மு​னைவர் சி.​சேதுராமன்

ஒரு காலத்தில் ​தோன்றி சிறப்புடன் விளங்கிய இலக்கியமானது ​ காலங்கள் பல கடந்தாலும் பிற்காலத்தில் எழுந்த இலக்கியங்களிலும் ​பெரும்தாக்கத்​தை ஏற்படுத்தும். எல்லா இலக்கியங்களும் ​பெரும் தாக்கத்​தை ஏற்படுத்துவதில்​லை. ஒரு சில இலக்கியங்க​ளே இத்த​கைய தாக்கத்​தை ஏற்படுத்தும் இலக்கியங்களாக விளங்குகின்றன. அவ்வாறு தாக்கத்​தை ஏற்படுத்திய இலக்கியங்களுள் சிலப்பதிகாரம் முதன்​மையான இடத்தை வகிக்கின்றது.

Puhar-KannagiInPandyaCourt

கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இக்காப்பியம் ஏனைய காப்பிய நூல்கள் போன்று அரசனையோ தெய்வங்களையோ பாட்டுடைத் தலைவனாகக் கொண்டிருக்காமல் கோவலன் – கண்ணகி என்ற குடிமக்களைப் பாட்டுடைத் தலைவர்களாகக் கொண்டிலங்குகின்றது. இதனால், இச்சிலப்பதிகாரத்தைக் குடிமக்கள் காப்பியம் என்று கூறுவர். காப்பியங்களுக்கான இலக்கண அமைப்பு பொருந்துமாறு இயற்றப்பட்ட காப்பியமாகச் சிலப்பதிகாரம் விளங்குகின்றது. காவிரி, வைகை, முதலான ஆறுகளும் புகார், உறந்தை, மதுரை, வஞ்சி முதலான நகரங்களும், குரவைக் கூத்து, சாக்கைக் கூத்து உள்ளிட்ட கூத்துகளும், திருமால், சிவன், இந்திரன், முருகன் உள்ளிட்ட கடவுளர்களும், அடர்ந்து வளர்ந்த பெருங்காடுகளும் இந்நூலில் நன்கு வருணிக்கப்பட்டுள்ளன.

அக்காலத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறை குறித்த செய்திகள் இதில் பெருமளவில் இடம் பெற்றுள்ளன. சிலப்பதிகாரப் பதிகம் இதனை உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் எனக் குறிப்பிடுகின்றது. இடையிடையே உரைகளும் வரிப்பாட்டுகளும் கலந்து வந்துள்ளன. பொருட்செறிவு, தெளிவான இனிய எளிய நடையுடன், அணிகள் பல பொதிந்த தமிழின் வளமான நூலாகும். இறையனார் களவியல் உரைகாரர், இளம்பூரனார் போன்ற உரையாசிரியர்களால் அதிகளவில் மேற்கோளாக எடுத்தாளப்பட்ட பெருமை உடையதாகச் சிலப்பதிகாரம் திகழ்கிறது. தமிழறிஞர்களால் மிகுதியாக ஆய்வுக்கு உட்பட்ட நூலும் இதுவேயாகும். சிலப்பதிகாரம், நூல் முகத்தில் உரைப் பாட்டினையும், கானல்வரி, வேட்டுவவரி, ஆற்றுவரி, ஊசல்வரி, கண்புவரி என்னும் இசைப்பாட்டுகளும் நிறைந்தது புகார் காண்டம், மதுரைக் காண்டம் மற்றும் வஞ்சிக் காண்டம் எனும் உட்பகுப்புகளால் பிரிக்கப்பட்டுள்ளது. முப்பது காதைகளைக் கொண்டது. இச்சிலப்பதிகாரம் பல்வேறு இலக்கியங்களில் பல நிலைகளில் செல்வாக்குப் பெற்றதாக விளங்குகின்றது. இலக்கியங்கள் மட்டுமல்லாது நாட்டுப்புற இலக்கியமான கதைப்பாடலிலும் இச்சிலப்பதிகாரத்தின் செல்வாக்கு மிகுந்து காணப்படுகிறது.

கோவலன் க​தை – நூல் அறிமுகம்

இது ​பெரிய எழுத்துக் ​கோவிலன் க​தை என்றும் ​கோவலன் க​தை என்றும் வழங்கப்படுகிறது. இக்​கோவிலன் க​தை​யைப் புகழேந்திப் புலவர் என்பர் எழுதியுள்ளார். இவ​ரைப் பற்றிய ​செய்திகள் கி​டைத்ததில், நள​வெண்பா​வை இயற்றிய புகழேந்திப் புலவரும் கோவலன் க​தை​யை எழுதிய புக​ழேந்திப் புலவரும் ஒருவரல்லர். நாட்டுப்புற மக்களி​டை​யே காணப்பட்ட ​கோவிலன் க​தை​யை அப்படி​யே மக்கள் விரும்பும் வண்ணம் ​இ​சையுடன் கூடிய கதைப்பாடலாகப் புக​​ழேந்திப் புலவர் இயற்றியுள்ளார்.

புகழ்​பெற்ற புலவர் புக​ழேந்தியாரின் ​பெயரில் எழுதினால் அனைவரும் விரும்பி நூலி​னைப் பயில்வர் என்ற காரணத்தா​லோ அல்லது ​வேறு ஏ​தேனும் காரணத்தினா​லோ இந்நூலின் ஆசிரியர் தமது உண்​மையான ​பெயரி​னைக் குறிப்பிடாது புக​ழேந்திப் புலவரின் ​பெயரி​னைக் குறிப்பிட்டு எழுதியுள்ளார். இந்நூலில் எவ்விடத்திலும் இத​னை இயற்றிய புலவரின் ​பெயர் காணப்படாதது ​நோக்கத்தக்கது. நாட்டுப்புற உடுக்கடிக் க​தைப்பாடல் அ​மைப்பி​லே​யே இக்க​தை ஆசிரியரால் கூறப்படுகின்றது. இந்நூலி​னை பி.இரத்தின நாயகர் அண்ட் சன்ஸ் அவர்களால், மின்ட் ​போஸ்ட், ​சென்​னை – 1 என்ற முகவரியிலிருந்து ​வெளியிடப்பட்டுள்ளது. ​வெளியிடப்பட்ட ஆண்டு குறிக்கப்படவில்​லை. இந்நூலி​னை திருமகள் அச்சகத்தார், (சென்னை-1)  வாங்கி அதே ​போன்று 1980-ஆம் ஆண்டு நூலாக வெளியிட்டுள்ளனர்.​ கோவலன் க​தை என்ற த​லைப்பில் சகுந்த​லை நிலையத்தார் மண்ணடி, ​சென்​னை-1 என்ற முகவரியிலிருந்து இரண்டாம் பதிப்பாக ஆகஸ்ட்-2007ஆம் ஆண்டு ​வெளியிட்டுள்ளனர்.

கோவலன் க​தை நூல​மைப்பு

​கோவலன் க​தை நூலானது சிலப்பதிகார நூ​லைப் ​போன்று அமையவில்​லை. இதில் பதிகம் என்​ற பகுதி காணப்படவில்​லை. நாட்டுப்புறக் க​தைப் பாடலைப் ​போன்று,

“முந்தி முந்தி விநாயக​னே முக்கணனார் தம் மக​னே

ஐந்து கரத்​தோ​னே அருளு​மையாள் புத்திர​னே

விக்கின விநாயக​னே ​வெண்​ணெயுண்​டோன் தன் மருகா

முக்கணனார் ​பெற்​றெடுத்த மூஷிக வாக​ன​னே

​வெட்பா​லைக் குள்ளிருக்குஞ் சப்பாணிப் பி​ள்​​ளையா​ரே

சப்பாணிப் பிள்​​ளையா​ரே ​பொற்பாதம் நான் மற​வேன்

​கோவலனார் தம் க​தை​யைக் குவலயத்தில் நான்பாட

வின்னங்கள் வாராமல் விநாயக​னே முன்னடவாய்!

என்று ​தொடங்கி சுப்பிரமணியர் துதி, ​சொக்கநாதர் துதி, திருமால் துதி, சரஸ்வதியம்மன் துதி ஆகிய கடவுளர்களின் துதியானது இடம்​பெற்றுள்ளது. அதன் பின்னர் புலவர் ​நேரடியாக​வே க​தை​யின் வரலாறு என்று க​தையைக் கூறத் ​தொடங்குகின்றார்.

     சிலப்பதிகாரத்தில் கடவுள் வாழ்த்தாக அ​மையவில்​லை. மாறாக,

    “திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்

    கொங்கலர்த்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ்

    வங்கண் உலகுஅளித்த லான்.

 

    ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்

     காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு

    மேரு வலம்திரி தலான்.

 

     மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்

     நாமநீர் வேலி உலகிற்கு அவனளிபோல்

     மேநின்று தாஞ்சுரத்த லான்.

 

     பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும்

     வீங்குநீர் வேலி உலகிற்கு அவன்குலத்தொடு

     ஓங்கிப் பரந்துஒழுக லான்”

என்று இயற்​கை வாழ்த்தாகத் ​தொடங்குகின்றது,

     மங்கல வாழ்த்துப் பாடலில் ​கோவலன் கண்ணகி திருமண நிகழ்விலிருந்து சிலப்பதிகாரத்தின் க​தையானது ​​தொடங்குகின்றது. ஆனால் ​கோவிலன் கதையானது கண்ணகி, ​கோவலன், மாதவி, வசந்தமா​லை உள்ளி​டோரின் முற்பிறப்பு வரலாற்​றைக் கூறுவதிலிருந்து ​தொடங்குகிறது. சிலப்பதிகாரத்தில் ​கோவலன், கண்ணகி ஆகி​யோரின் முற்பிறப்பு வரலாறு மது​ரைக் காண்டத்தில் கட்டு​ரைகாதையில் கூறப்படுகின்றது.

    கோவிலன் க​தையானது  ​க​தையின் வரலாற்றில் ​தொடங்கி கண்ணகியம்மன் திரு​வொற்றியூருக்கு வருதல் வ​ரையில் நிறைவுறுகிறது. சிலம்பி​னைப் ​போன்று இக்க​தையில் கண்ணகி தெய்வமான பின்​பே கதைநி​றைவுறுவது குறிப்பிடத்தக்கது.

ஊழ்வி​னை

காலங் காலமாக மக்களி​டை​யே நிலவி வரும் விதிக் கொள்கையானது சிலப்பதிகாரத்தின் முக்கிய ​நோக்கங்களுள் ஒன்றாக விளங்குகின்றது. ஊழ்வினையானது ​தொடர்ந்து வந்து ஒருவ​ரைப் பற்றும். இதனை,

“ஊழ்வினை யுருத்துவந் தூட்டும் என்பதூஉம்”

என்று சிலப்பதிகாரம் எடுத்து​ரைக்கின்றது. சிலம்பின் இவ்வூழ்வி​னைக் ​கொள்​கையானது அதன் பின்வந்த அ​னைத்து இலக்கியங்களிலும் ​பெருந்தாக்கத்​தை ஏற்படுத்தி அவ்விலக்கியங்களிலும் இடம்​பெற்றுள்ளது.

     ​கோவிலன் க​தைப் பாடலில் இவ்வூழ்க் ​கொள்​கையானது கதையின் ​தொடக்கத்தி​லே​யே இடம்​பெற்றுள்ளது. க​தையின் ஒவ்வொரு பகுதியிலும் இக்கொள்​கையானது ஆசிரியரால் வலியுறுத்தப்படுகின்றது. சிலப்பதிகார ஆசிரியர் ஒவ்​​வொரு நிகழ்ச்சியி​னைக் குறிப்பிடும்​போதும் இவ்வூழ்வி​னை​யை வலியுறுத்திக் கூறிக் ​கொண்​டே ​செல்வார் அது​போன்​றே புக​​ழேந்திப் புலவரும் இவ்வூழ்வி​னை​யை வலியுறுத்துகிறார்.

     மாதகி​யை நாட்டியமாட அ​ழைத்தல் ​வேண்டும் என்று வற்புறுத்துகிறான் ​கோவலன். மாதகி நாட்டியத்​தை ​வைக்கவில்​லை​யெனில் நான் இறந்து விடுவேன் என்று கூறுகின்றான். அத​னைக் கேட்ட அவனது தந்தை முத்துச் ​செட்டி,

     “அப்​போது முத்துச் ​செட்டி அழகு து​ரை மன்னவனும்

      எண்ணாது ​மெண்ணுகிறான் எண்ணி மனங்குன்றுகிறான்

      சாதகமும் ​பொய்க்காது த​லைவிதியுந் தப்பாது

      பன்னிரண்டு பிராயத்தில் ​பைங்​கொடி மாதகியாள்

      மாதகி யண்​டையிந்த மன்னவன் ​போவா​னென்று

      சாதகமும் உ​ரைத்தது சரியாக ஆச்சுதுகாண்” (​கோவிலன்க​தை, ப., 17)

என்று நி​னைக்கின்றான். ஊழ்வி​னையின் வலி​மை​யை ​கோவலனின் தந்​தைவழி புலவர் எடுத்து​ரைக்கின்றார்.  காம​தேனு இட்ட சாபவிதியின்படி கோவலன் 16 வயதில் இறக்க ​வேண்டும் என்ற ஊழ்வினை விரட்ட ​கோவலன் கண்ணகியுடன் மது​ரை ​செல்கிறான்.

     கண்ணகியின் காற்சிலம்பு புலம்பிய​தைக் கண்ணகி ​கோவலனிடம் கூறி மது​ரைக்குப் ​போக ​வேண்டாம் என்று தடுக்கிறாள். ஆனால் கோவலன் அத​னைக் ​கேளாமல்,

     “​செத்தாலும் ​தென்மது​ரை சிலம்பு விற்றால் ​தென்மது​ரை

      அள்ள ​வேணுந் திருட ​வேணும் மணிமது​ரைச் சீ​மையி​லே

      என் சிலம்​பை விற்றா​லே ​யெனக்குப் ப​கைவரு​மோ?” (ப., 54)

என்று ​கேட்டு மது​ரைக்குக் கண்ணகியுடன் ​செல்கின்றான். எவ்வாறு சிலம்பில் ஊழ்வி​னை உறுத்தூட்ட ​கோவலன் ​சென்றா​னோ அ​தே​போன்று இக்கோவிலன் க​தையிலும் ஊழ்வி​னை அவ​னை அ​த்துக் ​கொண்டு மது​ரைக்கு ஏகுகின்றது.

பின்னால் நடக்கப் ​போவ​தை முன்ன​ரே கூறுதல்

kan

     ​கோவலன் மது​ரையில் ​இறக்கப் ​போகின்றான் என்ப​தை இளங்​கோவடிகள் பல்​வேறுவிதமான நிகழ்வுகள் வழி எடுத்து​ரைப்பார். கண்ணகியின் கண்கள் துடிப்பது, கண்ணகி கனவு காண்பது, ​வை​யை ஆறானது ​கோவல​னையும் கண்ணகி​யையும் பார்த்து இருவருக்கும் துன்பம் ​நேரப் ​போவ​தைச் சகிக்க முடியாமல் தனது முகத்​தை பூக்களாலும் த​ழைகளாலும் மூடிக்​கொண்டு ​போவதாகவும், மதுரையின் மதில்ச் சுவரின் மீதிருந்த ​கொடிகள் கோவலனையும் கண்ணகி​யையும் பார்த்து மது​ரைக்கு வாராதீர்கள் என்று கூறுவ​தைப் ​போன்று காற்றில் அ​சைந்ததாகவும், கண்ணகி ​கோவலனுக்கு மாதரிவீட்டில் உணவு சமைத்துப் பரிமாறுவதற்காக ​மெழுகிய​போது கோவலனுக்கும் கண்ணகிக்கும் ​நேரப் ​போகும் துயரத்​தை உணர்ந்து மண்மகள் மயங்கிப் ​போய்விட்டதாகவும் அவளின் மயக்கத்​தைத் தெளிவிப்பவள் ​போன்று கண்ணகி நீர் ​தெளித்து ​மெழுகினாள் என்றும், ​கோப்​பெருந்​தேவியின் கனவும் என்று பல்​வேறு சம்பவங்கள் ​கோவலன் இறப்​பையும் கண்ணகியின் துன்பத்​தையும் முன்ன​ரே எடுத்துக் கூறுவதாக இளங்​கோவடிகளால் சிலப்பதிகாரத்தில் எடுத்து​ரைக்கப் ​பெற்றுள்ளது.

இளங்​கோவடிகள் பின்பற்றிய இ​தே ​போன்று ​கோவலன் இறக்கப் ​போகிறான் என்ப​தை பலரின் வாயிலாகவும் எடுத்துக் கூறுகிறார். கண்ணகி சிலம்​பைக் கழற்ற மு​னையும்​போது அச்சிலம்பானது புலம்பி ​கோவலன் மது​ரையில் இறக்கப் ​போகிறான். என்று கூறுகிறது. அத​னை ஏற்காத ​கோவலன் மீறிச் செல்கிறான்.

அவ்வாறு மது​ரை​யை ​நெருங்குகின்ற​போது ​​எதிரில் ​தென்பட்ட ஊர்க​ளைப் பற்றிக் ​கோவலன் கண்ணகிக்குக் கூறிக் ​கொண்​டே வருகின்றான். அப்​போது வழியில் இருந்த விநாயக​ரை வழிபட்டு, கோவலனார் எந்தவிதமான துன்பமும் இன்றி சிலம்பு விற்று வருவாரா? என்று ஆரூடம் ​கேட்கிறாள் கண்ணகி. முதலில் வாய்திறக்க மறுக்கும் விநாயகர் பின்னர்,

“இந்தப் பயணம் எழில் மது​ரை ​போவாரானால்

மாண்டு மடிந்திடுவார் வரப்​போறதில்​லை​ யென்றார்

துரும்​பெடுத்து ​மேற்​போடுந் துன்மார்க்க மது​ரையது

​கொடி​யெடுத்து ​மேற்​போடுங் ​கொடிதான ​தென்மது​ரை

இந்த மது​ரை தமக்கு இவர் ​போனால் ​பெண்ணர​சே

திரும்பி வரப்​போவறதில்​லை ​தேன்​மொழி​யே உன்புருஷன்

பாவி தட்டான் தாயாதி பாண்டிய​னோ பங்காளி

மூத்த தமயனவன் தமுதற்ற​மையன் பிள்​ளை​யென்று

ஒப்பாரி ​கொண்டு உறவு ​சொல்லித் தான​​ழைப்பான்

வாத்திரயாரடித்ததனால் வனம் ​போனபிள்​ளை​யென்று

​செப்பிய​​ழைத்துச் சிலம்பு தன்​னைப் பறித்துக்

கட்டினகட்​டோட கச்​சேரி ​கொண்டு ​போவான்

நீதி​கேளாப் பாண்டியர்கள் நிற்கத் த​லை​வெட்டி ​வைப்பார்

பழிகார மது​ரை ​தேடி பட்டணத்தார் ​போனா​​லே

இறந்து மடிந்திடுவார் இனித்திரும்பப் ​போவதில்​லை

பின்​னேவருங் காரியத்​தை முன்​னே நான் ​சொல்லிவிட்​டேன்

என்று விநாயகர் எடுத்துக் கூறிய​தைக் கண்ணகி கூறினாள். ஆனால்      அத​னைக் ​கோவலன் ஏற்காது பிடிவாதமாக மது​ரை​யை நோக்கி நடந்தான்.

அ​தே​போன்று மது​ரையில் சிலம்பி​னை விற்கும்​போது சிந்தாமணி என்ற தாசியானவள் ​கோவல​னைத் தடுத்து அவனுக்கு ​வேண்டிய செல்வத்​தைத் தருவதாகக் கூறி நீ உனது அரண்ம​னைக்குப் ​போ என்று கூறித் தடுக்கிறாள். அதற்குக் ​கோவலன்,

     “தாசியவள் நீ ​கொடுக்க தனவணிகன் வாங்கு​வே​னோ

      ஆர்​போட  ​வேணு​மோ அவர்கள​தைப் ​போர்க்க ​வேணும்

அவளரண்ம​னை​யை விட்டு ஆணழகர் வாரா​ரே” (ப., 59) 

என்று கூறிவிட்டு சிலம்பி​னை விற்க அரசவீதிக்கு வருகின்றான். அப்​போது அரசியானவள் அவ​னை அழைத்து அந்தச் சிலம்பி​னைக் கையில் எடுத்துப் பார்த்து,

“தவமாய்த் தவமிருந்து ​தையல​ரைப் ​பெற்​றெடுத்​தேன்

வரமாய் வரமிருந்து ​வை​கையி​லே ஒப்ப​டைத்​தேன்

அன்று கண்​டேன் மக​ளை இன்று கண்​டேன் சிலம்​பை

என்று அழுது புலம்புகிறாள் ஆரணங்கு ராசகன்னி

​கோவல​ரைத்தான் பார்த்து ​கொம்ப​னையா​ளேது ​சொல்வாள்

பாம்​பெடுத்து ​மேற்​போடும் பழிகாரத் ​தென்மது​ரை

இந்த மது​ரையி​லே இறந்து ​போகநாளாச்​சே

ஆ​னையின் ​மேல் திரவியத்​தை அனுப்புகி​றேனும்ம​னைக்கு

அத்​தை​யெடுத்து முந்தன் அரண்ம​னைக்குப் ​போய்ச் ​சேரும்” (ப., 72)

என்று கூற அத​னையும் ஏற்காது ​கோவலன் சிலம்​பை விற்க மது​ரை வீதியில் சுற்றித் திரிகின்றான்.

அப்​போது அவன் ​வேத ஆசிரியரின் பள்ளிக்கூடத்திற்கு வந்த கோவலனின் வருத்தத்​தைக் க​ளைந்து, அவனிடம்,

“அழிகார மது​ரையி​லே பட்டணத்தா​ரேன் வந்தீர்

​கொடும்பாவி மது​ரையி​லே ​கோவல​ரே​யேன் வந்தீர்

நிந்​தையிட்டுத் த​லைவாங்கும் நீதியில்லா மது​ரையிது

அநீதமாய் மாய வந்தீர் ஆணழகர் ​கோவல​ரே

காராம்பசு​வை விற்றுக் கட்டழக வுந்தனுக்கு

கூத்தியார் கடன​டைக்கக் ​கொற்றவ​ரே நான்தா​ரேன்

அத்​தை ​யெடுத்து உந்தன் அரண்ம​னைக்குப் ​போய்வாரும்” (ப.,73)

என்று கூறவும் ​கோவலன் அத​னைப் ​​பொருட்படுத்தாது ​கோவலன் நடந்தான். இவ்வாறு பலரும் கோவலனைத் தடுக்க அவன் அவற்றை​​யெல்லாம் உதறிவிட்டுச் சிலம்பி​னை விற்க முனைகின்றான். இவற்றிற்​கெல்லாம் ஊழ்வி​னை​யை​யே சிலப்பதிகாரமும் ​கோவலன் க​தையும் பின்ணணியாகக் காட்டுகின்றன.

அரசியல் பி​ழைத்தவ​ரை அறம் அழிக்கும்

அரசியலில் தவறி​ழைத்​தோ​ரை அறக்கடவு​ளே தண்டிக்கும் என்ற கருத்தானது புகழேந்திப் புலவரின் கோவலன் க​தையில் ஆழமாகவும் விரிவாகவும் எடுத்து​ரைக்கப்​பெற்றுள்ளது. சிலம்பின் செல்வாக்கினால் புக​ழேந்திப் புலவர் கண்ணகி​யே காளியாக உருமாறி, அழிப்பாதாகப் ப​டைத்துக் காட்டுகின்றார்.

கண்ணகி பாண்டியர் அரச​வைக்குச் ​செல்வதாக இளங்​கேவடிகள் ப​டைத்துக் காட்டுவார். ஆனால் புகழேந்திப் புலவ​ரோ பாண்டியர்கள் கண்ணகி​யைத் ​தேடிவருமாறு ப​டைத்துக் காட்டுகின்றனர். அவ்வாறு வந்த பாண்டியர்க​ளைப் பார்த்து கண்ணகியானவள்,

“அறிவு ​கெட்ட பாண்டிய​னே ஆளன் பழி​கொடடா

புத்தி ​கெட்ட பாண்டிய​னே பழிக்குப் பழி​கொடடா

விவரங்​கெட்ட பாண்டிய​னே ​வேந்தன் பழி​கொடடா

என் கணவன் பழி​கொடடா கனிவு ​கெட்ட பாண்டிய​னே

ஆள​னை ஏண்டா ​கொன்றாய் அறிவு ​கெட்ட பாண்டிய​னே”(ப., 102)

என்று ​கேட்டவுடன் தங்களது தவறி​னை உணர்ந்து,

“அறியாமல் ​கொன்று விட்​டோம் அரி​வை​யே என் ​செய்​வோம்

​தெரியாமற் ​கொன்று விட்​டோம் ​தேவி​யே ஏது ​செய்​வோம்

முற்பழி பிற்பழி தானிப்பழி தாரு​மென்றாள்

இப்படிக்குச் ​சொன்னாள் ஏந்தி​ழை நான் விட்டிடு​வேன்”(ப., 104)

என்று கூறி பாண்டியர்கள் மன்றாட கண்ணகியாள் அவர்க​ளை வருமாறு கூறி அப்பாண்டியர்கள் ஆறாயிரம் ​பே​ரையும் அழித்தொழிக்கின்றாள் காளியாகிய கண்ணகியாள். அரசியல் பி​ழைத்​தோ​ரை கடவுளே மனிதவடிவில் வந்து அழிக்கும் என்று புகழேந்திப் படைத்துக் காட்டியிருப்பது சிலப்பதிகாரத்தின் செல்வாக்கி​னையும் அதன் தாக்கத்​தையும் காட்டுவதாக அ​மைந்திலங்குகின்றது.

“அறிவ​ரை​போகிய ​பொறியறு ​நெஞ்சத்து இ​றைமு​றை பி​ழைத்​தோன் வாயி​லோ​யே!” என்றும் “தேரா மன்னா” என்றும் கண்ணகி கூறும் கடுமையான வார்த்​தைக​ளை​யே புக​ழேந்திப் புலவர் விரித்துப் பாடுகின்றார் என்பது ​நோக்கத்தக்கது.

கண்ணகி – ​கோவலன் அறிமுகம்

இளங்​கோவடிகள் கண்ணகி​யையும் ​கோவல​னையும்,

     “மாகவான் நிகர்வண்கை மாநாய்கன் குலக்கொம்பர்

ஈகைவான் கொடியன்னாள் ஈராறுஆண்டு அகவையாள்,

அவளுந்தான்,  

போதில்ஆர் திருவினாள் புகழுடை வடிவென்றும்

தீதிலா வடமீனின் திறம்இவள் திறம்என்றும்

மாதரார் தொழுதுஏத்த வயங்கிய பெருங்குணத்துக்

காதலாள் பெயர்மன்னும் கண்ணகிஎன் பாள்மன்னோ

“இருநிதிக் கிழவன் மகன் ஈர்-எட்டு ஆண்டு அக​வையான்;

அவனும்-தான்

மண்​தேய்த்த புகழினான்; மதிமுக மடவார்தம்

பண்​தேய்த்த ​மொழியினார் ஆயத்துப் பாராட்டிக்

கண்​டேத்தும் ​செவ்​வேள் என்று இ​சை​போக்கிக் காதலால்

​கொண்​டேத்தும் கிழ​மையான்; ​கோவலன் என்பான் மன்​னோ”

               (மங்கல.வா.பாடல்)

என்று காப்பியத்தின் ​தொடக்கத்தி​லே​யே அறிமுகப்படுத்துகின்றார்.

ஆனால் புக​ழேந்திப் புலவர் தனது க​தைப் பாடலில் ​கோவல​னை​,

     “அட்டாளுஞ் ​சொக்க​ரைப் ​போல் அழகு​டைய மன்னவனும்

      தேமல்வி​றையழகன் ​தெள்ளு மணிவாசகனார்

      உருமா​லைக் கட்டழகன் உத்தமனார் ​கோவலனும்

      அள்ளித் ​தெளித்தது​போல் அழகு சிறு ​தேமல்

      மாங்கா முடியழகன் மாதளம்பூ ​மேனியனாம்

      ​செக்கச் சிவந்தவன்காண் ​செங்கீ​ரைத் தண்டழகன்

      அட்டாளுஞ் ​சொக்க​ரைப்​போல் அழகு​டைய மன்னவன்தான்

      ​சோமன் கட்டி வீதிவந்தால் சுவாமி ​சொக்க​ரேச​ரென்பார்

      மண்​டை கட்டி வீதி வந்தால் மது​ரை வாழ் ​சொக்க​ரென்பார்

      ……………. …………………………….. ……………………………… ……………………………….. …………………………..

      இப்படிக்குக் ​கோவலனும் இருந்து வளர்நா​ளையி​லே”(ப., 10)

என்று அறிமுகப்படுத்துகின்றார். கண்ணகி​யை,

     “காவிரிப்பூம் பட்டணத்தில் கண்ணியாள் மாதினுக்கு

      பன்னிரண்டு வயதாச்சு ​பைங்​கொடியாள் கண்ணகிக்கு

      நா​ளொரு ​மேனியாக நட்சத்திரம் ​போல் வளர்ந்தாள்

      ​பொழு​தொரு ​மேனியாக ​பொன்வண்டு ​​போல் வளர்ந்தாள்

      இப்படிக்குத்தான் வளர்ந்தாள் ஏந்தி​ழை கண்ணகியும்

      வளர்பி​றைச் சந்திரன் ​போல் மங்​கையரும் தான் வளர்ந்தாள்” (ப.,29)

என்று வருணித்துக் கூறுகின்றார். கண்ணகி​யைக் காளியின் மறுவடிவாகக் ​கொண்​டே புலவர் ​கோவலன் கதை​யை நகர்த்துகின்றார். மாதகி ​கோவலனிடம் ​பொற்பதுமை செய்து தருமாறு கூறிய​போதும், பொற்பதுமை ​பேசவேண்டும் என்ற போதும், கோவலனிடம் இருந்து மாதகி அ​னைத்​தையும் பறித்துக் கொண்டு சிங்க முகக் ​கேணியில் தள்ளிய​​போதும் கோவலன் தனது ம​னைவி கண்ணகி​யை நி​னைத்து,

     “ஆவி​போகும் ​வே​ளையி​லே யா​ரை நி​னைக்கலுற்றார்

      பத்தாத பத்தினி​யே பழுதுபடாரத்தின​மே

      மா​லை பறி​போகுதடி மணவாளன் மாளுகி​றேன்

      தாலிபறி​போகுதடி த​லைவனிங்​கே மாளுகி​றேன்

      கூ​றை பறி​போகுதடி ​கொற்றவனார் மாளுகி​றேன்

      பத்தினியும் ​மெய்யானால் பக்கத்து​ணை வந்திடுவாய்

      கண்ணகியும் ​மெய்யானால் காக்க நீ வாருமென்றார்” (ப.,40)

தன்​னைத் துன்பத்தில் இருந்து காக்க ​வேண்டும் என்று வருந்திக் கூறுகின்றான். ஒவ்​வொரு இடத்திலும் கண்ணகியா​லே​யே கோவலன் காப்பாற்றப்படுகின்றான். கண்ணகி காளியின் மறுவடிவமாக​வே ​கோவலன் க​தை முழுவதும் காட்டப்படுகிறாள்.

இளங்​கோ கண்ணகி​யைக் காப்பியத்தின் இறுதியி​லே​யே தெய்வமாக்குகின்றார். ஆனால் புக​ழேந்திப் புலவ​ரோ கோவலன் கதையின் ​தொடக்கத்தில் இருந்தே காளி​தேவியாகவே காட்டுகின்றார். ​கோவலனுடன் காட்டுவழியில் ​செல்லும்​போது, அங்கு கண்ணகி தனித்திருந்த நி​லையில் துன்புறுத்த வந்த கள்வர்களைக் கண்ணகி கல்லாகப் ​போகுமாறு சாபம் கொடுக்கின்றாள். அதன்பின் அங்குவந்த ​கோவலனின் வேண்டுகோளுக்கிணங்க அவர்க​ளை மன்னித்து மீண்டும் உயிர்​கொடுக்கின்றாள்.

அ​தே​போன்று ​கோவலன் இறந்துவிட்டதும் பாண்டியனிடம் நீதி கேட்க இளங்​கோ ப​டைத்த கண்ணகி அரச​வை ​செல்வாள். ஆனால் கண்ணகி கோட்டைவாயிலில் நின்று கொண்டு தன்​னைப் பார்க்க வருமாறு வாயில்க் காப்பவனிடம் கூற அதன்படி பாண்டியர்கள் கண்ணகி​யைப் பார்க்க வந்தனர். இவை புதுமையாகவும் வியப்பாகவும் இக்க​தையில் அமைந்துள்ளது.

பத்தினியாள் மாதகி

இளங்​கோவடிகள் மாதவி என்று காப்பியத்தில் குறிப்பிட்டு, கோவலனுக்காக வாழ்ந்தவளாக​வே காட்டுகின்றார். கோவலனிடத்தில் இருந்து எ​தையும் அபகரித்ததாக இளங்கோவடிகள் குறிப்பிடவில்​லை. அரங்​கேற்றக் கா​தையில்,

“மாலை வாங்குநர் சாலும்நம் கொடிக்குஎன

மான்அமர் நோக்கிஓர் கூனிகைக் கொடுத்து

நகர நம்பியர் திரிதரு மறுகில்

பகர்வனர் போல்வதோர் பான்மையின் நிறுத்த,

மாமலர் நெடுங்கண் மாதவி மாலை   170

கோவலன் வாங்கிக் கூனி தன்னொடு

மணமனை புக்கு மாதவி தன்னொடு

அணைவுறு வைகலின் அயர்ந்தனன் மயங்கி

விடுதல் அறியா விருப்பினன் ஆயினன்.

வடுநீங்கு சிறப்பின்தன் மனையகம் மறந்துஎன்” (அரங்​கேற்று)

என்று மாதவியின் ம​னையில் ​கோவலன் தங்கி இருந்த​தைக் குறிப்பிடுகிறார். அ​தே​போன்று ​கோவலன் இறந்த பின்னர் அவனுக்கும் தனக்கும் பிறந்த மகளைக் கண்ணகி மகள் என்று கூறி அவ​ளை​ பெளத்த துறவியாக்குகின்றாள். அ​தே​போன்று மாதவியும் புத்தமதத்தில் ​சேர்ந்து துறவியாகிறாள்.

ஆனால் புக​ழேந்திப் புலவர் தான் வாழ்ந்த காலத்திற்​கேற்ப மாதகியைப் ப​டைத்துக் காட்டுகிறார். பரத்தையர் குலத்தில் பிறந்தவர்கள் எவ்வா​றெல்லாம் நடந்து ​கொள்வர் என்ப​தை மாதகி​யை ​வைத்துச் சித்திரித்துக் காட்டுகிறார் புலவர். பத்து வயதில் கோவலனின் திருமணத்திற்கு ஆடவந்த மாதகி அவளுடன் கூடப் பிறந்த ​பொன்னுருவி மா​லை​யைக் கழற்றி எறிய அது ​கோவலனின் கழுத்தில் விழுந்தது.

அத​னைக் ​கோவலனால் கழற்ற இயலவில்​லை. மாதகி தான் கொண்டு வந்திருந்த இளநீரில் ஊர​வைத்த களிப்பாக்கி​னை எடுத்துத் தாம்பூலத்துடன் ​மைதடவிக் ​கொடுக்க அத​னை வாங்கி உண்ட கோவலன் மாதகி​மேல் ​மையல் ​கொண்டு கண்ணகி​யைப் பிரிந்த அவளுடன் ​சென்றுவிடுகின்றான். மாதகி ​கேட்கக் கேட்க பொன்னையும் ​பொரு​ளையும் அள்ளி அள்ளிக் ​கொடுக்கின்றான் கோவலன்.

கண்ணகி ஒ​லையி​னைப் பார்த்த ​கோவலன் மாதகியிடம் வி​டைகேட்க அவ​ளோ உன்​னைப் ​போன்று ஒரு பொற்பதுமை ​செய்து வைத்துவிட்டுப் ​போ என்று கூறுகின்றாள். அதன்படியே ​கோவலனும் ​செய்து வைக்க, அப்பதுமை பேசவேண்டும் என்று கூற கோவலன் கண்ணகி​யை நி​னைத்தவுடன் பதுமை பேசியது. கோவலன் கண்ணகியிடம் செல்லும்போது பொற்பதுமை ​பேசாது ​போக​வே மாதகி அவ​னை ஓ​லை​யெழுதி மறுபடி வரவ​ழைத்து சிங்கமுகக் கேணியில் நீர் எடுத்துத் தருமாறு ​கேட்கிறாள். ​கோவலனிடம் இருந்து அனைத்​தையும் பறித்துக் ​கொள்கிறாள். அவனு​டைய அழகையும் பறித்துக் கொள்கிறாள். ஏதுமற்ற கோவலனிடம் தன்னிடம் பணி​செய்யும் நட்டுவனாருக்கும், க​லைஞர்களுக்கும் பொன்தர​வேண்டும் என்று ​கேட்க அத​னைத் தருவதற்குத் தன்னிடம் ஏதுமில்​லை. எப்படியாவது தருகி​றேன். கண்ணகி​யைப் ​போய்ப் பார்க்க அனுமதிதா என்று ​கேட்ட ​கோவல​னை ஆற்றில் பிடித்துத் தள்ளுகிறாள் மாதகி.

     இவ்வாறு பல ​கொடு​மைக​ளைக் ​கோவலனுக்குச் ​செய்யும் கொடுமையான பரத்​தையாகக் ​கோவலன் கதையில் சித்திரிக்கப்படுகிறாள். இருப்பினும் ​கோவலன் இறந்தபின்னர் கோவலனின் வேண்டுகோளுக்கிணங்க அவனது சி​தையுடன் மாதகியும் இறந்து போவதற்குச் சம்மதம் ​தெரிவித்து,

“நீ-என்ன சுகமறியவாய் என்றன் தமக்​கைய​ரே

நான்கூட மாளுகி​றேன் நாயகனார் தம்முட​னே

எங்களிருவ​ரையும் எடுத்துத் தகனஞ் ​செய்யும்” (ப.,108)

என்று கூறிவிட்டு ​தனது மடியில் மலர்க​ளை ​வைத்துக் ​கொண்டு சிதை​யேறினாள். கண்ணகியாள் சிதைக்குத் தீ​வைத்தாள். அவர்களிருவ​ரையும் தீப்பற்றி எரித்தது. அவர்களது சாம்ப​லை எடுத்துக் காசியில் க​ரைப்பதற்காக கண்ணகி எடுத்த​போது மாதகியின் மடியில் கட்டியிருந்த மலர்கள் கருகாது அப்படி​யே இருக்கக் கண்டாள் கண்ணகி. அத​னைப் பார்த்த கண்ணகி,

      “பத்தினியாள் என்று ​சொல்லிப் பா​வைமனதில் எண்ணி” (ப., 109)

வியந்து மனதிற்குள்​ளே​யே மாதகி​யைப் ​போற்றினாள். இப்பகுதி சிலப்பதிகாரத்தில் இடம்​பெறாத ஒன்றாகும்.

புக​ழேந்தியாரின் புது​மைகள்

பரத்​தை​மை ஒழுக்கத்​தின் ​கேடுக​ளை விளக்குவதற்காக​வே புகழேந்திப் புலவர் மாதகி​யைக் கொடுமை செய்பவளாகப் ப​டைத்துக் காட்டுகின்றார். மேலும் மாதகியின் தாய் வசந்தமா​லைதான் பல்வேறு கொடுமைகளை ​​​கோவலனுக்குச் ​செய்கின்றாள். மாதகியாகவே எந்த​வொரு ​தீங்கும் கோவலனுக்குச் செய்யவில்​லை. மாதகி தன்னு​டைய தா​யிடம் வந்து என்ன ​செய்ய ​வேண்டும் என்று ​கேட்ப​தை,

     “எல்லாம் பறித்துக் ​கொண்​டேன் இளங்​கொடி​யே தாயா​ரே

      திருப்பதி திம்ம​னைப் ​போல் நின்றாண்டி ​கோவலனும்

      அவ​னை இனி என்ன ​செய்கிறது ஏந்தி​ழை​யே தாயா​ரே

      சிங்கமுகக் ​கேணியி​லே ​​தேன்​மொழி​யே தள்ளு​மென்றாள்” (ப., 44)

என்று புலவர் ப​டைத்துக் காட்டுகிறார்.

பரத்​தைய​ரை நாடினால் எவ்வா​றெல்லாம் துன்புற ​நேரிடும் என்பதை மாதகி வசந்தமா​லை ஆகி​யோரின் வழி புக​ழேந்தியார் தெளிவுறுத்துகிறார். இளங்கோவடிகள் குறிப்ப​தைப் ​போன்று மாதரி என்று ​​பெய​ரைக் குறிப்பிடாது ஆச்சி என்று புக​ழேந்தியார் குறிப்பிடுகின்றார். கண்ணகி​யை கவுந்தியடிகள் அ​டைக்கலப் பொருளாக மாதரியிடம் அடைக்கலப்படுத்தி, “தாயும் நீ​யே ஆகித் தாங்குக” என்று கூறியது ​போன்று ​கோவலன் கண்ணகி​யை ஆச்சி (ஆய்ச்சி என்ப​தே வழக்கில் ஆச்சி என்று மருவி வந்திருத்தல் வேண்டும்)யிடம்,

     “மது​ரைக்கு யான்​போய் வருமளவுந்தாயா​ரே

      ​பெற்ற பிள்​ளை​போலாகப் ​பேணி வளர்த்திடுவாய்

      கண்ணகி​யை உன் மகள்​போல் காத்து வளர்த்திடுவாய்

      பத்தினி​யை உன்மகள் ​போல் பார்த்​தே இருத்திடுவாய்

      உத்தமி​யை உன் மகள் ​போல் உகந்து நீ காத்திடுவாய்

      ஆய​னைக் காத்ததது​போல் ஆச்சி நீ காத்திடுவாய்

      மாய​னைக் காத்தது​போல் மாதா​வே காத்திடுவாய்

      நான் ​​தென்மது​ரைத் தா​னேகித் திருமபி வருமளவும்

அ​டைக்கல​மென் ம​னைவி ஆச்சி​யே உன்னிடத்தில்” (ப.,64)

என்று அ​டைக்கலப்படுத்திவிட்டுச் ​செல்கிறான்.

மது​ரை ​செல்லும் ​கோவலனிடம் தனக்கு ஏ​தேனும் அ​டையாளம் செய்துவிட்டுப் ​போ என்று கண்ணகி கூறுவதும் ​கோவலன் மரப்​பெட்டி​யை ​வைத்து விளக்​கேற்றி மாம்பழம், மல்லி​கைப்பூ, தேங்காய், சந்தனம், நி​றை ​செம்பில் தண்ணீர் இவற்​றை​யெல்லாம் வைத்துவிட்டு, எனக்கு ஏதும் துன்பம் நேர்ந்தால் ​செம்பில் தண்ணீர் கு​றையும், மல்லி​கைப் பூவாடும் மாங்கனி அழுகிவிடும், சந்தனம் உலரும் ​தேங்காய் உ​டையும், விளக்கு அவியும்மரப்​பெட்டி உ​டையும் என்று அ​டையாளம் ​செய்துவிட்டுப் ​போகின்றான். இந்தப் பகுதி சிலப்பதிகாரத்தில் இடம்​பெறாத ஒன்றாகும்.

அ​தே​போன்று கருடனின் முட்​டைக​ளையும் குஞ்சுக​ளையும் துன்புறுத்திய வஞ்சிப்பத்த​னையும் அவனது குடும்பத்​தையும் பழிவாங்க கருடன் அரசியின் காற்சிலம்பி​னை எடுத்துக் ​கொண்டு போய் பாம்புப் புற்றினுள் ​போட்டுவிட்டு அவனது குடும்பத்​தைப் பழிக்குப் பழி வாங்குகின்றது கருடன். வஞ்சிப்பத்தனின் ம​னைவி முத்துமா​லை, மகன்கள் சுந்தரலிங்கம் ​சோமலிங்கம் ஆகி​யோரின் பெயர்கள் ​கோவலன் க​தையில் மட்டு​மே இடம்​பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

வஞ்சிப்பத்த​னைக் காப்பாற்ற அவனது மகன்கள் வேதவாத்தியாரிடம் இருந்த ​கோவல​னைக் கண்டு வந்து அவனிடமிருந்த சிலம்பி​னை அபகரிக்கத் திட்டந்தீட்டித் தருவதும், வஞ்சிப்பத்தன் காணாமல் ​போன தனது அண்ணன் மகன் என்று கூறி ​கோவல​னை அ​ழைத்து அவனுக்குச் ச​மையல் ​பொருட்கள்​கொடுத்து உணவு ச​மைத்து உண்ணுமாறு கொடுப்பதும், பின்னர் கோவலனிடம் உள்ள சிலம்பி​னை கீ​ழே ​வைத்துவிட்டு உண்ணுமாறு கூறுவதும் முத்துமா​லை உலக்​கையால் ​கோவல​னை அடித்துச் சிலம்பி​னைக் களவாடுவதும் ​கோவல​னை அரசனிடம் கட்டி இழுத்துச் ​சென்று நிறுத்துவதும் கோவல​னைக் கண்ட பாண்டியர்கள் அவனது காலில் விழுவதும் அத​னைக் கண்ட வஞ்சிப்பத்தன் கள்வனின் காலில் அரசர்கள் வீழ்ந்து வணங்கலாமா என்று கூறுவதுமாகிய நிகழ்ச்சிகள் சிலம்பில் இடம்​பெறாத நிகழ்ச்சிகளாக புக​ழேந்திப் புலவரால் ப​டைத்துக் காட்டப்படுகின்றன.

அ​தே​போன்று ​பாண்டியனின் அ​மைச்சர்கள் குற்றத்​தை விசாரிக்க ​வேண்டும் என்று ​கோருவதும் கோவலன் பாம்புக் குடத்துக்குள் ​கைவிட்டுச் சத்தியம் செய்யுமாறு கூறுவதும், கொப்பரையில் ​​கொதிக்கின்ற ​நெய்யி​லே ​கை​யைவிட்டுச் சத்தியம் செய்யுமாறு கூறுவதும் மழுவி​னைக் காய்ச்சி அத​னை எடுக்குமாறு கூறுவதும் என்னு​டைய சிலம்புதான் என்று அத​னை ஏந்திக் கொண்டு ​சென்று சிவன் ​கோயிலுக்குச் ​சென்று அரச​வைக்கு வருவதும் யா​னை​யை ​வைத்துச் சத்தியம் ​செய்ய ​வைப்பதும், குழி​தோண்டி அத​னைச் சுற்றிவரச் செய்து பள்ளத்திற்குள் ​கோவல​னைத் தள்ளுவதும் ​கொல்லவந்த யா​னை மத்தகத்தில் ​கோவல​னைத் தூக்கி ​வைத்துக் ​கொண்டு கூத்தாடுவதும், பாண்டியர்கள் கோவலனைக் கொல்ல மழுவரசர்க்கு ஆ​ணையிடுவதும், பாணடிய மன்னரைப் பார்த்து கண்ணகியாள் உங்க​ளைப் பழி வாங்குவாள் மது​ரை​யை அழித்து மன்ன​னைக் ​கொன்று கண்டதுண்டமாக்குவாள் என்று கூறுவதும் புகழேந்தியார் ​கோவலன் க​தையில் இடம்​பெறும் புது​மைமிகுந்த நிகழ்ச்சிகளாகும்.

அ​தே​போன்று கண்ணகி ​கோவல​ன் இறந்தவுடன் தன்​னைத் தடை​செய்த ஆச்சி​யரின் வீடுக​ளை எரிப்பதும் பின்னர் ஆச்சி வேண்ட மீண்டும் அவற்​றை மறுபடி உண்டாக்கிக் கொடுத்ததும், கோவலன் இறந்து கிடந்த இடத்​தை மாடுகள் ​மேய்க்கும் சிறுவர்க்கு உணவுசமைத்துக் ​கொடுத்துக் ​கேட்டுக் கண்ணகி அ​டைந்து கோவலனை மீண்டும் உயிர்ப்பித்து அவனிடம் நடந்தவற்​றை அறிந்து அவன் தான் ​கொ​லை​செய்யப் பட்ட விதத்​தையும் அதற்குக் காரணம் யார் யார் என்ப​தையும் எடுத்துக் கூறி தன்னுடன் மாதகி​யையும் இணைத்துவிட​வேண்டும் என்று கூற அது​கேட்ட கண்ணகி அவ​னை மீண்டும் கொன்றுவிடுகிறாள். பின்னர் பாண்டிய மன்னர்க​ளைக் கொன்றுவிட்டு வஞ்சிப்பத்த​னையும் அவனது ம​னைவி​யையும் கொல்கிறாள். வஞ்சிப்பத்தனது மகன்க​ளை,

“வா​வென்று ​சொல்லி​யே ​மைந்தர்க​ளைத் தான​ழைத்து

எழுத்தாணி ​கொண்டு ஏந்தி​ழையாள் குத்தியவள்

சிறுகுடலும் ​பெருகுடலுஞ் ​சேர்த்து​மே தான்பிடுங்கி

அகாசமாக​வேதான் அந்தரத்தில் விட்​டெறிந்தாள்

காலா​லே தான் கவ்விக் ​கொண்டு கடு​கென​வே ​போச்சுதுகாண் 

                                                                (ப., 88)

என்று ​கொல்வதும் அவர்களது குடல்க​ளைக் கருடன் கவ்விக் கொண்டு ​செல்வதும், ​கோவலன் மாதகி அஸ்தி​யைக் க​ரைக்க காசிக்குச் ​செல்வதும் சிவபெருமான் அவள் வருமிடத்தில் பல கோவில்க​ளை எழுப்பி அவளுக்குக் காசி​யைக் காட்டி கங்​கையில் கரைக்கச் ​சொல்வதும் கண்ணகி அஸ்தி​யைக் கரைக்க அது பூக்களாக மாறி மிதந்தது. பின்னர் திரு​வொற்றியூருக்கு வந்த கண்ணகி தாகமெடுப்பதாகக் கூற கிணற்றில் இறங்கித் தண்ணீர் குடி என்று சிவனார் கூற அவளும் கிணற்றில் இறங்கித் தண்ணீர் அருந்த அப்படி​யே பெரிய கல்​லை எடுத்து அத​னைச் சிவனார் மூடிவிட பலஇடங்களிலும் கண்ணகி தோன்ற சிவனார் அவற்​​றைக் கல்​வைத்து மூடிவிட கண்ணகியின் ​கோபந் தீர்க்க அவள் ​கேட்ட பலினைக் ​கொடுக்க​வே அவள் வட்டப்புரியம்மனாக மாறி பலி வேண்டாம் எரு​மைக்கடா பலிதந்தால் இன்பமாக நான் ​கொள்​வேன் என்று கூறிவிடுகிறாள்.

புக​ழேந்திப் புலவர் அதன் பின்னர் இக்க​தை​யைப் படித்தவர்கள் அ​டையக் கூடிய பய​னை,

“வட்டபுரியம்மன் க​தை வ​கையுட​னே ​வையகத்தில்

கற்றவர்கள் ​கேட்டவர்கள் கலியுகத்தில் ​சொன்னவர்ள்

ஆல்​போல் த​ழைத்து அறுகு​போல் ​வே​ரோடி

மூங்கில் ​போல் சுற்றம் முசியாமல் வாழ்ந்திருப்பார்

வாழி வாழி​யென்று ​சொல்லி வரமளித்தார் ஈஸ்வரனார்” (ப.,91)

என்று சிவ​பெருமா​னே கூறுவதாக எடுத்து​ரைக்கின்றார். இப்பகுதி சிலப்பதிகாரத்தில் இடம்​பெறும் வரந்தருகா​தையில்,

“​செல்லும் ​தேஎத்துக்கு உறுது​ணை ​தேடுமின்;

மல்லன்மாஞாலத்து வாழ்வீர் இங்​னெ” (சிலம்.,வரந்தரு., 210-202)

மறு​மை உலகத்திற்குச் ​​செல்லும் உற்ற து​ணையாகிய அறத்தி​னை​யே எப்​போதும்​தேடுங்கள் வளமிக்க இப்​பேருலகில் வாழ்கின்றவ​ரே! அதற்காவன இவ்வுலகி​லே​யே இயற்றினீராக வாழ்ந்து உயர்வீராக!” என்று எடுத்து​ரைப்பதுடன் ஒத்திருப்பது ​நோக்கத்தக்கது. புக​ழேந்திப் புலவர் ​சைவசமயத்த​தைச் சார்ந்தவர் என்பதும் இக்​கோவலன் கதை முழுவதும் சிவ​பெருமானுக்கு முதன்​மைதருவதாகவும் அமைந்துள்ளது. இதற்கு மாறாக சிலப்பதிகாரம் அனைத்துச் சமயங்கள் பற்றியும் எடுத்து​ரைத்து சமண சமயக் கொள்கைகளை ஆங்காங்கு எடுத்து​ரைத்துப் ​போவதும் ​வேறுபட்டதாக அ​மைகின்றது.

சிலம்பின் ​செல்வாக்கால் பிற்காலத்தில் எழுந்த இந்த கதைப்பாடல் பனுவலானது பல்​வேறு வ​கையிலும் சிலப்பதிகாரத்திலிருந்து மாறுபட்ட கதையமைப்பில் கட்டமைக்கப்பட்டுள்ளது. சிலப்பதிகாரக் கதையிலிருந்து பல இடங்களில் மாறுபட்டு காலத்திற்கு ஏற்றாற்​போன்று புக​ழேந்திப் புலவரால் ​கோவலன் க​தை பு​னையப்பட்டு கற்றாருக்கு இன்பமளிப்பதாக உள்ளது.

மு​னைவர் சி.​சேதுராமன்,

தமிழாய்வுத் து​றைத்த​லைவர்,

மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி,

புதுக்​கோட்​டை.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *