வல்லமை – சிந்தனை, செயல், முன்னேற்றம் – தலையங்கம்

1

பவள சங்கரி

எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் நாம் ?

”மனிதர் ஒருவர் தொடர்ந்து தீய சொற்களையே கேட்டுக் கொண்டிருந்தாலோ தீய எண்ணங்களையே கொண்டிருந்தாலோ, தீய செயல்களே செய்து கொண்டிருந்தாலோ, அவர் மனதில் தீய பதிவுகள் நிரம்பி விடும். அதன் பிறகு அவருடைய இந்த தீய பதிவு அவர் அறியாமலே அவருடைய செயல்களில் பிரதிபலித்துவிடும். அவர் அந்தப் பதிவுகளின் கையில் ஒரு இயந்திரமாகி விடுவதால் அது தீய செயல்களையே செய்வதற்கு கட்டாயப்படுத்துகிறது. அந்த மனிதனும் தீயவனாக (தீவிரவாதியாக) ஆகி விடுகிறான். அதிலிருந்து அவனால் மீண்டு வரவும் முடிவதில்லை”, என்கிறார் சுவாமி விவேகானந்தர்.


ஜூலை 13ம் தேதி இந்தியாவின் நிதி தலைநகராக விளங்கும் மும்பையில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்புகளால் 18 பேர் உயிரிழந்துள்ளனர். 131 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 23 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. காயமைடந்தவர்கள் 26 மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது இன்று ஆரம்பித்த முதல் சம்பவம் அல்ல.

குண்டு வெடிப்பு நடந்த 3 இடங்களில் ஒன்றான ஜாவேரி பஜார் தீவிரவாதிகளின் தாக்குதல் பட்டியலில் கடந்த 1993-ம் ஆண்டு முதல் தொடர்ந்து இடம் பெற்று வருகிறது. கடந்த 1993-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளில் 257 பேர் பலியானார்கள், சுமார் 700 பேர் காயமடைந்தனர். திரும்பவும் கடந்த 2003-ம் ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் அதே இடத்தில் நடந்த குண்டு வெடிப்பில் 54 பேர் கொல்லப் பட்டனர். நெருக்கமான ஏராளமான கடைகள் உள்ளதால், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் தொடர்ந்து இந்த முறையும் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்தியாவில் நடத்தப்படும் பயங்கரவாதத் தாக்குதல்கள் பாகிஸ்தானால் மறைமுகமாகத் தொடுக்கப்படும் போர் போலத்தான் தோன்றுகிறது. இதையெல்லாம் பார்க்கும் போது சாமான்யர்களான நமக்குத் தோன்றுவதெல்லாம் உளவுத் துறையால் ஏன் இதைக் கண்டறிந்து சொல்ல முடியவில்லை என்பதுதான். அதுவும் குறிப்பிட்ட இடத்திலேயே நடக்கும் போது கூட ஏன் முன் கூட்டியே எச்சரிக்கை செய்ய இயலவில்லை. தகுந்த பயிற்சி பெற்றவர்களும்,  நவீன தொழில் நுட்ப சாதனங்களில் தேர்ச்சி பெற்றவர்களும் நம் உளவுத் துறையில் இல்லாதது காரணமாக இருக்கலாமோ என்ற ஐயம் ஏற்படுகிறது.

பிளாக்பெர்ரி மொபைல்கள், சாட்டிலைட் போன்கள், ஜிபிஎஸ் சிஸ்டம் ஏகே 47 போன்ற நவீன ரக துப்பாக்கிகள், ராக்கெட் லாஞ்சர்கள், கிரனைட்டுகள் போன்று அதி நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துகிறார்கள் தீவிரவாதிகள். ஆனால் இதையெல்லாம் குறித்த பயற்சி நம் உளவுப் படையினருக்கு இருக்கிறதா என்கிற அச்சமும் வருகிறது. அது மட்டுமல்லாமல் தற்கொலைப் படையை உருவாக்கும் அளவிற்கு மூளைச் சலவை செய்யக் கூடிய திறம் படைத்த வல்லுநர்களும் இருக்கிறார்கள் தீவிரவாதிகளிடையே! இவர்களை எதிர் கொள்ளும் திறம் படைத்தவர்களாக நம் உளவுத் துறையினருக்கு பயிற்சியளிக்க வேண்டியதும் அவசியம். அதற்கான நிதி ஒதுக்கீடு தாராளமாக இருக்க வேண்டும். எந்த அரசியல் தலையீடும் இல்லாத வகையில் இருக்க வேண்டியதும் அதி முக்கியம்.

தேசிய அளவில் தீவிரவாதிகளை எதிர் கொள்ள ஒரு பெடரல் ஏஜென்சி உருவாக்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார். இதனை கால தாமதம் இன்றி உடனடியாக செய்ய வேண்டியது அவசியம். அந்த அமைப்புக்குத் தேவையான அதிகாரமும் வழங்கப்பட வேண்டும். அதி நவீன கருவிகளில் மிகச் சிறந்த பயிற்சி பெற்ற உளவு நிறுவனமாக இருக்க வேண்டியது அவசியம். பன்மொழி அறிவு கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும். மக்களோடு எளிதாகக் கலந்து பழகக் கூடியவர்களாக இருப்பதும் பயனுள்ளதாக அமையும். அப்போதுதான் நம் ஜனநாயகத்தைக் குறிவைத்துத் தாக்கும் தீவிரவாதிகளிடமிருந்து நம் நாட்டைக் காக்க முடியும்.

நம் நாட்டின் பொருளாதாரத் தலைநகரான மும்பையில் ஆண்டிற்கு 25000 குழந்தைகள் வரை சத்தான உணவு கிடைக்காமல் உயிரிழப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. இது போன்று விசயங்கள் மக்களின் அடிப்படைக் குணத்தைப் பாதிக்கக் கூடியவைகள். இது போன்ற வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்கள் ஒரு வேளை உணவிற்காகக் கூட எளிதாக தீயவர்களிடம் விலை போகக் கூடிய அபாயமும் உண்டு. அந்த வகையில் மக்களின் அடிப்படைத் தேவைகளான, உண்டி, உறையுள், மானத்தை மறைக்க உடைகள் போன்றவற்றில் பஞ்சம் ஏற்படாதவாறு கவனம் செலுத்த வேண்டியது அரசின் கடமையாகும் .

 

படத்திற்கு நன்றி – ஒன்இந்தியா

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “வல்லமை – சிந்தனை, செயல், முன்னேற்றம் – தலையங்கம்

  1. 1. நம் உளவுப்படையினருக்கு என்ன தெரியும் என்பதை சொல்ல இயலாது. அவர்களின் திறனை முன்பு மும்பையில் பார்த்திருக்கிறோம். அவர்களுக்கு என்ன தெரியும் என்று நாம் நினைக்கிறோமோ, அதை விட நூறு மடங்கு அறிவார்கள்.
    2. ‘…மூளைச் சலவை செய்யக் கூடிய திறம் படைத்த வல்லுநர்களும் இருக்கிறார்கள் தீவிரவாதிகளிடையே!..’
    => இது உண்மை. அவர்களை செயலிழக்கச்செய்வது தான் விவேகம். அதற்கான வழி ஒன்று உண்டு. சொல்வதற்கில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *