அண்ணாகண்ணன்

முதலாவது படக் கவிதைப் போட்டியில் உற்சாகமாகப் பங்கேற்ற படைப்பாளிகள் அனைவருக்கும் பாராட்டுகள். ஒரு படத்தைப் பார்த்தவுடன் உங்களுக்குள் இருக்கும் படைப்புத் திறன் வெளிப்படுகிறது எனில், நீங்கள் இன்னும் உயிர்ப்போடு இருக்கிறீர்கள் என்பது பொருள். அந்த ஒன்றுக்காகவே முதலில் உங்களைப் பாராட்டுகிறேன்.

padakkavithai - 1

அனிதா சத்யம் அவர்களின் அழகிய படம், சிறப்பான தூண்டுதலை அளித்துள்ளது. இதற்காக அனிதாவுக்கும் அவரது படத்தைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்த சாந்தி மாரியப்பனுக்கும் நம் நன்றிகள்.

20 பேர்களின் 25 பின்னூட்டங்கள், ஒன்றுக்கு மேற்பட்ட முறைகளும் பங்கேற்ற சிலர், புதுக்கவிதை, வெண்பா, விருத்தம் என விதவிதமான வடிவங்கள், அதிலும் பல்வேறு வட்டார வழக்குகள், இரண்டு வரிகளிலிருந்து 50க்கும் மேற்பட்ட வரிகள் என வெவ்வேறு அளவுகள் என்று போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. கவிதைகளில் எழுத்துப் பிழைகளும் வரி ஒழுங்கமைவுக் குறைவுகளும் இருந்தாலும் அவற்றைப் பொருட்படுத்தாமல், சொன்ன செய்திகளையும் சொல்லிய விதத்தையும் மட்டுமே கவனத்தில் கொண்டேன்.

ஒவ்வொருவரின் பார்வையும் ஒவ்வொரு வகையில் வித்தியாசமாக இருந்தது. அனைவருமே சிரிப்பை விரும்புகிறார்கள் என்பதே பொது ஒற்றுமை. சிரிப்பைத் தொலைத்த சூழ்நிலைகளை, வலிகளைச் சில கவிதைகள் நினைவுகூர்ந்தாலும் ஒரு சிரிப்புக்குப் பின் இருக்கும் சக்தியையும் அழகையும் வசீகரத்தையும் ஆளுமையையும் பற்பல கவிதைகளும் சிறப்பாக வெளிப்படுத்தின.

இதில் ஏதாவது ஒன்றை மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நிலையில், பல்வேறு கவிதைகளையும் பரிசீலித்ததில் புனிதா கணேசனின் கவிதையை இந்த வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுக்கிறேன். அவரது கவிதை இங்கே-

இயற்கையின் தூய சுவாசங்கள்
இயம்பிய இனிய கூடுதல்
பயத்திட்ட பழமை நட்புகள்
வியந்து மகிழ்ந்ததில்
தூய இதயங்கள் கொட்டின
தூ வெண் முத்துக்கள்
பரல்களாய் இதழ்களில் விரவின,
அவை விரைந்து பரப்பின
பிரபஞ்சம் முழுவதும் வரையற்ற மகிழ்வை!

பாரங்கள் குறைந்ததால் துயரங்கள் பகிர்ந்ததால்
இலகுவாய்ப் போன இதயங்கள் நெகிழ்ந்ததில்
சிதறின சிரிப்புகள்!!
சிட்டுகள் ஆயினர் பெண்கள்!

இன்பத்தின் இறக்கைகள் கொண்டு துன்பத்தை மறந்தே..
மனத்தில் இனிய பொழுதுகள் கனிந்து போயின…
கனத்த பொழுதுகள் காற்றாய்க்… கரைந்ததில்
இதழ்கள் முகிழ்த்தன முத்துப் பரல்கள்……
கொத்துக் கொத்தாக சத்தமாய் சிரிப்பு…
எங்கும் நிறைந்தது
மனம் விட்டுச் சிரிக்கும் மங்கைகளாலே…

சிட்டுகள் ஆயினர் பெண்கள்! என்ற ஒற்றை வரியில் அபாரமான கவித்துவம் வெளிப்படுகிறது.

ரேவதி நரசிம்மனின்

ஓடிய நரிக்கு ஒரு சிரிப்பு, பொங்கும் சோறுக்கு ஒரு சிரிப்பு.
சிரித்தே வாழ்ந்திடுவீர் நலமாக

என்ற வரிகளும் எனக்குப் பிடித்திருந்தன.

புனிதா கணேசனை இந்த வாரத்தின் சிறந்த கவிஞராகவும் ரேவதி நரசிம்மனை குறிப்பிடத்தக்க கவிஞராகவும் தேர்ந்தெடுத்துப் பாராட்டுகிறேன்.

பங்கேற்ற அனைவருக்கும் என் வாழ்த்துகள்.

பதிவாசிரியரைப் பற்றி

7 thoughts on “முதலாவது படக் கவிதைப் போட்டியின் முடிவுகள்

  1. என்னது இது நம்பவே முடியவில்லையே.
    முதலில்  இந்தப் படத்தைக் கொடுத்துச் சிந்தனையைப் பறக்கவிட்ட
     வல்லமைக்கும்,அண்ணாகண்ணனுக்கும், ஷாந்தி மாரியப்பனுக்கும்
    படம் பிடித்த அனிதாவுக்கும் 
     மிக நன்றி.வெகு காலங்களுக்குப் பிறகு மனம் லேசானது. நன்றி பல.

  2. நீதிபதிகள் இருபாலாராய் ஓர் ஆணும், ஒரு பெண்டிரும் இருந்தால், தீர்ப்பில் முழுமையான கண்ணோட்டம் எதிர்பார்க்கலாம். 

    அண்ணா கண்ணனோடு தேமொழியையும் நீதிபதியாய் அமைத்திட என் சிறு ஆலோசனை. 

    சி. ஜெயபாரதன்

  3.   சிரிப்பு  

    அண்ணாந்து சிரித்தாலும்,  குனிந்து  சிரித்தாலும்,
    வாய்மூடி சிரித்தாலும்,  சிரிப்பே  ஓர் மருந்தாகும் !

    பெண் இனத்திற்கும், ஆண் இனத்திற்கும், பொதுவாகும்,
    ஆம், வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்.!

    இறைவன் மனித இனத்திற்கு கொடுத்த சொத்தாகும் 
    மாக்களுக்கும், மனிதனுக்கும் உள்ள வேறுபாடாகும் 

    பொம்பளைச் சிரிச்சா போச்சு,  புகையிலை விரிச்சா போச்சு,
    பெண்ணே உன் வாழ்வு, இன்று என்ன ஆச்சு !

    பெண்ணே  நீங்கள் வாய்விட்டு சிரிப்பதேனோ !
    உங்கள்  ஏழ்மை  நிலையை மறப்பதேனோ !

    திரௌபதி  சிரித்ததால்  வாழ்வு  சிதிலமடைந்ததா 
    மாதவி  சிரித்ததால்  கோவலன் வாழ்வு முடிவூற்றதா !

    சிரிக்கத் தெரிந்தவர்களே  சிந்திக்கத் தெரிந்தவர்கள் 
    மற்றவர்களை  என்றும்  சிந்திக்க  வைப்பவர்கள்! 

    ரா.பார்த்தசாரதி

  4. வல்லமை நிர்வகாத்தினருக்கு என் நன்றிகள் – இது ஓர் இன்ப அதிர்ச்சி ; மற்றும் பங்கு கொண்ட யாவருக்கும் , வாழ்த்துச் சொன்ன நல்லுள்ளங்களுக்கும் என் பணிவான நன்றி

  5. வானுக்குப் பூவாம் வளர்நிலவு; நாடாளும்
    கோனுக்குப் பூவாம் கொளும்வெற்றி – தேனூற்றுப்
    பாவலர்க்குப் பூஅவர்தம் பாவனைத்தும்; என்றென்றும்
    பூவையர்க்குப் புன்னகையே பூ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *