அடித்தாலும் கணவன், மிதித்தாலும் கணவன்

1

— நாகேஸ்வரி அண்ணாமலை.

 

domestic-violenceபிப்ரவரி 28-ஆம் தேதியிட்ட நியுயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் வந்த செய்தியின்படி அமெரிக்காவில் ஒரு வழக்கு நடந்து முடிந்திருக்கிறது. ஒரு காதலன் (ஆங்கிலத்தில் உள்ள ‘boy friend’-ஐ எப்படித் தமிழில் குறிப்பிடுவது என்று தெரியவில்லை), இந்தக் கதையில் உள்ளவன் வழக்கமான boy friend கூட இல்லை. மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருக்கும்போதே இன்னொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருக்கிறான்) தன் காதலியை (வழக்கமான காதல் தோழி… ‘girl friend’ இல்லை.) தாறுமாறாக அடித்திருக்கிறான். அவள் வலியால் துடித்துக்கொண்டு அப்பார்ட்மெண்டிற்கு வெளியே ஓடிவந்து படிக்கட்டின் மேல் உட்கார்ந்து அழுகொண்டிருந்திருக்கிறாள். பக்கத்து வீட்டுக்காரர் வெளியே ஓடிவந்து பார்த்து உடனே காவலர்களை அழைத்திருக்கிறார். அவர்கள் வருமுன்பே தாமஸ் (அதுதான் காதலனின் பெயர்) அலிஸனை (அலிஸன் என்பது காதலியின் பெயர்) குளித்துவிட்டு அவள் உடம்பின் மீதுள்ள ரத்தக் கறைகளை அகற்றும்படி கூறியிருக்கிறான். அப்பார்ட்மெண்டின் வாசலிலிருந்து படிக்கட்டு வரை வழிந்திருந்த ரத்தக் கறைகளைத் துடைத்தெடுத்திருக்கிறான்.

காவலர்கள் வந்து நடந்தது என்னவாக இருக்கும் என்று ஓரளவு ஊகித்து இருவரையும் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்திருக்கிறார்கள். அன்று அவள் என்ன சொன்னாள் என்று தெரியவில்லை. அவளுடைய உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர், மனைவிகளைத் துன்புறுத்தும் கணவன்மார்களின் செயல்களை ஆராயும் ஒரு நிபுணர் ஆகியவர்களை நீதிமன்றத்திற்கு அழைத்து விசாரித்தார்கள். அலிஸன் ஒரு சாட்சியாக வர மறுத்துவிட்டாள். எல்லோருடைய கருத்துகளையும் கேட்டுவிட்டு நீதிபதி தாமஸை குற்றவாளி என்று தீர்மானித்திருக்கிறார். தாமஸுக்கு ஒன்பது ஆண்டு வரை சிறைத் தண்டனை கிடைக்கலாம்.

தாமஸுக்குத் தண்டனை வழங்கியதன் மூலம் நீதிமன்றம் தனக்குப் பெரிய தீங்கு இழைத்திருக்கிறது என்று அலிஸன் புலம்பியிருக்கிறாள். தாமஸ் தனக்குத் தீங்கு எதுவும் இழைக்கவில்லை என்றும் அவனுக்குத் தனடனை வழங்கியதன் மூலம் அவளுடைய வாழ்க்கையே பாழடைந்துவிட்டதாகவும் தன்னுடைய உயிர் நண்பனைச் சிறைக்கு அனுப்பியதன் மூலம் தான் அவனை இழந்துவிட்டதாகவும் தான் அவனுடன் வசித்துவந்த அப்பார்ட்மெண்டிலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டதாகவும் அழுதிருக்கிறாள்.

domestic-violence2மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருக்கும் ஒருவனோடு கள்ளத் தொடர்பு வைத்துக்கொண்டு அவனைத் தன் உண்மை நண்பனாக ஏற்றுக்கொண்டு அவன் தன்னை அடித்துத் துன்புறுத்தியும் அவனை நீதிமன்றத்திற்கு இழுத்துச் செல்லாமல் பக்கத்து வீட்டுக்காரர் மூலம் அவன் காவலர்களால் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டபோதும் அவன் தன்னைத் துன்புறுத்தவில்லை என்று கூறிய அலிஸனின் வாதத்தைக் கேட்ட நீதிபதி “தீங்கிழைக்கப்பட்ட (victim) அலிஸனே தாமஸ் தனக்குத் தீங்கிழைக்கவில்லை என்று கூறினாலும், அது என்னைப் பொறுத்தவரை இந்த வழக்கிற்குத் தொடர்பற்ற, பொருத்தமில்லாத, சம்பந்தமில்லாத விஷயம்” என்று கூறியிருக்கிறார். அவர் எப்பேர்ப்பட்ட நீதிபதி! எப்பேர்ப்பட்ட தீர்ப்பு!

அமெரிக்காவில் குடும்பங்களில் நடக்கும் வன்முறைச் செயல்களுக்கு (அநேகமாக ஆண்கள் பெண்களைத் துன்புறுத்தும் விஷயங்களுக்கு) மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்; பெரிய தண்டனையும் கொடுக்கிறார்கள். ஒரு முறை நான் கீழே விழுந்து என் வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்குச் செல்ல நேரிட்டது. என்னை மருத்துவர் வந்து பரிசோதிக்கும் முன்பே “வீட்டில் உங்கள் கணவர் உங்களைத் துன்புறுத்தி இப்படி ஏற்பட்டதா?” என்று கேட்டார்கள். அந்த வேதனையிலும் எனக்குச் சிரிப்புத்தான் வந்தது. இது அமெரிக்காவில் மாமூலான விஷயம். பெண்கள் காயம் பட்டு வந்தால் அவர்களைக் கணவனோ மற்ற ஆண்துணையோ அவர்களை துன்புறுத்தியிருக்கலாம் என்று முதலில் நினைக்கிறார்கள். அப்படி நடந்திருந்தால் அதற்குரிய தண்டனையை ஆண்களுக்கு வழங்கத் தவறுவதில்லை.

domestic-violence--300x214இந்தியாவில் இதற்கு நேர் மாறாக நடக்கிறது. கணவன் மனைவியை அடித்துத் துன்புறுத்தினால், காவலர்களைத் தள்ளுங்கள், உற்றார் உறவினர்கள் கூட ஏன் என்று கேட்பதில்லை. அடிக்கிற கைதான் அணைக்கும் என்ற பழமொழி வேறு. ‘இன்று அடித்துக்கொள்வார்கள். நாளை கூடிக்கொள்வார்கள்’ என்று கணவன் கொடியவனாக இருந்தாலும் அவனுடைய மனைவியைக் கணவனிடமிருந்து பிரிப்பதைப் பற்றி யோசிப்பதே இல்லை.

உடல் ரீதியாகத் துன்புறுத்துவதை விடுங்கள். மனரீதியாக எத்தனை கணவன்மார்கள் மனைவிமார்களைக் கொடுமைப்படுத்துகிறார்கள். இந்த மனைவிமார்களும் மேலே குறிப்பிட்ட அலிஸன் போல்தான் கணவன்மார்கள் மேல் எந்தக் குற்றமும் கண்டுபிடிப்பதில்லை. காலம் காலமாகப் பெண்களை மூளைச்சலவை செய்திருக்கிறோம்.

கணவனைப் பரத்தை வீட்டிற்குக் கூட்டிச்சென்ற நளாயினியையும், கட்டிய மனைவியைக் கைவிட்டுவிட்டு மாதவியிடம் தஞ்சம் புகுந்த கணவன் பணத்தை எல்லாம் தொலைத்துவிட்டு மீண்டும் கண்ணகியிடம் வந்தபோது அவள் அவனைக் கடிந்துகொள்ளாமல் திரும்பவும் அவன் தொழில் நடத்தத் தன் சிலம்புகளை விற்றுப் பணம் திரட்டுமாறு கூறிய கண்ணகியையும் கற்புக்கரசிகள் என்று பட்டம் சூட்டிவிட்டோம். பழைய கதைகள் இருக்கட்டும். சென்ற நூற்றாண்டில் எழுதப்பட்ட மனோகரா கதையில் தந்தையின் இரண்டாவது மனைவிக்குத் தன் மகன் தீங்கிழைக்க முயலும் போதெல்லாம் ‘அவள் உன் தந்தை விரும்பும் பொருள். அவளுக்கு எந்தவிதத் தீங்கும் நேரக் கூடாது’ என்று கணவனின் ஆசையை நிறைவேற்றுவதையே – கணவன் தன் நலன்களுக்கு எதிராக நடந்துகொண்டாலும் – அந்த மனைவி தன் கொள்கையாகக் கொண்டிருக்கிறாள்.

எனக்குத் தெரிந்த எங்கள் உறவினப் பெண் ஒருத்தியின் தந்தை வழிச் சொத்துக்களை எல்லாம் கணவன் தொலைத்துவிட்டான். இருக்கும் ஒரே ஒரு சின்னச் சொத்தையாவது அவளுடைய கணவனிடமிருந்து காப்பாற்ற எவ்வளவோ முயற்சிகள் நான் செய்துகொண்டிருக்கிறேன். அவள் எதற்கும் ஒத்துழைக்கவில்லை. எல்லாச் சொத்துக்களையும் இழப்பதற்குக் கணவன் காரணமாக இருந்தாலும் இன்னும் கணவன் தன்னை நன்றாக வாழவைப்பான் என்று நம்பிக்கொண்டிருக்கிறாள். தாமஸ் தன்னைத் துன்புறுத்தவே இல்லை என்று கூறியும் நீதிமன்றம் தாமஸைத் தண்டித்ததுபோல் எங்கள் உறவுக்காரப் பெண்ணைக் காப்பாற்ற இந்தியச் சட்டத்தில் இடம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

படம் உதவி:

A domestic violence attorney can help you

Domestic Violence


http://www.abetterwaydomesticviolence.org/Abuse

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “அடித்தாலும் கணவன், மிதித்தாலும் கணவன்

  1. உலகம் பூராவுமே ஆண்கள் ஆதிக்கமாக இருக்கும்போது பெண்ணிற்குச் சட்டம் பாதுகாப்பதாக இருந்தாலும் அவளிருக்கும்வரை முழு பாதுகாப்பு இல்லை.ஒரு கேஸ் முடிந்தபின் அவள்நிலை என்பது பல கட்டங்களில் வினாக்குறிதான்.அதனால்தான் பல பெண்கள் துயரப்பட்டாலும் வெளிவருவதுகிடையாது.(பல இடங்களில் அவமானப்படவேண்டியுள்ளது) ஆனால் காலம் வெகுவாக இப்போது மாறிவிட்டது.பத்துவருடத்திற்குமுன்னர்போல இப்போது கிடையாது.இனியும் மாறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *