-எம். ஜெயராம சர்மா- மெல்பேண்

கருணைகூர் முகங்கள் ஆறும்
கரத்தினில் வேலும் கொண்டு
அருமையாம் தமிழைக் காக்கும்              lord muruga
அழகுடைக் கந்த வேளே
உரிமையால் உன்னைப் பாட
உவப்புடன் நிற்கும் என்னைக்
கரிசனை கொண்டு நாளும்
காத்திட வாரும் ஐயா !

பாயிலே படுக்கா முன்னம்
பன்னிரு கையா உன்னைக்
காவியம் ஆக்கி நானும்
கற்பவர்க் கீதல் வேண்டும்
சேயென நினைத்து என்னைத்
தினமுமே காக்க வேண்டி
மாமயில் ஏறும் கந்தா
மலரடி போற்று கின்றேன் !

செந்தமிழ்க் கொண்டு நாளும்
நின்றனைப் போற்ற வேண்டும்!
வந்தஎன் வினைகள் போக
சந்ததம் உதவு கந்தா!
அந்தமில் உருவம் ஆனாய்
அனைத்து மாய் நிற்கின்றாயே
கந்தனே நாளும் என்னைக்
காத்திட வேண்டும் ஐயா!

ஆணவம் போக்கி என்னை
ஆட்கொள்ள வேண்டும் ஐயா!
அலைபாயும் மனத்தை நாளும்
அடக்கிட வேண்டும் ஐயா!
நாளெலாம் உந்தன் நாமம்
நான் சொல்லி நிற்கவேணும்
நீயெனக் கருள்வாய் ஐயா
நித்தமும் கந்த வேளே !

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *