-செண்பக ஜெகதீசன்

துளியின்மை ஞாலத்திற் கெற்றற்றே வேந்த
னளியின்மை வாழு முயிர்க்கு. (திருக்குறள்-557:கொடுங்கோன்மை)

புதுக் கவிதையில்…

மழை விழுந்தால்,
மண் குளிர்ந்து
வளம்பெருகும் வையத்தில்…
மழை இல்லையெனில்,
மன்பதை வாடும்,
மக்கள் வாடுவர் அதுபோல்,
ஆட்சியாளர்தம்
அரவணைப்பு இல்லையேல்…!

குறும்பாவில்…

மாநிலம் வாடும் மழையில்லையெனில்,
மக்கள் வாடுவர்
முறையற்ற அரசியலாரால்…!

மரபுக் கவிதையில்…

மண்ணில் வீழும் மழைத்துளிதான்
மன்பதை வளத்தைப் பெருக்கிடுமே,
எண்ணிப் பாரிதை, மழையிலையேல்
எல்லாம் காய்ந்திடும் பூமியிலே,
கண்ணின் இமையாய்க் காத்துநிற்கும்
கருணை யில்லா ஆட்சியரால்
மண்ணில் மாந்தர் நிலையதுவும்
மழையிலா நிலம்போல் மாறிடுமே…!

லிமரைக்கூ…

மழையில்லா பூமியது பாலையாய்க் காட்சி,
நலிவர் மக்கள் பாழ்நிலம்போல்
நடந்திடில் நாட்டில் நலம்பேணார் ஆட்சி…!

கிராமிய பாணியில்…

காஞ்சிபோச்சி காஞ்சிபோச்சி
காடெல்லாங் காஞ்சிபோச்சி,
ஒண்ணுமில்ல ஒண்ணுமில்ல
மண்ணுலத்தான் ஒண்ணுமில்ல
மழயில்லாம ஒண்ணுமில்ல…

கதயிதுதான் கதயிதுதான்
ராசாங்கக் கதயிதுதான்,
சனங்களுக்கு ஒதவத்தான்
சத்தில்லா அரசாங்கத்தால
மொத்தமாப் பயனில்ல,
பயனில்ல பயனில்ல
காஞ்சிபோன நெலம்போல
பயனில்ல பயனில்ல…!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *