வையவன்
2
“அக்கா”
“ம் ம் ம்”
“அக்கோவ்”
“கேக்குது.. சொல்லு”
“ஷூ இல்லாமே நான் ஸ்கூலுக்குப் போக மாட்டேன்.”
“ப்ரேவோ”
“நெஜம்மா சொல்றேன்!”
“நானும் நெஜம்மாதான் பாராட்டறேன். உள்ளிருப்பு வேலை நிறுத்தமோ!”
“ஆமாம்”
“சரி… ஒடனே கவனிக்க வேண்டியதுதான்…”
“……”
“என்ன ஷூ சார் ஒங்களுக்கு வேணும்?”
இடையில் இட்லிப் பாத்திரத்தின் மூடியைத் திறந்து மூடும் ஒலி.
“அம்பாஸிடரா… கட் ஷூவா.. கமாண்டரா… கான்வாஸ் ஷூவா… ஒனக்கு எது வேணும்?”
வேறொரு குரல் குறுக்கிட்டது.
“திஷ்யா… டிபன் ரெடியாம்மா”
“இட்லி வெந்துகிட்டிருக்குப்பா”
இடைவெளி விட்டுப் பின் ஒரு வயசான கரகரத்த குரல் கந்தர் சஷ்டிக் கவசம் சொல்ல ஆரம்பித்தது.
“காக்கக் காக்க கதிர்வேல் காக்க…”
“அக்கா, ஒனக்கு கேலியா இருக்கா?”
கடுகு பொரிந்தது. தாளிதம் மணந்தது.
“நீ ஒரு ஜோக் அடிக்கும்போது நான் அடிக்கக் கூடாதா?”
“ஷý கேக்கறது ஒரு ஜோக்கா? நீ கூட போன வருஷம் வரிக்கும் ஒரு ஸ்டூடண்ட் தானே! எல்லாப் பெண்களும் ப்ளஸ்-டூ க்ளாஸ்லே வாட்ச் கட்டிக்கிட்டு வர்றாங்கன்னு நீ என்ன அடம்பிடிச்சே! இப்போ நான் கிரிக்கெட் ப்ராக்டிஸ் வேற பண்றேன்.”
“நான் ஒரு சின்ன அட்வைஸ் தரட்டுமா?”
“ஷý”
“மொதல்ல இதக் கேளு.”
“சொல்லு”
“ஷý இல்லாமே ஸ்கூலுக்குப் போக அவமானமா இருந்தா போகாதே.. நின்னுடு.. பொட்டலம் கட்டப்போ.. சுண்டல் வித்துப் பார்… கிரிக்கெட் கத்துகிட்டு நீ டெஸ்ட் மாட்ச் விளையாடப் போறதில்லே!
வேலைக்கு அலையறப்ப பிச்சைக்காரன் நோட்டீஸ் நீட்டறா மாதிரி நீ ஸ்போர்ட் சர்ட்டிபிகேட்டைக் காட்டறதைவிட சுண்டல் விக்கறது மேல்.”
“அக்கா…”
“இரு… இரு… நான் முடிக்கல்லே… நீ ஏன் ரிஸ்ட் வாட்ச் கட்டிக்கிட்டேண்ணுதான் கேட்கப் போறே….? நான் நர்ஸ் ட்ரெயினிங்கை மனசிலே வச்சிகிட்டுதான் அதை வாங்கணும்னு அடம் பிடிச்சேன்! இப்ப எல்லாமே எவ்வளவு பெரிய மடத்தனம்ணு தெரியுது!”
நடுவிலே ஓர் அபாய அறிவிப்பு கிறீச்சிட்டது. சீதா கத்தினாள்.
“அக்கா… இந்த ஆனந்து என் கலர் பாக்ஸை எடுத்துணு தரமாட்டேங்கறான்.”
திஷ்யாவின் கவனம் ஆனந்துக்குத் திரும்பிற்று.
“ஆனந்து… கீதா கலர் பாக்ஸ் அழுக்கு… கோரம்.. உவ்வே… ஒனக்கு வேண்டாம்டா கண்ணு…”
“நான் தரமாத்தேன்… எனக்கு அவளுக்குதான் ஓணும்… உவ்வேதான் ஓணும்”
“அப்ப சரி… அதை நீயே வச்சுக்க… சீதா நான் ஒனக்கு பளபளாண்ணு கோல்டன் கலர்பாக்ஸ் வாங்கிக் குடுக்கறேன்… என்ன?”
“எனுக்கு?”
“ஒனக்குதான் உவ்வே

போதுமே”
“வாந்தாம்… எனக்குத்தான் கோத்லன் கலர் பாக்ஸ்… இது கோரம்… ஆயி…”
“அம்மாடி… அக்கா, நீ ஜீனியஸ்”
“ஒன் சர்டிபிகேட் போதும். கொழந்தையே எதிரிலே வச்சுகிட்டு கலர் பாக்ஸை ஏன் காட்டறே…?”
“ஸாரிக்கா”
“அக்கா…”
“என்ன பிரேம்?” ஆயாசமாகப் பெருமூச்சு விட்டுக் கொண்டே கேட்டாள் திஷ்யா.
“நீ சுண்டல் விக்கச் சொல்றியே… விக்கறேன்… பண்ணித் தர்றியா?”
“ஓ… எஸ்…”
“திஷ்யா…”
“வாங்கப்பா டிபன் ரெடி”
“இன்னிக்கு டி.எம்.ஓ. இன்ஸ்பெக்ஷன்! வந்திருக்கிற ஆள் கிங்கரன். கம்பவுண்டர்னாலே எரிச்சலாம். ஸ்டாக் ரிஜிஸ்டரைக் குடை குடைண்ணு குடையறானாம். சாப்பாட்டுக்கு வர டயம் இருக்காது. வார்டு பாயை அனுப்பறேன். நீ கொடுத்து அனுப்பிச்சுடு”
“சரிப்பா… நீங்க வாங்க”
திஷ்யாவுக்கு குரல் தாழ்ந்தது.
“டேய் பிரேம், ஒன் ‘பிரச்னை’ புரியுது. கீழ்ப் போர்ஷன் பெண்ணுக்கு நிச்சயதார்த்தம் நடக்கப் போறதாம். வாட்ச் ஒண்ணு வேணும்னாங்க. என் வாட்சைக் காட்டினேன். பிடிச்சுப் போச்சாம். ஒண்ணாந்தேதி பணம் தருவாங்க. அப்பறம் நீ ஷý வாங்கலாம்.. ரைட்டா?”
“ரைட்… ரைட்… டபிள் ரைட்…”
“அப்ப தட்ட எடுத்துட்டு வந்து நீயும் உட்காரு… ஸ்கூலுக்கு டயம் ஆகப்போறது”
சிவா வெகு நேரமாக வெங்காயம் அரிந்து கொண்டிருந்தான். பக்கத்துப் போர்ஷனில் நடந்த ஒலிச் சித்திரம் நின்று விட்டது. மாடிப்படி ஏறியதும் நேர்க்குத்தாகத் தெரியும் சமையல் அறையில் அவன் காதில் பக்கத்துப் போர்ஷன் சங்கதிகள் ஒட்டுக் கேட்காமல் தானாகக் காதில் வந்து விழுந்தன.
இந்த திஷ்யாவுக்ள் எத்தனை திஷ்யாக்கள்.
சண்டைக்காரி… சமாதான விரும்பி… சைக்காலஜிஸ்ட்… ராஜதந்திரி…
இந்தப் பாராட்டை அவளிடமே வாய்விட்டுச் சொல்லத் தோன்றியது. சொன்னால்?
முந்தானையை விசுக்கென்று வரிந்து ஒரு சுற்றுச் சுற்றி விட்டுக் கொண்டு சூடு பறக்க திஷ்யா முறைத்து நிற்கும் ஒரு காட்சியை அவன் கற்பனை செய்தான்.
“இப்படித்தான் ஐஸ் வைக்க ஆரம்பிக்கறது. பூ சுத்தி விட்டு லவ்வுண்ணு வந்து அசடு வழிய வேண்டியது!”
வாணலியில் காய்ந்த எண்ணெயில் அவன் சிதறிய நீர்த்துளி ஆக்ரோஷமாய்ச் சீறிற்று. சிவா கடுகைத் தூவினான்.
“இது காதலா?”
அட கஷ்டகாலமே.. அந்தக் கேள்வியை நிஜமாகவே திஷ்யா கேட்டு விட்ட மாதிரி சிவா மிரண்டான்.
“டூ ஐ லவ் ஹர்?”
என்ன சனியன் இங்கிலீஷ் வேண்டியிருக்கிறது. நான் அவளைக் காதலிக்கிறேனா?
கடுகு கருகிவிட அரிந்த வெங்காயத்தை சிவா அதில் கொட்டினான்.
ரஷ்ய நாவலாசிரியர் டர்ஜனீவின் கதாநாயகன் மாதிரி தான் கொண்டிருப்பது காதல் தானா என்று அலசுகிற வியாதிக்குத் தான் ஆளாய் விட்டது அவனுக்கே விநோதமாக இருந்தது.
டாங்.. டாங்.. என்று கூடத்துக் கடிகாரம் மிலிட்டரிக் கண்டிப்போடு ஒன்பது அடித்தது.
பத்தரைக்கு இண்டர்வ்யூ. இன்னும் ஒன்றரை மணி நேரம் இருக்கிறது. பல்லவன் பிடித்து வேர்த்து விறுவிறுத்து பல்லைக் காட்டத் தயாராக வேண்டும்.
இன்னும் ‘சிக்கன்’ தயாராகவில்லை. அவனுக்கு இருக்க நிழலும் உண்ணச் சோறும் ஒரு விலாசமும் தந்திருக்கும் தாமுவுக்கு இந்த ‘சிக்கன்’ பிடிக்க வேண்டும்!
காலையில் எழுந்ததும் அவன் எங்கே போனான்?
சிவாவின் மனசு ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு மீண்டும் காதலுக்கு வந்தது.

திருப்பத்தூரில் கல்லூரி வாழ்க்கையில்… மேல்நிலைப் பள்ளியில் படிக்கையில்… நூற்றுக்கணக்கான இளைஞர்களின் அசட்டுத்தனங்களும் துணிச்சல்களும் நினைவு வந்தன.
கான்வெண்ட் விடும்போது… சினிமா விடும்போது… ஆரம்பிக்கும்போது… கோவில் வாசலல்… எவ்வளவு அசட்டு மூட்டைகள்… எத்தனை பரிதாப ரகங்கள்.
கடைசியில் அவர்களிடமிருந்து விலகி விலகி இப்போது நானும் அதற்கு ஆட்பட்டு விட்டேனா?
தெரியவில்லை.
நான் வேலை தேடிக் கொண்டிருக்கிறேன். எனக்கு வேலை இல்லை.
வேலை இல்லாத ஒவ்வொருத்தனும் கொஞ்சம் காதல் பண்ணிக் கொண்டிருப்பான். வேலை கிடைத்ததும் எல்லாம் சரியாகிவிடும்.
வேலை என்ற எண்ணம் ஒரு பந்தயக் குதிரை மாதிரி ஓடி வெற்றிக் கம்பத்தின் அருகே நின்றது.
சர்ட்டிபிகேட்டுகள் அரைக் கிலோ தேறும். அந்தப் போட்டியில் முதல்… இந்தப் போட்டியில் இரண்டாவது அந்த கேம்ஸ்… இந்த ஸ்போர்ட்ஸ்…
சிவாவுக்கு அவற்றின் மீதிருந்த நம்பிக்கை பொய்த்து விட்டது. தாமுவின் சிநேகிதி பிரீதா ஒரு சிபாரிசுக் கடிதம் வாங்கிக் கொடுத்திருந்தாள். அமைச்சரின் பி.ஏ.வுடைய ஆசை நாயகிக்கு பிரீதா தங்கள் பிரைவேட் நர்ஸிங் ஹோமில் பிரசவம் பார்த்திருந்தாள். கஷ்டமான கேஸாம். அவளது வாஞ்சையான சிகிச்சைக்குக் கிடைத்த சின்ன வெகுமதி அது.
அதை வாங்கிக் கொள்ள முதலில் அவனுக்குப் பிடிக்கவில்லை.
“இதாணு லோகம்” என்று அவன் கையில் திணித்தாள் பிரீதா.
அதை வாங்கும்போது அவன் கை தயங்கியது.
வெற்றிவேல் நினைவு வந்தான்.
‘மீசையுள்ள ஆண்பிள்ளைச் சிங்கங்களென்றால்என் கூட வெளியினில் வாருங்காணும்?’ – என்று டெஸ்கின் மீது இரண்டு கைகளால் தாளம் தட்டிக் கொண்டு அவன் பாடும் பாட்டு நினைவு வந்தது.
வெற்றிவேல்… மன்னித்துக் கொள்… நீயும் நானும் மீசையுள்ள ஆண்பிள்ளைச் சிங்கங்கள்தான்…
இப்போது சிங்கங்களை மதிப்பவன் இல்லையடா… சிங்கங்கள் அசட்டு மிருகங்கள் என்று உதறிவிட்டு ஜனம் பறக்கிறது. சிங்கத்தைவிட சிங்க மேக்கப்தான் இப்போது கவர்ச்சி…
அரைத்த மசாலாவை எண்ணையில் வெந்து கொண்டிருந்த சிக்கனில் கலந்து கொண்டே உள்ளூர சிவா தொலைதூரத்தில் இருந்த வெற்றிவேலிடம் மன்னிப்புக் கோரினான்.
ராயப்பேட்டை ஹைரோடில் ஒரு மாவு மிஷின் கிறீச்சிடுகின்ற ஒலி காற்றில் மிதந்து வந்தது. அந்த ஓசை. மாவை அரைத்து முடித்துவிட்டு கைப்பிடிச் சக்கரத்தை சுழற்றிவிடும் அந்த ஓசை அவனுக்குப் பிடிக்கும்.
திருப்பத்தூர் முதலியார் ரைஸ் மில்லின் ஓசையில் ஒரு பாராயண ஒலி கேட்டும்.
அதை நாராயண நாமமாகெ நனைத்துக் கொண்டே தவிடு விடுவாள் அம்மா.
அவளைப் பார்க்கப் போகும் போதெல்லாம் கர்ண கடூரமாகக் கிறீச்சிடும் அந்த ஓசை பழகிப் பிடித்து விட்டது.
எதுவெல்லாம் மனிதனுக்குப் பிடித்து விடுகிறது!
பிடிப்பதற்குப் பழக்கம்தான் தேவையோ! இடை விடாத பழக்கம். அப்புறம் லயிப்பு. இப்போது திஷ்யாவிடம் லயிக்கிற மாதிரி. தின்று தின்று தின்றதையே மீண்டும் தின்கிற வேட்கை மாதிரி.. தாமுவுக்குப் பிடித்த சிக்கன் மாதிரி… தாமுவுக்குப் பிடித்த பிரீதா மாதிரி…
தாமுவுக்கு பிரீதா ஒருத்தி தானா? எத்தனையோ…? மீண்டும் மீண்டும் இந்தப் பெண்களிடம்… அவ்வப்போது ஒவ்வொருத்தியுடன் தாமு எதைத் தேடுகிறான்? என்ன கண்டுபிடிக்கிறான்?
‘சிக்கன்’ மணம் கும்மென்று வந்தது.
போன வாரம் தான்செய்தது ‘டாப்’ என்று தாமு பாராட்டிய ஞாபகம் வந்தது. இன்றைக்கு அப்படி இருக்குமா?
போன வாரத்தின் சுவை… அதற்கொரு மறுபதிப்பு… மீண்டும் ஒரு புதுப்பதிப்பு…
பழக்கம் என்ற பாதையில் மனதனின் மனச் சக்கரம் முன்னும் பின்னும் பின்னும் முன்னும் விடுதலை இல்லாமல் ஓடி அதற்குச் சுகம் என்று அர்த்தம் கற்பித்துக் கொள்கிறதோ!
சுகம்…அது என்னவென்று இன்னும் முழுக்கப் பரிச்சயமாக வில்லை.
கெரஸின் தீர்ந்து வருவதால் ஸ்டவ்வில் ஒலி குறைந்தது. அடுத்த வாரம் காஸ் அடுப்பு வந்து விடுமென்று தாமு சொல்லிக் கொண்டிருந்தான்.
சுகம் என்பது கெரஸின் அடுப்பிலிருந்து காஸ் அடுப்பில் சமைக்கும் மாற்றமா?
சுகம் தெரியவில்லை. துக்கம் தெரிந்தது. பளு தெரிந்தது.
என்ன படித்து என்ன பட்டம் வாங்கி என்ன பயன் என்ற உழற்சியில் நெஞ்சை ஏதோ ஒரு பாறாங்கல் அழுத்திற்று.
ரைஸ் மில்லின் தவிட்டு நெடியிலிருந்து இம்மி இம்மியாக அம்மாவின் நுரையீரல்களுக்குள் இறங்கிக் கொண்டிருந்த வியாதியிலிருந்து அவளுக்கு ஒரு சிறை மீட்சிக்கு வழியில்லை.
ஒண்ட இடம் தந்து உணவளிக்கும் தாமுவுக்கு இன்னும் சோற்றுச் சுமையாயிருப்பதிலிருந்து விடுதலையில்லை.
“ஸார்…ஸார்”
வெளியே ஓர் அதிகாரக் குரல்.
அவன் எழுந்து வருவதற்குள் மீண்டும் ஓர் அவசரம்.
“வீட்லே யாரு?”
சிவா லுங்கியை இறக்கிவிட்டு வெளியே வந்தான் தந்திச் சேவகன் கேசவன்.
“ஹலோ நீங்களா சார்?…இங்கியா இருக்கீங்க?”
சிவா புன்னகையுடன் தலையசைத்தான்.
“போன மாசம் அனுப்பிச்சீங்களே கதை… அது வந்துடுச்சா சார்”
கதையைப் போஸ்ட் செய்யும்போது அவன் பார்த்தான்.
“இன்னும் வரலியே…”
“வந்தா எனக்கு பத்திரிகையைக் கொடுங்க சார்”
“வந்தாதானே… ஓ”
“டெலிகிராம் சார்.”
“பேரு”
“ஜே. தாமோதரன்”
“அவர் வெளியே போயிருக்காரே”
“நீங்க ஸைன் பண்ணி வாங்கிக்குங்க”
சிவா கையெழுத்திட்டான்.
மதன பள்ளியிலிருந்து வந்த தந்தி. தாமுவின் அப்பா அடித்திருக்க வேண்டும்.
எப்போதோ பார்த்த அவர் போட்டோ மனசில் ஒரு ‘ப்ளாஷ்’ அடித்துவிட்டுப் போயிற்று.
இருபுறமும் ஒதுக்கிவிட்ட கிருஷ்ண தேவராயர் மீசை. கண்ணில் இன்னும் ஜமீன் மிடுக்கு. இறுகிய கீழுதட்டில் ராஜரீகம்.
ஜமீன் போய்விட்டது.
ஜமீன் வம்சக் கொடியில் பீட்டர்ஸ் ரோடில் ஆட்டோ ஒர்க்ஷாப் நடத்தும் மெக்கானிக் முளைத்தாயிற்று. இன்னும் மிடுக்கு போகவில்லை.
தர்மராஜ ரெட்டிகாரு உடம்பில் ஓடும் அதே ஜமீன் ரத்தம் தாமுவிடமும் ஓடுகிறது. அதே ராஜரீகம்.
நான் தான் என் ஹீரோ. இதே செய்திதான் அவனிடமும் ஓடுகிறது.
தாமு மதனபள்ளி மண்ணை உதறி எட்டு வருஷமாகப் போகிறது. நூற்றுப் பதினெட்டு ஏக்கர் நிலத்தை தந்தை சொன்ன ஒரு சொல்லுக்காக உதறிவிட்டு சென்னைக்கு வந்தவன் தாமு.
ராயப்பேட்டையில் மட்டுமல்ல, சென்னையில் பல பகுதிகளில் காரும் ஸ்கூட்டரும் வைத்திருப்பவர்கள் தாமுவுக்குப் புன்னகையுடன் கை உயர்த்துகிறார்கள்.
அவனது ஒர்க்ஷாப்பில் கார்களும் வேன்களும் கியூவிலே காத்திருக்கின்றன.
சிவா வந்த எட்டு மாதத்தில் எத்தனையோ மதன பள்ளிக்காரர்கள் தாமுவைத் தேடி வந்து போயினர். தர்மராஜ ரெட்டிகாரு வந்ததில்லை.
மகனின் பாதை சரியாயிருக்கும் என்ற எண்ணமா? அல்லது வெறும் மோட்டார் மெக்கானிக் என்ற இளக்காரமோ?
எவனானால் என்ன?
வெற்றிவேல் பாடுவது மாதிரி ஆண்பிள்ளைச் சிங்கம்.
மரியாதை அவனைத் தேடிவரும். பிரீதா மாதரி… பல பெண்கள் மாதிரி.
பிரீதாவும் தாமுவும்…
ஒழுக்கத்தின் எந்த அளவு கோலை வைத்து அவர்கள் உறவை அளப்பது?
அவன் அங்கே ராத்தங்குகிறான்… அவர்கள் இருவரும் விஸ்கி குடிக்கிறார்கள்.
இப்படி ஒருத்தியல்ல பலர் உண்டு என்று தர்மராஜ ரெட்டிகாருவுக்குத் தெரியுமா?
இந்த தந்தி என்ன சொல்ல வந்திருக்கிறது?

தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *