பிரபஞ்சத்தின் நூதன நுண்ணலை முகத்தை நுட்பமாய்க் காட்டும் ஐரோப்பிய பிளான்க் விண்ணுளவி

0
 
 

jay

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=lwELia_RAn0

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ZCZdrfDHwgU

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=_yWiE8yFPtk

பிரபஞ்சம் மாறி வரும், உப்பி
விரிந்து செல்லும்.
கால வரையற்ற பிரபஞ்சமே
கருவாகி
உருவாகி வருகிறது !
காலத்துக்கு ஆதியந்தம் இல்லை !
முறிந்த கருந்துளைக் கர்ப்பத்தில்
பிறக்கும்
சேய்ப் பிரபஞ்சம் !
மாண்ட பிரபஞ்சம்  உயிர்த்து
மீண்டெழும் !
ஆதி அந்த மற்ற
காலத் தூரிகை வரையும்
கோலமே
மூலமும் முடிவு மில்லாப்
பிரபஞ்சம் !
பிரபஞ்சம் முறிந்து சேயாய்ப்
பிறக்கும் !
உதித்த பிரபஞ்சம்
உப்பி விரிந்து வெப்ப இழப்பில்
சப்பிப் போகும் !
பிரபஞ்சம்
புத்துயிர் பெறக் கருந்துளைக்கு
வித்துள்ளது !
உயிரினங்கள் தோன்றி
மடிவது போல்
முடிவடையும் பிரபஞ்சம் !
புரிந்தும் புரியாய வேதமாய்ப்
புதிருக்குள் புதிராகும், நம்
அதிசயப் பிரபஞ்சம் !

+++++++++++++++

Planck Satellite Image comarision

ஐரோப்பிய விண்ணுளவி பிளான்க் வெளியிட்ட பிரபஞ்சத்தின் நுட்ப மதிப்பீடுகள் 

2009 இல் ஐரோப்பிய விண்வெளிப் பேரவை ஈசா அனுப்பிய பிளான்க் விண்ணுளவி [European Space Agency’s (ESA) Planck Satellite] சமீபத்தில் மிக நுட்பமாய் பெரு வெடிப்புக்குப் பிறகு நிரம்பிய  கதிர்வீச்சு எச்சங்களை [Remnants of Radiation] அளந்து  விரிந்து வரும் பிரபஞ்சத் தோற்றத்தைக் காட்டியுள்ளது.   இதுவரை வெளியான நாசாவின் கோப் விண்தேடி [COBE -Cosmic Background Explorer] , வமாப் விண்ணுளவி  [WMAP – Wilkinson Microwave Anisotropy Probe] ஆகிய இரண்டின் அலைப்படங்களை விடத் துல்லியமாக ஐரோப்பிய பிளான்க் விண்ணுளவி படமெடுத்துள்ளது.   அப்படத்தின் ஒளிக்காட்சி,  380,000 ஆண்டுகட்கு முன்பு வெளியான கதிரொளிக் காட்சி !  இன்று நாம் காணும் பிரபஞ்ச ஒளிக்காட்சியே “அகில நுண்ணலைப் பின்புலம்”  [Cosmic Microwave Background] என்று கூறப்படுகிறது.  அந்தப் பின்புலக் காந்த நுண்ணலை உச்சத் திணிவு [Maximum Intensity] :  150 GHz (2 mm).  உஷ்ணம் : 3K [Kelvin]. அவ்விதம் கிடைத்த அகில நுண்ணலைப் பின்புல வரைவு ஆய்வுகள், பிரபஞ்சவியலை  [Cosmology] ஆழ்ந்து அறிந்து கொள்ள உதவுகின்றன.

 

Planck Image -1

 

பிளான்க் விண்ணுளவி ஒன்பது தனித்துவ அலை நீளத்தை [Nine Distinct Wave Lengths] அளக்கும்  ஆற்றல் உள்ளது.  ஒவ்வோர் அலை நீளமும் ஒவ்வொரு தனித்துவக் கதிர்வீச்சின் பண்பாடுகளை ஆராய உதவும்.   2013 மார்ச்சில் வெளிவந்த பிளான்க் விண்ணுளவியின் தகவல்படி ஒளிமந்தை விண்மீன்களின் பொதுப் பிண்ட விகிதம் [Normal Matter of Stars & Galaxies]: பிரபஞ்ச சக்தியில் 4.9% பரிமாணம். மற்ற கரும்பிண்டம் [Dark Matter] : 26.8%. , மர்மமான கருஞ்சக்தி  [Mysterious Force, Dark Energy]  : 68.3%.   மேலும் 2014 அக்டோபர் 29 இல் பிரபஞ்சத்தின் ஒரு புதிய வயதையும் பிளான்க் குழுவினர் அறிவித்தார் : 13.8 பில்லியன் ஆண்டுகள் என்று.

 

“நமது பிரபஞ்சம் பத்து பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மெய்யாகவே வெறுமையிலிருந்து தோன்றியதாக நான் அனுமானம் செய்கிறேன் ! . . . . ஏன் அவ்விதம் நிகழ்ந்தது என்னும் கேள்விக்கு எனது தாழ்மையான முன்னறிவிப்பு இதுதான் : எப்போதாவது ஒரு யுகத்தில் அப்படி நேரும் தோற்றங்களில், நமது பிரபஞ்சமும் ஒன்று என்பது !”

எட்வேர்டு டிரையன், பௌதிகப் பேராசிரியர் நியூயார்க் பல்கலைக் கழகம் (1975)

 

Accurate Space Images

 

“நமது பிரபஞ்சம் பெரும் பாய்ச்சலில் (Big Bounce) உதித்ததே தவிரப் பெரு வெடிப்பில் (Big Bang) தோன்றவில்லை !  அதாவது முதலில் குவாண்டம் ஈர்ப்பாற்றல் நிகழ்த்திய விந்தை விளைவுகளால் உள் வெடிப்பு தூண்டிப் புற வெடிப்பில் (An Implosion Triggering an Explosion) உண்டானது.”

மார்டின் போஜோவால்டு,  (Martin Bojowald, Asst Professor of Physics, Penn. State, USA) (Authour of Big Bounce Theory) (July 2007)

“வெறுமையிலிருந்து எதுவுமே உருவாக முடியாது.”

லுகிரிடியஸ் ரோமானிய வேதாந்தி (Lucretius) கி.மு. (99-55)

 

Fig 1A What Powered the Big Bang

 

“பெரு வெடிப்பு நியதியில் உள்ள இடைவெளித் துளைகளை அகிலத்தின் உப்புதல் கொள்கை (Cosmic Inflation Concept) அடைத்து நமது பிரபஞ்சத்தைப் பலவற்றுள் ஒன்றாக மாற்றி விட்டது.  மேலும் விஞ்ஞானிகளுக்கு உப்புதல் கொள்கை பல்வேறு பிரபஞ்சங்களைப் (Multiverse) பற்றி உரையாட மன உறுதி தந்துள்ளது.  அதாவது பிரபஞ்சத்தில் பிரபஞ்சங்கள் (A Universe of the Universes) இருப்பது”

ஆடம் ஃபிராங்க் (Astronomy Magazine Editor, Physicist)

விரியும் பிரபஞ்சத்தைப் பற்றி அறிய ஒரு பிறவிக் காலம் முழுதும் அர்ப்பணித்தாலும் போதாது ! மறைந்து கிடக்கும் அகிலத்தின் மர்மங்கள் சிறிது சிறிதாகவே மலர்கின்றன ! அநேக புதிய புதிர்களை வரப் போகும் எதிர்கால யுகங்களுக்காக, இயற்கை தனியாக வைத்துள்ளது ! எல்லா மர்மங்களையும் ஒரே காலத்தில் விடுவிக்க இயற்கை ஒருபோதும் நம்மை விடுவதில்லை !

ஸெனேகா (முதல் நூற்றாண்டு ஞானி)

Fig 1C Before the Big Bang Explosion


புரிந்தும் புரியாத புதிருக்குள் புதிரான பிரபஞ்சம் !

பிரபஞ்சம் எப்படித் தோன்றியது, எப்போது தோன்றியது, எதனால் தோன்றியது என்னும் வினாக்கள் பல்லாண்டுகளாய் விஞ்ஞானிகளுக்குச் சவாலாய் இருந்து வருகின்றன !  யானையைப் பார்த்த குருடராய் விஞ்ஞானிகள் தடுமாறி ஒவ்வோர் அங்கத்தை வெவ்வேறு விதமாய் விளக்கி குழப்பத்தையும் மயக்கத்தையும் உண்டாக்கி வருகிறார்.  இதுவரைப் பெரும்பான்மையினர் ஒப்புக் கொண்ட பிரபஞ்சப் “பெரு வெடிப்பு நியதியும்” (Bib Bang Theory) அத்திவாரத்தில் ஆட ஆரம்பித்துள்ளது !  பெருவெடிப்பு நியதியை வேத நெறியாக ஏற்றுக் கொள்ளாது பல்வேறு புதிய கோட்பாடுகள் முளைவிட்டுக் கிளைவிட்டுள்ளன.  பூமியில் விழுந்த பூர்வீக விண்கற்களின் கதிரியக்க எச்சங்களின் அரை ஆயுளை (Radioactive Half Life of Decay Elements) ஆராய்ந்து விஞ்ஞானிகள் இப்போதுள்ள பிரபஞ்சம் 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றியது என்று கணித்துள்ளார்.  அந்தக் கணித எண்ணிக் கையில் ஐயப்பாடு எதுவும் இல்லை.  பிரபஞ்சம் பெரு வெடிப்பில் தோன்றியது என்று கூறினால் பெரு வெடிப்புக்கு முன்னால் விண்ணில் என்ன இருந்தது என்னும் வினா எழுகிறது !  வரையறை யில்லா அசுரத் திணிவுள்ள கடுகுப் பிண்டம் (Minute Matter of Infinite Density) ஒன்று வெடித்துப் பிரபஞ்சம் உண்டானது என்று அனுமானிக்கும் போது அந்தப் புதிரான பிண்டம் எந்த பௌதிக விதியையும் பின்பற்றுவதில்லை.  வரையறை யில்லா அத்தகைய திணிவுப் பிண்டத்தைச் சில விஞ்ஞானி களால் கற்பனை செய்ய முடியவில்லை !  ஐயப்பாடு எழுப்பும் பெரு வெடிப்பு நியதிக்குப் பதிலாக இப்போது வேறு சில புதுக் கோட்பாடுகள் வெளிவந்துள்ளன !

 

Fig 1D Beginning to Now

நூறாண்டுகளுக்கு முன் அறியப்பட்ட பிரபஞ்சம் மிக்க எளியது. நீடிப்பது நிலையானது.  ஒற்றைக் காலாக்ஸி (நமது பால்வீதி) கொண்டு கண்ணுக்குத் தெரியும் ஒரு சில மில்லியன் விண்மீன்களை உடைய ஒரு பிரபஞ்சம் !  21 ஆம் நூற்றாண்டில் விண்ணோக்கிகள் மூலம் காணப்படும் பிரபஞ்சம் பிரமிக்க வைப்பது !  கோடான கோடி காலாக்ஸி ஒளிமந்தைகள், பல கோடி பில்லியன் விண்மீன்கள் உலாவிடும் பிரபஞ்சம் !  நூற்றுக்கு மேற்பட்ட மூலக அணுக்களும், புரோட்டன், நியூட்ரான், எலெக்டிரான் போன்ற பரமாணுக்களும், அவற்றைப் பிணைத்த குவார்க்குகள், லெப்டான்கள் (Quarks & Leptons) போன்ற நுன்ணிய அடிப்படைத் துகள்களும் உடையது.  விண்ணோக்கிக் கருவிகளுக்குப் புலப்படும் பிரபஞ்சப் பகுதியில் சுமார் 100 பில்லியன் காலாக்ஸிகளும், அவை ஒவ்வொன்றிலும் சுமார் 100 பில்லியன் விண்மீன்களும் எண்ணற்ற அண்டக் கோள்களும் இருப்பதாகக் கணிக்கப் படுகிறது.

Fig 1E Big Bang Funnel

காலாஸிகளை விண்மீன்களின் தோரணங்களோடு ஓர் ஒழுங்கு அமைப்பில் அடைத்து வைத்திருப்பது அவற்றின் மையத்தில் உள்ள புதிரான அசுரக் கருந்துளையின் (Black Hole) ஈர்ப்பியல் விசையே !  காலாக்ஸி ஒளிமந்தைகளை விரைவாக விரட்டிப் பிரபஞ்சத்தை விரியச் செய்வது மாயமான கருஞ்சக்தி (Dark Energy) !  கருஞ்சக்தி கவரும் ஈர்ப்பு விசைக்கு எதிரான ஒரு விலக்கு விசை !  இந்த விலக்கு விசைதான் ஒளிமந்தைகள் ஒன்றுடன் ஒன்று மோதி முறிந்து போகாதவாறு அவற்றைத் தனியாகக் கடத்திச் செல்கிறது !

பிரபஞ்சம் ஒன்றில்லை பல்வேறு !

2006 ஆம் ஆண்டில் வாடர்லூ பல்கலைக் கழகத்தின் அமெரிக்க விஞ்ஞானி லீ ஸ்மோலின் (Lee Smolin) “கருவிருத்திப் பிரபஞ்ச நியதி” (Fecund Universes Theory) என்னும் தன் நூல் ஒன்றில் கூறுவது இதுதான் :  அந்த நியதி பிரபஞ்சப் பிறப்புகளின் இயற்கைத் தேர்வுக்குப் பயன்படுகிறது.  கருந்துளைகள் முறிந்து புதிய பிரபஞ்சங்கள் உருவாகும் என்று குறிப்பிடுகிறார்.  சேய்ப் பிரபஞ்சம் தாய்ப் பிரபஞ்சத்தின் அடிப்படை நிலைப்புப் பண்பாடுகளைச் சில மாறுபாட்டுடன் பெற்றிருக்கும் !  சேய்ப் பிரபஞ்சம் மூலப் பிரபஞ்சத்தின் பண்பாடுடன் அதன் வாரிசாக இருக்கும்.  வாரிசாக இல்லாத தோல்விக் குணப்பாடுள்ள பிரபஞ்சங்கள் சிசு உருவாக்குவதற்கு முன்பே “வெப்ப மரணத்தை” (Heat Death due to High Entropy) எய்து விடும். !  லீ ஸ்மோலின் உயிரியல் விஞ்ஞானத்தைப் (Biology) பின்பற்றித் தனது கருவிருத்திப் பிரபஞ்ச நியதியை விளக்குகிறார்.  அந்த நியதி ‘அகிலவியல் இயற்கைத் தேர்வு’ (Cosmological Natural Selection) என்றும் குறிப்பிடப் படுகிறது.

Fig 1F The Future of the Universe

லீ ஸ்மோலின் ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் எத்தனை கருந்துளைகள் உள்ளனவோ அத்தனையும் முறிந்து அவை சேய்ப் பிரபஞ்சங்களாய்ப் பிறக்கும் என்று கூறுகிறார்.  ஆதலால் கருவிருத்திப் பிரபஞ்ச நியதி சார்லஸ் டார்வின் விளக்கிய பரிணாம வளர்ச்சி விதியை ஒட்டி இருப்பதாகத் தெரிகிறது.  லீ ஸ்மோலின் நியதியைத் திறனாய்வு செய்த ஜோ ஸில்க் (Joe Silk) என்பவர் சுட்டிக் காட்டுவது :  “நமது பிரபஞ்சத்தில் கருந்துளைகள் உற்பத்தி செய்யும் தகுதி நான்கு அடுக்கு (Four Orders of Magnitude) குன்றி யுள்ளது.”  சிற்றாயுள் பிரபஞ்சங்கள் (Short-lived Universes) பெருத்துப் போய் நீளாயுள் பிரபஞ்சங்களை (Long-lived Universes) ஆளுமை செய்யக் கூடுமாத லால், பரிணாம இயக்கத்தை (Evolutionary Dynamics) உண்டு பண்ண ‘பற்பல பிரபஞ்ச காலத்’ (Multiversal Time) தொடர்வைத் திணிக்கக் கூடாது என்று வேறொரு விஞ்ஞானி அதையும் எதிர்க்கிறார்.

Fig 1F The inflation Tgeory

2009 ஆம் ஆண்டில் வெளியிட்ட கட்டுரையில் லீ ஸ்மோலின் தனது முந்தைய கருத்தை நிராகரித்து வேறொரு புதிய கொள்கையை அறிவித்தார். “ஒரே ஒரு பிரபஞ்சம்தான் உள்ளது.  அதனை வடிவளவில் ஒத்துள்ள வேறெந்தப் பிரபஞ்சங்களும் கிடையா !  ஒன்றுக்கு ஒன்று இணையாகப் பல்வேறு பிரபஞ்சங்களும் (Multiverse) இருப்பவையல்ல !  மேலும் ஒன்றைப் போல் ஒன்றுள்ள பிரபஞ்சமும் ஒன்றுக்குள் ஒன்று அடங்கியுள்ள பிரபஞ்சமும் இல்லவே இல்லை.

பெரு வெடிப்பு நிகழ்ச்சிக்கு முன்னால் நேர்ந்தது என்ன ?

பென்சில்வேனியா மாநிலப் பல்கலைக் கழகத்தின் பௌதிகத் துணைப் பேராசியர் மார்டின் போஜோவால்டு ஒரு புதிய கணித மாடலைப் படைத்து “முடிச்சுத் துகளியல் ஈர்ப்புக் கோட்பாடு” (Loop Quantum Gravity Theory) ஒன்றில் ஆழ்ந்து சிந்தனை செய்தார்.  அது ஐன்ஸ்டைனின் ஒப்பியல் நியதியையும் துகளியல் யந்திரவியலையும் (Relativity Theory & Quantum Mechanics) இணைத்தது.  அந்தக் கணிதச் சமன்பாட்டில் பிரபஞ்சத்தின் ஆரம்ப காலம் (Time T=0) என்று நிரப்பினால் பிரபஞ்சத்தின் தோற்றக் கொள்ளளவு பூஜியமில்லை என்பது தெரிய வந்தது.  மேலும் அடர்த்தி முடிவில்லாமை அல்ல (Density of the Universe is NOT Infinite) என்றும் தெளிவானது.  அதாவது அவரது புதிய கணித மாடல் பிரபஞ்சத்தின் தோற்ற கால நிலையை ஆராய உதவியது.

Fig 1G The Doppler Shift

முன்பே இருந்த முடிச்சுத் துகளியல் கோட்பாட்டைப் புதிய கணித மொழியில் போஜோவால்டு எளிதாக்கினார்.  ஆனால் அவர் பயன்படுத்திய கணிதச் சமன்பாட்டு விதத்தில் ஒரு மகத்தான நிகழ்ச்சி பிரமிப்பை உண்டாக்கியது.  அதாவது தற்போதுள்ள நமது பிரபஞ்சத்துக்கும் முன்பாக வேறொரு பிரபஞ்சம் இருந்திருக்கிறது என்பதைக் காட்டியுள்ளது.  இது சற்று சிக்கலான சிந்தனைதான்.  ஏனெனில் பிரபஞ்சப் பெரு வெடிப்பில் கால வெளி அந்தக் கணத்தில் தோன்றின என்பது அறியப் படுகிறது.  போஜோவால்டு கணிப்பு மெய்யானால் அது இதற்கு முந்தி இருந்த ஒரு பிரபஞ்சத்தை எடுத்துக் காட்டுகிறது.  அது எங்கோ ஒரு மூலையில் ஒளிந்து கொண்டுள்ளது.  ஆனால் அது சிறுத்துக் குறுகிப் போய் பேரசுரத் திணிவில், பேரளவு உஷ்ணத்தில் மிகக் மிகக் குள்ளி காலவெளிக் கடுகாய்க் (Ultra-dense, Ultra-Hot & Ultra-Small Ball of Space Time) கிடக்கிறது !  ஏதோ ஓர் கட்டத்தில் எப்படியோ அந்த உஷ்ணத் திணிவுக் கடுகைத் “துகளியல் ஈர்ப்பாற்றல்” (Quantum Gravity) இழுத்துச் சுருக்கி வைத்துக் கொண்டது.Fig 1H Holographic Universe

இதை வேறு விதக் கண்ணோட்டத்தில் பிரபஞ்ச விளைவுகளைப் படிப்படியாகப் பின்னோக்கிப் பார்த்துக் கால மணி பூஜியத்துக்கு (Time T=0) நெருங்கினால் போஜோவால்டு கணித்த முந்தைய பிரபஞ்சத்தின் காணாத தோற்றம் தெரிகிறது.  போஜோவால்டு அந்த பூஜிய காலமணி நிகழ்ச்சியை “பெரும் பாய்ச்சல்” (Big Bounce) என்று குறிப்பிடுகிறார்.  அதாவது முந்தைய பிரபஞ்சம் அந்தப் பூஜிய கால மணியில் சீர்குலைந்து மறுபடியும் ஒரு புது முகப் பிரபஞ்சமாக, நமது பிரபஞ்சமாகக் குதித்தது என்று போஜோவால்டு கூறுகிறார்.  அவரது கணிசச் சமன்பாடுகளில் பூர்வீகப் பிரபஞ்சத்தின் வடிவம் எத்தனை பெரியது என்பதைக் கணக்கிட முடியவில்லை.  ஆகவே போஜோவால்டு கோட்பாட்டில் அத்தகைய “உறுதியில்லா ஊகிப்புகள்” (Uncertain Speculations) இருப்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

Fig 2 Hubble's Long Sight

நான்கு வகுப்பு வடிவ நிலைகளில் பிரபஞ்ச அமைப்புகள்

“பல்லரங்கப் பிரபஞ்சம்” அல்லது “மேல்நிலைப் பிரபஞ்சம்” (Multiverse, Multi-Domain Universes or Meta-Universe) என்பது நிகழக் கூடிய பல்வேறு இணைப் பிரபஞ்சங்கள் பற்றிய ஓர் சித்தாந்தப் பௌதிகக் கோட்பாடு (Hypothesis of Possible Multiple Universes).  அதனுள் நாம் வாழும் பிரபஞ்சமும் அடங்கும்.  அது ஒரு பௌதிக விஞ்ஞான மெய்ப்பாடுதான் !  பற்பல பிரபஞ்சங்களின் கட்டமைப்புகள் (Structures of the Multiverse), ஒவ்வொரு பிரபஞ்சத்தின் இயல்பான பண்பாடு (The Nature of Each Universe), பல்வேறு பிரபஞ்ச உட்பண்டங்களின் உறவுப்பாடு (The Relationship between the Constituent Universes), ஆகியவை குறிப்பிட்ட பிரபஞ்சத்தின் சித்தாந்த பௌதிகக் கோட்பாடைச் சார்தவை.  “Multiverse” என்னும் சொல்லை ஆக்கியவர் அமெரிக்க வேதாந்தி வில்லியம் ஜேம்ஸ் (1848-1910).  அவற்றை (Alternate Universes, parallel Universes, Quantum Universes, Parallel Worlds, Alternate Realities & Alternate Timelines) என்றெல்லாம் குறிப்பிடுகிறார்கள்.

 

Fig 6 Dr Edwin Hubble's Telescope

பல்லரங்கப் பிரபஞ்சங்கள் வகுப்பு -1, வகுப்பு -2, வகுப்பு -3 & வகுப்பு -4 (Level I, Level II, Level III & Level IV) என்று நான்கு வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.  இந்தப் வகுப்பு முறைகளை ஆக்கியவர் மூவர் :  1. ஜியார்ஜ் எல்லிஸ் (George Ellis).  2. யு. கெர்ச்செனர் (U. Kirchner) & 3. டபிள்யு. ஆர். ஸ்டோஜர் (W.R. Stoeger).  அப்பிரிவு முறைகளுக்கு “டெக்மார்க் வகுப்பியல்” (Tegmark Classification) என்பது பெயர்.

1.  பல்லரங்க பிரபஞ்சங்கள் (Multi-Domain Universes)

வகுப்பு : 1 (திறந்த வெளிப் பிரபஞ்சம்)

யுகங்கள் கடந்த பிரபஞ்சத்தின் எல்லையிலா அகிலவெளி வீக்கம் பற்றி ஒரு பூர்வீக முன்னறிவிப்புச் சித்தாந்தம் இது.  அதனில் ஆதிகால நிபந்தனைகள் எடுக்கப்பட்டு ஹப்பிள் தொலைநோக்கி காணமுடிந்த கொள்ளளவுகள் இருக்க வேண்டும்.

(Level : 1 A Generic Prediction of Cosmic Inflation is an infinite Ergodic Universe which, being infinite, must contain Hubble Volumes, realizing all initial conditions)

2.  வேறுபட்ட பௌதிக நிலைத்துவம் கொண்ட பிரபஞ்சங்கள் (Universes with Different Physical Constants)

வகுப்பு : 2 (ஆன்ரி லிண்டேயின் குமிழ் நியதி) (Andrei Linde’s Bubble Theory)

கொந்தளிக்கும் அகிலவெளி வீக்கத்தில் வெப்ப அரங்கங்கள் பரிமாணவியல், நுண்துகள் இருப்புகளுடன் வேறுபட்ட, வளப்பூட்டும் பௌதிக நிலைப்பாடுகள் அடைவது.

 

Fig 1B Composion Cosmos Details

பழைய மதிப்பீடுகள்

 

(Level : 2 In Chaotic Inflation other Thermalized Regions may have different Effective Physical Constants Dimensionality & Particle Content.  Also it includes Wheeler’s Oscillating Universe Theory)

3.  பல்வேறு பிரபஞ்சங்கள் (Multiverses)

வகுப்பு : 3

நுண்துகள் யந்திரவியலை விளக்கும் போது சமத் தோற்றம் கொண்ட ஆனால் மாறுப்பட்ட தன்மையுள்ள பல்வேறு பிரபஞ்சங்களைப் பற்றிக் கூறுகிறது.  2007 செப்டம்பரில் டேவிட் டாய்ட்ஸ்ட் (David Deutsch) பல்வேறு உலகங்களைப் பற்றி விளக்கமும் நிரூபணமும் அளித்தார்

(Level : III An Interpretation of Quantum Mechanics that proposes of Multiple Universes which are identical but exist in possibly different States)

4.  முடிவான முழுத்தோற்றப் பிரபஞ்சங்கள் (Ensemble Theory of Tegmark – Ultimate Ensemble)

வகுப்பு : 4 மற்ற கணித அரங்குகள் வெவ்வேறு அடிப்படைப் பௌதிகச் சமன்பாடுகளை உண்டாக்குகின்றன.

(Level : IV Other Mathematical Structures give different fundamental Equations of Physics)

 

Fig 4 Universe Expansion Models

 

காலமற்ற ஒரு பிரபஞ்சம் (A Timeless Universe) !

அகிலத் தோற்றத்தைப் பற்றிய புதுக் கோட்பாடுகள் நமது பிரபஞ்சத்தைப் பல்வேறு பிரபஞ்சங்களில் ஒன்றாக இருக்கலாம் என்று கூறுகின்றன !  மேலும் “காலம்” என்று ஒன்றில்லை என்னும் புதியதோர் கருத்தும் விஞ்ஞானிகளிடையே தற்போது உலவி வருகிறது.  அமெரிக்க விஞ்ஞானி லீ ஸ்மோலின் (Lee Smolin) ‘காலமற்ற பற்பலப் பிரபஞ்சக்’ (Timeless Mulitiverse) கருத்தை எதிர்க்கிறார் !  மற்ற பிரபஞ்சங்களில் ஒன்றான காலமற்ற நமது பிரபஞ்சத்தில் ‘பௌதிக விதிகள்’ (Laws of Physics) வெவ்வேறாக இருக்கும் என்று கருதப் படுகிறது.

மூன்று புது விதப் பிரபஞ்சங்கள் இருக்கலாம் என்று சில விஞ்ஞானிகள் எண்ணுகிறார்.  முதலாவது ஒரே ஒரு பிரபஞ்சம் உள்ளது என்பது.  பற்பல பிரபஞ்சங்கள் உள்ளன என்று காட்டுவது விஞ்ஞானப் புனைகதைகளே ! இரண்டாவது : காலம் என்பது மெய்யானது (Time is Real) மேலும் உணரப் படுவது (Time Exists) !  காலமற்ற பிரபஞ்சம் (Timeless Universe) உள்ளது என்பது தர்க்கத்துக்கு உரியது.  மூன்றாவது : முந்தைய பிரபஞ்சம் முறிந்து மீளும் சேய்ப் பிரபஞ்சம்.

 

 

(தொடரும்)

+++++++++++

தகவல்கள்:

Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines.  Earth Science & the Environmental Book.

1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
2. 50 Greatest Mysteries of the Universe – How Did the Big Bang Happen ? (Aug 21, 2007)
3. Astronomy Facts File Dictionary (1986)
4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
6. Cosmos By Carl Sagan (1980)
7. Dictionary of Science – Webster’s New world [1998]
8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
10 Hyperspace By : Michio kaku (1994)
11 Universe Sixth Edition -Exploring the Early Universe By: Roger Freedman & William Kaufmann III (2002)
12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
17 The Geographical Atlas of the World, University of London (1993).
18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)
20 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40801101&format=html (பிரபஞ்சம் ஒன்றா ? பலவா ?)
21 http://jayabarathan.wordpress.com/2009/01/09/katturai49/ (பெரு வெடிப்புக்கு முன் பிரபஞ்சத்தில் நேர்ந்தது என்ன ?)
22 Big Bang Theory – The Premise
23 Dark Energy – Universe Expansion Discovered.
24 The Ultimate Fate of the Universe (Wikipedea)  (Sep 9, 2009)
25 Time May not Have a Beginning & it might not Exist at all -Three Theories That Might Blow up the Big Bang Theory [March 25, 2008]
25 Expanding Universe, Multiverse & Timeless Universe (June 2, 2009)
26 The Question of the Beginning & the End of the Universe (June, 2006)
27 Scientific American – Origin of the Universe (September 2009)
28 Daily Galaxy : Will the Laws of Physics Extend Beyond our Universe (August 29, 2009)
29 Wikipedia -The Life of Cosmos & The Trouble with Physics By: Lee Smolin (September 4, 2009)

30. http://sci.esa.int/planck/53116-last-command-sent-to-esa-planck-space-telescope/  [October 23, 2013]

31.  http://sci.esa.int/planck/53999-planck-takes-magnetic-fingerprint-of-our-galaxy/  [May 6, 2014]

32.  http://en.wikipedia.org/wiki/Planck_(spacecraft)  [October 5, 2014]

33.  http://article.sapub.org/pdf/10.5923.j.astronomy.20130202.01.pdf  [February 2, 2013]

34.  http://www.dailygalaxy.com/my_weblog/2014/10/the-planck-spacecraft-an-epic-new-picture-of-our-dark-invisible-universe.html  [October 29, 2014]

++++++++++++++++

S. Jayabarathan (jayabarathans@gmail.com) (November 1, 2014)

Attachments area
Preview YouTube video Planck satellite scanning the Sky

Planck satellite scanning the Sky

Preview YouTube video NASA | The Planck Space Telescope: Revealing the Ancient Universe [HD]

NASA | The Planck Space Telescope: Revealing the Ancient Universe [HD]

Preview YouTube video Planck satellite — solving cosmic conundrums – Dr.Tech. Anne Lähteenmäki

Planck satellite — solving cosmic conundrums – Dr.Tech. Anne Lähteenmäki

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *