இசைக்கவி ரமணன்

Bharathy

ராத்திரி அஞ்சும் ராட்சச இருளின்
ரகசிய மடியினி லிருந்து, ஒரு
பூத்திரி போலப் புறப்பெட் டெழுந்து
புயலாய்ச் சீறிய புதிரே
நேத்திரம் முழுதும் நெருப்பு ததும்ப
நெஞ்சினில் நேசம் எழும்ப
ஆத்திரம் கொண்ட அறவடி வாய்த் தமிழ்
ஆர்த் தெழுந்ததென வந்தாய்

அப்படி வந்தது நீயா? உனை
அறவே அறிந்த நான்தானா?

எத்தனை பெரியதிவ் வண்டம்! அதிலேimages
எத்தனை சிறியவன் மனிதன்!
எத்தனை சிறியவன் மனிதன்! அவனுள்
எத்தனை சிறியது மனது!
எத்தனை சிறியது மனது! மனதில்
எத்தனை எத்தனை அண்டம்!
அத்தனை அண்டமும் யாரோ ஒருத்தியின்
நித்திரை யில் சிறு கனவு!

அப்படிச் சொன்னது நீயா! உனை
அறவே அறிந்த நான்தானா?

எழுதா திருக்கும் வேளையில் தானே
முழுதாய்க் கவியென் றுணர்ந்தோம்
எண்ண மிலாவெளி நிலையில்தானே
எல்லாம் எல்லாம் அறிந்தோம்
பழுதோ விதியோ மானுடன் போலே
பல்லோர் நடுவே திரிந்தோம்
பலகணி திறந்து பரவச ஒளியைப்
பக்குவக் கோப்பையில் குடித்தோம்

அப்படி உணர்ந்தது நீயா? உனை
அறவே அறிந்த நான்தானா?

தேசம் தெய்வம் என்னும் கொள்கையில்
தேகம் முடைந்து கொடுத்தாள்
திரும்ப மறந்து விடலா காதெனத்
தீரா ஏக்கம் தொடுத்தாள்
நேசம் புரியா மோசச் சந்தையில்
நிம்மதி நன்கு கெடுத்தாள், ஒரு
நிமிடம் தெய்வ நிலையைத் தந்து
நீக்கிப் பார்த்துச் சிரித்தாள்

அப்படித் தவித்தது நீயா? உனை
அறவே அறிந்த நான்தானா?

அன்றைக் காலையில் அயர்ந்த தேகம்
அனலில் வெடித்துச் சிதற
ஆற்றங் கரையில் திலக மிட்டவள்
அடிமனம் கொஞ்சம் பதற
இன்றைக் கொருவன் இதுவாய் அதுவாய்
இறந்தும் இருந்தும் உள்ளான்
ஏடி! செல்லம் மாவென அழைத்தால்
எவரு மிலாமல் நின்றான்

அந்தக் குழப்பம் எனதா? என்னில்
அழுந்தித் தொடரும் உனதா?

புதிய கூட்டில் புகுந் திசைப்பது
புராதானத்துப் பறவை; சித்தம்
புடைக்க உள்ளே பொதிந்த சித்திரம்
பூத்துக் காட்டும் உறவை
அதிசயம் கொஞ்சம் விதிவசம் கொஞ்சம்
அதனால் உழலும் நெஞ்சம்
ஆதியும் அந்தமும் இல்லாத் தொடர்வில்
அவளருள் ஒன்றே மிஞ்சும்

இந்த ஞானமேனும் எனதா? இதுவும்
எதுவும் போலே உனதா!!

எனக்கு நீயார் உனக்கு நான் யார்
எவரிடம் எப்படிச் சொல்ல?
எதையும் காட்டும் கண்ணாடியிலே
தெரிவதை எப்படித் தள்ள?
உனக்கு நான் யார் உணரா திருந்ததே
உனக்கு மிகவும் நன்று
எனக்கு நீ யார் என்பதை அறிந்தேன்
இதுவே எனக்கு நன்று

இப்படிச் சொல்வது நான்தான்! இதை
இன்றைக்கேனும் அறிவாய் நீதான்!

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “பாரதி்க்குச் சொன்னது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *