— மீ.விசுவநாதன்.

சத்யவாகீஸ்வரன் என்ற சத்யாவுக்கு முப்பத்திரெண்டு வயது இந்த மாதம் முப்பதாம் தேதியன்றே முடிந்து விட்டது. அவன் கணக்கில் புலி. அதனால் அவன் விரும்பி “பீகாம்” சேர்ந்து, குடும்பச் சூழ்நிலையால் அதற்குமேல் தொடர்ந்து படிக்க விரும்பாமல் வேலையைத் தேடிக்கொண்டான். சென்னையில் “பாரீஸ் கார்னரில்” ஒரு சிறிய கம்பெனியில் ரூபாய் பத்தாயிரத்திற்கு வேலை அமைந்து தனது திறமையாலும், நேர்மையாலும் தன்னுடைய இருபத்தி எட்டாம் வயதில் ரூபாய் இருபதா யிரமாக அது உயரக் கடினமாக உழைத்தவன். இப்போது அது நாற்பதா யிரமாக உயர்ந்து விட்டது. அவனுக்குத் திருமணமாகி இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். கோமதி அவனுடைய மனைவி. நன்றாகப் பாடுவாள். கோமதி, கல்லூரிக்குச் சேர்ந்த மூன்று மாதத்தில் சத்யாவின் அம்மா பார்வையில் ஒரு அழகான பெண்ணாகத் தெரிந்ததால், பெரியோர்களால் உடனேயே நிச்சயம் செய்யப் பட்டு நடந்தது கல்யாணம். அதனால் கோமதி கல்லூரிப் படிப்புக்கு “டாட்டா” சொல்லிவிட்டாள். இப்போதைக்குக் குழந்தையைக் கவனிப்பதே அவளுக்கு முக்கியமாகவும், மனதுக்கு இன்பமாகவும் இருக்கிறது. மாமனார் காலமாகி இரண்டு வருடம் ஆகப்போகின்றது. மாமியார் மிகவும் தன்மையானவராகவும், அனுசரணையாகவும் இருப்பது கோமதிக்கு மிகவும் பிடித்திருந்தது.

சத்யாவுக்கு சின்ன வயதிலேயே உபநயனம் நடந்து விட்டது. சத்யா நன்கு மனதை நிறுத்தி மந்திரங்களும் சொல்லுவான். அவனுக்கு அவனுடைய அப்பாவே அந்த மந்திரங்களுக்குரிய அர்த்தங்களையும் சொல்லிக் கொடுத்ததால், அவனுக்கு வேதத்திலும், வேதவாழ்கை முறையிலும் சிறுவயது முதலே ஈர்ப்பு ஏர்ப்பட்டிருந்தது.

அவனுடைய அப்பா, அவனுக்குச் சின்ன வயதில் அவர்களது வீட்டின் வாசலில் வரும் கருப்பு நிறத்தில் வெள்ளைப் புள்ளி போட்ட, அகன்ற நெற்றியும், வழவழக் கொம்பும், அழகிய பெரிய கண்களையும் கொண்ட ஒரு பசுமாட்டிற்கும், அதன் வெள்ளை நிறக் கன்றுக் குட்டிக்கும் பழங்களும், கழுநீரும் தரச்சொல்லி,”வாயில்லா ஜீவன்….கோந்தே…இதோட ஒடம்பு பூராவும் தேவதைகள் நிறைஞ்சு இருக்கா…மெதுவாத் தொட்டு ஒன்னோட கண்ணுல ஒத்திக்கோ…” என்று சத்யாவின் இரண்டு கைவிரல்களையும் அந்தப் பசுவின் மீது வைத்து அந்த விரல்களைக் கொண்டே அவனது இரு விழிகளையும் மெல்லத் தடவி விட்டதை சத்யா இப்போதும் நினைத்துக் கொள்வதுண்டு. “பசு தேவதை. நமக்காகப் பால்தரும் அம்மா” என்றெல்லாம் சத்யாவின் அப்பா சொல்லிச் சொல்லியே வளர்த்ததால் அவனுக்குப் பசுவைப் பிடிக்கும். அதனால் அம்மாவையும் மிகவும் பிடிக்கும்.

ஒருநாள் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்து கை கால்களைக் கழுவிவிட்டு, நடு அறையில் உள்ள ஒரு நாற்காலியில் அமர்ந்த சத்யாவிடம்,” இன்னிக்கி மத்தியானம் டோக்கியோ கம்பெனி வெங்கடராமன் மாமா போன் பண்ணினார்…உங்ககிட்ட ஏதோ அவசரமா பேசணுமாம்..இந்த நம்பர்ல பேசச் சொன்னார்…” என்று சத்யாவின் மனைவி தன்னுடைய வலதுகையில் உள்ள ஒரு காகிதத்தைக் கணவனிடம் நீட்டினாள். அதை வாங்கிப் பார்த்துத் தன்னுடைய “T” ஷர்ட் பைக்குள் வைத்துக் கொண்டு, தன்னுடைய செல்ல மகளைத் தூக்கி மடியில் வைதுக்கொஞ்சினான்.

அவனுடைய அம்மா,” சத்யா …நான் பக்கத்துல காலனிக்குள்ள இருக்கற பசுபதிநாதர் கோவிலுக்குப் போயிட்டுவரேன்”..என்று தனது பேத்தியைத் தூக்கி இடுப்பில் வைத்தபடி வாசலை நோக்கி நடந்தாள்.

சத்யா தனது கைபேசியின் மூலமாக அந்த “டோக்கியோ வெங்கடராமன்” மாமாவைத் தொடர்பு கொண்டான்.

“மாமா..நமஸ்காரம்..நான் சத்யா”..

“சத்யா..நன்னா இருக்கியா..”

“இருக்கேன் மாமா..நீங்க கூப்டதாகச் சொன்னா”

“ஒனக்கு எங்க கம்பெனில நல்ல வேலை தரணும்னு நெனைச்சேன்…நாங்க புதுசா ஒரு “கோடவுன்”, ராணிப்பேட்டைல தொறக்கபோறோம்…அதுக்கு உன்னத்தான் பொறுப்பாப் போடலாம்னு எனக்குத் தோணித்து…அது சீப் மேனேஜர் போஸ்ட் …..ஒன்னோட வேலையும், நேர்மையும் என்னக்குத் தெரியும்….அதான் ஒன்னக் கேக்கலாம்னு….ஆமாம், இப்ப நீ எவ்வளவு வாங்கரே…”

“மாசம் நாப்பதாயிரம் மாமா… இன்சென்டிவ் தனியா உண்டு”

“மாசம் அறுபதாயிரம் தரோம்…இன்சென்டிவ், குழந்தைக்கு படிப்புச் செலவு…தங்கறதுக்குத் தனி வீடு எல்லாம் உண்டு..கவலைப் படவேண்டாம்…”

“மாமா எனக்கு ஒரு நாள் தாங்கோ, நான் என்னோட ஆத்துலயும் கலந்து பேசிச் சொல்லறேன்..என்னோட ஆபீசுக்கும் சொல்லணும்…ஒரு மாசம் டைம் அவாளுக்குக் குடுக்கணும்…யோசிச்சுச் சொல்லறேன்”…

” நீ ஒண்ணும் கவலைப்பட வேண்டாம்..ஒரு மாசச் சம்பளத்த நாங்க தரோம் … இன்னும் ஒரு பத்து நாள்ல..நீ எங்க கம்பெனில மேனேஜர் “

“சரி ….மாமா..”

சத்யா தன்னுடைய மனைவி, அம்மாவிடம் விவரமாகப் பேசினான். அவர்களும் சம்பளம் அதிகம் என்றதால் சரி, பார்த்துக் கொள் என்றனர்.

சத்யா தன்னுடைய பெண் குழந்தையை அள்ளி முத்தமிட்டான். அது சிரித்துச் சிரித்து அவனது கன்னத்தைத் தன்னுடைய நாக்கால் நக்கியது. சத்யாவுக்கு “பசுவை அதன் கன்றுக் குட்டி தனது நாக்கால் நக்கிக் கொடுப்பது” நினைவில் வந்து சென்றது.

டோக்கியோ வெங்கடராமன் மாமாவிடம் சத்யா பேசினான். வியாபாரம் படிந்தது.

kopoojaiஇராணிப்பேட்டையில் மிகவும் விசாலமான கோடவுன். அதன் பக்கத்திலேயே குளிர்சாதனம் கொண்ட மிக நேர்த்தியான அலுவலகம். டோக்கியோ வெங்கடராமனும், திருநெல்வேலி கோபாலஅய்யங்காரும், திருச்சூர் ராவூத்தனும் இந்த நிறுவனத்தின் பங்குதாரர்கள். ஏகப்பட்ட பணம். இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் நிறையக் கிளைகள் உண்டு.

“சத்யா..சாஸ்த்ரிகள் வந்தாச்சா…கோபூஜைக்குப் பசுவும், கன்னுகுட்டியும் வந்தாச்சா…..” டோக்கியோ வெங்கடராமன் பரபரத்தார். சாஸ்த்திரிகள் வந்து “கோபூஜை” முடித்தவுடன் தீபாராதனை செய்தார்.

டோக்கியோ வேங்கடராமனும், திருநெல்வேலி கோபாலஅய்யங்காரும், திருச்சூர் ராவூத்தனும் பசுவுக்கும், கன்னுக் குட்டிக்கும் பழங்கள் கொடுத்து அதைக் கும்பிட்டனர். அங்கு இருந்த கூலியாட்கள் இதை வேடிக்கை பார்த்தபடி இருந்தனர்.

“கோடவுனுக்குள் மங்கள வாத்தியம் முழங்க பசுவும், கன்னுகுட்டியும் நுழைத்தன, பசு, சாணியும் மூத்திரமுமாகச் சாய்ந்து சாய்ந்து நடந்தது. அதன் கொம்பில் சுற்றியிருந்த பூமாலை கீழே விழுந்து சிதறியது.”

சாஸ்திரிகள் தட்சிணையைப் பெற்றுக்கொண்டு புறப்பட்டார்.

“மாமா..இது என்ன இவ்வளவு பெரிய கோடவுன்ல… .ஒண்ணுமே இல்லை…வெறுமென இருக்கு ” சத்யா ஆச்சர்யத்துடன் டோக்கியோ மாமாவிடம் கேடக்க, “இப்ப ஒரு அஞ்சு நிமிஷத்துல பாரு…கோடவுனே ரொம்பிடும்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, கோடவுன் வாசலில் மூன்று பெரிய லாரிகள் வந்து நின்றன.

சத்யா அவைகளை ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்து விட்டு,” மாமா இதெல்லாம் “…என்று டோக்கியோ வெங்கடராமனிடம் கேட்ட பொழுது,” இந்த அறநூறு பசுக்களும், இன்னிக்கி ராத்திரிக்குக் கோழிக்கோடு கசாப்புக்கடைக்குப் போயிடும்…வாரம் இரண்டு முறை மூணு லாரிகள்ள ஆயிரத்து இருநூறு பசுக்கள் வரும் .. வரவு செலவெல்லாம் உனக்கு வந்துடும்….நீயும் ஒன்னோடு வேலைக்கு உள்ள ஆட்களும் இந்த குளிர்சாதன அறையில் இருந்து வேலை பார்க்கலாம்..

ஒனக்கு வீடு இங்க பக்கத்துலேயே நல்ல வசதியோடு இருக்கு..ஆல் தி பெஸ்ட்” என்று சத்யாவின் கையை டோக்கியோ குலுக்கிய பொழுது, சத்யாவின் நெஞ்சம் பட படத்தது.

கோடவுனில் பசுக்களின் “அம்மா” என்ற ஓலம் காதில் விழுந்து அவனின் உடம்பு முழுக்கப் பற்றி எரிவது போல இருந்தது. ” வாயில்லா ஜீவன்….கோந்தே…இதோட ஒடம்பு பூராவும் தேவதைகள் நிறைஞ்சு இருக்கா…மெதுவாத் தொட்டு ஒன்னோடு கண்ணுல ஒத்திக்கோ…” என்று சத்யாவின் அப்பா அவன் சிறுவயதில் சொன்னது இப்போதும் காதில் ஒலித்தது,.

“மாமா .. எனக்கு இந்த வேலை வேண்டாம்..நான் வரேன் ” என்று திரும்பும் பொழுது, “பொழைக்கத் தெரியாத புள்ள” என்று டோக்கியோ வெங்கடராமன், திருச்சூர் ராவூத்தனிடம் கூறிய வார்த்தைகளுக்கு, அந்தக் கோடவுனில் கத்திக் கொண்டிருக்கக் கூடிய பசுக்களின் ஒட்டு மொத்த “அம்மா” என்ற கதறலையும் மீறி சத்யாவின் காதுகளுக்குள் நுழையக் கூடிய சக்தி இருக்கவில்லை.

——————-௦௦௦௦௦௦௦……………………….

படம் உதவி: http://www.taringa.net/posts/deportes/16757345/Vaca-sagrada-hindu-predijo-al-futuro-Campeon.html

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *