சு. கோதண்டராமன்

 

யக்ஞமும் உயிர்ப்பலியும்

பிற உயிர்களுக்குத் தீங்கு செய்யக் கூடாது என்ற அஹிம்ஸைக் கொள்கை புத்த ஜைன மதங்களின் தாக்கத்தால் ஏற்பட்டது. இதை ஒப்புக் கொள்வதற்கு வெட்கப்பட வேண்டியதில்லை. தன் தவறைத் திருத்திக் கொள்ளாத சமயம், பிறரிடமிருந்து நல்லதை எடுத்துக் கொள்ளாத சமயம் அழிந்து விடும். வைதிக சமயம் காலப் போக்கில் பல நல்ல விஷயங்களை மற்றவர்களிடமிருந்து ஏற்றுக் கொண்டதால்தான் இன்றளவும் உயிரோடு இருக்கிறது.

மனிதன் இயற்கையில் சர்வ பட்சிணி. காட்டு மிராண்டியாக வாழ்ந்த காலத்தில் அவன் பழங்கள், கிழங்குகளை உண்பதோடு, சாதுவான மிருகங்களையும் கொன்று உண்டுதான் உயிர் வாழ்ந்தான். நாகரிக வளர்ச்சி பெற்று விவசாயம் செய்யும் காலத்தில் அவனுக்கு குதிரை, மாடு, ஆடு முதலிய கால்நடைகளால் பயிர் அழிவு ஏற்பட்ட போது இந்தக் கால்நடைகளைக் கொல்வது பயிரைக் காப்பாற்றிக் கொள்ளவும், உணவுத் தேவையை நிறைவு செய்யவும் அவசியமாக இருந்தது. அவன் இறை வழிபாடு செய்யத் தொடங்கிய போது தான் உண்டதையே தன் தெய்வத்துக்கும் படைத்தான்.

இத்தகைய காலத்தில்தான் வேதம் உருவாயிற்று. குதிரைகளையும் ஆட்டையும் வேள்வியில் பலி இடுவது பற்றிய மந்திரங்கள் சந்தேகத்துக்கு இடமில்லாமல் ரிக் வேதத்தில் உள்ளன. (1.162, 3, 21)

பழைய காலத்தில் பசுக்களும் காளைகளும் பலி கொடுக்கப்பட்டிருப்பது அக்னிக்கு வழங்கப்படும் உக்ஷான்ன (காளையை உண்பவர்), வசான்ன (மலட்டுப் பசுக்களை உண்பவர்) என்ற பெயர்களிலிருந்து தெரிகிறது. (8.43.11) பசுவைக் கத்தியால் வெட்டுவது போல என்று உவமை வருகிறது. பசுத் தோலைத் தான் வில்லுக்கு நாணாகவும், உட்காருவதற்கு ஆசனமாகவும், சோம பானம் வடிகட்ட அடித்தளமாகவும் பயன்படுத்தினர். பசுவே, உன் உடம்புதான் எனக்கு மருந்து என்கிறது ஒரு மந்திரம். (10.100.10)  இதிலிருந்து பசுக் கொலை சர்வ சாதாரணமான நிகழ்ச்சி என்பதை அறியலாம்.

பசுவைக் குறிப்பிடும்போது 20 இடங்களில் அக்ன்யா என்ற பெயரால் குறிப்பிடுகிறார்கள். (4.1.6, 1.30.19) அக்ன்யா என்றால் கொல்லத் தகாதது என்று பொருள். பசு என்று சொல்லாமல் கொல்லத் தகாத மிருகம் என்று அழைப்பதற்குக் காரணம் என்ன?

காளைகளும் மலட்டுப் பசுக்களும் மட்டுமே கொல்லத் தக்கவை. பால் தரும் பசுக்கள் கொல்லத் தகாதவை என்ற கருத்து ஏற்பட்டிருப்பது தெரிய வருகிறது. பால் பொருட்களை மிகுதியாகப் பயன்படுத்தத் தொடங்கியபின் பசுவின் பொருளாதார மதிப்பை அவர்கள் உணர்ந்திருக்க வேண்டும்.
விவசாயத்துக்குக் குதிரைகளைப் பயன்படுத்தியதற்கான குறிப்புகள் கிடைக்கின்றன. காளைகளைப் பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் இல்லை. எனவே இன விருத்திக்கு மட்டுமே காளைகள் தேவைப்பட்டிருந்தன. அதற்கு மந்தைக்கு ஒன்று போதுமே, மற்றவை பயனற்ற சுமை தானே என்ற நிலை நிலவி இருக்க வேண்டும்.

விவசாயம் செய்த பயிர்களைக் காப்பாற்றுவதற்காக தேவையற்ற மலட்டுப் பசுக்களையும் காளைகளையும் கொல்வது அவர்களுக்கு அவசியமாக இருந்தது. அதனால் அவர்களது உணவுத் தேவையும் நிறைவு பெற்றது. இச்செயலில் அகிம்சை, கருணை என்ற கோட்பாடுகள் குறுக்கிடவில்லை.

அதற்கும் பிந்திய காலத்தில், மாடுகளின் எண்ணிக்கை மிகக் குறைந்த பின் அவற்றைக் கொல்வதற்கு எதிரான இயக்கம் தோன்றி இருக்க வேண்டும். இருப்பினும் சமயச் சடங்குகளை உடனடியாக மாற்றுவது என்பது எக்காலத்திலும் கடினமான செயல் தான். எனவே யாகங்களில் மட்டும் மிருகங்களைக் கொல்வது தொடர்ந்து நடைபெற்றிருக்க வேண்டும்.

புத்த ஜைன மதங்கள் அகிம்சைக் கொள்கையைப் பரப்பியபோது வேத சமயம் அதை உடனடியாக ஏற்றுக் கொண்டிருக்காது. ஆரம்பத்தில் அதற்கு எதிர்ப்பு இருந்திருக்கும். நாளடைவில் அது வேத சமயத்தின் முக்கியக் கொள்கைகளில் ஒன்றாக ஆகிவிட்டது. வேதக் கருத்துக்கு மாறான கருத்தை வேத சமயம் எப்படி ஏற்றுக் கொண்டது?

உண்மை என்னவென்றால் அகிம்சை வேத சமயத்துக்கு முற்றிலும் விரோதமான கருத்து அல்ல. வேதத்தில் பல இடங்களில் சம் த்விபதே சம் சதுஷ்பதே என்ற வாசகம் காணப்படுகிறது. இரண்டு கால் பிராணிகளுக்கும் நலம் உண்டாகட்டும். நான்கு கால் பிராணிகளுக்கு நலம் உண்டாகட்டும் என்று பிரார்த்தனை செய்யப்படுகிறது. அந்த மந்திரத்தின் பொருளை ஆழ்ந்து சிந்தித்தவர்கள் அகிம்சையை ஏற்றுக் கொண்டிருப்பர்.

மேலும், வேதத்தில் பெரிதும் வலியுறுத்தப்படும் ருதம் என்பதைப் பற்றி அடுத்த பகுதியில் படிக்க இருக்கிறோம். ருதம் என்பது சார்ந்தாரைக் காத்தலைக் குறிக்கும். எனவே நம்மைச் சார்ந்து வாழும் மிருகங்களைக் காப்பாற்றுவது முக்கியமான தர்மமாகக் கருதப்பட்டது.

வண்டி இழுக்கும் நல்ல குதிரை- நெல்லு
வயலில் உழுது வரும் மாடு
அண்டிப் பிழைக்கும் நம்மை ஆடு- இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா – பாரதி

இவ்விரு கருத்துகளின் விரிவாக்கம் தான் அகிம்சைக் கொள்கை. வேதத்தில் சுருக்கமாகச் சொல்லப்பட்டுக் கண்ணுக்குப் புலப்படாமல் இருந்த இதை விளக்கிச் சொன்னார்கள் புத்தரும் மகாவீரரும். ஒரு வகையில் அவர்களும் வேத ரிஷிகளுக்கு நிகரானவர்கள்தான். அவர்கள் தங்கள் கருத்தைப் பாலி மொழியில் சொல்லாமல் வேத மொழியில் சொல்லியிருந்தால் அவையும் வேதத்தில் சேர்க்கப் பட்டிருக்கும்.

வீரர்கள் பல நிறமுள்ள காளையைச் சமைத்தனர். அவை முற்கால தர்மமாக இருந்தன (1.164.43) என்று கூறப்படுவதும், வேள்வி செய்யும் மனிதனுடைய பசுக்கள் பயமின்றி மேய்ச்சல் தரையில் சஞ்சரிக்கட்டும், யக்ஞ பலி பீடங்களுக்கு அவை போகாமல் இருக்கட்டும் (6.28.4)  என்ற பிரார்த்தனையும் மிருக பலிக்கு எதிரான எண்ண அலை உருவாகி வளர்ந்த வரலாற்றைக் குறிக்கும். வேறு சில மந்திரங்களில் பசுவைக் கொல்லாதீர்கள் என்ற வேண்டுகோள் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது. (8.101.15, 16)

இந்த மந்திரங்கள் புத்த ஜைன மதங்களுக்கு முந்திய காலத்ததாகவும் இருக்கலாம். பிற்காலத்தில் எழுதப்பட்டு வேதத்தில் நுழைக்கப்பட்டிருக்கவும் வாய்ப்பு உண்டு.

மிருக பலி பற்றிய குறிப்புகள் குறைவாகவும் ஒரு சில சூக்தங்களில் மட்டும் குவிந்ததாகவும் உள்ளன. தானிய ஹவிஸ் பற்றிய குறிப்புகள் மிகுதியாகவும், பரவலாகவும் இருப்பதிலிருந்து பலியிடுவது வர வரக் குறைந்து கொண்டு வந்திருக்கக் கூடும் என்று ஊகிக்க இடம் தருகிறது.

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “என்னதான் இருக்கிறது வேதத்தில்?- 37

  1. நமேதம் எனப்படும் நரபலி குறித்து ஏதேனும் கூறப்பட்டுள்ளதா வேதத்தில்? 

  2. // பிற உயிர்களுக்குத் தீங்கு செய்யக் கூடாது என்ற அஹிம்ஸைக் கொள்கை புத்த ஜைன மதங்களின் தாக்கத்தால் ஏற்பட்டது. இதை ஒப்புக் கொள்வதற்கு வெட்கப்பட வேண்டியதில்லை. //

    என்ன ஒரு நேர்மை.

    இதே கருத்தை ‘பௌத்தமும் தமிழும்’ என்ற நூலில் திரு.சீனி.வெங்கடாசலம் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

    ‘கி. மு. மூன்றாம் நூற்றாண்டில், தமிழ்நாடு வந்த வைதீக பிராமண மதம், கி. பி. நான்காம், அல்லது ஐந்தாம் நூற்றாண்டு வரையில், பொதுமக்களின் செல்வாக்குப் பெறாமல் ஒதுக்கப்பட்டே வந்தது. கி. பி. நாலாவது, அல்லது ஐந்தாவது நூற்றாண்டுக்குப் பின்னர், வைதீக மதம் தனது அடிப்படையான கொள்கைகள் சிலவற்றில் மாறுதல் செய்துகொண்டு புத்துயிர் பெற்றது. அதாவது, யாகங்களில் உயிர்க்கொலை செய்வதை நிறுத்திக்கொண்டதோடு, கொற்றவை, முருகன், சிவன், திருமால் முதலான திராவிட தெய்வங்களைத் தன் மதக்கடவுளராக ஏற்றுக்கொண்டு புதிய உருவம் பெற்று விட்டது. இந்த மாறுதலுடன், ‘பக்தி’ இயக்கத்தை மேற்கொண்டபடியால், இந்த மதம் பொதுமக்கள் ஆதரவைப்பெறவும் முடிந்தது’.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *