண்ணுக்கு பிரசவத்துல பார்த்தா ஒரு காது அடிப்பக்கம் சேரவே இல்லை என்று பயமுறுத்துவார்கள்.

என் மாட்டுப்பெண் ’ஃபேமிலி வே’ நாங்கள் எல்லாரும் அவளுக்கு வேண்டிய அறிவுரை சொல்லி விட்டோம். இந்த கிரகண வேளையில் பாத்திரம் அலம்ப வந்த ஈஸ்வரி (கிறித்துவ மதத்தைச் சேர்ந்தவர்) அம்மா சொல்ல மறந்துட்டுது; உங்க மருமகளை பத்திரமா இருக்கச் சொல்லுங்க என்றாள். நம்பிக்கைகள் மிக ஆழமாக வேரூன்றியிருக்கின்றன.

என் பள்ளி நாட்களில் எனக்குச் சந்திர கிரகணம் சூரிய கிரகணம் சொல்லிக் கொடுத்த வாத்தியார் என் நம்பிக்கைத் தகர்த்தெறியும் விதத்தில் சூரியன் பூமி சந்திரன் நேர்க்கோட்டில் வரும்போது நிழல்படுவது தான் கிரகணம் என்றார். அத்தைப் பாட்டிக்கு முதலில் இதைப் போய்ச் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்.

ஒரு ஞாயிற்று கிழமை பாட்டி கிரகண்ம்னா பாம்பு பிடிக்கறது எல்லாம் இல்லை சந்திரன் சூரியன் பூமி எல்லாம் ஒரு நேர்கோட்டுல வர்றது. ‘உளறாதடா“ என்றாள். நான் ஒரு சிம்னியை ஏற்றிக்கொண்டு வந்து என் தங்கைகளை இரண்டு பந்துகளை அந்த விளக்கு வெளிச்சத்தில் சுற்றிக் காண்பித்தேன் நிழல் வந்தது.

பாட்டி நம்ப மறுத்தாள் “பெரியவா சொன்னா அதுல ஒரு அர்த்தம் இருக்கும் அதெல்லாம் மார்க்குக்கு மட்டும் படி” என்றாள். நான் சொன்னதைப் பாட்டி புரிந்து கொள்ளவில்லை என்று வருத்தமாக இருந்தது. இந்த விஞ்ஞான உலகத்தில் இப்படியும் மனிதர்கள்!

என் பாட்டி சொன்னது எனக்கு இத்தனை வருடத்திற்குப் பிறகு அனுபவங்களில் தெரிந்தது மறைபொருளாய் நம் முன்னோர்கள் காந்த சக்தியின் கதிர் வீச்சுக்கள் பற்றிப் புரிந்து சொல்லியிருக்கிறார்கள் என்று.

கிரகணத்தின்போது ஒரு படி அரிசிக்குள் ஒரு இலுப்பைக் கரண்டியைச் சொருகி விட்டால் காந்த சக்தியில் படி கரண்டியில் நிற்கும் என்றும் கிரகணம் முடியும் வரை அது இருக்கும் என்றும் சொல்வார் அப்பா. நானும் அப்படி பண்ணி எல்லோருக்கும் காட்டுவேன். பிறகுதான் தெரிந்தது சாதாரண நாட்களிலும் நிற்கும் என்று.

நான் காலேஜ் படிக்கும்போது கிரகணம் வந்தால் அம்மா எனக்குச் சில சலுகைகளைத் தந்தாள். அந்த நேரத்தில எதுவும் சாப்பிடாதே என்று சொல்வாள். நண்பர்களுடன் டீயும் மசால் வடையும் சாப்பிடுவதில் ஒரு பெருமிதம்.

இன்று சந்திர கிரகணம் என் பெண்ணிடம் நான் சொன்னேன். அவள் நான் பார்த்துக்கிறேன் அப்பா என்றாள். பர்கர் பிட்ஸா எதுவும் சாப்பிடாமல் இருக்க வேண்டும்.

கிரகணத்தின் போதே இந்த பதிவைச் செய்ய வேண்டும் என்று ஆசை. உடல் ஜுரத்தால் அவதிப்பட்டாலும் ஆர்வீஎஸ் முந்தி இதைப் போட வேண்டும் என்று ஒரு கங்கணம்.

நீங்கள் சாப்பிட்டு விட்டீர்களா? ஆமாம் கிரகணத்தின்போது ஃபேஸ் புக் போகலாமா என்று பாம்புப் பஞ்சாங்கத்தில் போட்டிருக்கிறதா?

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “சந்திர கிரஹணம்

  1. எங்கள் வீட்டில் நடப்பது போலவே இருந்தது “கிரஹணம் ‘கட்டுரை வாழ்த்துகள்

  2. தங்கள் பாராட்டுகளுக்கு நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *