ராம்லீலா மைதானத்தில் ஒரு வெற்றி விழா!

0

பவள சங்கரி

தலையங்கம்

images (1)சிறுபான்மை அரசின் முதல்வராகப் பதவி வகித்த, அரவிந்த் கேஜரிவால் அவர்கள் 6-ஆவது தில்லி சட்டப்பேரவைக்கான தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று, நம் இந்தியச் சரித்திரத்தில் நிலையான ஓரிடத்தைப் பெற்றுள்ளார். ‘ஆம் ஆத்மி’ என்றால் மக்களுக்கான கட்சி என்ற பொருளுக்கேற்ப மக்களால் பெருவாரியாக வாக்களிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தத் தேர்தலில் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆம் ஆத்மி கட்சியில் உள்ள 67 சட்டமன்ற உறுப்பினர்களின் சராசரி வயது 43 என்ற வகையில் எப்போதும் வயதானவர்களே அரசியலில் இருக்கிறார்கள் என்ற நிலையில் மாற்றம். அடுத்ததாக 67 சட்ட மன்ற உறுப்பினர்களில் 43 பேர் பட்டதாரியாகவும், அதற்கு மேலும் படித்தவர்கள். 24 பேர் மட்டும் 12ம் வகுப்பு வரை படித்தவர்களாக உள்ளார்கள். 67 சட்ட மன்ற உறுப்பினர்கள் மீதும் மிகப்பெரிய குற்றப்பின்புலம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்க அம்சம். கேஜரிவால் உள்பட பலர் மீது கிரிமினல் குற்றங்கள் சுமத்தப்பட்ட போதும் அந்தக் குற்றங்கள் மக்களுக்காகப் போராடியதற்காகச் சுமத்தப்பட்டவையே. மேலும் ரூ18,000 மட்டுமே சொத்து உள்ளவரும் இன்று சட்ட மன்ற உறுப்பினராக ஆக்கப்பட்டுள்ளார். பலருடைய சொத்து மதிப்பு 2 கோடி ரூபாயும், அதற்கு சற்று அதிகமாகவும் உள்ளது. ஒரே ஒருவரின் சொத்து மதிப்பு மட்டும் 80 கோடியாக உள்ளது. இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய கருத்து என்னவென்றால், 2013 -2015,இல் இவர்களுடைய சொத்து மதிப்பும், வருமானமும் 4 சதவிகித வளர்ச்சியே கண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. தேர்தல் அறிக்கை – 2013இல் குறிப்பிட்டதை தங்களுடைய 49 நாட்கள் ஆட்சியிலேயே நிறைவேற்ற முயன்றார்கள். பொது விநியோகத்தில் மேம்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் விநியோகம், உணவு எண்ணை மற்றும் பருப்பு இணைக்கப்படும் சாத்தியக்கூறுகள் உள்ளன, தினசரி ஒவ்வொரு இணைப்பிற்கும் 700 லிட்டர் இலவச குடிநீர் வழங்குதலும் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கலாம். குறைக்கப்பட்ட அல்லது மானிய விலையில் தட்டுப்பாடற்ற யூரியா மற்றும் உரங்களும், விவசாயப் பெருமக்களுக்குக் கிடைக்க வழி செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம். பேருந்துகளுக்கு, இயற்கை எரிவாயுவை உபயோகப்படுத்துவதை நடைமுறைப்படுத்துவது, அங்கீகரிக்கப்படாத குடியிருப்புகளை ஒழுங்குபடுத்துவது என்று அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டால், தில்லி மட்டுமன்றி நாடே வளமான ஆட்சியை மகிழ்ந்து கொண்டாடலாம். இதேநேரத்தில் மாநில உரிமை பெறாத சமயத்தில் இந்திய அரசின் ஒன்றியமாக இருக்கும்பொழுது ஆட்சியில் அமர இருக்கும் இக் கட்சி எதிர்கொள்ள இருக்கும் சவால்களை சந்தித்து களைந்து வெற்றி பெறும் என்று நம்புவோம். வெல்க பாரதம்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *