இலக்கியம்கவிதைகள்

உலவுறாய் வாலி நீயும்!

-எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

வாலியுன் பாட்டைக் கேட்டால்
வலியெலாம் பறந்தே போகும்
போலிநீ இல்லை ஐயா
பொங்கிடும் தமிழின் ஊற்று!                         Vaali

 நூலெலாம் ஆக்கித் தந்து
 நுகர்ந்திடச் செய்தாய் ஐயா
 நாலுபேர் உன்னைப் போற்ற
 நயமிகு கவிதை தந்தாய்!

 ‘வாலிபக் கவிஞன்’ என்று
  வரம்வாங்கி வந்தாய் ஐயா
  வைரமாய் வரிகள் பாடி
  மனங்களில்  பதிந்தே விட்டாய்!

 தெருவெலாம் உந்தன் பாடல்
 தினமெமைக் கேட்கச் செய்தாய்
 தமிழிலே மூழ்கி நாளும்
 தரமுடைக் கவிதை தந்தாய்!

 நரைதிரை வந்த போதும்
 நாளெலாம் பாடி நின்றாய்
 உரமுடைக் கவிஞன் ஆக
 உலவுறாய் வாலி நீயும்!

Share

Comment here