நடைபாதை கண்ணீர்த் துளி!

0

-தனு

இவள் எத்தனை மக்களைப் பெற்ற மகராசியோ?
பெறாத மக்களிடம் கையேந்திக் கொண்டு
இமையும் நடுங்கும் நடுநிசிக் குளிரில்
நடைபாதையில் !

அன்று நடைபழகக் கற்றுக்கொடுத்தவள்      Poor Mom
இன்று ஆறுஅங்குல நடைபாதை ஏற
அறுநூறு நொடிகள் அவகாசம் தேவைப்பட
மீண்டும் ஒரு குழந்தையாய் நடைவண்டி இன்றி
நடைபாதையில் !

மடியில் வைத்திருந்த சில்லறைக் காசுகள் அவள்
மனபாரத்தை மிஞ்சிவிட்டதோ என்னவோ !
மடிகனம் தாளாமல் கொட்டிவிட்டன !
முக்கால்வாசிக் கண்ணொளியைக் கடவுள் பறித்துவிட…
கால்வாசி இருள் பறித்துவிட…
கொட்டியது குப்பையில் என அறியாமல்
சிந்திய சில்லறை வேறு பக்கம் இருக்க
இல்லாத காசைத் தேடிக்கொண்டு
தொலைத்துவிட்ட ஒற்றை நாணயத்துக்காக
விசனப்பட்டு விரக்தியுடன்
நடைபாதையில் !

இல்லாதவன் ஆடையும்
இருக்கப்பட்டவன் ஆடையும்
கிழிந்தேதான் இருக்கின்றது !
ஒன்று நாகரிகம் !
மற்றொன்று ஏழ்மை !

யார் வடிவமைத்தானோ இவளது ஆடையை
ஏழ்மையின் மொத்தச் சொத்தையும்கொண்டு
தான் பெற்ற மக்களைக் கரையேற்றிவிட்டுக்
கறைபட்ட ஆடையுடன்
நடைபாதையில் !

இறைவா இன்று இருக்க இடம் கொடு என
இழுக்கமுடியாமல் இழுத்துக்கொண்டு போனாள்
ஏழ்மை வடிவமைத்த ஆடைகளை
வாழ்க்கையில் நைந்துபோன ஆடையாய்
நடைபாதையில் !

காற்றுக்குக்கூட கரிசனம் இல்லை அவள்மேல்
ஜன்னல் வைத்த அந்தப் போர்வையைச் சீறிவிட்டுப் போனது!
இற்றுப்போனது ஆடையா இல்லை மனதா?
இரண்டையும் இழுத்துப் போர்த்திக்கொண்டு
இருளில் கடைசியாய் இடம் கிடைத்தது
கால்நடைகள் உறங்கிக்கொண்டிருந்த
நடைபாதையில்!

சில காட்சிகள் கணநேரம் நினைவாட்கொள்ளும் – ஆனால்
கனமாகிப்போனது இந்நேரம் என்னுள்
இடம்தேடி அமர்ந்தது உறங்க என்று நினைத்திருக்க
இறைவன் இன்றும் படியளக்கவில்லை போலும்
ஒருகை தலையில் கொண்டு
மறுகை மீண்டும் உயர்த்தி யாசித்தாள்
உறக்கம் கண்களைத் தழுவினாலும்
ஏந்திய கைகள் ஏந்தியபடி
யாரும் நடவாத நடைபாதையில்!

ஏந்திய கைகள் ஏந்தியபடி
யாசிக்கிறாள்
யாரிடம்?
கடந்து செல்லும் கனவான்களிடம் காசா
இல்லை…
காலனிடம் மரணத்தையா ?

உறவுகள் அற்றுப்போன நாகரிக நகர (நரக) வாழ்க்கையின்
மறக்கப்பட்ட தாயின் கண்ணீர் !
விரக்தியின் விளிம்பில் கண்ணீர் வற்றிப்போனது அவளிடம் !
வழிப்போக்கனாய்ப் பார்த்த காட்சியில்
விழிநிரம்பி வழி மறந்து போனேன் !
இன்றும் உறக்கமற்றுப் போகிறேன்
என்னுள் உறைந்துபோன உண்மைக் காட்சிகளை எண்ணி !

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *