-செண்பக ஜெகதீசன்

பகையகத்துப் பேடிகை யொள்வா ளவையகத்
தஞ்சு மவன்கற்ற நூல். (திருக்குறள்-727: அவை அஞ்சாமை)

புதுக் கவிதையில்…

கற்றதின் பலனை
மற்றவரும் பெறவேண்டும்…

அவையிலதை எடுத்துரைக்க
அஞ்சுபவன் கற்றது,
போர்க்களத்தில்
பேடியின் கைவாள்போல்
பயனற்றதே…!

குறும்பாவில்…

போர்க்களத்தில் பேடி கைவாள்
பயனற்றது போல்தான்,
அவையஞ்சுபவன் கற்ற நூலும்…!

மரபுக் கவிதையில்…

வெற்றி பெற்றிடப் போர்க்களத்தில்
வீரர் தங்கள் கைகளிலே
பற்றி யிருக்கும் வாளதனைப்
பேடியும் பிடித்துப் பயனில்லை,
கற்ற நூலின் பொருளதனைக்
கற்றோர் அவையில் அஞ்சாதே
மற்றவர் அறிய உரையான்நூல்,
மாறாப் பேடியின் கைவாளே…!

லிமரைக்கூ…

போர்க்களத்தில் பயனில்லை பேடியின்கை வாள்,
எடுத்துரைக்க அவை அஞ்சுபவன்
படித்தநூலையும் இதுபோல்தான் சொல்லுவர் கேள்…!

கிராமிய பாணியில்…

வாளுவாளு போர்வாளு
வெட்டிச்சாய்க்கும் போர்வாளு,
வீரன்புடிக்கும் போர்வாளு
வெட்டிச்சாய்க்கும் போர்வாளு,
பேடிபுடிச்சா பேர்வாளு
பயனேயில்லாப் போர்வாளு…

படிச்சபடிப்ப எடுத்துச்சொல்லணும்
பலருந்தெரிய படிச்சிச்சொல்லணும்,
பயந்துநின்னா பலனில்ல
படிச்சபடிப்பு பயனில்ல,
படிச்சதெல்லாம் இதுபோலத்தான்
பேடிகைல வாள்போலத்தான்…

வாளுவாளு போர்வாளு
வெட்டிச்சாய்க்கும் போர்வாளு…!

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “குறளின் கதிர்களாய்…(46)

  1. குறும்பாவில் மிக அழகாக  வந்திருக்கிறது.

    படித்த நூல்கள் மட்டுமல்லாமல் பெற்ற  அனுபவங்களையும் பலர் சொல்லத்தெரியாமலேயே காலம் கழிக்கின்றனர்

  2. அன்பு நண்பர் அமீர் அவர்களின்
    கருத்துரைகளுக்கு மிக்க நன்றி…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *