சக்தி சக்திதாசன்.

 

அன்பினியவர்களே !

அன்பான வணக்கங்களுடன் இவ்வார மடலில் உங்களைச் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

எழுத்துக்களின் மூலம் நடக்கும் எண்ணப் பரிமாற்றங்கள் அளப்பரியன, அரியன, உள்ளத்திற்கு இதம் தருவன.

உலகில் பல்வேறு நாடுகள் உள்ளன, அவையனைத்தும் தலைவர்களால் வழிநடத்தப் படவேண்டியது கட்டாயமாகிறது.

தனியொரு மனிதன், தான் வைத்ததே சட்டம் என்றும் அதற்குக் கீழ்ப்படியாதவர்கள் அனைவரும் குற்றவாளிகள் எனும் வகையில் சில தலைவர்களுள்ள நாடுகளும்; நாட்டில் ஒரேயொரு கட்சிதான் உண்டு, அது அடக்குமுறையின் மூலம் தனது ஆட்ச்சியை மக்கள் மீது திணிக்கும் வகையில் என வேறு நாடுகளும், எனப் பலவகையான முறைகளில் நாடுகள் வழிநடத்தப்படுகின்றன.

ஒருவருக்கு ஒரு வாக்கு எனும் சுதந்திரத்தைக் கொடுத்து, அவர்கள் முன்னால் வைக்கப்படும் கட்சிகளின் கொள்கைகள் பிரகாரம் மக்கள் தமது விருப்புகளுக்கு ஏற்ப வாக்களித்து பதவிக்குக் கொண்டுவரும் அரசாங்கங்கள், பொதுவாக அம்மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையிலமைந்த அரசாங்கம் “ஜனநாயகம்” எனும் கட்டமைப்பில் அழைக்கப்பட்டு இயங்குகிறது.

ஜனநாயக ஆட்சி என்று கூறி ஆட்சிநடக்கும் நாடுகளில் உண்மையான ஜனநாயகம் நிலவுகிறதா ? எனும் கேள்விக்கு விடையளிக்கும் வகையில் அமைந்ததல்ல இம்மடல்.

இங்கிலாந்திலே கடந்த வாரம் சர்ச்சையைக் கிளப்பி விட்டிருக்கும் ஒரு சூடான அரசியல் விவகாரம், தவறு செய்பவர் யாராக இருந்தாலும் அவர்கள் தட்டிக் கேட்கப்படவேண்டும் எனும் அடிப்படை ஜனநாயகக் கோட்பாட்டை நினைவுக்குக் கொண்டு வந்ததினால் இந்நாட்டில் 40 வருடங்கள் வாழ்ந்த ஒரு புலம்பெயர் தமிழன் எனும் வகையில் அதைப் பகிர்ந்து கொள்வதே இம்மடலின் நோக்கம்.

அப்படி என்னதான் நடந்தது ? எனும் கேள்வி உங்கள் மனதில் எழுந்திருக்கும்.

malcolm and Jackகன்சர்வேடிவ் கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும் நீண்டகால அரசியல் சேவைக்காக இங்கிலாந்து மகாராணியாரால் “சர்” பட்டம் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டவர் சர் மல்கம் ரிவ்கிண்ட் ( Sir Malcolm Rifkind). முன்னால் பிரித்தானியா பிரதமர் மார்கிரெட் தாச்சர் அவர்களினால் அமைச்சராக்கப்பட்டவர் . பின்னர் ஜான் மேஜர் அவர்களின் அமைச்சரவையிலும் அமைச்சராகப் பணியாற்றியவர்.

தற்போது இங்கிலாந்து பாராளுமன்றத்தில் இங்கிலாந்தின் இரகசிய உளவுத்துறையின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் தெரிவுக்குழுவின் தலைவராகப் பங்காற்றியவர்.

சரி, இனி அடுத்தவரைப் பார்ப்போம். இவர் தற்போதைய இங்கிலாந்தின் எதிர்க்கட்சியாக விளங்கும் லேபர் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ” ஜக் ஸ்ட்ரோ” ஆவார்.

முன்னால் பிரதமர் டோனி பிளேயர் அவர்களின் அமைச்சரையிலும் அதன் பின்னால் கோர்டன் பிரவுன் அவர்களின் அமைச்சரவையிலும் அமைச்சராகவும் பிரதான அமைச்சுகளுக்கு பொறுப்பாக இருந்தவர்.

என்ன இது ? ஆளும் கட்சியான கன்சர்வேடிவ் கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரைப் பற்றியும், எதிர்கட்சியான லேபர் கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரைப் பற்றியும் ஒரு வியாபனம்.

எங்கே போகிறது இம்மடல் ? ஆத்திரப்படாதீர்கள், அவசரப்படாதீர்கள் இந்த இரண்டுபேரையும் இணைக்கப்போகிறது ஒரு விடயம்.

DTG

“தி டெய்லி டெலிகிராப் ” என்றொரு பத்திரிகையைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இங்கிலாந்தின் பாரளுமன்ற அங்கத்தினர்கள் தமது உத்தியோகப்பூர்வ செலவுகள் எனும் பட்டியலில் செய்யும் குளறுபடிகளை அம்பலத்துக்குக் கொண்டு வந்து உண்டு இல்லை என்று பண்ணிய பத்திரிகை.

அப்பத்திரிகை விரித்தது ஒரு வலை . அதிலே வசமாகச் சிக்கிக் கொண்டனர் இவர்கள் இருவரும்.

ஒரு சீனக் கம்பெனி எனும் பெயரில் ஒரு போலி நாடகமாடி, இவர்கள் இருவரும் தமது பராளுமன்றச் சலுகைகளின் அடிப்படையில் அரசியலில் பெற்ற செல்வாக்கின் மூலம் பணம் சம்பாதிக்கத் தலைப்பட்டதை வீடியோ ஆதாரத்துடன் நிரூபித்து விட்டது இப்பத்திரிகை.

பாராளுமன்ற அங்கத்தினர்கள் தாம் பாரளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும் போது வேறு கம்பெனிகளில் பணியாற்றக் கூடாது என்றோ, அன்றி வேறு கூட்டங்களில் பணத்துக்காகச் சம்மதித்துப் பேசக்கூடாது என்றோ சட்டம் இல்லை.

ஆனால், அவர்கள் தாம் மக்களின் பிரதிநிதிகளாகப் பங்காற்றும் போது வேறுவழிகளில் சம்பாதிக்கும் பணத்தை பாராளுமன்ற ஒழுக்க நடவடிக்கைக் குழுவிற்குச் சமர்ப்பிக்க வேண்டும்.

தாம் புரிந்தது சட்டத்திற்கு முரணான செயலன்றால், அது தவறென்று கருதும் பட்சத்தில் அதற்கு எதிரான சட்டமூலங்களை உருவாக்குங்கள் என்கிறார்கள் இவர்கள் இருவரும்.

தன்னுடைய திறமையின் மூலம் தனது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு தான் சட்டத்திற்கு உட்பட்ட வகையில் முயன்றது குற்றமாகாது என வாதாடுகிறார் மால்கம் ரிவ்கிண்ட்.

மறுபுறம் ஜக் ஸ்ட்ரோ என்பவரோ தான் ஏற்கனவே வரும் மே மாத பாரளுமன்றத் தேர்தலில் பங்கு கொள்ளப் போவதில்லை, அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்கிறேன் என்று ஏற்கனவே அறிவித்து விட்ட நிலையில் தனது எதிர்கால வாழ்க்கையின் ஆதாரத்திற்காக தான் உழைக்க முயன்றது எப்படித் தவறாகும் என்கிறார்.

எது எப்படி இருந்தாலும் வருடமொன்றுக்கு 67,000 பவுண்ட்ஸ் உழைக்கும் பாராளுமன்ற அங்கத்தினர்கள், பேராசையால் தமது பதவியின் அடிப்படையில் பணமீட்ட முயல்வது பொருளாதாரச் சிக்கல்களினால் தவிக்கும் சாதாரண மக்களின் மனதில் அரசியல்வாதிகளைப் பற்றிய கண்ணோட்டத்தை எப்படிப் பாதிக்கும் என்பதை அறியாமலா மக்களின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்ளும் இவர்கள் இப்படி நடந்தார்கள் என்று வினவுகிறார்கள் அரசியல் அவதானிகள்.

Tony and Maggieஏற்கனவே அரசியல் மீதும், அரசியல்வாதிகள் மீதும் அவநம்பிக்கை கொள்வோர்கள் பெருகிவரும் வேளையில் இத்தகைய மூத்த அரசியல் தலைவர்களின் தன்னலத்தின் அடிப்படையிலான செய்கைகள் இளையோர் மனதில் அரசியலை வெறுக்கப்பண்ணும் என்பது பலரது அபிப்பிராயம்.

இவர்கள் இருவருமே அடுத்த தேர்தலில் இருந்து தாம் அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்கள். இருவரும் அவரவர் கட்சிகளின் உறுப்பினர் அந்தஸ்திலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளார்கள்.

இவருக்கும் உள்ள மற்றொரு ஒற்றுமை என்ன தெரியுமா? இங்கிலாந்து அரசியல் வரலாற்றில் அதிககாலம் பிரதமராக பதவி வகித்தவர்களாகிய மர்கிரெட் தச்சரினாலும் , டோனி பிளேயரினாலும் அமைசராக்கப்பட்டவர்கள் என்பதே !

“ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன் ” என்றொரு எம்.ஜி.ஆர் பாடல் கூறும்.

அவர் மேலிருந்து பார்த்து புன்னகைப்பாரோ ?

 

 

மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

 

http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *