– இன்னம்பூரான். 
தொபக்கட்டீர்‘… விபரீத புத்தி!’ பழமொழிகளை, அதுவும் வடமொழி கலப்பிலே எழுத அச்சமாக இருக்கிறது. ஆனாலும் அவை இயல்பாகவே உண்மை உரைக்கின்றன. சில ஜந்துக்கள், கூண்டோடு கூண்டாக, திருட்டு ஏணியில் வானமேறி, தன்மானம் இழந்தவர்கள். அந்த வெள்ளைக்காலர் திருடர்கள் அபரிமிதமாகவே குழப்பி, ஆட்டைத் தூக்கி மாட்டில் போடுவார்கள். மாட்டைத் தூக்கி ஆட்டில் போடுவார்கள். தலைகீழ் நிற்பார்கள். அர்த்தராத்திரியில் பிடித்தக் குடையை அநாமதேய பினாமிகளுக்கு பரிசளிக்கும் பேமானி ஆவார்கள். எதிர்வீட்டில் அடகு பிடிப்பார்கள். பக்கத்தூர் வங்கியிலே, இல்லாளுக்குகூட தெரியாமல், மர்ம நம்பர் கணக்கு வைப்பார்கள். ஹவாலாவில் மூழ்கி எழுவார்கள். ஏழு தலைமுறைக்கு சொத்து சேர்த்து, பெற்ற பிள்ளைக்குக் கூட கிடைக்காதபடி, முடக்கிப் போடுவார்கள். தருமமிகு சென்னை வீட்டு சொந்தக்காரர்களும், அரசு ஊழியர்களும், காலங்காலமாக, அரசை வஞ்சித்து,கையூட்டு மரபை பேணி வளர்க்கவே, வளர்த்த கடா நெஞ்சில் பாய்கிறது. அப்பன் சேத்த சொத்து, பெற்ற பிள்ளைக்குக் கூட கிடைக்காமல் போகலாம். கடந்த சில வருடங்களில் தலை விரித்து பேயாட்டம் ஆடி, பொது சொத்தை அபகரித்து, விதிமுறைகளை மீறி, பொய்க்கணக்கு எழுதி, பொல்லாதவர்களுடன் கூட்டமைத்த கஜானா களவாளிகள் எக்கச்சக்கம். அவர்களில் பலர் உங்களுக்கு அறிமுகமான பிராணிகள் தான். புலியையும், எலியையும் கூண்டில் வைக்கும் மக்கள், கொசுவையும், ஈயையும் நசுக்கும் நாம், இந்த தருமமிகு சென்னைவாழ் இராக்கதர்களை உலவ விட்டிருக்கிறோம். வேலி நம் நிலத்திலும், அடுத்தவன் நிலத்திலும், புறம்போக்கு நிலத்திலும் மேய்கிறது, கேட்பார் இல்லாமல். எந்த தனிமனிதரையும் சுட்டாத இந்த பொது அறிமுகம் முற்றிற்று. இனி அடைமொழிகள் வாரா. இது இந்த தொடருக்கு சிறப்புப்பாயிரம் என்க. ஒவ்வொரு இழையிலும் இதுவும், ஈற்றடியும் திரும்ப, திரும்ப வரும்.

சீனாவின் மாபெரும் எயில் (சுவர்) உலகப் பிரசித்தி. அதற்குப் போட்டியாக தருமமிகு சென்னையில், நவம்பர் 8, 2014 அன்று ஒரு மாபெரும் வேலியின் திருவுருவம் அவதாரமாகி இருக்கிறது. அதைச் சற்றே அவதானிப்போம். சவுகார்பேட்டையின் நாரயணமுதலி தெருவில், ஜூன் 23, 2014 அன்று ஒரு கட்டிடம் தீயில் உருக, ஒரு உயிர் கருகியது. நமது மதிப்புக்குரிய, உள்ளூர் சுப்ரமண்யம் சுவாமியாகிய ‘ட்ராஃபிக் ராமசாமி அவர்கள், தகுந்த சான்றுகளுடன், சட்டவிரோதமான கட்டிட ஊழல்களை பற்றி ஒரு பொதுநல வழக்குத் தொடர்ந்தார். திடுக்கிட்டுப் போன உயர் நீதிமன்றம் ஆகஸ்ட் 7க்குள் உண்மை நிலவரம் தெரிவிக்க வேண்டும் என்று மாண்புமிகு சென்னை கார்ப்பரேஷனுக்கும், CMDAக்கும் ஆணையிட்டது. குட்டும் வெளிப்பட்டது. கார்ப்பரேஷனின் ஆய்வுப்படி, ஜியார்ஜ் டவுனில் அதற்குட்படுத்தப்பட்ட 11,304 கட்டிடங்களில் 72 தான் முறைப்படி கட்டப்பட்டனவாம். அதாவது ஒன்பது மீட்டருக்கு குறைவான அகலம் உள்ள சாலைகளில் முறைப்படி கட்டப்பட்டவை 0.00063% ! ஒன்பது மீட்டருக்கு அதிகமான அகலம் உள்ள சாலைகளில் முறைப்படி கட்டப்பட்டவை: 66/3146[0.02%]! இது CMDA தகவல். இது ஒரு புறமிருக்க, புரசைவாக்கம் மில்லர் தெருவில், அக்டோபர் 27.2014 அன்று ஒரு கட்டிடம் இடிந்து வீழ்ந்தது. மவுளிப்பாக்கத்து கவுளியின் பிலாக்கண ஓலம் முடிந்தபாடில்லை.

சட்டமீறலை ஒத்துக்கொண்ட அரசு வழக்கறிஞர் குறித்த கெடுவுக்குள் இடிப்பதும் இன்னல், வீட்டு சொந்தக்காரர்களை தண்டிப்பதும் கடினம் என்றதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் ஒரு திட்டம் போட்டுக்கொண்டு வரச்சொல்லி, வழக்கை டிசம்பர் 18க்கு ஒத்தி வைத்தது. டவுன் ப்ளானிங் சட்டப்படி, இடிப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஜார்ஜ் டவுனில் டாம் டாம் அடிச்சு, டுமீல் வெடி வச்சு இடிச்சாக்கூட மனை மீதி. விலை கூடிப்போகும். லக்ஷம் மாடி வீடு கட்டும் கோடீஸ்வர்கள் வருவார்கள். நூறு வருடத்துக்கு அப்றம், அதையும் இடிச்சு கோடி மாடி வீடு கட்டினாலும் கட்டுவார்கள். மனித ஜன்மம் அப்டி. ரொம்ப விரட்டினா, 1078ம் மாடியில் திடீர் பிள்ளையார் கோயில் கட்டி விடுவார்கள்.

சில வினாக்கள் எழுகின்றன:
அரசு அதிகாரிகள்/அரசியல்வாதிகள் அயோக்கியர்கள் என்று வாய் கிழிய பேசுபவர்கள், பொது ஜனம் இழைத்த இந்த ஊழலுக்கு யாரை குற்றம் சாற்றுவார்கள்? தன் தலையிலேயே சகதி வாரி போட்டுப்பார்களா?
கூண்டோடு கைலாசம் என்று ஒரு சொலவடை உண்டு. இங்கே கூண்டோடு கையூட்டா? உடலையே ஊட்டு வைப்பார்களோ?
எப்படியும் கார்ப்பரேஷன் ஊழியர்களும் CMDA ஊழியர்களும், பெரும்பான்மை மக்களும் செய்த இந்த கூட்டுக்களவாணித்தனத்துக்கு பரிகாரம் என்ன?
லஞ்சம் ஒழிக்க வந்த முதல் சட்டத்திலேயே, சந்தானம் கமிட்டி பரிந்துரை படி, லஞ்சம் கொடுத்தவர்களையும் தண்டிக்க வேண்டும். சொத்து குவித்தவர்கள் மீது வழக்குத் தொடர்வது போல், லஞ்சம் கொடுத்ததற்கு ஆவணமில்லை என்றாலும், உண்மை நிலையை ஆராய்ந்து தண்டனை வழங்க வேண்டுமோ?
‘டிசம்பர் 18 வரை காத்திருப்போமா, வவுத்துலெ நெருப்பைக்கட்டிக்கொண்டு? கைது செய்! கைது செய்!’ என்று குரல் கொடுத்து, குரல்வவளையை நெறிக்கும் மகாஜனத்தை என்ன செய்யலாம்?!

ஆக மொத்தம் தொபக்கட்டீர் !
எந்த புற்றில் எந்த பாம்போ?!
யாரு கண்டா?

-#-
சித்திரத்துக்கு நன்றி: http://cdn.toonvectors.com/images/35/69723/toonvectors-69723-940.jpg

இன்னம்பூரான்
http://innamburan.blogspot.co.uk
http://innamburan.blogspot.de/view/magazine
www.olitamizh.com

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *