செண்பக ஜெகதீசன்

 

உடுக்கை யிழந்தவன் கைபோல வாங்கே
யிடுக்கண் களைவதாம் நட்பு.
-திருக்குறள் -788 (நட்பு)

 

புதுக் கவிதையில்…

உடை நெகிழ்வதைத்
தடைசெய்துவிடும் கரங்கள்
உடனடியாய் வந்து..

அவை போன்றதுதான்
நட்பும்-
துன்பம் நண்பருக்கு வருகையில்
விரைவாய்த்
துடைத்துவிடுவதால்…!

குறும்பாவில்…

ஆடையவிழ்ந்தால் ஓடிவரும் கைபோல்
நட்பு வரும்,
நண்பருக்குத் துன்பம் வரும்போது…!

மரபுக் கவிதையில்…

இடுப்பில் கட்டிய ஆடையது
இயல்பு மாறி அவிழ்கையிலே,
தடுத்து மானம் காத்திடவே
தானாய் வந்திடும் கையதுபோல்,
இடுக்கண் வாழ்வில் வரும்போததை
இதமாய் உடனே விலக்கியேதான்
கொடுக்கும் நல்ல வாழ்வதையே
கூடத் துணையாம் நட்பதுவே…!

லிமரைக்கூ…

உடையது நெகிழ்ந்தால் கைகள்வரும் ஓடி,
இதுதான் கதையும் நட்பில்-
இன்னலகற்ற உடனடியாய் நட்புவரும் தேடி…!

கிராமிய பாணியில்…

ஓடிவரும் ஓடிவரும்
ஒடனக்கை ஓடிவரும்,
ஒடல்லதுணி அவுந்துண்ணா
ஒடனக்கை ஓடிவரும்..

நண்பங்கதயும் இதுபோல,
துன்பங்கொஞ்சம் நமக்குவந்தா
துடிச்சிப்போவான் நண்பனுமே,
தொணவருவான் நம்மகூட
தொடச்சிருவான் தொயரத்தயே,
ஒதவிடுவான் கைபோல..

ஓடிவரும் ஓடிவரும்
ஒடனக்கை ஓடிவரும்…!

-செண்பக ஜெகதீசன்…

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *